கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ்வாலயம் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும்.
காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான இவ்வாலயம், நகுல முனிவர், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன், முசுகுந்தன் போன்ற வரலாற்று நபர்களால் வழிபடப்பட்ட தீர்த்தத் திருத்தலம் என வரலாற்று சான்றுகளில் கூறப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் இந்நாளில் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டடு வருகின்றது.
ஆரம்ப காலங்களில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராக காணப்பட்டதாகவும் பின் கடலரிப்பினால் மலைத்தொடர் அழிந்துபோனதாகவும் எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இருப்பினும் சமய நம்பிக்கைகளின் படி, மேரு மலையின் உச்சியில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் முனிவர், தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காக யமத்கினி என்ற வேடனுக்கு சாபமிட்டுள்ளார். அதனால் அவன் கீரிமுகம் பெற்றதாகவும் பின்னாளில் அவ் வேடன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்று கீரிமுகம் நீங்கியதால் நகுல முனிவர் என அழைக்கப்பட்டதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகவும் சமய சித்தாந்தங்களின் படி சிலர் நம்பி வருகின்றனர்.
பொதுவாகப் பழமையான ஆலயங்கள் என்றாலே வரலாற்று நிகழ்வுகளும் சில ஐதீகங்களும் கொட்டிக்கிடப்பது வழக்கம். அந்த வகையில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் ஆரியச்சக்கரவர்த்திகால வரலாற்றையும் போர்த்துக்கேயர்கால வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக தொல்லியல் துறையினர் தெரிகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில், அரச ஆதரவு பெற்ற பிரதான தலமாக நகுலேச்சரம் ஆலயம் திகழ்ந்துள்ளது. பின்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்டு காணப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆலயமானது போத்துக்கீசியர் காலத்தில் இடிக்கப்படுள்ளது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்துள்ளனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலை ஆலயங்ககளின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்புகள் காணப்படுகின்றது.
மற்றும் நகுலேசஸ்வரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சமெனலாம்.
இக்கோவிலின் சிறப்பில் ஒன்றான தீர்த்தமானது, பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள் என நம்பப்பட்டு வருகின்றது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது
1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் நம்பப்படும் வகையில் இங்குள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மாருதப்புரவல்லி குதிரை முகத்துடன் இருக்கும் சிற்பங்கள், முனிவரிடம் வரம் பெறுவது போல் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குதிரைமுகம் நீக்கிய மாருதப்புரவல்லியின் தோற்றம், ஆட்சி அரியணையில் அவர் வீற்றிருக்கும் காட்சி போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இவ்வாலயத்தின் வரலாற்று மரபுரிமையை நினைவு படுத்துவனவாக உள்ளது எனலாம்.
யாழ்ப்பாணக் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பல்வேறு குண்டு வீச்சுகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகௌரி விரதத்தின் போது கோயிலின் மீது குண்டுகள் வீசப்பட்ட நிலையில் மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளானது. அந்நிலையில் பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி இக்கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2009 ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது மக்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது.
இந்நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையான நேரத்தில் எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தியா பின்னர் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டு நகுலேஸ்வரரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.