கொங்கு நாட்டின் பெயர்களும் பின்னணியும்

திருப்பூர்

மகாபாரத கதையில், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்ற பின் ஒர் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி பாண்டவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் மற்றும் ஓராண்டு (அஞ்ஞானவாசம்) எவர் கண்ணிலும் படாமல் மறைந்து வாழவேண்டும். இதை அனுபவித்து திரும்பி வந்தால் அவர்களுடைய நாடும் அரியணையும் திருப்பி அளிக்கப்படும். மறைந்து வாழும் ஓராண்டில் கவுரவர்கள் கண்ணில் அவர்கள் தென்பட்டால், பின்பு மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்பது உத்தரவு. பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவைடைந்ததை அடுத்து பாண்டவர்கள் மாறுவேடம் தரித்து விராடபுரியை ஆண்டு வந்த விராட மன்னனிடம் தங்களை பணியமர்த்திக் கொண்டார்கள். திரௌபதி பட்டத்து ராணிக்கு ஏவல் பெண்ணாக பணியை மேற்கொண்டாள்.

துரியோதனன் இந்த தகவலை வைத்து அந்த பெண் திரௌபதி எனவும், கீசகன் பாண்டவர்களில் ஒருவரால்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் யூகித்து கொண்டான். படம் – nocookie.net

கவுரவர்களின்  தலைவனான துரியோதனன் நான்கு திசைகளிலும் தம் ஒற்றர்களை அனுப்பி பாண்டவர்களை பற்றி அறிய முற்படுகிறார். ஆனால் எந்த தகவலும் இல்லை. அப்போது பீஷ்மர் “அவர்கள் தலை சிறந்தவர்கள். அவர்கள் இருக்குமிடம் செழிக்கும், மறைந்த சூரியனைப்போல் வருவார்கள்” என்றார். வழக்கத்திற்கு மாறாக அப்போது செழித்திருந்தது விராடபுரிதான். அப்போது வந்த ஒற்றன் ஒருவன், பெண் ஒருத்திக்காக வீரன் ஒருவனால் விராடபுரி கீசகன் கொல்லப்பட்டதாக புதிய தகவல் ஒன்றை கொணர்ந்தான். துரியோதனன் இந்த தகவலை வைத்து அந்த பெண் திரௌபதி எனவும், கீசகன் பாண்டவர்களில் ஒருவரால்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் யூகித்து கொண்டான். அவர்களை வெளிக்கொணர திட்டமிட்டு வீரர்களை ஏவி விராடனின் பசுக்களை கூட்டமாக கவர்ந்து வர உத்தரவிட்டார்.

விராடனுடன் பாண்டவர்கள் வந்து பசுக்களை மீட்க “திருப்போர்” புரிந்து பசுக்களை திருப்பி அழைத்து சென்றதால் “திருப்பூர்” என்று இப்போதும் அந்த இடம் அழைக்கப்படுகிறது. “விராடபுரி” “தாராபுரி” என்று மருவி தற்போது “தாராபுரம்” என்றழைக்கப்படுகிறது. காளைகளுக்கு பெயர் போன காங்கேயம் மற்றும் பிரசித்தி பெற்ற “பழனியாண்டவர் திருக்கோவில்” அமைந்துள்ள பழனிக்கும் மத்தியில் தாராபுரம் அமைந்துள்ளது.

ஊத்துக்குளி

தற்கால ஊத்துக்குளி இரண்டு விஷயங்களுக்கு மிக பிரபலம். ஒன்று அதன் வெண்ணெய் மற்றொன்று குன்றின் மேல் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான். அகத்தியர், நாரதர், மற்றும் அடியார்கள் முருகப்பெருமானின் திருக்கோவில்களுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்து வந்தனர். இங்கு வந்து குன்றின்மேல் ஏறி முருகரை பூஜிக்கும் நேரமும் வந்ததும் நைவேத்தியம் செய்ய நீரின்றி அகத்தியர் தவித்தார். அகத்தியருக்கும் தாகம் எடுத்துள்ளது.  அகத்தியர் முருகப்பெருமானை வேண்ட, முருகப்பெருமான் அங்கு தோன்றி தன்னுடைய வேல் ஊன்றி நிலத்தில் ஊற்று ஒன்றை ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் தாகம்தணிந்து பூஜைகளை முடித்துக் கொண்டனர். ஊற்று பெருக்கெடுத்து ஓடிய இடம் “ஊற்றுக்குழி” என பெயர் பெற்று அது மருவி “ஊத்துக்குளி” என பெயர் ஆனது. இங்கு எழுந்தருளியுள்ள கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி புகழ் திக்கெட்டும் பரவியுள்ளது.

கோபிசெட்டிபாளையம்

மிகவும் தாழ்வான பகுதியாக இருந்ததால் பலத்த மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கபட்டனர். இயற்கை சீற்றத்தில் இருந்து தங்களை பாதுகாக்க மேடான பகுதியை நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர் படம் – nocookie.net

பாரியூர் என்ற ஊர் கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ளது. கடையேழு வள்ளல்களின் ஒருவரான பாரிக்கு இங்குள்ள அம்மன் குலதெய்வம் என்று கூறப்படுகிறது. அதுவே பாரியூர் என அழைக்கப்பெற காரணமாக அமைந்தது. இந்த பாரியூரின் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவிலும் அதன் திருவிழாவும் மிக பிரசித்தி பெற்றது. வாய்மொழி மரபான கதைகளில், பாரியூர் முன்னர் செட்டிப்பாளையம் என்ற பெயருடன் அழைக்கபட்டிருக்கிறது. அது மிகவும் தாழ்வான பகுதியாக இருந்ததால் பலத்த மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கபட்டனர். இயற்கை சீற்றத்தில் இருந்து தங்களை பாதுகாக்க மேடான பகுதியை நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் புலம் பெயந்த இடத்தின் பெயர் கோபி. செட்டிபாளைய மக்கள் இணைந்ததால் கோபிசெட்டிபாளையம் என்று அழைக்கப்படுவதாக ஒரு செய்து உண்டு.

அவினாசி

“காசில பாதி தென்காசி, தென்காசில பாதி அவினாசி” என்றும் “காசில காவாசி அவினாசி” என்றும் பேச்சு உண்டு.

“விநாசி” அல்லது “விநாசம்” அன்றால் அழியக்கூடியது. “அவினாசி” என்றால் அழிவில்லா தன்மை கொண்டது என்பது பொருள். சுந்தரர் இந்த ஊரின் ஒரு வீதியில் செல்லும்பொழுது ஒரு வீட்டில் துக்கமாகவும் எதிரில் உள்ள வீட்டில் விழாக்கோலம் பூண்டும் இருந்தனர். விசாரித்தபொது தங்கள் மகனை முதலை விழுங்கி விட்டதாகவும், அதே வயதில் உள்ள எதிர்வீட்டு சிறுவனுக்கு உபநயனம் நடப்பதாகவும் கூறினர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாலு வயது சிறுவனை விழுங்கிய முதலை ஏழு வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்துவிட்டு சென்றதாக வரலாறு. படம் – amilnadu-favtourism.blogspot.com

சுந்தரர் உடனடியாக திருக்கோவில் முன் நின்று அவினாசியப்பரை வணங்கி

“எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே

உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்

புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.”

என துவங்கிய முதலைவாய்பிள்ளை அழைப்பித்த பதிகத்தை அங்கே பாடினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாலு வயது சிறுவனை விழுங்கிய முதலை ஏழு வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்துவிட்டு சென்றதாக வரலாறு. சுந்தரர் அந்த சிறுவனுக்கு உபநயனம் எனப்படும் பூனூல் கல்யாணத்தையும் தாமே நடத்தி வைத்தார். அத்தைகைய மெய்சிலிர்க்க வைக்கும் சக்திவாய்ந்த திருத்தலம் இந்த அவினாசி. இதன் தேரோட்டம் மிக விமர்சையானது. வருடந்தோறும் பங்குனி மாதம் முதலைவாய்பிள்ளை உற்சவம் எனும் விழா நடத்தபடுகிறது. வரலாற்றில் “திருப்புக்கொளியூர்” எனவும் அழைக்கப்பெற்றுள்ளது இந்த அவினாசி.

ஈரோடு

காளிங்கராயன் கால்வாய் மற்றும் பெரும்பாளையம் கால்வாய், இதனை மக்கள் பிச்சைக்காரன் ஓடை மற்றும் பெரும்பள்ளம் ஓடை என்று அழைத்து வந்தனர். இந்த இரண்டு ஓடைகளுக்கும் நடுவில் அமைந்துள்ள ஊர் என்பதால் “இரு ஓடை” என்பது மருவி “ஈரோடை” என்று ஆகி பின்பு “ஈரோடு” என்று பெயர்பெற்றதாக தெரிகிறது.

பெரிய மண்டை ஓடு விழுந்த இடம் “ஈரோடு” என்றும் சிறிய ஓடு விழுந்த இடம் “சித்தோடு” என்றும் பெயர்பெற்றதாக ஒரு பேச்சு உண்டு. படம் – allpapersafari.com

வாய்மொழி மரபாக மற்றொரு கதை உண்டு. கைலாயத்தில் சிவன் தியானத்தில் இருந்த பொழுது தவறுதலாக இரண்டு மண்டை ஓடுகள் பூமியில் விழுந்தனவாம். அதில் பெரிய மண்டை ஓடு விழுந்த இடம் “ஈரோடு” என்றும் சிறிய ஓடு விழுந்த இடம் “சித்தோடு” என்றும் பெயர்பெற்றதாக ஒரு பேச்சு உண்டு.

கொங்கு மண்டலம் ஒரு பக்தி களம் என்று சொன்னால் அது மிகையாகாது. வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டு ஸ்தலங்கள் இன்றளவும் அதை பறைசாற்றுகின்றன. “கொங்கு தமிழ்” என்ற இந்த பகுதி மக்களின் வட்டார பேச்சு வழக்கு தேனினும் இனிமையானது. “ஏனுங்க” “வாங்க, வாங்க” “உட்காருங்க” “சரிங்க” “சாப்பிட்டசுங்களா” என்று விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்த மண்ணின் அன்பும், மரியாதையும் கலந்த மொழி இங்கு வருவோரை ஈர்த்து விடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதை படித்ததற்கு “நன்றிங்க”

உசாத்துணை : தினமலர்

Related Articles

Exit mobile version