ஐரோப்பாவில் தோன்றிய தேசிய அரசுகள் | வாசகர் கட்டுரை

ஐரோப்பாவின் நாகரிகத்துக்கு அடிப்படையாக அமைந்த கிரேக்க, உரோம இராச்சியங்களின் வீழ்ச்சியின் பின்னர் தோன்றிய மானியமுறைச் சமூகத்தில் நிலப்பிரபுக்களின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. அவ்வண்ணம் இருந்த சமூகத்தின் இயக்கம் தேக்கநிலையை அடைந்து ஐரோப்பா இருளில் முழ்கியது. இதன்போது அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தி பலமான நாடுகளை உருவாக்க சிலர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? 16ம் நூற்றாண்டில் அவ்வாறாக உருவான சில ஐரோப்பிய நாடுகள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? அதுதொடர்பில் இங்கிலாந்து, ஸ்பானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை அடிப்படையாகக்கொண்டு கவனம் வெலுத்துவோம்.

இங்கிலாந்து
ஆரம்பத்தில் சாக்சனியர்கள் இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் சென்று அங்கிருந்த சிறு இராச்சியங்களை சுதந்திரமானதாக்கினர். பின்னர் 1066ல் வில்லியத்தின் தலைமையிலான நோர்மன்கள் இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் சென்று அங்கிருந்த சிறு இராச்சியங்களை ஒன்றுபடுத்தினர். ஆயினும் அதிகாரம் படைத்த பிரபுக்கள் இக்காலத்தில் அடக்கப்படவில்லை. 
ஹென்றி II மன்னனது காலத்தில் தேசிய சட்டங்களை வகுத்தமையின் மூலமாக தேசிய அரசு ஒன்றில் காணப்பட வேண்டியதான நாடு முழுவதையும் உள்ளடக்கும் பொதுவான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் பின்னர் எட்வேர்ட் III என்ற அரசன் முதன் முறையாக இங்கிலாந்தில் பாராளுமன்றத்தை கூட்டினான் அவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எட்வேர்ட் III மன்னன் பிரான்ஸை தனக்குரியதாக்க முயன்றதால் இரு நாடுகளிடையேயும் போர் ஏற்பட்டது.

படஉதவி : wikipedia.org

இப்போரே நூற்றாண்டுப் போர் (1338 – 1453) எனப்பட்டது. இப்போர் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் தேசிய உணர்ச்சியை வலுப்பெறச் செய்தது. இதனால் பிரபுக்களின் அதிகாரம் குன்றி அரசரின் ஆதிக்கம் வலுப்பெற்றது. 15ம் நூற்றாண்டில் அதிகாரமும் பணபலமும் இருந்த பிரபுக்கள் உள்நாட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து தேசம் சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையிலிருந்து இங்கிலாந்தை மீட்க திறமை வாய்ந்த ஒரு அரசன் தேவை என மக்கள் உணர்ந்திருந்தனர். இவ்வேளையிலேயே தியூடர் வம்சத்தைச் சேர்ந்த ஹென்றி VII சிம்மாசனம் ஏறினான். இவ்வரசன் முடியாட்சியை கொண்ட தேசிய அரசாக இங்கிலாந்தை பலப்படுத்த பல பணிகளை மேற்கொண்டான்:

  • இங்கிலாந்தில் காணப்பட்ட மத்தியதர வகுப்பினரைக் கொண்ட சபையின் உதவியுடன் ஆட்சிசெய்தான். இதனால் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • சட்டத்தை மீறும் பிரபுக்களை தண்டிக்கும் பொருட்டு ஸ்டார் சேம்பர் எனும் நீதிமன்றங்களை தாபித்து அவற்றுக்கு ஏற்ற உத்தியோகத்தர்களையும் நியமித்தான்.
  • நாட்டின் பண நிலைமையை திருப்திகரமானதாக்கினான்.
  • வெளிநாட்டு விவகாரங்களை திறமையுடன் கையாண்டான்.
  • கலகக் காரர்கள், இராசத் துரோகிகளின் நிலங்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த முதல் வருடத்திலேயே வருமானத்தை நூற்றைம்பது வீதமாக அதிகரித்தான். நீதிமன்றங்கள் மூலம் விதிக்கப்பட்ட வருமானங்களும் நாட்டின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டது.
  • அரகனுக்கு அரசியான கதரீனாவை தனது மகன் ஆர்தருக்கு விவாகம் செய்து கொடுத்ததுடன் ஆர்தர் இறந்த பின் தன் இரண்டாம் மகனாகி 8ம் ஹென்றியை மணமுடித்துக் கொடுத்தான். தன்; மூத்தமகள் மாக்கிரட்டை ஸ்கொட்லாந்து அரசன் ஐஏம் ஜேம்சுக்கு விவாகம் செய்து வைத்தான். இதனால் பிற நாடுகளிடையேயும் ஐக்கியத்தை விவாகத் தொடர்பால் ஏற்படுத்தினான்.
  • இங்கிலாந்து ஒரு தீவாக காணப்பட்டதால் அதனை பாதுகாக்க பலம்வாய்ந்த கடற்படையை கட்டியெழுப்பினான். அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு ஆங்கிலேய கடற்படை சென்றது.
  • நெசவு, சுரங்கம், கடதாசி, கண்ணாடி கைத்தொழில்கள் இம்மன்னன் காலத்தில் விருத்தி செய்யப்பட்டது.

ஹென்றி VII இறந்தபின்  ஹென்றி VIII அரசனானான். இம்மன்னன் காலத்தில் திருமண விவகாரத்தில் மன்னன் பாப்பரசருடன் பிணக்கை ஏற்படுத்திக் கொண்டதால் இங்கிலாந்தில் உரோம திருச்சபைக்கு கட்டுப்படாத நிருவாகம் ஏற்படுத்தப்பட்டதுடன் மன்னன் அங்கிலிக்கன் திருச்சபையினை நிறுவி அதன் தலைவனாகவும் செயற்பட்டான்.

ஹென்றி VIII அரசனின் மாதிரி வரைபடம்
படஉதவி : dkfindout.com

அதனைத் தொடர்ந்து எலிசெபத் மகாராணியின் காலத்தில் இங்கிலாந்து கடற்படையானது மிகுந்த பலம் பெற்றதுடன் இராணி வில்லியம் சீசில் பேர்லி எனும் மந்திரியின் ஆதரவுடன் இங்கிலாந்தை மேலும் பலப்படுத்தினார். இக்காலத்தில் மத்தியதர வகுப்பினரின் ஆதரவைப் பெற்று வெளிநாட்டு வர்த்தகம் விருத்தி செய்யப்பட்டது, மத்தியதர வகுப்பினர் வர்த்தக் சங்கங்களையும் உருவாக்கினர், கடலோடிகள் புதிய நாடுகளை கண்டுபிடித்தனர். இங்கிலாந்துப் படைகள் ஸ்பானியாவின் வர்த்தகக் கப்பல்களை கொள்ளையடித்து செல்வத்தை திரட்டியது. இதனால் இக்காலத்தில் இங்கிலாந்து வளம் கொழிக்கும் நாடானது.
ஸ்ரூவர்ட் வம்ச அரசர்களான ஜேம்ஸ், இரண்டாம் சார்ல்ஸ், இரண்டாம் ஜேம்ஸ் ஆகியோர் பாராளுமன்றத்தைக் கூட்டாது தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆட்சியை செய்ததுடன், இக்காலத்தில் இங்கிலாந்தில் பியூரிட்டன் என அழைக்கப்பட்ட புரட்டஸ்தாந்து மதத்தவரின் நெருக்கடிகளும் அதிகரிக்கத் தொடங்கின. இவற்றின் பலனாக 1688ல் ஏற்பட்ட புரட்சியின் பின்னர் மன்னன் உரிமைகள் தொடர்பான பிரகடனம் ஒன்றில் கைச்சாத்திட்டான். இதனால் இங்கிலாந்தில் பாராளுமன்ற ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு தேசிய அரசினை கட்டியெழுப்பும் பணி நிறைவுற்றது.

ஸ்பானியா
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோடு தொடர்பில்லாமல் பிரனீஸ் மலைத் தொடரால் பிரிக்கப்பட்ட நாடு ஸ்பானியாவாகும். ஸ்பானியாவின் பெரும் பகுதி கி.பி 8ம் நூற்றாண்டில் ஆபிரிக்காவிலிருந்து சென்ற முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அதுவரை காலமும் பல்வேறு இராச்சியங்களாக பிரிந்திருந்து தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஐபீரியன் குடாநாட்டில் இருந்த கிறிஸ்தவ இராச்சியங்களான காஸ்டீல், அரகன், போத்துக்கல் போன்ற பகுதிகள் மத்திய காலத்தில் சமய ரீதியாக ஒன்றினைந்து முஸ்லிம்களை 1250 அளவில் ஐபீரியன் தீவுகளின் தெற்கே உள்ள கிரனடாவுக்குள் மட்டுப்படுத்தினர்.

படஉதவி : en.wikipedia.org

இதனைத் தொடர்ந்து 1469ல் ஸ்பானியாவில் காணப்பட்ட நாடுகளான அரகனின் பேர்டினன்ட் அரசனும் காஸ்டீலின் இஸபெல்லா அரசியும் திருமணம் செய்து கொண்டமையால் இருதேசங்கள் ஒன்றுபட்டதுடன் அவற்றின் பலமும் அதிகரிக்கத் தொடங்கின. 1492ல் முஸ்லிம்கள் கைப்பற்றிவைத்திருந்த கிரானடா பகுதியும் பேர்டினன்ட், இஸபெல்லா ஆகியோரால் கைப்பற்றப்பட்டது. 1512ல் நவார் பகுதியும் ஸ்பெயினுடன் இணைக்கப்பட்டது. இதனால் ஐபீரியன் குடாநாட்டில் போத்துக்கல்லைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உள்ளடக்கிய தனி இராச்சியமாக ஸ்பெயின் உருவெடுத்தது. பேர்டினனின் பின் அவனது மகன் பிலிப் அரசனானான். விவாக தொடர்பினால் நெதர்லாந்து பிலிப்புக்கு உரித்தானது. அதுதவிர இத்தாலியின் தென்பாகத்திலிருந்த நேப்பிள்ஸ் இராச்சியம், சார்டினியா, சிசிலி தீவு என்பனவும் அவனது ஆளுகைக்கு உட்பட்டது.

பேர்டினனின் பேரன் ஐந்தாம் சார்ல்ஸ் (1516-1556) அடுத்து அரசனானதுடன் தன் தாயின் தந்தை மக்ஸிமிலியனுடைய ஜேர்மனியிலுள்ள குடும்பச் சொத்துக்களை (ஹஸ்பேர்க் வம்ச சொத்துக்களை) பெற்றான். மக்ஸிமிலியனின் பின் பரிசுத்த ரோம சக்கரவர்த்தியாக 1519ல் ஐந்தாம் சார்ல்ஸ் அரசனே தெரிவு செய்யப்பட்டான். இதனால் மேலும் பல பகுதிகளை ஸ்பானியா பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த. அதுபோல அமெரிக்காவில் ஸ்பானியா வென்ற பகுதிகளுக்கும் ஐந்தாம் சார்ல்ஸ் மன்னனே அரசனானான். அமெரிக்க நாடுகள் ஸ்பானியாவுக்கு அதிக செல்வத்தை தரும் பகுதியாக விளங்கின.

படஉதவி : tes.com

ஐந்தாம் சால்ஸின் பின்னர் 1555ல் அவரது மகன் பிலிப் II (1656-1598) சிம்மாசனம் ஏறினான். ஜேர்மனியின் குடும்ப சொத்துக்கள் இவனுக்கு கிடைக்காது போனதுடன் அவை ஹஸ்பேர்க் வம்சத்தை சேர்ந்த பேர்டினன்ட்டுக்கு கொடுக்கப்பட்டன. இவ்வாறே பரிசுத்த உரோம ராச்சியத்தையும் பிலிப் II இழக்கவேண்டி ஏற்பட்டது. ஆயினும் பிலிப் II இங்கிலாந்து அரசன் எட்டாவது ஹென்றியின்  மகளை திருமணம் செய்ததால் சிறிதுகாலம் இங்கிலாந்து அரசனானான். மேலும் 1580ல் போத்துக்கல்லை கைப்பற்றி போத்துக்கல்லின் ஏனைய ஆசிய, ஆபிரிக்க இராச்சியங்களையும் தனதாக்கிக் கொண்டான்.

இவ்வாறு சமய ஒற்றுமை, திறமைவாய்ந்த போர்வீரர்கள், பொருளாதார பலம் என்பவற்றினால் சிறப்புப்பெற்றிருந்த ஸ்பானியாவில் சார்ல்ஸ் V, பிலிப் II போன்ற அரசர்கள் பலமிக்கவர்களாக விளங்கி ஸ்பானியாவை தேசிய அரசாக கட்டியெழுப்பினர்.

ஆயினும் இரண்டாம் பிலிப்பின் காலத்தில் நெதர்லாந்துடன் மேற்கொண்ட சமயப்போர், இப்போரில் எலிசெபத் இராணி நெதர்லாந்து மக்களுக்கு உதவியமை, அமெரிக்காவிலிருந்து பொருட்களுடன் வந்த ஸ்பானியாவின் கப்பல்கள் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளால் சூறையாடப்பட்டமை, விவசாயம் கைத்தொழில் வீழ்ச்சி போன்றவற்றால் ஸ்பானிய பலவீனமடையத் தொடங்கியது.

பிரான்ஸ்.
மத்திய காலத்தில் ஏனைய நாடுகளில் காணப்பட்டது போலவே பிரான்சிலும் நிலம் படைத்தோர் குறுநில மன்னர்போல் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் அரசனின் கீழ் செயற்பட்டு வந்தாலும் சில வேளைகளில் அரசனுக்கு எதிராக கிளர்ந்தெழும் நிலையும் காணப்பட்டது. 14ம், 15ம் நூற்றாண்டுகளில் பிரித்தானியாவும் பிரான்சின் பகுதிகள் மீது படையெடுக்கும் நிலையும் காணப்பட்டது. பிரான்ஸிய அரசன் முழு அதிகாரமும் பெற்றவனாக இருக்காமையே இவற்றுக்கு காரணமாகும்.

காலப்போக்கில் தம் செல்வாக்கை பெருக்கிய மன்னர்கள் பிரித்தானியாவின் படையெடுப்புக்களை 15ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டுப்படுத்தியதுடன் குறுநில மன்னரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நாடு முழுவதும் தமதாட்சியினை உறுதிப்படுத்தினர். பிரான்ஸ் பலமிக்க ஒரு இராச்சியமாக ஆனது.

படஉதவி : hipwallpaper.com

பிரான்ஸின் சார்ல்ஸ் VIII மன்னன் தனது அரசின் எல்லையை விஸ்தரிக்க எண்ணி 1494ல் இத்தாலி மீது போர் தொடுத்ததால் ஸ்பானியாவுடன் யுத்தம் செய்யவேண்டி ஏற்பட்டது. இவ்யுத்தம் நிலையான அரசாங்கப் படை ஒன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸிக்கு உணர்த்தியது.

16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமயச் சண்டைகள் பிரான்ஸையும் தாக்கின. ஆரம்பத்தில் புரட்டஸ்தாந்து மதம், சட்டங்களால் பிரான்ஸில் அடக்கப்பட்டாலும் பிரான்ஸின் தெற்குப் பகுதிகளில் கல்வினின் மதக் கொள்கைகள் பரவிக்கொண்டது. இங்கு புரட்டஸ்தாந்து மதத்தை தழுவியோர் ஹியூஜனட்ஸ் என அழைக்கப்படலாயினர். இதனால் சமயச் சண்டைகளால் பிரான்ஸ் பாதிக்கப்படும் நிலை காணப்பட்டது. இதனைத் தடுக்கும் வகையில்  ஹென்றி IV (நவார் ஹென்றி) மன்னன் அரியணை ஏறியதுடன் நான்டிஸ் சாசனத்தின் மூலம் ஹியூஜனட்டுக்களுக்கு சமய சுதந்திரத்தை அளித்தான். இதனால் உள்நாட்டுக் குழப்பத்தால் சிதறிய நாடு மீண்டும் ஒற்றுமையடைந்தது.

இவனது மந்திரியான சலீஹி பிரபுவின் துணையுடன்:

  • நாட்டின் அரசாங்க நிர்வாகம் சீர்திருத்தப்பட்டது.
  • அரச செலவுகள் குறைக்கப்பட்டதுடன், வரி முறையும் சீர்திருத்தப்பட்டது.
  • மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு வசதிகள் செய்யப்பட்டது.
  • மத்தியதர வர்க்கத்தினரின் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட்டன,
  • விவசாயம், கைத்தொழில் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்பட்டது.
  • பிரான்ஸை பேரரசாக்கும் நோக்குடன் நாடுகாண் பயணங்களுக்கு அனுசரணை வழங்கப்பட்டதுடன் நேவாஸ் கோஷியாவில் பிரான்ஸின் குடியேற்றம் நிறுவப்பட்டது.
  • 17ம் நூற்றாண்டில் பிரான்ஸ் பொருளாதார பலம் , படைப்பலம், கல்வி, கலைகள் போன்றவற்றில் செழித்து விளங்கியது.

1610ல் கத்தோலிக்கன் ஒருவனால் 4ம் ஹென்றி மன்னன் கொல்லப்பட்டதும் அவனது மகன் லூயி XIII ஆட்சிக்கு வந்தான். லூயி XIII இளம் வயதினனாக இருந்ததால் அவனது காலத்தில் றிச்சலியூ எனும் மந்திரி பிரான்ஸை தேசிய அரசாக வலுப்பெறச் செய்வதில் முயற்சித்தார். அவரைத் தொடர்ந்து மாஸரின் என்பவரும் சிறந்த மந்திரியாகவிருந்து பிரான்ஸை பலப்படுத்தினர்.

படஉதவி : hipwallpaper.com

றிச்சலியூ ஒரு கத்தோலிக்க கர்தினாலாக இருந்தார். இவர் பிரான்ஸ் அரசரின் அதிகாரத்தை பலப்படுத்தவும். ஐரோப்பாவில் பிரான்ஸை பலமிக்க நாடாக மாற்றவும் செயற்பட்டார். அவரது செயற்பாடுகளால்:

  • ஹென்றி IV மன்னன் காலத்தில் சமய சுதந்திரம் பெற்ற ஹியூஜெனட்டுக்கள் மன்னனை எதிர்த்து ஒரு சுதந்திர இராச்சியத்தை நிறுவ மேற்கொண்ட போர் இவரால் வெற்றிகொள்ளப்பட்டது.
  • பிரபுக்கள் தம்மிடையே செய்த கலகத்தை அடக்கினார்.
  • 1614ன் பின் பிரதிநிதிகள் சபையை கூட்டவில்லை. ஆயினும் அரச ஆணையை நிறைவேற்ற கூடிய அரச உத்தியோகத்தரை நாடு முழுவதும் நியமித்தார்.
  • நாட்டின் தரைப்படை, கடற்படை என்பன பலப்படுத்தப்பட்டது.
  • வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சியடைந்ததுடன், கலைகளும் வளர்ந்தது.
  • இஸ்பானியாவை பிரான்சின் எதிரியாக கருதி முப்பதாண்டுப் போரில் புரட்டஸ்தாந்து மதத்தவருக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

றிச்சலியூ இறந்து (1642) சிறிது காலத்தில் லூயியும் XIII இறந்தான். இதன்பின் XIIIஆம் லூயியின் மகன் XIVம் லூயிக்கு 5 வயதே ஆனபடியால் மாஸரின் எனும் மந்திரியே பிரான்சின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். மாஸரின் 1661ல் இறக்கும்வரை மந்திரியின் புத்திமதிப்படியே மன்னன் நடந்து வந்தான். பின்னர் தன் விருப்பப்படியே ஆட்சி செய்யலானான். இம்மன்னன் கொல்பேட் என்பவரை தனது மந்திரியாக்கினான். இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில்:

  • தெய்வீக வழியுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தனதாட்சியை பலப்படுத்தினான்.
  • இக்காலத்தில் ஆடம்பரமாக வாழவிரும்பிய அரசன் ஓஐஏம் லூயி வெர்செயில் மாளிகையை அமைத்து பிரான்ஸை ஐக்கியத்தின் அலங்கார நகரமாக்கினான்.
  • நான்டிஸ் ஆணையை இரத்துச் செய்து ஹியூஜனட்டுக்கள் அனுபவித்த சலுகைகளை நீக்கி, சமய நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
  • இவனது காலத்தில் கொல்பேட் எனும் மந்திரி கைத்தொழில் வர்த்தகம் என்பவற்யை முன்னேற்றி பொருளாதாரத்தில் பிரான்ஸை பலப்படுத்தினான்.
  • கப்பல் படையை பலப்படுத்தியதுடன், இந்தியா அமெரிக்கா முதலிய இடங்களில் பிரான்சின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினான்.
  • அரசின் அதிகாரத்தை உயர்த்தும் நோக்குடன் வெளிநாட்டு யுத்தங்களில் ஈடுபட்டான்.

ஆயினும் லூயி XIV மன்னன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் புத்திசாலித்தனமற்ற வகையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் யுத்தங்களில் ஈடுபட்டான். குறிப்பாக இவன் ஸ்பானிய அரசுகளை கைப்பற்ற மேற்கொண்ட போர்களினால் பிரித்தானிய, ஆஸ்திரிய, உள்ளிட்ட சில ஜேர்மன் மாகாணங்கள் பிரான்ஸை எதிர்த்து போர் புரிந்தன. இது ஸ்பானிய அரசுரிமைப்போர் எனப்பட்டது. இப்போர்களால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுடன் பிரான்ஸ் அயல் நாடுகளின் எதிர்ப்பினையும் சம்பாதித்துக் கொண்டது. இதனால் பிரான்சின் அதிகாரம் ஐரோப்பாவில் படிப்படியாக குன்றத் தொடங்கியது.

உசாத்துணை நூல்கள்
1. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், இரண்டாம் பாகம் - பேராசிரியர் எஸ்.ஏ.பேக்மன், ஜி.ஸி.மெண்டிஸ்
2. உலக சரித்திரம் 1500 – 1948, மு.இளையதம்பி

Related Articles

Exit mobile version