மாவீரன் அலெக்ஸ்சாண்டரே வியந்த வீரன் போரஸ்

படையெடுப்புகள், போர்கள், உயிரிழப்புகள் என வரலாற்றின் வழி நெடுகிலும் காணலாம்.  நிலையாத வாழ்வின் பொருளை உணர்ந்த மன்னர்களும், மாவீரர்களும்  நிலைபெற்று விளங்கும் உலகில் தங்கள்  பெயரையும், புகழையும் பொறித்துச் செல்ல வேண்டியே எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்து அத்தகைய படையெடுப்புகளில் ஈடுபட்டனர். அதில் பல சாதனை வீரர்களும், சம்பவங்களும் சரித்திரத்தையே மிரட்சி கொள்ளச் செய்திருக்கிறது. அப்படிப்பட்ட வீரர்கள்தான் அலெக்ஸாண்டரும், போரசும்.

பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த கிரேக்கர்களுக்கும், பெர்சியர்களுக்குமான யுத்தத்தில் இரண்டு வல்லரசுகளும் மாறி, மாறி இரத்தம் சிந்திக்  கொண்டனர். வெறும் ஐந்து வருடங்களில் தனது தந்திரோபாய திறமைகளால் பெர்சியர்களை வீழ்த்தி நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரச்செய்தான் அலெக்ஸாண்டர். அவன் வாழ்வை விடப்  பெரியதாக மதிக்கும் போரின் தாகம் சற்றும் அடங்கவில்லை.  பறவை சிறகுகளை விரிப்பது போல பிராந்தியங்களை விஸ்தரித்து கொண்டிருந்தான் அலெக்ஸாண்டர். படைகள்  எகிப்தைக்  கடந்து வழிநெடுக போர்களைச்  சந்தித்து, இறுதியாக ஆப்கானிஸ்தான் வந்தடைந்தது. கிட்டத்தட்ட இந்த படையெடுப்பு மட்டும் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. வீரர்கள் சுழற்சி முறையில் சன்மானதுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆப்கானிஸ்தானைத்  தாண்டி இந்தியாவிற்குள் நுழையத்  திட்டமிட்டான் அலெக்ஸாண்டர்.

படம்:thinglink

சிந்து மற்றும் ஜீலம் ஆகிய  இரண்டு நதிகளைக்  கடந்தால் மட்டுமே அது சாத்தியம் . படைகளுடன் அவற்றைக்  கடப்பது மிகக்  கடினமானதுதான். இடையில் இரண்டு ராஜ்ஜியங்களைச்  சந்தித்தாக வேண்டும். ஒன்று சிந்து நதிக்கரையைத்  தாண்டி உள்ள தக்சசீலா மன்னன் அம்பியினுடையது. மற்றொன்று தக்சசீலாவிலிருந்து நூறு மைல்கள் தூரத்தில் உள்ள அம்பியின் விரோதி, ஜீலம் நதிக்கரையின் மன்னன் போரஸ் உடையது. அலெக்ர்ஸாண்டர் ஒரு சிறிய குழுவுடன் சிந்து நதியைக்  கடந்து தக்சசீலா மன்னரான அம்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். அலெக்ஸாண்டர் படையை வெல்வதும், போரில் பிராந்திய மக்களை சேதாரமில்லாமல் காப்பாற்றுவதும் கடினம் என்பதை உணர்ந்த மன்னன் அம்பிக்கு சமாதானத்தைத்  தவிர வேற வழி இல்லை.

பெர்சியாவில் சூறையாடிய தங்கக்  காசுகளில் ஒரு பங்கை அம்பிக்கு பரிசாகக்  கொடுத்த அலெக்ஸாண்டர், தக்சசீலாவை தன்னுடைய அடுத்த திட்டத்திற்குத்  தளமாக ஆக்கிக்கொண்டான். போரஸின் படையைப்  பற்றிய தகவல்கள் பெறப்பட்டது. சிந்து நதிக்கரையைப்  படைகள் எளிதாகக்  கடந்தன. அவர்கள் வந்த அனைத்துப்  படகுகளும் பகுதிகளாக உடைக்கப்பட்டன. படகுகள் பாகங்களாகப்  பிரிக்கப்பட்டு, சுமார் 23000 காலாட்படை, 9000 குதிரைப்படையுடன் ஜீலம் நதிக்கரை வந்தடைய இரண்டு மாதங்கள் ஆனது. அலெக்ஸாண்டரின் வழக்கமான முறையான ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் பஞ்சாப்பையும் சேர்த்து ஆக்கிரமிப்பதற்காக போரஸ் மன்னனை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்தான்.

படம்: alchetron

அலெக்ஸாண்டர் எப்போதும்  வாய்ப்பு ஒன்றை எதிரிகளுக்கு வழங்குவது உண்டு.  வீரர்கள் வம்சாவளியில் வந்த ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான நாலாம் நூற்றாண்டின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவன் போரஸ். நாம் போர்களத்தில் நேருக்கு நேராக சந்திப்போம் என்று சவால் விடுத்தான் போரஸ். தனது ராஜாங்கத்தை எப்படியும் காப்பாற்றுவது என்று முடிவு செய்துவிட்டான்.

போரஸிடம்  சுமார் 30,000 காலாட்படை வீரர்கள், 2000 குதிரைப்படை, மற்றும் 300 ரதங்கள் இருந்தன. அதோடு கூடுதலாக  கிரேக்கர்களோ,  அலெக்ஸாண்டரோ  அதுவரை சந்தித்திராத 200 யானைகள் கொண்ட யானைப்படை. இந்தியப்  படையின் வலிமை மிக்கவை அவை. ஒரு யானையைப்  போருக்காக பயிற்சி செய்ய பத்தாண்டுகள் வரை ஆகும். போரஸின் யானைகளைப்  பெயர் சொல்லி அழைத்தாலும், விசில் சத்தம் கேட்டாலும் அவை கட்டளைகளை நிறைவேற்றத்  தயாராக இருந்தன.

படம்: Indilinks

ஜீலம் நதியின் கிழக்கே போரஸின் படை தயார் நிலையில் இருந்தது. மேற்கு கரையோரம் அலெக்ஸாண்டர்  படை உள்ளது. இருவருக்கும் இடையில் வேகமான, ஆழமான மற்றும் அகலமான ஜீலம் நதி பாய்ந்து கொண்டிருந்தது. எதிர்பாராத தருணத்தில் மொத்தப்  படையையும் அந்தக் கரைக்கு கொண்டு செல்வது இப்பொழுது அலெக்ஸாண்டருக்குப்  பெரிய சவால். நேரடியாகச்  சென்றால் ஆற்றைக்  கடக்கும் பொழுது அம்புகள் கொண்டு துளைத்து விடுவார்கள். இதற்காக ஒரு தந்திரத்தை  அலெக்ஸாண்டர் கையாண்டார். போதுமான தானியங்களைக்  கொணரச்  செய்து இளவேனிற்காலம் முடிந்து கோடை காலத்தில்  நதியின் ஆழமும், வேகமும் குறையும் என்று காத்திருந்தனர்.

இந்தத்  தாக்குதல் அடுத்த பருவ காலத்தில் தான் தொடங்கும் என்று போரஸ் ஓரளவு யூகித்து கொண்டான். இப்பொழுது அலெக்ஸ்சாண்டர் மெல்ல தனது குதிரைப்படை வீரர்களைக் கரையின் ஓரம் தொடர்ந்து உலவ கட்டளை பிறப்பித்தான். போரஸ் படை  அலெக்ஸாண்டர்  கடக்கும் நேரத்தை நோக்கி தொடர் கண்காணிப்பில் இருந்தது. கரை முழுவதும் ஆங்காங்கே பாதுகாப்பு அரண்களை அமைத்திருந்தது.

இரவு நேரங்களில் நெருப்பு மூட்டி சத்தமிட்டு தொடர்ந்து தங்களின் பக்கம் கவனம் இருக்கும் படி அலெக்ஸாண்டர் படை வீரர்கள் பார்த்து கொண்டனர். ஒரு நாள் நள்ளிரவில்  அலெக்ஸாண்டர் படையின் ஒரு பகுதி சுமார் 10,000 காலாட்படை, 5000 குதிரைப்படை வீரர்களுடன் அவர்கள் இடத்தில் இருந்து 17 மைல்கள் தொலைவில் கரையைக்  கடந்தது. அலெக்ஸாண்டர் கரையைக்  கடந்துவிட்டான் என்ற தகவல் மன்னன் போரசிடம் சென்றது. போரஸின் கண் முன்னே மிகப்பெரிய படை ஆற்றின் மறுபக்கம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. தனது படையின் சிறிய பகுதியாக குதிரைகளையும், ரதங்களையும் வடக்கு நோக்கி அனுப்பினான் போரஸ். அந்த படைக்கு போரஸின் மகன் தலைமைப்  பொறுப்பேற்றான்.

கி.மு. 326 வருடம் நடந்த ஜீலம் போர், வரலாற்றில் ஒரு மிக மிருகத்தனமான போராக பதிவு செய்யப்படுகிறது. அலெக்ஸாண்டரின்   காலாட்படை மேல் போரஸின் படை அம்பு மழை பொழிந்தது. அலெக்ஸாண்டர் தனது ஆசிய குதிரைப்படைகளை முன்னோக்கி நகர்த்தினான். போரஸின் ரதங்களுக்கு முன்னால் அதிகமான குதிரைப்படை முன்னேறுவது கடினமாகப்பட்டது. படைகள் போரஸ் இருக்கும் இடத்திற்கு வந்தது.

படம்: blogspot

போரஸ் படையில் முன் வரிசையில் போர் பயிற்சி பெற்ற யானைகள், பின்னால் காலாட்படை சிலாயிரம் பேர், பக்கவாட்டில் சிலாயிரம் குதிரைப்படைகள் பாதுகாப்பு அரணாக இருந்தது. யானைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார்கள் என்று கலாட்படை வீரர்களை தாமதப்படுத்தினான் அலெக்ஸாண்டர்.  முதலில் குதிரைகளைக்  கொண்டுதான் போரிடுவது என்று அலெக்ஸாண்டர்  முடிவு செய்தான்.

அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டி செயல்படுத்தியாக வேண்டும். இல்லையேல் இந்தியாவிற்குள் நுழைவதற்கான அறிய வாய்ப்பு கை நழுவிப்  போய்விடும். போர்களத்தில் உடனுக்குடன் முடிவெடுத்து தந்திரங்களை மாற்றுவது அலெக்ஸாண்டருக்குக்  கை வந்த கலை. அவனது குதிரைப்  படைகளின் ஒரு பகுதியை வலது பக்கம் அனுப்பினான். வலது பக்கப்  படைகளை சிதைத்த வீரர்கள் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை.

படம்: Indiaopines

இருநூறு யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் போல அமர்ந்து கர்ஜித்து கொண்டிருந்தான் போரஸ். காலாட்படை கொண்டு யானைகளின் கண்கள் குறி வைக்கப்பட்டன. பிளிரிடும் யானைகளின் அலறல், சாய்ந்த ரதங்கள், விழுந்த குதிரைகள் என்று மிக நெருக்கமான, கொடூரமான இடமாக யுத்த களம் காட்சியளித்தது. சிதைக்கப்பட்ட மனித உடல்களின் சிதறிய சதைகளுடன் இரத்த ஆறு ஓடியது.

அலெக்ஸாண்டர் தன்னுடைய குதிரையான புசிபேலசை மிகவும் விரும்பினார். அதன் தலை எருமைத் தலை போல் இருந்ததால் அந்த பெயர் வைக்கப்பட்டது. அது ஒருமுறை களவு போனபோது அலெக்ஸாண்டர் பித்து பிடித்தவர்போல் ஆகிவிட்டராம். அவ்வளவு முக்கியமானதாகக்  கருதப்பட்ட புசிபெலஸ் இந்த போரில் போரஸின் மகனால் கொல்லப்பட்டது. போரஸின் மகனும் இதே போரில் மரணமடைந்தான்.

படம்: pinimg

ஏழு மணி நேரத்தைக்  கடந்தது யுத்தம். போரஸின் படைகளில் முக்கால் பாகம் அழிக்கப்பட்டன. இறுதி வரை போரஸ் பலத்த காயத்துடனும் போரிட்டுக்  கொண்டிருந்தான். போரஸின் தளராத நம்பிக்கையும், தோல்வியை ஏற்காத மனமும் அலெக்ஸாண்டரை வெகுவாகக்  கவர்ந்தது. போரசை சந்திக்கத்  தூதுவனைக்  கொண்டு தூது அனுப்பப்பட்டது.

அலெக்ஸ்சாண்டர் முதலில் தொடங்குகிறார்.

“நான் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்கிறான்”

“உன்னைப்போல, ஒரு அரசனைப்போல் நடத்த வேண்டும்” என்றான் போரஸ்.

போரஸின் கண்ணியம் பிடித்துப் போகவே அந்த பிராந்தியத்தை போரசிடம் கிரேக்கர்களின் கீழ் உள்ள பிராந்தியமாக விட்டுவிட்டு அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குள் நுழையாமல் படையுடன் நாடு திரும்பினார். அலெக்ஸ்சாண்டர் தொடர்ந்து இந்தியாவிற்குள் நுழையாமல் போனதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அலெக்ஸ்சாண்டரின் தந்தை கொல்லப்படுகிறார். அலெக்ஸாண்டர் குதிரைகள் இல்லாமல் அவரால் தொடர்ந்து போரிட முடியவில்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அலெக்ஸாண்டர்  இதன் பின்னர் எந்தப்   படையெடுப்பிற்கும்  செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 323இல் 32 வயதிருக்கும்போது  மலேரியா காய்ச்சலால் மரணமடைந்தார் அலெக்ஸாண்டர் . அதன் பின்னர் யூடிமஸ் என்ற அலெக்ஸாண்டரின் தளபதி ஒருவரால் போரஸ் கிமு 321 க்கும் கிமு 315க்கும் இடைப்பட்ட காலத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

கிரேக்க வரலாற்றில் அந்த மாவீரன் போரஸின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Related Articles

Exit mobile version