இன்றைய சர்வதேச அரசியலை பொருத்தமட்டில் ஒரு இறைமை பொருந்திய அரசின் மிகப்பெரிய பலம் மக்கள் தொகை, அந்த அரசின் நிலப்பரப்பு, மற்றும் அதன் இராணுவ பலம் என்பவையாகும். அந்த வகையில் சனத்தொகை கூடிய நாடுகளின் வரிசையில் 1,306,313,812 மக்கள் தொகையைக் கொண்ட சீன அரசு முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆசியாவின் பரப்பளவில் மிகப்பெரிய நிலத்தை உள்ளடக்கிய நாடாக சீனா காணப்படுகிறது. இராணுவ பலத்தை எடுத்துக் கொண்டால் உலக வல்லரசுகளையே அச்சுறுத்துகிற அளவு அதன் இராணுவ பலம் காணப்படுகிறது. இராணுவ பலத்தில் சுமார் 2,003,000 படையினரையும், 510,000 ரிசர்வ் படையினரையும் கொண்டு உலகின் மிகப்பெரிய ஆயுதப்படையாக சீன அரசு அசுர வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சீன இராச்சியம் என்பது இன்று நேற்று உருவானதல்ல. சீனாவின் வடக்கு சமவெளியினூடாக பாய்கின்ற மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்த மிகவும் தொன்மையான அரசாக சீனப்பேரரசு காணப்படுகிறது. சுமார் நாலாயிரம் ஆண்டுகளாக சியா வம்சம், சிங் வம்சம் போன்ற அரச வம்சங்களால் ஆளப்பட்ட சீன அரசு 1911 உடன் மன்னராட்சிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சீனக்குடியரசாக உருவாக்கப்பட்டது. அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக சர்வதேசத்தில் அதன் வளர்ச்சி அசுர வேகத்தை நோக்கி போவதைப்போல வர்த்தக ரீதியிலும் அதன் வேகம் உலகையே அச்சுறுத்துவதாக மாறியுள்ளது. சர்வதேச சந்தையில் மிகப்பெரிய பகுதியை அது தன் வசம் வைத்திருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்குதிறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும், இறக்குமதி அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் காணப்படுகிறது. பிராந்தியத்தில் இதனுடைய அசாதாரண வளர்ச்சியானது சர்வதேசத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலான, பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.
அவ்வகையில் அண்மைக்காலமாக இலங்கைக்கு சீனா மிகுந்த அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையுடனான அதன் உறவு பழமையானது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக சமய கலாசார ரீதியாகவும், ஆரம்ப காலம் தொட்டே சீனா இலங்கையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளது. சீனாவுடன் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதுமே இலங்கையுடன் நெருங்கிய தொடர்பொன்றை பேணுவதற்கு முயற்சி செய்திருக்கிறது. எப்போதும் இலங்கை ஏன் கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என ஆராய்கிற போது, இலங்கையின் அமைவிடம் மிகப் புராதன காலத்தில் இருந்தே அதன் பிராந்தியங்களுக்கு இடையில் கவனத்தை பெற்றிருந்தது. இந்து சமுத்திரத்தின் மத்தியிலும், இந்தியாவிற்கு அண்மையில் காணப்படுவதாலும், கிழக்கு கரையோரத்தில் இயற்கை துறைமுகமான திருகோணமலையை கொண்டிருப்பதாலும், அது எப்போதும் சர்வதேசத்தின் பார்வையிலேயே இருந்தது. மேலும் இலங்கையின் தரைத்தோற்றம் அதன் உட்பகுதியில் தனித்துவமானதாக இருந்தது. மத்திய மலை நாடு, அகச் சமவெளி, கரையோரச் சமவெளி என்பவை இலங்கைக்கு இயற்கை அரண்களாக இருந்தன. அடுத்ததாக இலங்கையில் காணப்பட்ட வளங்கள், எப்போதும் இலங்கையை சர்வதேச மட்டத்தில் முக்கியமானதாக காட்டியது. இவ்வாறான சூழ்நிலையில் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருக்கமான உறவை கொண்டிருந்த சீனா அண்மைக்காலமாக எப்படி இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியது என்பதை பற்றியே இந்த கட்டுரை ஆராய்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
சீனாவுக்கும் இலங்கைக்குமான வரலாற்று ரீதியிலான அரசியல் உறவுகள்
அரசியல் அறிஞரான கரோல் நிக்கொல்சன் கூறுவதுப்படி வெளியுறவு கொள்கை என்று சொல்லப்படுவது “தந்திரமானதும், பிறநாட்டுடன் இணக்கப்பாடு உடையதுமான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசார தொடர்பின் முழுமையான வெளிப்பாடாகும். வெளியுறவு கொள்கை ஒன்றை அடிப்படையாக கொண்டே சர்வதேச நாடுகளில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொள்ள முனைகின்றது. ஒரு வெளிநாட்டு கொள்கையினை பலதரப்பட்ட காரணிகள் நிர்ணயிக்கின்றன. அரசியல் ஆய்வாளரான ஜே. கே. கொல்ஸ்ரி என்பவரின் கருத்தின்படி பின்வரும் 06 காரணிகள் வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கின்ற மூலகங்களாக காணப்படுகின்றன.
1.தூண்டுதலை ஏற்படுத்தும் சக்தி
2.நன்கொடைக்கான வாய்ப்பு
3.வன்முறையற்ற தண்டனை
4.வெகுமதி கொடுப்பனவு
5 தண்டனை வழங்குவதற்கான நெருக்கடி
6.படை பிரயோகம்
வரலாற்றில் சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவில் மேற்கூறிய எல்லாமே பிரதான அம்சமாக காணப்பட்டது. அதனைத் தாண்டி இராஜதந்திர நகர்விற்காக இரு அரசும் ஒன்றை ஒன்று பயன்படுத்தி வந்திருக்கின்றது.
1.தகவல்களை சேகரித்தல்
2.கொள்கை ஆலோசனை வழங்குதல்
3.அரசை அல்லது அரசாங்கத்தை பிரதிநிதித்துவபடுத்தல்
4.பேச்சுவார்த்தை மேற்கொள்ளல்
5.அந்நிய நாட்டில் இருந்து ஒற்றராக சேவையாற்றுகின்ற செயற்பாட்டை ஏற்படுத்தல்
போன்றவற்றின் ஊடாக சீனா, இலங்கை தொடர்பான விடயத்தில் இராஜதந்திர செயற்பாட்டை மேற்கொண்டிருந்தது. அடுத்ததாக இலங்கை – சீனா உறவை தீர்மானித்த முக்கிய காரணியாக வர்த்தகம் காணப்பட்டிருக்கின்றது.
வர்த்தகமும், பொருளாதாரமும் இலங்கை – சீன உறவை தீர்மானித்த முக்கிய காரணியாக காணப்பட்டிருக்கின்றன. இலங்கையும், சீனாவும் இரகசியமாகவும், சதிவேலைகள் மேற்கொள்வதற்காகவும் பரஸ்பர உறவை பேணி வந்துள்ளன. அடுத்ததாக இலங்கையின் அமைவிடம் இரு நாட்டுக்கு இடையிலான அரசியல் உறவின் பிரதான காரணியாக இருந்தது. பொருளாதார வளம், சந்தைப்பொருளாதாரம், தேசிய நலன், இலங்கையின் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் போன்ற பல காரணிகள் இலங்கை-சீனா உறவை தீர்மானித்தது. இலங்கைக்கும் _ சீனாவிற்குமான அரசியல் உறவை தீர்மானித்ததன் பிரதான காரணியாக இருந்தது இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளே.
சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியமைத்த அரசுகளும், சீனா அரசுடன் அவை ஏற்படுத்திக்கொண்ட உறவுகளும்
Ø 1948 _ 1956 வரையான காலப்பகுதி
சுதந்திரத்தின் பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியானது பிரித்தானியா சார்ந்த முதலாளித்துவ கொள்கையை பின்பற்றியிருந்தது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இயற்கை துறைமுகம், கட்டுநாயக்கா விமான நிலையம், இராணுவ தளங்கள், போன்றவற்றை பிரித்தானியா அதன் கைகளுக்குள் வைத்துக்கொள்ளவே விரும்பியது. முதலாளித்துவ கொள்கையை பின்பற்றிய இலங்கை அரசாங்கம் அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்பையும், தடையற்ற வர்த்தக பொருளாதார போக்கினையும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, எரிபொருள் விநியோகம் என்பவற்றில், வங்கி நடவடிக்கைகள், போக்குவரத்து அந்நிய முதலீடுகளை வரவேற்றன. இக்காலத்தில் வெளியுறவுக் கொள்கையானது பிரித்தானியா சார்பான வெளியுறவு கொள்கையாக இருந்ததோடு இந்திய எதிர்ப்பை டி. எஸ். சேனநாயக்கவின் அரசாங்கம் பின்பற்றியிருந்தது.
“என்று இலங்கை பிரித்தானியரின் பாதுகாப்பில் இருந்து தன்னை விலக்கிக்கொள்கின்றதோ அன்றே இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிடும்” என 1955 இல் பிரதமராக இருந்த சேர். ஜோன் கொத்தலாவல குறிப்பிட்டிருந்தார். இந்திய எதிர்ப்பு வாதமே ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது வெளிவிவகார கொள்கையாக அமைந்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது முதலாளித்துவ சக்திகளுடன் நெருங்கி பழகிக்கொண்டு கம்யூனிஸ எதிர்ப்பை பகிரங்கமாக காட்டியது. அதாவது சீன எதிர்ப்புக் கொள்கை. இலங்கையில் எழுச்சியடைந்த இடதுசாரி ஆதரவை குறைப்பதற்காக கம்யூனிச எதிர்ப்பை இந்த அரசு பின்பற்றியது. வெளிப்படையாகவே சில சம்பவங்கள் நடந்திருந்தன. உதாரணமாக இந்த சம்பவத்தை குறிப்பிடலாம், 1952 இல் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டில் இலங்கை பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல சீன பிரதமர் சூ-என் லாயுக்கு கை கொடுக்கவே மறுத்திருந்தார்.
Ø 1956 முதல் 1965 வரையான காலப்பகுதி
1956 _ 1965 வரையில் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கம் இந்திய நாட்டுடன் நட்பையும், மேற்கு நாடுகளுடன் எதிர்ப்பையும், சர்வதேச மட்டத்தில் நடுநிலைமையினையும், சோசலிச நாடுகளான சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையும் பின்பற்றி இருந்தது.
Ø 1965 _ 1970 வரையான காலப்பகுதி
1965 _ 1970 டட்லி சேனநாயக்கா தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியும், தமிழரசு கட்சியின் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த அரசானது பகிரங்கமாக சீன அரசின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. சீன தூரங்களில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தது. அவர்களுக்கான வீசாவை இலங்கை அரசு வழங்க மறுத்தது. முன்னைய ஆட்சியாளர்கள் திருகோணமலை துறைமுகத்தை சீனாவிற்கு அடகு வைத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டி அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தோனேசியா கம்யூனிச கட்சியின் வருகையை கூட இலங்கை அரசு தடுத்து நிறுத்தியது. டட்லி அரசாங்கம் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடியில் இருந்த இலங்கையை மீட்பதற்காக அரிசி-இறப்பர் உடன்பாட்டை சீன அரசாங்கம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்து இருந்தது.
Ø 1970 _ 1977 வரையான காலப்பகுதி
1970 _ 1977 பதவிக்கு வந்த சிறிமாவோ அரசு இடதுசாரிகளின் ஆதிக்கம் மிகுந்த காலத்தை முடிவுக்கு கொண்டுவர மூடிய பொருளாதார கொள்கையினை பின்பற்றியிருந்தது. இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக்குவதன் மூலம் வல்லரசுகளின் தலையீட்டை தவிர்த்தது. போரற்ற சூழலை உருவாக்குவது இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாக இருந்ததோடு, முதலாளித்துவ நாடுகளில் இருந்து அந்நிய நிதி உதவியாக 1522.4 பில்லியன் ரூபாக்களை பெற்றுக்கொண்ட இலங்கை கம்யூனிஸ நாடுகளில் இருந்து 597.0 மில்லியன் ரூபாக்களையே பெற்றது. சிறிமாவோ ஆட்சியில் இருந்த காலம் முழுவதும் சீனாவுடன் நட்பையும், பகையையும் இணைத்தவாறு அரசியல் இராஜதந்திர உறவிருந்தது. 1971 இல் இலங்கையில் ஏற்பட்ட ஜே. வி. பி. கலவரத்திற்கு சீனாவின் தூண்டுதல் அதிகமாக இருக்கும் என்று கருதிய இலங்கை அரசு சீனாவிற்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. கிளர்ச்சியை அடக்க திருகோணமலையில் இருந்த சீனாவின் கடற்படையின் உதவியை பெறாமல் இந்தியாவின் உதவியை நேரடியாக அவர்கள் கோரியிருந்தனர் .
சீனா-கொரியா தூதரகங்கள் முடக்கப்பட்டு அதன் தலைவர்கள். கைது செய்யப்பட்டனர். சீனா எப்போதும் இலங்கையை தன் கைக்குள் வைத்துக்கொள்ளவே பார்த்திருந்தது. 1970 களில் 313 மில்லியன் ரூபாய்களை கைத்தொழில் விவசாய முயற்சிக்கு வழங்கியது. 48 மில்லியன் ஆடை உற்பத்திக்காக வழங்கப்பட்டிருந்தது. 35 மில்லியன் ரூபா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம் அமைக்க வழங்கப்பட்டது.
அனேகமான கடற்படை கலங்களை இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. 1976 களில் இரு நாடுகளுக்கு இடையில் சிறந்த அரசியல் உறவுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவர் மற்றைய நாட்டுக்கு விஜயம் செய்யும் அளவு இருந்திருக்கிறது. மொத்தத்தில் சீன சார்பு கொள்கை, அணி சேராமை மற்றும் மேற்குலக எதிர்பை இலங்கை இந்த காலப்பகுதியில் கொண்டிருந்தது.
சீன இலங்கை அரசியலின் 1977ம் ஆண்டு முதல் இன்று வரையான செயற்பாடுகள் குறித்து எமது அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.
தொடரும்….