ஜோம்பி (Zombie) என்கிற ஆங்கில வார்த்தை இன்றைய தலைமுறையினருக்கு மிகப் பிரபலம். ஒரு இறந்த பிணத்தை எழுந்து நடக்க வைப்பது அல்லது இறந்த உடலை குறிப்பிட்ட செயலைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ள வைப்பது ஜோம்பி எனப்படும். இது கற்பனையால் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களைப் போன்றது எனலாம். இது சாத்தியம் என்கிறது இன்றைய மருத்துவ உலகம். நவீன யுகத்தில் இதை உண்மையாக்க மருத்துவ ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
வடக்கு ஐயர்லாந்தில் இருந்து பிரிட்டிஷ் படைகளை வெளியேற்ற வேண்டித் தொடர்ந்து “ஐயர்லாந்து குடியரசு படை” (Irish Republican Army) என்ற பெயரில் ஒரு படை ஒன்று இயங்கி வந்தது. இந்தப் படை இங்கிலாந்தின் வாரிங்டன் மாகாணத்தில் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஜோனதன் பால் மற்றும் டிம் பெர்ரி என்ற இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு இதன் தாக்கத்தில் கிரென்பெரீஸ் குழுவின் முக்கிய பாடகியான டோலரஸ் ஓ ரியோடன் ஒரு ஜோம்பி பேசுவது போல ஒரு பாடலை 1993 ஆம் ஆண்டு வெளியிட்டார். நீண்ட காலமாக நீடிக்கும் ஐயர்லாந்தின் சுதந்திர வேட்கையைப் பற்றிய பாடல் அது. இது 1916 எழுதப்பட்ட பாடலின் வரிகள். ஈட்ஸ், ஹேனி, மற்றும் யூ2 குழுக்களின் பாடல்கள் போன்று பதிலளிக்கும் விதமாக, மறுமொழி கூறுகின்ற வகையில் புனையப்பட்ட “ஜோம்பி” பாடலைப் பற்றி கிரென்பெரீஸ் குழு கூறும் பொழுது “இது இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தின் சமாதானத்திற்கான பாடல். பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் அரசியல் காரணங்களுக்காக கொடூரமாகக் கொல்லப்படுவதை விளக்கிய இந்தப் பாடல் அனைத்துத் தரப்பினரிடமும் நீங்கா இடத்தைப் பிடித்தது. இந்தக் காணொளியை உருவாக்கிய சாமுவேல் பேயர் உண்மையான பிரிட்டிஷ் ராணுவ வீரர்களையும் அந்தப் பகுதியில் வாழும் குழந்தைகளையும் வைத்து பிரத்தியேகமாக உருவாக்கினார். அது அரசியல் வட்டத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்தப் பாடல் வெளிவந்து சில வாரங்களில் ஆகஸ்ட் 31, 1994 அன்று அயர்லாந்து படை துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைகளை முழுவதுமாக நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. அன்றைய முன்னணி அரசியல் விமர்சகர்கள் ஐயர்லாந்து படைகள் கிரென்பெரீஸ் குழு அடுத்த பாடலை வெளியிடும் முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறியது முத்தாய்ப்பாக அமைந்தது.
டோலரஸ் ஓ’ ரியோடன் வருடம் 1971 ல் லைம்ரிக் என்ற ஐயர்லாந்தைச் சார்ந்த நகரத்தில் பிறந்தார். ஏழு குழந்தைகள் உடன் பிறந்த கடைக்குட்டி டோலரஸ். தன் தந்தையை முன்மாதிரியாகப் பாவித்து வளர்ந்து வந்தார். தந்தை ஒரு விவசாயப் பண்ணைப் பணியாளர். ஒரு நாள் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் தந்தை படுகாயமடைந்தார். அத்துடன் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. டோலோரஸின் ஆரம்பகால வாழ்க்கை மிக இருண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஒரு நாள் அவரது சகோதரிகளில் ஒருவர் எதார்த்தமாக நெருப்பு பற்ற வைக்க அது தீயாக பரவி டோலோரஸின் குடும்ப வீடு ஒன்று தீக்கிரையானது.
டோலரஸ் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறுகையில் “என்னுடைய குழந்தைப் பருவம் நிறைய ரகசியங்களைக் கொண்டது. என்னுடைய குழந்தைப் பருவத்திலே வயதான ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்” என்று வெளிப்படையாகக் கூறினார் டோலரஸ். அவரது பள்ளிப் பருவத்தில் வகுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் “இசை”. வகுப்பில் அவர் பாட ஆரம்பித்தால் போதும், இவரது குரலில் மொத்தமாக மெய் மறந்து விடுவர். பரிபூரண நிசப்தத்தில் இவரது பாடலில் மூழ்கி விடுவார்களாம்.
199௦ ஆம் ஆண்டு உள்ளூர் இசைக்குழுவிடம் வாய்ப்புக் கேட்டுள்ளார். கிரென்பெரீஸ் குழுவின் முக்கியப் பாடகர்களில் ஒருவர் வெளியேறுவதால் அந்த இடத்திற்கு டோலரஸ் உடனடியாகத் தேர்வானார். உடனடியாகக் குழுவில் ஒரு சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குழுவில் ஒருவரான ஹோகன் கூறுகையில் “டோலரஸ் அவர் இயற்றிய சில பாடல்களுடன் வந்து பாடலானார். அந்தக் குரலின் இனிமையைக் கேட்ட எங்கள் அனைவருக்கும் ஒரே வியப்பு. எவ்வளவு அழகான குரல் இந்தச் சின்ன பெண்ணிற்கு”. அவர்கள் ஆச்சர்யத்தின் காரணம் இந்தக் குரலுடன் இவ்வளவு நாளாக அவர் எந்த ஒரு குழுவின் மேடையிலும் ஏறவில்லை என்பதுதான். பல ஊர்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுதான் அந்தக் குழுவின் முழு வேலை. தொடக்க காலத்தில் டோலரஸ் பார்வையாளர்கள் முன்னணியில் மிகக் கூச்ச சுபாவத்துடன் பாடி வந்தார். ஆனால் அதுவே அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இவர் பாடப் பாட அந்தப் பாடல் மக்களிடம் இருந்து எதிரொலித்தது.
1993 ஆம் ஆண்டு ரசிகர்களின் அலைகளில் அவர்களின் “லிங்கர்” மற்றும் “ட்ரீம்ஸ்” பாடல்கள் கித்தார்களின் அதிர்வுகளுடன் டோலோரஸின் சுகமான கவர்ந்திழுக்கும் குரலுடன் ஒலித்தது. அந்த ஆல்பத்தைத் தொடர்ந்து வெளியான “நோ நீட் டு ஆர்க்யூ” (No need to Argue) என்ற ஆல்பம் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. புகழ்பெற்ற இசைச் சேனலான “Mtv” இவர்களின் நேரடி நிகழ்ச்சியைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. வருடம் 1994 ஆம் ஆண்டு டோலரஸ் டான் பர்டன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் டூரன் என்ற இடத்திற்குக் குழுவுடன் இசைச் சுற்றுப்பயணம் செய்யும்பொழுது மேலாளராக இருந்தார். ஜோடிகள் இருவரும் டான் பர்டனின் நாடான கனடாவிற்கு சென்றது. பின் மூன்று குழந்தைகள் பிறந்தனர். டோலரஸின் இசைப்பயணம் நிற்கவில்லை. தன்னை முழுமையாகக் குழுவிற்காகவும், இசைப்பணிக்காகவும் அர்ப்பணித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு உடல் சோர்வு காரணமாகப் பாதியிலே சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பினார் டோலரஸ். பின் டொலோரஸிற்கு நீண்ட இடைவெளி.
கிரென்பெரீஸ் ஆரம்ப கால வெற்றிக்குப் பின் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை அவர்கள் அடையவில்லை. ஆனாலும் அவர்களின் பழைய வெளியீடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துகொண்டே இருந்தது. வருடம் 20௦1 ஆம் ஆண்டு Wake up and Smell the Coffee என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டது மீண்டும் அவர்களை முன்னணிக்கு அழைத்துச் சென்றது. ஆனால் குறுகிய காலம் மட்டுமே, 20௦3 ஆம் வருடம் கிரென்பெரீஸ் குழு பிரிந்தது. டோலரஸ் தனியாக under-the-radar என்ற பெயரில் சோலோ ஆல்பங்களை வெளியிட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 20௦9 ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றிணைந்து வலிமையான ஆல்பம் ஒன்றை வெளியிட்டது. அதன் பெயர் “ரோசஸ்”. அதன் பாடல்கள் வெற்றி பெற்றாலும், அடுத்த மூன்று ஆண்டுகள் டோலோரஸின் வாழ்க்கை நிறையக் குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது.
அளவிற்கு அதிகமாக மது அருந்துவதாகவும், சக்திவாய்ந்த தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதாகவும் டோலரஸ் 2012 ஆம் ஆண்டு கூறினார். அவரது திருமணம் 2௦1 4 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதே வருடம் ஒரு காவல்துறை அதிகாரியைத் தாக்கியதற்காகவும், விமான பணிப்பெண்ணிடம் தகராறு செய்ததாகவும் கைது செய்யப்பட்டார். நீதிபதி அவர் சரியான மனநிலையில் இல்லாததால் விடுவிப்பதாகக் கூறினார். மருத்துவர்கள் டோலரஸ் உளவியல் ரீதியாக (bipolar disorder) பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதிலிருந்து மீண்டு 2016 ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்குப் பெயர்ந்து ஒரு குழுவில் இணைந்து பாடலானார். அந்தக் குழுவின் DJ’வை மீண்டும் திருமணம் செய்து கொண்டார் டோலரஸ்.
இரண்டு குழுவிலும் பணியாற்றி, பல இசைப் பணிகளிலும் அவர் மூழ்கியிருந்த நேரம் அது. நியூயார்க் நகரில் இருந்து டப்ளின் செல்லும் வழியில் சிறிய ஓய்வுக்காக லண்டனில் தங்கியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 15, 2௦1 8 அன்று மர்மமான முறையில் லண்டன் விடுதி அறையில் பிணமாக கிடந்தார். அவருக்கு வயது 46. முதல் கட்ட விசாரணையில் அவர் மன அழுத்தத்தில் இருந்தாலும் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என்று அனைவரும் மறுத்துள்ளனர். மேற்கத்திய இசை வரலாற்றில் அகால மரணம் என்பது ஒரு சாபக்கேடு எனவே சொல்லலாம். பட்டியல் போடும் அளவிற்குப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள் எதிர்பாரா வண்ணம் இந்த உலகை விட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் வாழ்க்கையைப் புது கோணத்தில் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த டோலரஸின் மரணம் இசை ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்பே…
Web Title: The tragedy behind the cranberries and the magical songs
Featured image credit: deviantart, theaustralian, rthk