வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம், அங்கிருந்து மற்றொரு இடம் என காலத்திற்கும் தேவைக்குமேற்ப இடம்மாற்றிக்கொண்டே இருக்கும். உங்களையே எடுத்துக்கொண்டால், உங்களில் எத்தனை பேர் பிறந்த ஊரிலிருந்தபடி இதனை வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரே என்றால் அது பொய்யில்லை.
கல்வி, வேலை போன்ற பல காரணங்களுக்காக தமது சொந்த இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இடம்பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயத்திற்கு நம்மில் பலர் ஆளாகியுள்ளோம். சொந்த ஊரில், சொந்த வீட்டில், உறவுக்காரர்களோடும், நண்பர்களோடும் உரிமையோடு வாழ்ந்த அத்தியாயத்திலிருந்து புதிய இடம், அறியாத மனிதர்கள், புரியாத பாஷைகள், பிடிக்காத உணவு என மாறும் தருணங்கள் கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாததுதான். அப்பொழுதுதான், “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?” என்ற பாடல் இளையராஜாவின் இசையைத் தாண்டி இன்னும் கொஞ்சம் அதிகம் இனிக்கும்.
நாம் வாழ்ந்த வீடு குடிசையோ, கோபுரமோ. பழக்கப்பட்ட இடத்திலிருந்து சுவர்க்கத்திற்குச் சென்றாலும் ஓரிரு நாட்கள் அங்குள்ள பட்டுப் பஞ்சனையிலும் தூக்கம் வராது. இதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்ந்து, மண்வாசனை விட்டு, புகைவாசம் பிடிக்க நகரத்திற்கு வந்தவர்களின் நிலை அதோகதிதான்.
இடம், மனிதர்கள், பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாடு, உணவு, விலைவாசி இப்படி நிறையவே சகிப்புத்தன்மையும் தியாகமும் விதியும் வந்து தாண்டவமாடும் சமயம் அது. ஆயிரமாயிரம்பேர் நடந்துசெல்லும் சாலையில் தனியே நடந்துசெல்வதாய் உணர்ந்த தருணங்கள் ஞாபகம் வருகிறதா? ஆனால் இந்நிலை நீடிப்பதில்லை. நாட்கள் நகர நகர மனிதனுக்கேயுள்ள மறதி எனும் மருந்து எம்மை நாளடைவில் இருக்கின்ற சூழலுக்கு இசைவடையச் செய்துவிடும். ஆனால் நிறையப்பேருக்கு இந்தப் பட்டினப் பிரவேசம் ஒரு பயங்கரக் கனவாகவே இருந்து வருவதுண்டு. குறிப்பாக ஓட்டுக்குள் ஒதுங்கிய நத்தையாய் வாழ்ந்தவர்களுக்கு புதிய உலகம் சற்று பீதியைக் கிளப்புவது சகஜம்தான்.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாசகம் அறிந்த தமிழர்க்கு இந்தப்பயம் அவசியமா? உயர்கல்விக்காய் பட்டணம் செல்கிறீர்களா? வேலைநிமிர்த்தம் வெளியூர் வாசமா? தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ சொந்த இடம்விட்டு வந்த இடத்தில் தத்தளிக்கும் நண்பர்களுக்கு, தம்பி தங்கைகளுக்கு, உங்கள் புது உலகை வெற்றிகொள்ள ஒரு சில குறிப்புக்கள்;
புதிய இடம்
எல்லோருக்கும் சென்ற இடமெல்லாம் சொந்த இடங்கள் இருப்பதில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதமானோர் வாடகை வீடுகளிலும், அறைகளிலும், விடுதிகளிலும் தங்கி வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். செலவு ஒரு பெரும் தலைவலி. விடுதி வசதி உள்ளவர்கள் ஓரளவு அதிஷ்டசாலிகள் என்றாலும் உணவு விடயத்தில் தியாகிப்பட்டம் பெறத் தகுதி பெறப்போகிறவர்கள். வாடகை வீடு மற்றும் அறைகள் விடயத்தில் ஆண் பிள்ளைகளுக்குச் செலவு கொஞ்சம் குறைவே. பெண்பிள்ளைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு தொடக்கம் பத்தாயிரம் வரை தங்குமிடத்துக்கே செலவாகிவிடும். இதுவே இடம்பெயர்தலில் உள்ள மாபெரும் செலவினம். படிக்கின்ற மாணவர்களுக்கு இது பெரும் தலையிடி.
அறிந்தவர்கள் சிலர் சேர்ந்து ஒரு இடத்தை எடுத்து ஒன்றாக இருப்பது இதற்கு ஒரு தீர்வு எனலாம். ஒருவர் கொடுக்கும் வாடகையை நான்குபேர் சேர்ந்து கொடுப்பது தமது சுமையில் ஓர் பகுதியை இறக்கிவைப்பது போன்றதே! மட்டுமல்லாது, பாதுகாப்பு, உதவி ஒத்தாசை என அதில் இன்னும் சில அனுகூலங்கள் உள்ளன. ஒருவருடன் ஒருவர் புரிந்துணர்வுடனும் மரியாதையோடும் நடந்துகொள்வதன்மூலம் இவ்வொழுங்கை நீண்ட நாட்களுக்கு நீடிக்கச் செய்யலாம்.
இடப்பிரச்சினை தீர்ந்தாலும், அவ்விடத்துக்குத் தங்களை இசைவுபடுத்தல் இன்னுமொரு சவால். புதிய இடம், தனிமையுணர்வு, வீட்டு நினைவு இப்படி உங்களை மனதளவில் பாதிக்கும் உணர்வுகளை களைந்து வெளியேற சில வழிகள் உள்ளன. உங்களுடைய அழகியல் உணர்வை கொஞ்சம் தூசுதட்டி புத்துப்பிப்பதே இதற்கு வழி. நீங்கள் இருக்கும் இடத்தை புனிதமாகவும், அழகாகவும் பேணுதல் அவசியம்.
சிறு தாவரங்களை வீட்டினுள் வளர்த்தல், மீன்தொட்டிகளை அமைத்தல், நல்ல இசையைக் கேட்டல், சிறந்த நூல்களை வாசித்தல், ஓய்வு நேரங்களை தூங்கிக் கழிக்காமல் ஆக்கபூர்வமாக எதையாவது செய்தல் என இவை நீளும். தாவரங்கள் எங்களை இயற்கையின்பால் ஈர்க்கும், மனதுக்குப் பசுமை இன்பமளிக்கும், வெவ்வேறு அழகியல்சார் வேலைகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்வது எண்கள் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாகவும் வேறு தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து விடுபடவைக்கவும் உதவும்.
மொழி
தாய்மொழி தவிர்ந்த அனைத்து மொழிகளையும் கற்றல், பயன்படுத்தல் என்பன நம்மவர் மத்தியில் ஓர் சவாலாகவே பார்க்கப்படுகிறது. புதிய மொழிகளைக் கற்றல் ஓர் மனிதனின் ஆளுமையை பன்மடங்கு பரந்ததாக ஆக்கும். ஒவ்வொரு மொழியும் ஓர் வாழ்க்கைமுறை. பரந்த உலகத்தில் இசைவாக்கம் உள்ளவன் பிழைத்துக்கொள்வான். எனவே, மொழியறிவு, மொழிகளிலுள்ள பாண்டித்தியம் எம்மை பலமடங்கு சிறப்பானவர்களாக ஆக்கும். ஆனாலும் அதில் என்ன கடினம் நமக்கு? “எனது மொழி மட்டும் போதும், என்னால் இந்த மொழி பேசவே முடியவில்லை” என அலுத்துக்கொள்ளும் நிறையப்பேரை நாங்கள் கண்டிருக்கிறோம்.
நிறையப்பேருக்கு மொழியை உள்வாங்குதல் தொடர்பான நுணுக்கம் புரிவதில்லை. பிறந்த குழந்தையாய் இருக்கும்பொழுது யாரும் எமக்கு மொழிக்காக வகுப்பு எடுக்கவில்லை. எதுவுமே கற்காமல் இரண்டு மூன்று வயதாகும்போது நமது பிள்ளைகள் எவ்வளவு விளக்கமாகப் பேசுகின்றனர். அது எப்படிச் சாத்தியம்? ஆம் செவிமடுத்தல், உள்வாங்குதல், பயிற்சிசெய்தல், முயன்று தவறிக் கற்றல் போன்றவை மூலமே மொழிகளில் பாண்டித்தியம் பெற இயலும். புதிய மொழிகளைக்கண்டு வெருண்டோடுவதை விடுத்து, பிழையாக இருந்தாலும் பரவாயில்லை, பேச ஆரம்பியுங்கள். கிரேக்க மொழியும் கடினமானதாகத் தெரியாது. நாளடைவில், அம்மொழியிலுள்ள திறன் மென்மேலும் செம்மையடைந்துசெல்லும் என்பது உறுதி. அது உங்கள் புது உலகத்துக்கான பல பாதைகளைத் திறந்துவிடும்.
போக்குவரத்து
சிக்கலான பாதையமைப்பு, வாகன பல்வகைமை, நகரத் திட்டம், ஒற்றைவழிப் பாதைகள், வாய்க்குள் நுழையாத பெயர்கள், நெருக்கமான கட்டட அமைப்பு இப்படிப் பல இண்டு இடுக்குகள் எம்மை ஆரம்பத்தில் மிரளவைக்கும். பேருந்து இலக்கங்கள் நினைவில் நிற்காது மடக்கை அட்டவணைபோல் உயிரை வாங்கும். பழைய பாதை புதிய பாதை போன்ற இடர்கள் வேறு சமயத்தில் காலை வாரும். வாகன நெரிசல், அடைய வேண்டிய இடத்துக்குச் செல்ல எடுக்கும் நேரத்தைக் கணிக்க இயலாத அளவு மாற்றம் காட்டும்.
தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியில், புத்தாயிரத்தின் புதல்வர்கள் இதையெல்லாம் கண்டு அஞ்சலாமா? திறன்பேசி இல்லாத ஆள் உங்களில் யாருமே இருக்க முடியாது. கூகுள் வரைபடம் உங்கள் புதிய உலகத்தில் உங்களோடு வாழும் உடன்பிறவா சகோதரன் என நினைத்துக்கொள்ளுங்கள். முச்சக்கரவண்டிகளில் செல்பவர்களுக்கு இது கட்டாயம். ஓட்டுனர் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் நீங்கள் செல்லும் பாதை தொடர்பான தெளிவு உங்களுக்குத் தேவை. அதுவே பாதுகாப்பும்கூட. எனவே நீங்கள் முழுமையாக இசைவாக்கம் அடையும்வரை வெளியே கிளம்பும்போதெல்லாம் கூகுல் வரைபடத்தைத் துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
போக்குவரத்தின் வேகம், இடம் தொடர்பான தெளிவான விளக்கம், குறித்த இடத்தை சென்றடைவதற்கான சாத்தியம் கொண்ட நேரம், இப்படிப்பல தகவல்களை நேரடியாகவே எம்மால் அறிந்துகொள்ள இயலும். எனவே இடம், போக்குவரத்து தொடர்பாக ஐயமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று இதனைத்தான் சொன்னார்களோ என்னவோ!
புதிய மனிதர்கள்
ஞாயம் தர்மம், என்பது கடந்து சரி பிழை தாண்டி, “பாதுகாப்பு” என்கிற ஓர் விடயம் புதிய மனிதர்கள் விடயத்தில் எம்மை சற்றுத் தள்ளியே இருக்கச் செய்கிறது. அது தவறும் அன்று. புதியவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருத்தல் நன்று. பார்த்த மாத்திரத்தில் ஒருவரை நம்பிவிடுதல் எல்லா இடத்துக்கும் பொருத்தமல்ல. வருடக்கணக்கில் பழகியவர்களே காலைவாரிவிடும் காலத்தில் முன்பின் தெரியாதவர்கள் குறித்து அவதானமாயிருங்கள். இருந்தும் எமது பிரப்புக்கேயுரித்தான மனிதத்தின் சிறப்பை அது பாதிக்காமல் பார்த்துக்கொள்வது சிறப்பு.
உணவு
கடைசியில் வருவது படு முக்கியமானது. புதிய இடம், கடையில் உணவு இது நிறைய நாள் தாக்குப்பிடிக்காது. உணவில் ஏற்படும் பிரச்சினை அடிப்படையில் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும். வயிறு காலியானால், நாக்கு செத்துப்போனால் மனித வண்டி ஓடாது. விலைவாசி தலைவிரித்து ஆடும் ஆட்டத்தில் கடையில் அந்த விலைகொடுத்து வாங்கும் உணவு தொண்டையில் இறங்கினாலும் செரிமானம் ஆகாது.
ஆண்களோ பெண்களோ சிறியதாக ஓர் சாதம் சமைப்பானை (Rice Cooker) வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் சிறிய ஓர் அடுப்பு. ஒரே கறியுடன் உண்டாலும் வீட்டு உணவு வீட்டு உணவுதான். மட்டுமன்றி வீட்டில் சமைப்பது கடையில் உண்பதைவிட இலாபகரமானதும் சுகாதாரமானதும் கூட. சமையல் ஒரு கலைதான் இருந்தும் அது கம்ப சூத்திரமல்ல, எளிமையாக ஓர் கூட்டு, குழம்பு, பொரியல் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் அதுவே உங்களை ஓர் சமையல் கலை நிபுணராக பின்னாளில் மாற்றிவிடும். ஆரோக்கியமும் உங்களைக் கைவிடாது. உங்களை வேறோர் இடத்திற்கு அனுப்பிவிட்டு உங்கள் உணவுமுறை பற்றிக் கவலைப்படும் தாய்தகப்பன்மாருக்கும் அது ஓர் நிம்மதியைக் கொடுக்கும்.
பொருளாதாரம்
உயர்கல்வி கற்கும் மாணவர்களே! தொழில் என்பது எட்டு மணி தொடக்கி ஐந்து மணிவரை முடங்கிக்கிடப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் தொழில்கள் பலவகைகளில் பரிணாமமடைந்து இருக்கின்றன. வீட்டில் இருந்தபடியே, இணையத்தினூடு செய்வதற்கும், சுய திறமைகளைப் பயன்படுத்தி செய்வதற்கும் வருமானமீட்டக்கூடிய பல வழிகள் உள்ளன. ஏதாவதொரு பகுதிநேர தொழிலில் ஈடுபடுங்கள்! அது உங்கள் ஆளுமையை விருத்திசெய்யும். பல்வேறுபட்ட துறைகளையும், தொழில்முறைகளையும் அதுபற்றிய பயிற்சியையும் கற்றல் நடவடிக்கைகளோடு சேர்த்து பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தன்னம்பிக்கையை இது மேம்படச் செய்வதோடு பொருளாதார ரீதியிலும் உங்களுக்குக் கைகொடுக்கும்.
புதிய சூழல்தரும் சவால்களை மேற்கூறிய அம்சங்களுக்குள் மட்டும் அடக்கிவிட இயலாது. காலம், சூழ்நிலை என்பவற்றுக்கேற்ப சூழல் எம்மீது தொடுக்கும் சவால்கள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே எவ்வாறான சூழலிலும் “அச்சம் என்பது மடமையடா” என எதுவந்தாலும் சமாளிக்கும் மனோபாவத்தையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.
இருந்தும், எவ்வளவுதான் இசைவாக்கம் அடைந்தாலும், பட்டணத்தில் திறம்பட வாழ்ந்தாலும், வேலைப்பழுக்களை முடித்து, வாகன நெரிசல் கடந்து, வியர்க்க விறுவிறுக்கக் களைத்து, தளர்ந்த கால்களோடு வீடுநோக்கி நடக்கையில் வெள்ளவத்தைக் கடைவீதிகளில் ஒலிக்கும் இளையராஜா பாடல் செவிகளில் விழும்போது எழும் உற்சாகமும், வீட்டு ஞாபகமும் உள்ளுக்குள் ஆழமாக நாம் இழந்து தவிக்கும் எம் பழைய வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.