இன்னமும் நினைவிருக்கிறது…..
90களின் என் சிறுபராயத்தில் “நரகாசூரன் இறந்ததுக்கு எல்லாமா தீபாவளி கொண்டாடுவோம்?” என சிணுங்கிக்கொண்டே கேட்ட எனக்கு, நரகாசூரன் முதல் தீபாவளி தின்பண்டங்கள் வரை அம்மப்பாவும், அம்மாவும் சொல்லித்தந்தவை இன்னமும் நினைவிருக்கிறது…..
இன்று இயந்திர சூழலில் சிக்கி, பல்தேசிய கம்பனிகளின் அடிமையாகிப்போன எனக்கு, தீபாவளி கொண்டாட்டங்களில் அவ்வளவு ஈர்ப்பு இருப்பதில்லை. காரணம், சிவப்பு மைதோய்ந்த நாட்காட்டி யாருக்கு விடுமுறை தந்தாலும், யாருக்கோ உழைக்கும் எனக்கும், என்னை போன்றவர்களுக்கும் “வணிக விடுமுறை” என்பதை தந்ததில்லை. எனவே, சிறுபராய தீபாவளி நினைவு மீட்டலுடனும், புதிய திரைப்படங்களுடனும் தீபாவளியை கடந்து செல்ல பழகிக்கொண்டேன்/டோம்.
தீபாவளி என்றதுமே, முதலில் நினைவுக்குவருபவை, தீபங்களும், இன்சுவை தின்பண்டங்களுமே! ஏனைய பண்டிகைகள் போல, தீபாவளி தினத்தில் அசைவ உணவுகளுக்குப் பெரிதாக இடமில்லை. காரணம், தீபாவளிக்கு முன்னதான நாட்களை கௌரி காப்பு விரதமும், பின்னான நாட்களை கந்தசட்டி விரதமும் ஆக்கிரமித்து கொண்டு விடுவதால், அசைவ உணவைப்பார்க்கிலும், அனைவருக்கும் பொதுவான தித்திப்பான தின்பண்டங்களே முன்னுரிமை பெறுகின்றன. அதிலும், இலங்கை தமிழர்களின் கொண்டாட்டங்களில், எங்களுக்கேயுரிய பாணியிலான பலவகைப் பலகாரங்கள் இடம்பிடித்திருக்கும். இன்று, தித்திப்பான தின்பண்டங்களை கடைகளின் கண்ணாடி பெட்டியில் பார்த்தே பழகிவிட்ட எனக்கும் என்னை போன்றவர்களுக்கும், சிறுபராயத்தில் நாங்கள் சுவைத்த தின்பண்டங்களையும், அதன் சுவையையும் மீளக்கொண்டுவருவது ஒரு சுகமான நினைவாகும்.
எங்க ஊரில், தீபாவளிக்கு செய்யப்படும் முக்கிய தின்பண்டங்களில் முதன்மையானது “தொதல்” (Dodol) தான். காரணம், ஒரு பண்டிகை வரப்போவதற்கு அறிகுறியாக முதலில் வீடுகளில் செய்யப்படும் உணவுவகை இதுதான். தென்னை மரங்களை அதிகம் கொண்டிருந்ததாலும், தனியே ஒரு குடும்பத்திற்கு மட்டும் இதனை செய்யாமல், கூட்டாக பலகுடும்பங்கள் சேர்ந்து செய்வதன் மூலம், செயன்முறையை இலகுபடுத்தலாம் என்கிற நோக்கமும், தீபாவளிப் பலகாரப் பட்டியலில் இந்த உணவை முதன்மைபடுத்தி இருக்கிறது என்பேன். என்வீட்டை சுற்றியுள்ள பலகுடும்பப் பெண்களின் கைவண்ணத்தில் வறுத்த அரிசிமாவும் , தேங்காய்த் துருவலும், கருப்பங்கட்டியும் சேர்ந்து கைவண்ணமாக, அதே வீடுகளின் ஆடவர்களால், சட்டியுடனான இடைவிடாத 2 மணிநேரப்போராட்டத்துக்கு பின்புதான், கைவண்ணக் கலவைக்கு தொதல் என்கிற வடிவத்தையே கொடுக்க முடியும். அப்படி உருவான தொதலை சட்டியிலிருந்து வழித்து சாப்பிடுவது ஒருவகை சுவை என்றால், காற்றுபுகாத வண்ணம் இறுக்கமான துணிகளால் மூடி, எண்ணெயை வடியவிட்டு, 3-4 நாட்கள் கழித்து பண்டிகை தினம் பரிமாறப்படும் தொதல் மற்றொருவகை சுவையாக இருக்கும்.
தித்திக்கும் இனிப்பாக தொதல் இருப்பதால், அதற்கு ஏற்றால்போல, அதன் சுவையை கட்டுபடுத்தக்கூடிய பண்டமாக “பருத்தித்துறை தட்டு வடை”யை சொல்லுவேன். தட்டுவடையுடன் பருத்தித்துறை என்கிற பதம் எவ்வாறு ஒட்டிக்கொண்டது என்று அறியாவிட்டாலும், சாப்பிடக்கூடிய தட்டுவடை எத்தகைய முறுகலான பதத்தில் இருக்கவேண்டும் என்பதை நன்கு அறிவேன். உழுந்து, கோதுமை மாவுடன், தட்டுவடையை ருசிகரமாக மாற்றியமைக்கும் “சிறுதுண்டுகளாக்கபட்ட செத்தல் மிளகாய்”யும், ஏனைய வடைக்கான மூலப்பொருட்களையும் சேர்த்து, அவற்றை தட்டையாக்கி வட்டவடிவில், முறுகல் பதத்தில் பொரித்து எடுப்பதே தனிக்கலைதான் போலும் என, அம்மாவின் எண்ணெய்ச்சட்டிக்கு அருகிலேயேயிருந்து வியந்திருக்கிறேன்.
இதனைவிடவும், வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு “சீனி முறுக்கு”, பெரியவர்களுக்கு “கடலைமா உறைப்பு முறுக்கு” என, வயதுக்கேற்ற வித்தியாசத்தில் அம்மா தீபாவளிக்காக செய்யும் முறுக்குகளும் தனி சுவைதான். வெள்ளை முறுக்குக்கான சீனிப்பாகும், உறைப்பு முறுக்குக்கான வறுத்த செத்தல் மிளகாயும் முக்கிய மூலப்பொருளாக இருக்கும்.
இதனைத்தவிரவும், எல்லா பண்டிகை மற்றும் கலாசார வைபவங்களிலும் தவிர்க்க முடியாத இன்னும் சில தின்பண்டங்களும் தீபாவளியில் உண்டு. சீனி அரியதரம், பயத்தம் பணியாரம், லட்டு, பூந்தி என அப்பட்டியல் நீளும். சீனி அரியதரம் வெறுமனே அரிசி மா, ஏலக்காய் , சீனி என்கிற எளிமையான சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், ஆரோக்கியமானதான இனிப்புவகையாக பெரியவர், சிறியவர்கள் என பாகுபாடு இல்லாமல் உண்ணக்கூடியதாக உள்ளது. அதேபோல, சிறுதானியங்களின் உதவியோடு உருவாகும் மற்றுமொரு பயனான பலகாரமே “பயத்தம் பணியாரம்”. பச்சைப்பயறு, சிவப்பரிசி என்பவற்றை உண்ணாதவர்கள் கூட, பயத்தம் பணியாரத்தை தவறவிடுவதில்லை. எனவே, பண்டிகைப்பலகாரத்துக்கு பலகாரமாகவும், உடலுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இத்தகைய தின்பண்டங்கள் உள்ளன.
இவற்றை விடவும், லட்டு, பூந்தி, சிப்பி சோகி, பனங்காய்ப்பணியாரம், சுண்டல் என வருடந்தோறும் இன்சுவைத் தின்பண்டங்கள் இலங்கை பாரம்பரியங்களை பறைசாற்றியபடி நம் அன்பையும் சேர்த்தே, உறவினர்களிடம் பகிர்ந்தபடி இருக்கும்.
தீபாவளி பண்டிகையின் பலகாரங்கள் தவிர்த்து, மாலையில் தீபங்களை ஏற்றி மகிழ்வதும் கூட, ஒரு சிறப்பம்சம்தான். தீப ஒளி ஏற்றலுக்கு மதரீதியாகவும், ஒவ்வொரு நாடுகளின் பரம்பல் ரீதியாகவும் பல்வேறு கதைகளும், வரலாறுகளும் உள்ளன. ஆனால், அவற்றின் உண்மையான நோக்கம், தத்தம் வீடுகளில் தீபங்களை ஏற்றிவைத்துவிட்டு குடும்பமாக அகமகிழ்வது மட்டும் அல்ல. வீட்டின் வாசல்வரை ஏற்றப்படும் தீப ஒளியில் அயலவருடனும் அளவளாவி அன்பை பரிமாறிக் கொள்வதுனூடாக, இப்பண்டிகையை ஒருமித்து “ஒற்றுமை” யாக கொண்டாடுவதே ஆகும்.
ஆனால், இன்று அவசர அவசரமாக யாரோ செய்த பலகாரங்களுக்கு எங்கள் பெயர்களை லேபிளாக போட்டு, அதனோடு போலி அன்பையையும் சேர்த்து கடமைக்காக உணவையும், உள்ளங்களையும் பண்டிகைகாலத்தில் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். குறைந்தது மதங்கள் மறந்து, மனிதர்களாக மாறி, பலருடன் உணவையும், உண்மையான அன்பையும் பங்கிட்டு, பழமை மாறாத பண்புகளை கொண்டாடவாவது இந்தப்பண்டிகைகளை நாம் செவ்வனே உளமாரக் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, உண்மையான அன்பை பரிமாறி தீபாவளியை கொண்டாடும் சகல வாசகர்களுக்கும் roar குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
P.S – தீபாவளி என்கிற சொல்லுடன் நாம் மறக்க முடியாத மற்றுமொரு சொல் “பட்டாசு”. சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுக்கு ரசிகர்களாக இல்லாமல் இல்லை. இப்படியான பட்டாசுகள் அழகானவை ஆனால், ஆபத்தானவை. எனவே, ஆபத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டோமே என மனம் வருந்தாமல், தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.