ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் முடிவுக்கு வந்ததுமுதல் சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட எதிர்வினைக் கருத்துக்கள் வலம்வந்த வண்ணமே உள்ளன. அரசு, காவல்துறை, ஊடகங்கள், தனியார் அமைப்புக்கள், பிரபலங்கள் இப்படி பல தரப்பினர் தொடர்பான வாத பிரதிவாதங்கள் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வேளையில், இப்போராட்டம் வித்திட்ட பல்வேறு பிற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் ஆங்காங்கே இடம்பெறுவதை நாம் பார்க்கின்றோம்.
ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கானது மட்டும் அல்ல என்பதே உண்மை. குறிப்பாக, எமது பாரம்பரியத்தைக் குறிவைத்து, எமது கலாசாரத்தை முற்றிலும் வேரோடு சாய்த்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மோகம், மற்றும் மேற்கத்தேய ஆதிக்கம் போன்றவை தொடர்பாக இளைஞர்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வாகவே இதனைக் கொள்ள வேண்டும். “வெள்ளையனே வெளியேறு” என நாங்கள் கோஷம்போட்டு அரைநூற்றாண்டு கடந்துவிட்டாலும், அவர்களது கலாச்சாரத் தாக்கமும், அதன்மீது நாம்கொண்ட மோகமும் மென்மேலும் அதிகரித்துத்தான் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு என்ற ஒரு திருப்புமுனையில் அது நன்கு உணரப்பட்டும் இருக்கிறது. விவசாயிகள் தொடர் தற்கொலைகளை இன்று தனது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் முக்கிய பிரச்சினை என ஒவ்வொரு இளைஞனும் பொறுப்புணர்வுடன் பார்க்க விழைந்திருக்கிறான். அதன் இன்னுமொரு வெளிப்பாடே கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களுக்கு எதிரான முன்னெடுப்பு. உண்மையைச் சொல்லப்போனால், இக்குளிர்பானங்களின் பயன்பாடு எமது சமூகத்தில் சர்வ சாதாரணமாக நடந்துகொடிருப்பது, இக்குளிர்பானங்கள் இன்றி உணவு தொண்டைக்குள் இறங்குவதில்லை என்று சொல்லுமளவுக்கு நாங்கள் இவற்றுக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம்.
“கூல் நம் கொக்கா கோலா” என்ற இவ்வாசகம் எப்பொழுதிலிருந்து எமது சமூகத்தை ஆக்கிரமித்தது? இதனை விட்டு எப்படி வெளியேறுவது? இதுகுறித்த சிந்தனைகளின் நடுவே எமது அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலத்தில் கொக்கா கோலா இருந்ததா? குளிர்சாதனப் பெட்டிதான் இருந்ததா? அவர்கள் கோடையையும் வெயிலையும் எப்படிச் சமாளித்தனர்? இதுபற்றிச் சிந்திப்பது கொக்கா கோலா பழக்கத்திலிருந்து எம்மை நாம் விடுவித்துக்கொள்ள ஓர் உத்தியாக இருக்கும் என்பதனால், வாசகர்களோடு இதுபற்றிக் கலந்துரையாட நினைக்கின்றேன்.
எனது பல கட்டுரைகளில் நான் குறிப்பிடுவதுபோல, முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற வாழ்க்கை முறைகள் ஒருபோதும் இயற்கைக்கு மாறானதாக இருந்ததில்லை. அத்தோடு அவர்கள் பின்பற்றிய எந்தவொரு நடைமுறையும் ஏதோவொரு காரத்துக்காகவும், ஒரு நன்மைகருதியுமே இருக்கும். அதுபோன்றதுதான் தாகசாந்திக்காக அவர்கள் பயன்படுத்திய உணவு மற்றும் பானங்கள்.
இன்றைய போஷணை வல்லுனர்கள் அதிகமதிகம் நீரை அருந்துமாரறும், கக்கரி, வெள்ளரி போன்ற நீர்ப்பெறுமானம் அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் சாதாரண மக்கள் தங்கள் தாகம் தீர்க்கும் பானமாக இதனையே பருகுகின்றனர். அவ்வாறு சாதாரண கிராமப்புற மக்கள் எமது முன்னோர்கள் பின்பற்றிய எவ்வாறான வழிமுறைகளை இன்றும் நடைமுறையில் வைத்துள்ளனர் என்று பாப்போம்.
மண்பானையில் வைத்த நீர்
இயற்கையான குளிர்த்தளுக்குள்ளாகும் நீர், எந்தவிதமான உடல் உபாதைகளுக்கும் இடம்கொடாத முதன்மையான தாகம்தீர்க்கும் பானம் என்றால் மிகையல்ல, வீட்டு முற்றங்களில் மரநிழல்களில் வைக்கப்பட்டிருக்கும் இம்மன்பானைகளில் நிரப்பிய நீர் குளிர்சாதனப் பெட்டியில் செயற்கையாகக் குளிர்த்தப்பட்ட நீரிலும்பார்க்க சிறந்தது, சுகாதாரம்மிக்கது.
வெள்ளரிப்பழம்
நீண்டதூர வாகனப் பயணங்களில் வரண்ட காட்டுப்பிரதேசங்களில் அல்லது ஊர்களில் வீதியோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் தென்னோலைகளால் வேயப்பட்ட தூக்குகளில் உள்ள வெள்ளரிப்பழங்களை எப்போதாவது கண்டிருப்பீர்கள். ஆனால் வெள்ளரிப்பழங்களின் விதைகளை பழத்தின் பிசுபிசுப்பான சாற்றுடன் சேர்த்து சுவர்களில் மொழுகி, சிலநாட்களின் பின்னர் அவற்றை கொல்லைப்புறங்களில் இட்டு, அது முளைத்து வளர்ந்து, காய்த்து, அந்தக்காய் கொடியிலேயே பழுத்து, தோல்விரியும்வரை காத்திருந்து பறித்து, சீனி போட்டு அடித்துச் சாப்பிடும் வழக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இது கோடைகாலங்களில் கிராமப்புற வீடுகளில் சாதாரணமாக நடக்கும் ஓர் விடயம். வெள்ளரிப்பழங்களில் 80% சதவீதம் நீரே இருக்கும். வெப்பத்துக்கு உகந்த சுவையான பானம் வெள்ளரி என்பதை அதனைச் சுவைத்தவர்கள் ஆமோதிப்பர்.
நுங்கு
கற்பக தரு என்பதற்கு முழுமையான நியாயத்தை கற்பிக்கும் பனைமரம் தரும் உபயோகங்களில் பனை நுங்கும் முதன்மையானது. பனம்பழத்தின் சுவை ஒருவிதமென்றால், மரத்திலிருந்து இறக்கிய நுங்கின் சாறு வெயிலுக்கு மட்டுமல்ல அதன் சுவைக்காகவே ருசிபார்க்கக்கூடியது. சீவிய நுங்கை பெருவிரலால் கிண்டி உண்பதும், நுங்கின் சாரும் அனுபவித்தவர்களுக்கு மட்டுமேயான சுக அனுபவம்.
செவ்விளநீர்
இறைவன் அல்லது இயற்கை எதுவாக இருப்பினும் அதன் சிறப்புச் சொல்லிமுடியாதது. மனிதனுக்குத் தேவையான எதனையும் இயற்கை அவனுக்கு வழங்காமலில்லை. மனிதவாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் இயற்கையிடம் உண்டு. ஆனால் மனிதன்தான் வீணானவற்றை மிகையாக நுகர்ந்து, பொக்கிஷங்களை தூரமாக்கி வைத்திருக்கிறான். இளநீர் சேமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானமே புதுமையானது. காற்றுக்கூட புகாமல் வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் இனிய நீர், ஒருவித விருவிருப்போடு கொண்ட சுவை, ஒருவருக்கு முழுமையாகப் பருகப் போதுமான அளவில் மனிதனின் தாகம் தணிக்கவென்றே உருவாக்கப்பட்டது போன்ற அமைப்பு இவையனைத்தும் இயற்கையின் அற்புதங்கள்.
இப்படி தர்பூசணி, முலாம்பழம், என இயற்கை எமக்களித்த தாகம்தீர்க்கும் அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கொக்காக் கோலாவையும் பெப்சியையும் வழக்கொழியச்செய்ய போராடும் இளைய சமுதாயத்தினரே! உங்கள் கவனங்கள் எமது முன்னோர்கள் வாழ்ந்துகாட்டிய இவ்வியற்கை வாழ்முறைநோக்கித் திரும்பட்டும்!