மலரும் நினைவுகள்

அது ஒரு சின்ன சைக்கிள், எதிர்வீட்டு குட்டிப் பையன் ஒட்டி விளையாடிட்டு இருந்தான். எப்பவும் சிடு சிடுன்னு ஏரியாவில் சுற்றும் 55வயது ஆசாமி மேல் இடித்து விட்டான் . பய தொலஞ்சான் என நினைக்கும் போது அவனைப்  பார்த்து சிரித்துவிட்டு நான் ஒரு ரவுண்டு ஓட்டிட்டு தரன்டா! என்று அந்த சைக்கிளை சிறிது தூரம் ஓட்டிப்பார்த்துதான் குடுத்தார் அந்த பெரியவர் . இத்தனைக்கும் எல்லோரும் அவரைப்  பார்த்துச் சிரித்துக்கொண்டே தான் இருந்தோம் . அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி எங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை .

படம்: readers-digest

ஆங்கிலத்தில் ‘நாஷ்டாலாஜிக்’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதன் பொருள் நாம் மகிழ்ந்திருந்த பழைய நினைவுகளில் மூழ்குதல் என்று . கொஞ்சம் மூழ்கித்தான் பார்ப்போமே ! நான் பள்ளிக்கூடம் பயின்ற நாட்களில் எனது ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “ஒளியும், ஒலியும் பாக்குறதுக்கு டீவி இருக்க ஒரு வீட்டுல தவம் கெடப்போம். ரெண்டு பாட்டுக்கு ஒருதடவ விளம்பரம் போடுவாங்க, மொத்தம் எத்தனை விளம்பரங்கள் போடுறாங்கனு எண்ணி வச்சு அதுக்குள்ள வெளிய போய் விளையாடிட்டு வந்துருவோம்”னு . 1980ஆம் ஆண்டு பொதிகையில்  ஆரம்பிக்கப்பட்ட ஒளியும், ஒலியும் 1990 வரை உச்சத்தில் இருந்தது. பின் தனியார் தொலைக்காட்சிகளின் வருகையால் மவுசு குறைந்தது. ஆனால் அதற்காகக்  காத்திருந்த நம் அக்காக்களும் , மாமாக்களும் அடைந்த அந்த இன்பத்தை 175 சேனல்களிலும் , நினைத்த பொழுதெல்லாம் ரெகார்ட் பண்ணிப்  பார்க்கும் வசதி இருந்தும் நமக்கு கிடைப்பதில்லையே ஏன் ? (தொடர்ச்சியாக 5 நிமிடத்துக்குமேல் ஒரே சேனல் பார்க்கவே மாட்டேங்குறாங்க  இப்பல்லாம்)

படம்: medium

1990க்கு பின் பிறந்தவர்களை அதிர்ஷ்டசாலி என்பார்கள். காரணம்  விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், அதே நேரத்தில் பழமையின் பேரன்பும் ஒருசேரக்  கண்டவர்கள் இவர்களே! ( நானும் தான் ) எம்.ஜி.ஆர் இறந்தசெய்தி பாக்கதான் டீவி வாங்குனேன்னு ஊருக்கே ‘ஒரு’ தொலைகாட்சி இருந்த காலம் போய் , கொஞ்சம் அதிகமா தொலைக்காட்சி புழங்க ஆரம்பித்த நேரம் இது தான் . ( அப்பவும் பஞ்சாயத்து போர்ட் தொலைகாட்சி மட்டும் இருந்த ஊர்களும் இருந்துச்சு ) மஹாபாரதம்ம்ம்ம்ம்ம் , அந்த கம்பீர குரலோட ஆரம்பிக்கிற பொதிகை நாடகம் மட்டுமே ஓடுன நேரத்துல தனியார் தொலைகாட்சிகள் நாடகங்களை மக்கள் விரும்ப ஆரம்பிச்சாங்க . அப்போ குழந்தைகளுக்கு ரொம்ப புடுச்ச ‘சக்திமான்’ நாடகம் வந்துச்சு . மொத்த இந்தியக்  குழந்தைகளையும் கவர்ந்த ஒரே நாடகம் அதுதான் ! தீபாவளிக்கு சக்திமான் டிரஸ் கேக்குறது , சக்திமான் ஸ்டிக்கர்காக பார்லேஜி பிஸ்கட் சாப்பிடறது வரை எல்லாம் ஓகே.  ஆனா சக்திமான் காப்பாத்துவாருனு மாடியில் இருந்து குழந்தைகள்  குதிக்க, ஒரு வழியா முடிவுக்கு வந்தார் சக்திமான். (எங்க வீட்டு பீரோ முழுசா சக்திமான் தான் இருப்பார். அப்பா ! நான்லாம் எவ்ளோ பிஸ்கட் தின்னுருப்பேன் அம்மாடி !)

படம்: hindiroot

பெரும்பாலும் வீதிக்கொரு தொலைக்காட்சி என்று ஆன பின்பு கூட குழந்தைகள் கூட்டாக எதோ ஒரு வீட்டிற்கு படையெடுப்பார்கள். விடாது கருப்பு, மர்மதேசம், ஜென்மம் எக்ஸ் போன்ற பேய் நாடகங்களையும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்த நியாபகம் இன்னும் ஜில்லென்று நெஞ்சில் இருக்கிறது. எப்பொழுது போனாலும், எத்தனை பேர் போனாலும் எங்களுக்கும் எதாவது சாப்பிடக்  குடுக்கும் சுற்றத்தார்கள் நிறைந்த காலம் என்றால் அது அப்பொழுது தான். யார் என்ன குடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக்  கூடாது , யார் வீட்டுக்கும் போகக் கூடாது என்று கைப்பேசியை குழந்தைகளுக்கு குடுத்து அவர்களை ‘வீடு தாண்டா பொம்மைகளாக’ மாற்றிய பெருமை இன்றைய தலைமுறைக்கே சேரும்.

‘நலம் நலமறிய அவா’ என்று  கோழி கிறுக்குவது போல் இருக்கும், அண்ணனின் கடிதம் குஜாரத்தில் இருந்து மாதம் ஒருமுறை வரும . வரிக்கு 1௦ பிழையாவது கண்டிப்பாக இருக்கும். இருந்தும் அண்ணனின் கடிதத்தில் கிடைத்த ஏதோ ஒன்று, இன்று அவர் வெளிநாட்டிலிருந்து தினமும் அலைபேசியில் பேசும்போதுகூட அது உணர்வதற்கில்லை. எத்தனை சுக, துக்கங்களைத்  தாங்கிவந்த கடிதங்கள் இன்று வங்கியில் இருந்து நகையை மீட்க மட்டுமே வருகிறது . ‘போஸ்ட்மேன்’ என்ற ஒரு தமிழ் குறும்படம் உள்ளது தொலைபேசி வந்தபின் ஒரு போஸ்ட்மேன் என்ன ஆகிறார் என்பதை சொல்லும் குறும்படம் அது, முடிந்தால் பாருங்கள் . என்னுடைய ஆரம்பப்  பள்ளி ரிசல்ட் தபால் மூலமாக வந்ததாக நினைவு , போஸ்ட்மேனைப்  பார்த்ததும் ஓடி ஒளிவோம் . அத்தனையும் கணினிமயம் என்றானபின் உணர்வுகளை ஏனோ அது கடத்த மறுக்கிறது.

பெரும்பாலும் காற்றுஅடைத்த பாக்கெட்டில் விற்கப்படும் திண்பண்டங்களை  மட்டுமே கொரிக்கும் இன்றைய குழந்தைகளுக்கு , கையில் கடிகாரம் , முகத்தில் முறுக்குமீசை என்று ஒட்டிவிடும் அந்த ஆள் உயர குச்சியில் ஜவ்வு மிட்டாய் கொண்டுவரும் தாத்தாவின் வருகைக்காக தவம் கிடந்ததை சொன்னால் நம்மளை கொஞ்சம் பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள். இலந்தை, நாவல், நெல்லி , கலாக்காய் என்று அத்தனையும் பள்ளிகூட வாசலில் ஒரு கிழவி விற்கும். இன்றும்  கிழவிகள் விற்கத்  தயார்தான், ஆனால்  திண்ணத்தான்  குழந்தைகள் விரும்புவது இல்லை ! ( நாம் அனுமதிப்பதும் இல்லை )

படம்: five prime

வருடப்  பள்ளி விடுமுறை எல்லாம் , உடம்பில் புழுதியப்ப விளையாடிட்டுக்  கண்மாய், கேணி என்று குளித்து கண்கள் சிவந்து வீடு போகும்போது புது விளக்கமாரோடு அம்மா நிற்கும். எப்படியும் 3௦ வெளக்கமாறு பிஞ்சுதான்  பள்ளிக்கூடம் போயிருப்போம். ஆனா இப்போ விடுமுறை தின சிறப்பு வகுப்புகள் , அதுவும் இப்போது டீவியில் வரும் குழந்தைகள் பங்குபெறும் நடனம், பாட்டு, காமெடி நிகழ்ச்சிகளைப்  பார்த்து அவர்களை ஏதோ போருக்குத்  தயார் செய்வதுபோல பயிற்சி கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். என்னைப்  பொறுத்தவரை இவர்களும் குழந்தை தொழிலாளர்கள்!

படம்: theindiasatire

இத்தனை விஷயங்களைப்  பற்றிச் சொல்லிவிட்டு 80-9௦களின் காதலைப்பற்றிச்  சொல்லவில்லை என்றால் அது பாவம் இல்லையா ! பெண்கள் அதிகமாக முதல் தலைமுறையாய் கல்லூரி நோக்கிப்  பயணித்த காலம் அது. இளையராஜாவின் பாடல்கள் என்ற நீர் ஊற்றி காதல் ரோஜாவானது  பேருந்து தொட்டியில் கனஜோராக வளர்ந்துகொண்டு இருந்தது . மெல்லிசை குழுக்கள் அத்தனையும் காதல் பாடல்களால் நிரம்பி வழிந்தன . அதிகபட்சம் ஒரு ரேடியோ கேசட்டில் 6 பாடல்கள்தான் பதியமுடியும் என்றாலும் அதிலும் காதல் வளர்த்த காலம் அது. இன்று ஒரு சின்ன மெமரி கார்ல்டில்  1௦௦௦ பாடல்கள் பதியும் வசதி இருந்தும் அது மனதை தொடுவதில்லை, காதுகளோடு முடிந்துவிடுகிறது. அன்றைய காதல் தோல்விகள் முகம் நிறைய தாடியும் , புகையுமாகவும் பூட்டிய வீட்டில் காதல் தந்த பரிசுகளுடன் முடிந்துவிட்டது. யாரும் திராவகமும் கையுமாக அலையவில்லை .

படம்: groups

பண்டிகைகளைக்  குடும்பத்துடன் உண்மையாய் கொண்டாடிய காலம் எதுவென்றால் அது எண்பதுகளும், தொண்ணூறும்தான். யாரும்  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்காகவும், முகப்புத்தகத்திற்காகவும்  புகைப்படங்கள் எடுக்க வில்லை. தீபாவளியை விட பொங்கலை தமிழர்கள் அதிகம் ஆர்வமாகக்  கொண்டாடிய காலம் என்றாலும் அது அப்போதுதான். கண்டிப்பாக  விறகடுப்பில் வீட்டின் வெளியே வைத்துதான் பொங்கல் கிண்டுவார்கள் . (காஸ் அடுப்பு வந்து அப்பாத்தாக்களையும் அடுப்படிக்குள் அடக்கி விட்டது ). கிராமங்களில் தீபாவளியை விட பொங்கலுக்கே முக்கியத்துவம் கொடுத்ததற்கான காரணம், அது  தமிழர்கள் பண்டிகை மட்டும் அல்ல அறுவடை பண்டிகை என்பதாலும்தான். இன்றுதான் அறுவடையே இல்லையே அப்பறம் என்ன பண்டிகை என்றெல்லாம் கேட்கக்  கூடாது. கேரளா பக்கம் பாருங்க இன்னும் ஒணத்தை சிறப்பா கொண்டாடுறாங்க! இங்கு  அரசு விடுமுறை தினத்தில் இருந்து பொங்கலை நீக்கிப்  பல பஞ்சாயத்துக்கு பின்தான்  சேத்தாங்க.

சீசன் விளையாட்டுகள் என்று நிறைய இருக்கும். பட்டம் , பம்பரம், குண்டு , கிட்டி என்று சொல்லி வைத்தார்போல் எல்லா தெருவிலும் ஒரே விளையாட்டுதான் விளையாடப்படும். அன்றைக்கும் கொசுக்கள் கடிக்கத்தானே செய்தது. ஆனால் யாரும் சாகவில்லையே ? விஞ்ஞான வளர்ச்சியில் மருத்துவம் , தொழில்நுட்பம் என்று எல்லாமே பன்மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால் ஏன் இவ்வளவு புதிய நோய்கள் உருவாகி உள்ளது ? மனிதனின் ஆயுள் ஏன் கூடவில்லை ?  இந்த அபிரிமிதமான வளர்ச்சி பல நல்ல விஷயங்களை தந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வாழ்க்கையை ரசித்து வாழும் குணத்தை மட்டும் அதுக்கு விலையாக எடுத்துகொண்டது . (ப்ராய்லர் கோழி இல்லாத காலம் அது, சர்க்கரை  நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே வந்த காலம் அது, இன்னும் திரும்பிப்  பார்க்க பல விஷயங்கள் உள்ளன. அதை நீங்களும்தான் கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்  )

           

           

           

           

 

 

Related Articles

Exit mobile version