ஆம்….. அந்த நண்பன் முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுவிட்டான்

நேற்று வரை என்னோடு நடைபயிற்சிக்கு வந்த நண்பர் இன்று என்னுடன் நடக்க வரவில்லை. அவருக்கு வயது 70ஐ கடந்துவிட்டதாக நடைபயணத்தில் அவரே, அடிக்கடி சொன்னதாக நினைவு. ‘’இனி நடக்க வர மாட்டேன்..… என என்னிடம் ஏன் சொல்லவில்லை? என்ற கேள்வி ஆள் மனதில் வருடியதில் கிடைத்த விடை, அது அந்த நண்பருக்கே தெரியாத ரகசியமாய் இருந்துள்ளது. ஆம்… அந்த நண்பர்  இப்போது முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விட்டான்.

ஏன் எங்களுடன் படித்த இன்னொரு நண்பரான பரந்தாமன் பொதுப்பணித்துறையில் வேலை செய்தவன். மாதம் பிறந்தால் பதினான்காயிரத்தி சொச்சம் பென்சன் வந்து விடும் என பெருமை பட்டுக் கொள்வான். இப்போது அவனையும் கூட அவனது மகனும், மருமகளும் பராமரிக்காமல் காப்பகத்தில்தான் விட்டுள்ளார்கள். இருவருக்குமே சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. இந்த நிஜ வேரை பிடுங்கி எறிந்து விட்டனர். பரந்தாமனின் மனைவி, இவன் மகனது சிறு பிராயத்திலேயே இறந்து விட்டாள். இரண்டாவது திருமணமும் செய்து கொள்ளாமல், அதிகாலையில் எழுந்து சமைந்து, மகனை கிளப்பி, மாலையில் வீடு திரும்பி, மீண்டும் பணி செய்து …..யப்பா…. அவன் வாழ்க்கையில் மகன் வளர்ந்த பின்புதான் இளைப்பாறத் தொடங்கினான்.

பேரக் குழந்தை வளரும் வரை மீண்டும் பரந்தாமனின் தேவை இவர்களுக்கு இருந்தது. கணவனும், மனைவியுமாக பணிக்கு சென்று விட, குழந்தையை பார்த்துக் கொண்டான் பரந்தாமன். இப்போது இருவரது வாழ்விலும் மாற்றம். பரந்தாமனின் பேரனுக்கு பிளே ஸ்கூல். பரந்தாமனுக்கு முதியோர் இல்லம். ஆனால் இதையெல்லாம் நினைத்து பரந்தாமனும் தீரா கவலையில் பீடித்ததாகத் தெரியவில்லை. கடந்த வாரம் அவன் இருக்கும் முதியோர் இல்லத்துக்கு சென்றிருந்தேன். வழக்கமான அதே புராணத்தை எடுத்தான். எனக்கு ஒன்னும் கவலை இல்லை கேட்டியாடே!… பதினான்காயிரத்து சொச்சம் பென்சன் வருது. அதான் எனக்குத் தெரியுமே…என்றேன்.

அது இல்லடே, இங்க மாசம் 7 ஆயிரம் கட்டணும். எனக்கு பென்சன் காசைக் கொண்டு கட்டிடுவேன். இங்க மூணு நேரமும் நேரத்துக்கு சாப்பாடு வந்துடும். என்னைப் போல இங்க 30, 40 பேர் இருக்காங்க. பொதுவா ஒரு பெரிய டி.வி இருக்கு. வீட்டைப் போலவே சீரியலு பார்த்துப்பேன். இது போக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான்னு நல்ல நாளு, பெரிய நாளுக்கு  காலேஜ் பசங்க, பிள்ளேளுகள்லாம் எங்களோட வந்து கொண்டாடுவாங்க. அது ஒருவகையில குடும்பத்தோடவே இருப்பதைப் போல் தோற்றத்தை தருது..”பட, படவென என் ஆறுதலுக்கு சொன்னாலும், பரந்தாமனின் கண்களில் கண்ணீர் கசிந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது.

பரந்தாமனுக்கு பென்சன் இருப்பதனால் 7 ஆயிரம் ரூபாய் கட்டி பார்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு இல்லம் கிடைத்தது. அதுவும் அவர் மகன், இவரது ஓய்வூதியத்தில் இருந்தே கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அந்த நிலையும் இல்லாமல் எத்தனை, எத்தனை வயோதிகர்கள் இலவச ஹோம்களில் கொண்டு விடப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன் சுற்றுலாத் தலங்களுக்கும், ஆன்மீகத் தலங்களுக்கும் அழைத்து செல்லப்பட்டு தொலைத்து வரபட்ட வயோதிக பெற்றோர்கள் எத்தனை பேர்? இப்போதெல்லம் சாலையில் அப்படி யாரும் எதிர்கொண்டால் நின்று, நிதானித்து, ஒருவேளை உணவாகினும் வாங்கிக் கொடுத்து நகர்வதை பழக்கப்படுத்திக் கொண்டாயிற்று.

ஆம்.. கண்ணாடியில் முகம் பார்க்கிற பொழுது தலை முழுவதும் இருக்கின்ற நரை முடிகள் வாழ்வியல் பயத்தை கற்றுக் கொடுக்கிறது. இத்தனை சிக்கல்களுக்கும் காரணம் என்ன? மனித நேயம் அறவே வற்றி போகிறதுதான். பள்ளிக் கல்வித் துறையிலேயே மனித நேயம் போதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும், அவர், அவர்கள் பாடத்தை கற்பிக்கின்றார்களே தவிர, அன்பை, அறத்தை, நல்லொழுக்கத்தை, மனித நேயப் பண்பை மாணவன் எங்கிருந்து கற்றுக் கொள்ளப் போகிறான்? ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. ஆம்…குழந்தையின் சிறுபிராயத்தில் அதன் கண் எதிரே, நம் பெற்றோரை நாம் நடத்தும் விதம் அதன் ஆழ் மனதில் பதியும். நாம் நம் பெற்றோரை இன்று பாரமாக நினைத்தால், எதிர்காலத்தில் அவர்கள் நம்மையும் பாரமாகத் தான் பார்ப்பார்கள்.

குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவதைக்கூட இப்போதெல்லாம் காண முடிவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் சாப்பிடுவதும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் சத்தத்துக்குள்ளும், ஒளிப்படக் காட்சிக்குள்ளும் மூழ்கிப் போய் ஆகாரத்தை தொலைப்பவர்களைக் காண்கிறோம். ஒரு வீட்டில் வயதான பெரியவர்கள் இருப்பது, நம்மிடம் 50 ஆண்டு அனுபவம் இருப்பதற்கு சமம். ஆனால் வயதானவர்களை பாரமாக எண்ணும் போக்கு, இன்றைய சூழலில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரிப்பதைக் காண முடிகிறது.

இதே நிலை நீடிக்குமேயானால் மூலைக்கு ஒரு முதியோர் இல்லமும், அடிக்கு ஒரு அனாதை இல்லமும் மலரும் காலமும் வெகு தொலைவில் இல்லை. இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வயதாகும். ஒரு புதுக் கவிதை எங்கோ, எப்போதோ படித்தது. இப்போதும் நினைவில் இருக்கிறது.

கூனல் விழுந்த கிழவரைப் பார்த்து

இளைஞன் கேட்டானாம்…

குனிந்தபடி எதைத் தேடுகிறீர்கள்?

தொலைந்து போன என்

இளமையை தேடுகிறேன்.” என்றாராம்.

எத்தனை நிதர்சனமாக வரிகள்? சிகரெட் விழிப்புணர்வு வாசகம் ஒரு வகையில் இதற்கும் பொருந்தும். சிகரெட் நுனியில் எரியும் தீக்கரை சொன்னது, ‘’இன்று நான் நாளை நீ!” என்று. ஆம்…முதுமையும் அப்படித் தான். ‘’இன்று உன் அப்பா…நாளை நீ….மறுநாள் உன் மகன்!”

முதியோரை மதிக்கும் பண்பை இளமையில் விதைக்க வேண்டும். அதற்கு சிறந்த வழி வாழ்ந்து காட்டுதல்தான். ஆம்… நம் பெற்றோரை, பிள்ளைகளின் முன்பு மரியாதையாக வாழவைத்துக் காட்டுங்கள். அதுதான் மிகச் சிறந்த பண்பு.

ஒவ்வொரு குழந்தைக்குமே அந்த குழந்தைப் பருவத்தில் அவர், அவர்களின் தந்தை தான் ஹீரோ. ஹீரோக்களினால் அழகான உங்கள் நாள்களை எங்கோ ஒரு விடுதியில் சென்று சேர்க்கும் முன்னர் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? உங்களின் சோகங்களை தன் சோகமாக எண்ணி, உங்கள் சந்தோசங்களை, தன் சந்தோசமாக எண்ணி துள்ளிக் குதித்த உங்கள் தாயைக் குறித்து எண்ணிப் பார்த்ததுண்டா? ஆனால் இந்த நாள்களையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, எங்கோ ஒரு விடுதியில் கொண்டு தாயை அடைத்து விட்டு, பிரமாண்டமாக வீடு கட்டி, அன்னை இல்லம் என பெயரிட்டுக் கொள்வது உன் முகத்தில் நீயே பூசிக் கொள்ளும் கரி என்பதை நீ உணரத் துவங்கும் நாள் எப்போது வரும்?

வயதான பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகள் மீது சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால் இதுவரை எத்தனை பெற்றோர்கள் நீதிமன்றக் கதவை தட்டியிருக்கிறார்கள்? எத்தனை குழந்தைகள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்? அது தான் பாசம். அந்த ஒன்றுக்குத் தான் வயோதிகம் ஏங்குகிறது. ‘’அப்பா…சாப்பிட்டீங்களா? அம்மா…சாப்பிட்டுங்களா? என கேட்கும் ஒற்றை கேள்வி போதும் , 70 ஆண்டுகள் வாழ்ந்த பிறவிப் பலனை முழுமையாய் தீர்த்துக் கொள்ள!” ஆனால் எத்தனை பிள்ளைகள் இதனை கேட்கிறார்கள்? வயோதிகத்தில் நோயுடன் தவிப்பவர்களை விட, தனிமையுடன் தவிப்பவர்கள் தான் அதிகம்.

எந்த இல்லத்தில் மூத்தோர்கள் இருக்கின்றார்களோ, அந்த இல்லத்தில் குடும்ப ஒற்றுமையும் தளைத்து ஓங்கும். விட்டுக் கொடுத்துச் செல்லும் பண்புக் கூறுக்கு இவர்கள்தான் அடித்தளம் இடுபவர்கள். குடும்ப உறவுகளுக்குள் இன்று எத்தனை, எத்தனை சிக்கல்கள் பீடித்துள்ளது? இதற்கெல்லாம் காரணம் என்ன? மூத்தவர்கள் வீட்டில் இல்லாதது தான். அரசுப் பணி செய்து ஓய்வூதியம், இயல்பிலேயே செல்வந்தர் என்னும் நிலையில் உள்ள முதியோரைக் கூட விட்டு விடுங்கள். ஏதோ ஒரு கடைநிலை பணி செய்து, தன் முழுச் சம்பளத்தையும், கிடைத்த பணிக்கொடை உள்ளிட்ட சகலத்தையும் குடும்பத்துக்கே போட்ட முதியவர்களின் வயோதிகத்தை எண்ணிப் பாருங்கள். இப்பிரச்னையின் வீரியம் தெரியும்.

இன்று சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் இல்லாத முதியோரைப் பார்ப்பது அரிதினும், அரிதான ஒன்று. அதற்கு மருந்து, மாத்திரைகள் கூட வாங்கித் தர மனமின்றி போன பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனையான விசயம். தங்களுடைய சுய தேவையை குறைத்துக் கொண்டு வாயை கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளைகளை படிக்க வைத்த எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளின் பராமரிப்பு இன்றி இப்போது மனதுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்? இங்கே இப்பிரச்னைகளை யார் தான் தீர்ப்பது?

மனம் இருந்தால் புளியமரத்தின் இலையில் கூட இருவர் அமரலாம். ஆனால் அது மனதுக்குத்தான் நாம் எங்கே போவது? வயோதிக பெற்றோரை பாரமென நினைக்கும் ஒரு தலைமுறை மலர்ந்து விட்டது. இந்த சூழலில் இதே போக்கு தொடருமானால் இது கடும் விளைவுகளை எதிர்காலத்தில் விதைக்கக் கூடும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? அன்பும், மனித நேயமும் குடும்பங்களில் விதைக்கப்பட வேண்டும். ’’நான் முதல்வரானால்….நான் குடியரசுத் தலைவரானால்” என பள்ளிகளில் நடக்கும் போட்டி தலைப்புகளை  சிறிது மாற்றி வையுங்கள்…நான் முதியவரானால்!….நான் பெற்றோர் ஆகும் போது!…..என் தாத்தா, என் பாட்டி!…என உறவுகளை கல்வித்துறையில் இருந்தே விதையுங்கள்.

மனித நேயம் மலர்வதற்கு முதலில் நம் இல்லங்கள் தயாராக வேண்டும். ‘’பள்ளிகளில் ஆசிரியர்கள் பெற்றோர், ஆனால் வீட்டில் பெற்றோர் தான் ஆசிரியர்” ஒழுக்கக் கூற்றை பள்ளிக்கும் ஒரு படி மேலாக, போதிக்க வேண்டிய இடம் இல்லம். வயோதிகர்களால் அது முடியும். நீங்கள் வயோதிகத்தை ஒதுக்கி, எதிர்காலத் தலைமுறையான உங்களின் பிள்ளைகளுக்கும் அதை கடத்தாதீர்கள். ஏன் என்றால் இப்போது அவர்கள் நெஞ்சில் விதைக்கப்படுவதை நாளை நீங்கள் தான் அறுவடை செய்யப்போகிறீர்கள். அப்போதும் உங்களை குழந்தையாய் எண்ணியே, துடிக்கிறது இந்த பெற்றோரின் மனது…

Related Articles

Exit mobile version