எங்களூர்போல…

எங்கட ஊர் எப்போதும் அழகு. கிராமப்புறத்தில் பால்யநாட்களை கழித்த யாருமே பாக்கியசாலிகள் என்று அடித்துச் சொல்ல எனக்கு இயலும். தொழில்நுட்பம் தலைதூக்காத, வைபை வலயத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாகாத, உச்சபட்சமாக கிழமையில் ஒருமுறை ஒளிபரப்பாகும் பொன்மாலைப் பொழுதும் அதைத்தொடர்ந்து வரும் அரைமணிநேர தொடர் நாடகமும் மட்டுமே மின்சாரப் போழுதுபோக்காகவிருந்த ஒரு காலம் இருந்தது இவ்வுலகில் என்பது இன்று நினைக்கையில் புதுமைதான்.

கிழக்கிலங்கைக் கிராமம்
(Sajath Nijamudeen)

மாட்டுவண்டில் சத்தம், கோழிகளின் கொக்கரிப்பு, மழைநாள் தவளைகள், கோடைகாலக் குயில்கள், வயல்வரப்புகள், குருவி முட்டை, சுக்கட்டிக் கிழங்கு, குட்டைநீரில் மீன்பிடி விளையாட்டு, தென்னங்குரும்பையில் காக்காய் கடி, நீர்முள்ளிப் பூவில் தேன் பானம், களிமண் விளையாட்டு, கத்தாப்பழம் உடைத்து உட்பருப்பு போசனம், நாவல் பழமும் நறுவில் கொப்பும், முத்திரியங்காட்டில் பருப்புவேட்டை, புளிமாங்காய், கொச்சிக்காத்தூள், உப்பு, பழப்புளி, குஞ்சிச்சோறு இப்படி சொல்லச்சொல்ல நீண்டுசெல்லும் பிள்ளைப்பராய அனுபவங்கள் கிராமத்துச் சிறுவர்களின் குடுப்பினை.

“ஊருக்கு ஆறழகு” என்று கவிப்பேரரசு அனுபவித்தே எழுதியிருக்கிறார். கரிசல் காடுகளில் இளமை பழகியவருக்கு தெரிந்தேயிருக்கிறது ஆறின் அருமை. அன்று இருந்தது ஊருக்கொரு ஆறு. இலங்கைத் திருநாட்டில் ஆறுகளுக்கேது பஞ்சம்? இப்பொழுதுதான் மிஞ்சியிருக்கிறது ஒரு சொச்சம்.

“ஆழிதரும் கொண்டல் அதன்

அணைப்புக்குள் சுகம் துய்க்கும்

அணிசேர் தெங்கு சூழவரும் வாவியிலே இறால் துள்ளும்

கயல் நண்டு வரால் வகைகள் தங்கும்

யாழிசையோ என வொலிக்கும்

குரவைக் கூத்து நல்ல சுகம் தருமின்பக் கிராமப்பாடல்

ஆழ் கடலில் குதிக்கும் மீன்

அலை வாயில் கமம் செழிக்கும் அக்கரைப்பற்றே”

இது கவிஞர் அக்கரை மாணிக்கம் தனதூரைப்பற்றி எழுதிய அருங்கவி. “அணிசேர் தெங்கு சூழவரும் வாவியிலே இறால் துள்ளும், கயல் நண்டு வரால் வகைகள் தங்கும்” என்ற வரிகள் அவ்வூரின் நீர்ச் செழிப்பையும் இயற்கை வளத்தையும் படம்பிடித்துக்  காட்டுகின்றன. இதுவொன்றும் சொர்க்கலோகமன்று, இற்றைக்கு அரைநூற்றாண்டுகள் முன்பு வழக்கிலிருந்த எமது சுற்றாடல் அமைப்புகளே.

கிராமங்களைப் பிறப்பிடமாகக்கொண்ட வாசகர்களே இதுவரை நீங்கள் படித்தவை உங்களது ஊருக்கு செலவில்லாமலே உங்களை ஒருமுறை கொண்டுசென்று திரும்பியிருக்கும் என்பதில் ஐயமேயில்லை. வாழ்க்கை எனும் வாகனத்தின் வேகத்தில் இவையனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பை ஒரு குறுகிய காலத்துக்குள் இழந்துவிட்டாலும் அவை தந்த ஞாபக ஈரம் இன்னும் காயவில்லை, என்றும் காய்வதில்லை என்பது உண்மையே.

அப்படி இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களின் தனித்துவமான, காலப்போக்கில் நிறம்மாறிவரும் வனப்புமிகு வழக்குகள் என்ன? எழில்மிகு கடற்கரைகளின் தஞ்சமாகத் திகழும் கிழக்கிலங்கையின் தரைத்தோற்றமே ஓர் அற்புதந்தாம்.

மரமுந்திரி தோப்புக்கள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் சென்றிருக்கின்றீர்களா? விடியற்காலை கண்விழிக்கையில், தங்கச் சூரியன் மெல்ல மெல்ல கதிர்பரப்பி கிழக்க்குக் கீழ்வானத்தை எட்டிப்பார்க்கையில் வாழைச்சேனை தாண்டி மட்டக்களப்பு நோக்கி ‘கடக் கடக்’ என்ற பக்கவாத்தியத்தோடு ரயில் நகர்கையில் ஜன்னலுக்கு வெளியே வெள்ளைமணல் வெளியில் பரந்திருக்கும் பசுமைத் திட்டுக்கள் மரமுந்திரிகள்தாம்.

மரமுந்திரி (cloudfront.net)

‘முத்திரியங்காட்டுக்குள்’ பட்டாளம் சேர்ந்து சருகுகளுக்குள் விழுந்திருக்கும் முத்திரியங்கொட்டை தேடி நாள்முழுக்க அலைந்து, கையில் பிடிபட்ட பத்துப் பதினைந்து முத்திரியங்கொட்டைகளை அதி உன்னத பாதுகாப்புடன் எடுத்துவந்து பாழ் வளவுகளுக்குள் கல்பொறுக்கி அடுப்பமைத்து சுட்டு, உள்ளிருக்கும் பருப்பிற்கு சேதம் வராமல் கோதுடைத்து முந்திரிப் பருப்பு சுவைக்கும் காலங்கள் நினைவிருக்கும் எண்பதுகளின் பிள்ளைகளுக்கு.

முத்திரிய மரக் கிளைகள் கணினிக்குள் இருக்கும் கிரிக்கட்டையோ சதுரங்கத்தையோ ஆட வசதியில்லாத எங்களின் பள்ளிநாட்களின் பின்நேரப் பொழுதுகளில்  குரங்காய் மாறி குடியிருக்கும் இடங்கள்.

கடற்கரைச் சந்ரோதயம்

அன்றுபோல் பரந்த கடற்கரைகள் இன்றில்லை. காங்க்ரீட் வீதிகளும், வியாபார வாகனங்களின் செயற்கையான இசை இரைச்சல்களும், கடலையும் நிலவையும் தவிர ஏனையவற்றை ரசிக்கப் பழகிய நவநாகரீக மக்கள் வெள்ளமும், இரண்டடி வைக்கையில் இதோ இருக்கிறேன் என காலில் மிதிபடும் பிளாத்திக்குக் குப்பைகளும் இல்லாத….. கடலலை மட்டும் போடும் சுதியில் தவழ்ந்துவரும் தாழம்பூ வாசமும் (தாழை மரங்கள் இப்போது இல்லை) அதற்கு ஏற்றாற்போல அசைந்தாடும் நீண்ட தென்னை மரங்களும், நிலவுக்கும் கடலுக்கும் இடையில் மட்டுமே நடக்கும் காதல் காட்சியும், மனதுக்குள் ஒருவித அமானுஷ்ய அமைதியையும் சிலிர்ப்பையும் தரும் நிசப்தமும், எங்களூர் பௌர்ணமி தினங்களின் கடற்கரை இரவுகள்.

பெளர்ணமி கடற்கரை (flickr.com)

சந்திரன் கிளம்பக் கிளம்ப தங்கமுலாம் பூசிக்கொள்ளும் கறுப்புக் கடல், தனது ஜொலிக்கும் மேனியலைகளை மேலெறிந்து பிடிக்கும் விளையாட்டும் இவற்றையெல்லாம் இடையூறின்றி இரசிக்கத் தேவையான அமைதியும் இருக்கையில்

“நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு

வெண்ணிலாவே! – நன்கு

நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்

வெண்ணிலாவே!” என்று நெஞ்சுக்குள் இருக்கும் பாரதி காதுக்குள் பாடுவான்.

கலவன்மீன்

கோர்வைமீன் (pixabay.com)

ஆறுகள் நிறைந்த ஊர்கள், கரையோரம் அதன் அடையாளங்களின் ஒன்று முகத்துவாரங்கள். மழைநாட்களில் முகத்துவாரங்களில் நீர்மட்டம் வைத்தே அது கனமழையா இல்லை சிறுமழையா என்ற முடிவுக்கு வரலாம். “முகத்துவாரத்துல தண்ணி நெறம்பி வழியுது” என்ற கூற்றின் மறைமுகமான அர்த்தம் ‘கலவன் மீன்கள்’

கடலும் ஆறும் கலக்கும் இடத்தில் அகப்படும் மீன்கள் ஒரேவகையானவையாக இருப்பதில்லை. நீரோட்டம், அதன் வேகம், இடம் இவற்றைப்பொறுத்து மீன்கள் தாறுமாறாக அகப்படும். கெளுத்தி, விலாங்கு, செல்வன், செப்பலி, சள்ளல் இப்படி சொல்லும்போதே வாயில் நீர்சுரக்கும் பல்வேறுவகை மீன்கள் இதில் அடக்கம். இளம் தென்னோலை ஈக்கிலில் கோர்க்கப்பட்ட ‘கோருவைக் கலவன் மீன்கள்’ எங்களூரின் மழைக்கால சந்தோஷம்.

பாவாடை தாவணி

பாவாடை அணிந்த சிறுமி (webneel.com)

காற்சட்டை ஆண்கள் அணியும் உடை பெண்கள் என்றால் பாவாடை என்பது எங்கள் கிராமங்களின் பண்பாடு. சிறுவயதில் பாவாடை சட்டை, குமரிகள் என்றால் பாவாடை தாவணி, வளர்ந்த பெண்கள் சேலை இதுதான் எங்களூர் பெண்கள். பாவாடை தாவணியில் இருக்கும் பெண்களை உலகின் பாதியழகு என்று சொல்லத்தகும். நீண்டதூரம் வகுப்புகளுக்குச் செல்லும் அக்காமார் சைக்கிளில் கூட தாவணி அணிந்தே போவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சம் மருவி தாவணி பாவாடை சட்டையாக மாறியது, ஆனால் காற்சட்டைக் கலாசாரம் எட்டிப்பார்க்கவில்லை அப்பொழுது.

பாவாடை சட்டையில் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன் சைக்கிளில் போகும் அக்காமார் எங்கள் வீதிகளின் தனித்துவம். அதன் அழகே அழகு. ஜரிகைப் பாவாடை எடுத்துச் சொருகிய தாவணி என கண்கொள்ளாக் காட்சி அது.

கலியாண விருந்து

இப்போதெல்லாம் காலியாண வீடுகளில் விருந்துகளின் படலம் அதி முன்னேற்றம் கண்டுவிட்டது. கோழி இறைச்சிக் கறி, மாட்டிறைச்சிப் பொரியல், களியா, மாசிச்சம்பல், கடலைக்கறி, அச்சாறு என தட்டில் சோறு தெரியாத அளவு கறிகள் நிறைந்துவிட்டன. திருமணவீட்டாரின் செல்வச் செழிப்பை காட்டும் அடையாளமான விருந்துகள் இப்போதெல்லாம் இன்னுமின்னும் பரிணாம வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கிறது.

திருமண விருந்து (pinimg.com)

ஆனால் அப்போதெல்லாம் திருமண விருந்தின் சமன்பாடு மிக எளிது. மாட்டிறைச்சி, பருப்புக்கறி, புளியாணம், அவ்வளவுதான். ஆனால் அந்தக் கூட்டணிக்கு இப்போதைய எண்ணெயில் குளித்த உணவுகள் நிகராவதில்லை. “இந்த உடுப்புல இரிக்க ஊத்த எட்டூட்டு கலியாணத்துக்கு புளியாணம் காச்சலாம்” என்ற கேளிக்கை பேச்சும் எங்களூர் வழக்கில் இருந்தது.

உறவினர்கள் கூடி, கடா வெட்டி, கறியாக்கி, பந்தல்போட்டு, பந்திபரிமாறி உண்டுமகிழும் எங்கள் புளியாண வாசம் எத்தனை நாளானாலும் நிற்கும், எங்கள் ஊர்களின் மண்வாசனை போல.

 

Related Articles

Exit mobile version