நகைச்சுவை உணர்வின் முக்கியத்துவமும் பாலின வேறுபாடும்.

“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது நம் முன்னோர்களின் பழமொழி. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான மனநிலையைப் பெற உதவுகிறது. அதோடு வாழ்க்கையை இனிமையாக மாற்றுவதற்கான எளிய வழி ஒருவர் தனது நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுதலே. இதனாலேயே வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று நகைச்சுவை உணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். மனிதனின் மற்ற உணர்வுகளைக் காட்டிலும் அன்பினை வெளிப்படுத்தும் தன்மை அதிகமாக இருப்பது நகைச்சுவை உணர்வில் மட்டுமே. ஒருவரது நகைச்சுவை உணர்வே அவரது உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் பேருதவி புரிகிறது. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில், நான் என்றைக்கோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்” என்று தேசப்பிதா காந்தியடிகள் சொன்னதையும் இங்கே நினைவுகூர்தல் அவசியம். இப்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை பொருளாதாரச் சிக்கல் போன்ற தங்களுடைய மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களின் மனதை மாற்றிக்கொள்ள நகைச்சுவையை நாடுகிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  ஆரோக்கியமாகவும், உந்துதலாகவும் இருக்க நகைச்சுவை பெரிதும் தேவை. இன்று நாம் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிரிக்க மறந்து எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

படம்: pkingofcv.co.nz

இத்தகைய அதிமுக்கியமான நகைச்சுவை உணர்வில் உள்ள பாலின வேறுபாட்டை ஆய்வதுதான் இந்தக் கட்டுரை. ஆண்களும், பெண்களும் ஒரே விஷயத்தில் சிரிக்க மாட்டார்கள். பொதுவாக வெவ்வேறு விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். கோபம் தன்னையே வீழ்த்தி விடும். இதைத்தான் வள்ளுவரும்,

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 

  தன்னையே கொல்லுஞ் சினம்”.

என்கிறார். கோபமும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. கோபம் என்பதும், மகிழ்ச்சி என்பதும் ஒரு மனிதனின் உணர்வு. ஆனால் கோபம் அதன் கட்டுப்பாட்டை இழக்கும் போது மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. அது மட்டுமல்ல உங்கள் வாழ்க்கைத் தரத்தையே ஒட்டு மொத்தமாக மாற்றி விடுகிறது. உங்களின் கோபம் தான் உங்கள் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே இத்தகைய கொடுமையான உணர்விலிருந்து  உங்களைக் காத்துக் கொள்ளவும், மன அழுத்தத்தை குறைக்கவும் நகைச்சுவை முக்கியப் பங்களிப்பாக உள்ளது.

நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள் இருப்பீர்கள். நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம் மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம். ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும் பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல. அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.

படம்: muthucharam.com

சுய-கேலிச்சித்திரம் (அகநிலை உண்மை) பெண்களால் பயன்படுத்தப்பதுவதும், நகைச்சுவைக்கு அடிப்படையானதும் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் நகைச்சுவையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கலாம். பொதுவாக பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க நிறைய வழிகள் உண்டு. அவர்கள் தங்களின் அழுகை மூலமும், சத்தமாக கத்துவதன் மூலமும் யாரிடமாவது தன் மன அழுத்தத்தை கூறுவதன் மூலமும் தங்களின் மன அழுத்தம் குறைகிறது. ஆனால் ஆண்கள் தங்களின் குறையை பிறரிடம் கூறி ஆறுதல் தேடிக்கொள்வதில்லை. அவர்கள் அதை சாதாரண கண்ணோட்டத்தில் தான் பார்கிறார்கள். அதனால் பொதுவாக பெண்களை விட ஆண்களே அதிகமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உள்ளனர். உளவியல் ரீதியாக எடுத்த ஆய்வின் படி ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிக நகைச்சுவை உணர்வோடு உள்ளனர். எனினும் பெண்கள் ஆண்களை விட நகைச்சுவைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் எடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1996 இல் மேரிலாந்தின் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியரான ராபர்ட் ஆர். ப்ரைவின் நடத்திய ஆய்வில்,  தனிப்பட்ட முறையில் தங்களது உணர்வைப் பதிவு செய்யும்போது பெண்கள் எப்போதுமே தனகளது நகைச்சுவை உணர்வை வெளிக்கொணர ஒரு ஆதாரத்தை அதாவது ஒரு கூட்டாளரைத் தேடினார்கள். ஆண்களைக் காட்டிலும் இருமடங்கு நகைச்சுவை உணர்வை கொண்டிருந்தனர் என்றபோதும் ஆண்கள் அவர்கள் விரும்பியதைவிட மூன்று மடங்கு அதிகமான நகைச்சுவையை வழங்கினர். பொதுவாக, ஆண்கள் தங்களை விட மற்றவர்களைச் சிரிக்க வைக்க முனைகின்றனர். பொதுவாக வேடிக்கையான கார்ட்டூன்களைப் பார்க்கும் போதோ நகைச்சுவைக் காட்சிகளைக் காணும்போதோ ஆண்களைவிடப் பெண்களே தங்கள்  நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் காரணிகளை அதிகளவில் செயல்படுத்துகின்றனர் என்கிறது fMRI ஆய்வுகள். புதிய அனுபவங்களை பிரதிபலிப்பதற்காக பலவிதமான உணர்ச்சிகளை உருவாக்கிட பெண்களின் மூளையே அதிக தீவிரத்தோடு செயல்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறது மற்றொரு ஆய்வு.

பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்மறையான நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையான சூழலாக மாற்றிக்கொள்கின்றனர். எனவே அவர்கள் எந்த சூழ்நிலையிலும் நல்ல நகைச்சுவையை வரவேற்பவர்களாக இருக்கின்றனர். மேலும் பெண்கள் பொதுவாக ஆண்கள் இல்லாத போது அவர்களைக்  காட்டிலும் இரண்டு மடங்கு அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உள்ளனர். அறிவாற்றல் மற்றும் வலுவான மரபணுக்களின் அடையாளமாக நகைச்சுவை கருதப்படுகிறது.

பெண்கள் கர்ப்பமான சூழ்நிலையில் குழந்தையின் நன்மை கருதி மகிழ்வான தருணங்களை ஏற்படுத்திக் கொள்ள வேடிக்கையான மனிதர்களைத் தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கின்றனர். ஆண்களும் பெண்களைக் கவர்ந்திழுக்க அவர்களை நோக்கி புரிந்துகொள்ளும் வண்ணம் நல்ல நகைச்சுவையைக் கூறி அவர்களைச் சிரிக்க வைக்கிறார்கள். எனவே ஆண்கள் தங்கள் மனதில் நகைச்சுவை உணர்வு வளர்த்திட ஒரு முக்கிய காரணியாகப் பெண்களை மாற்றி விடுகின்றனர். நீங்கள் ஒரு சர்க்கஸுக்குச் செல்லும் போது அங்கு இருக்கும் ஜோக்கரைக் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் காணலாம். இதில் எந்த பெண்களும் ஜோக்கராக நடிப்பதில்லை. இதற்கு காரணம் மிகவும் எளிது. ஆண்கள் எந்த செயலையும் சாதாரணமாக எடுத்து கொண்டு பிறரைச் சிரிக்க வைத்து விடுகிறார்கள். உலக அளவில் நகைச்சுவை நடிகைகளைக் காட்டிலும் நடிகர்களே அதிகமாக இருப்பதும் மற்றொரு சான்று.

படம்: sparkinlist.com

நமது குடும்பத்தில் கூட சாதாரணமாக நிகழும் நெருக்கடியான நிலைகளில் ஆண்கள் மிகவும் நிதானமாக அதை உள்வாங்கிக்கொண்டு கடந்து செல்வர். உதாரணமாக குழந்தைகளுக்குக் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு கூடத் தாயார் கவலைப் படுவார். ஆனால் தந்தை பார்த்துக் கொள்ளலாம் என்று சாதாரணமாக கூறினாலும் அதே வேளையில் தனது அக நெருக்கடியை வெளியே காட்டிக்கொள்ளாது சமாளித்துப் பணமும் கட்டி விடுவார். ஆண்கள் எப்போதும் ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதையும், அதை எப்படிச் சுமுகமாக தீர்க்கலாம் என்றும் யோசிப்பார்கள். ஆனால் பெண்களோ ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றியே தீவிரமாகச் சிந்தித்துத் தங்களின் உடலையும் வருத்திக் கொள்வார்கள். பொதுவாக ஆண்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களை எப்போதும் தங்களின் நகைச்சுவை திறனால் மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இது அனைத்து ஆண்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் தங்களின் காதல் தோல்வியில் மட்டும் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

படம்: cinemaexpress.com

பெண்கள் சில விசயங்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப இருந்தாலும் ஆண்கள் அவர்களை விட அதிகளவு நகைச்சுவை உணர்வும் அதை எளிதில் வெளிப்படுத்திவிடும் ஆற்றலும் இயல்பாகவே பெற்றிருக்கின்றனர். ஆண்களை விடப் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வை உள்வாங்கும் திறன் அதிகமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்திடும் ஆற்றல் ஆண்களுக்கே அதிகம் உள்ளது.

Reference:

 

 

 

Related Articles

Exit mobile version