“தடம்பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்”
இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சிங்கம்போல் கர்ஜித்த கியூபா என்கிற சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலைப் போராளி மாவீரன் பிடல் கேஸ்ட்ரோவின் வரிகள்… இதன்படி பகத்சிங் என்பவன் மனிதன் அல்ல.. “மாமனிதன்”…
23 ஆண்டுகள், 5 மாதங்கள், 16 நாட்கள்… இது மாவீரன் பகத்சிங் இப்பூமியில் உயிர் வாழ்ந்த நாட்கள். கால் நூற்றாண்டுகூட இம்மண்ணில் வாழாத அந்த வீரர் என்றும் மாறாத தடத்தினை இங்கே பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
வீரம் விளைவித்த பஞ்சாப் மண்ணில் பிறந்த அவரின் குடும்பம் விடுதலைப்போரில் ஏற்கனவே அரசியல் களம்கண்ட குடும்பம்தான். பகத்சிங்கின் தாத்தா அர்ஜூன்சிங் ஒரு விடுதலைப்போராட்ட வீரர். பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங்கும் அவருடைய சகோதரர் அர்ஜூன்சிங், சுவரன்சிங் ஆகியோரும் விடுதலைப்போரில் ஈடுபட்டதால் அவர்கள் பர்மா மாண்டலே சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இன்னொரு சகோதரர் கவரன்சிங் பகத்சிங் பிறந்த ஆண்டிலேயே சிறையிலேயே இறந்துபோய்விட்டார். இவ்வாறு அவரின் குடும்பச்சூழலே “வெள்ளையரை வெளியேற்ற வேண்டும்” என்கிற சிறுவன் பகத்சிங்கின் உந்துதலுக்கு காரணமாக அமைந்தது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழுந்து எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எண்ணற்ற தியாகிகள் வன்முறையற்ற போராட்ட வழியிலும் தீவிரவாத முறையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளர்ச்சியற்ற போராட்ட முறையில் நம்பிக்கையற்றவராக இருந்தார் பகத்சிங். இவ்வாறு அவர் அமைதிவழி அரசியல் வழியில் நம்பிக்கையற்றவராக மாறியதற்கு அவர் சிறுவயதிலே ஒருநாள் பள்ளி செல்லும்போது அந்தப் பிஞ்சு நெஞ்சிலே நெருப்பாய்ச் சுட்ட அந்தக் கொடூரச் சம்பவம்தான் காரணம். ஆம், ஜாலியன்வாலாபாக் படுகொலைதான் அந்த துயரம்மிகுந்த கொடுஞ்சம்பவம்.
அடக்குமுறை உச்சகட்டமாக இருந்த அக்காலகட்டத்தில் ஆங்கிலேயர் கொண்டுவந்த ‘ரவுலட்’ சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 13,1919ல் சீக்கியர்களின் புனிதத்தலமாகக் கருதப்படும் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் எனும் திடலில் பல்லாயிரம் மக்கள் திரண்டனர். அப்போது ஜெனரல் டயர் என்கிற ஆங்கிலத் தளபதி துப்பாக்கி,பீரங்கி சுமந்த தன்னுடைய கொலைப்படையுடன் கூட்டத்தில் புகுந்தான். காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய தோட்டாக்கள் தீரும்வரை சுட்டதில் தங்கள் உயிரை இழந்தவர்கள் 379 பேர். பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடியவர்கள் 1139 பேர்கள்.
தனது 12ஆவது வயதிலே நடந்த அந்த பஞ்சாப் படுகொலை நிகழ்வைப் பற்றி அறிந்ததுமே பகத்சிங்கின் உள்ளம் குமுறியது. உடனே பள்ளி செல்வதை மறந்து ஜாலியன்வாலாபாக் சென்றார். குருதிச்சேறாய்க் கிடந்த அந்த இடத்திலே நீண்ட நேரம் சடலம் போன்று நின்று கொண்டிருந்த அவன் அந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு கொஞ்சம் மண்ணை ஒரு சின்னக் கண்ணாடிப் புட்டியில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு எடுத்து வந்தான். அவன் வீடு திரும்பியதும் தன் சகோதரியைப் பக்கத்தில் அழைத்துச் சென்று இரத்தம் கலந்த அந்த புனித மண்ணைக்காட்டிவிட்டு அன்றைய இரவில் உண்ணாமலேயே இருந்துவிட்டான். அவன் குடும்பத்தினரின் கூற்றுப்படி “அவன் தினந்தோறும் புத்தம்புது மலர்களை அம்மண்ணில் வைத்து அதன்மூலம் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்தான்”. இதுவே பகத்சிங் பொதுவாழ்வில் ஈடுபட அடித்தளம் போட்டது எனலாம்.
எந்த ஒரு நாட்டிலும் மிகக்கொடூரமான நிகழ்வுகளுக்குப் பிறகே புரட்சியாளர்களும் மாவீரர்களும் முகிழ்த்தெழுவார்கள் என்ற உண்மையை இங்கும் காண முடிகிறது.
ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வைக் கண்கூடாகப் பார்த்தபிறகு அவன் மனம் பள்ளிப்படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை. “இந்தக் கொடிய பேரழிவிற்குக் காரணமான ஆங்கிலேயர் ஆட்சியின் அடிமைத்தளையை உடைத்தெறிந்து இந்தியாவின் விடுதலையை வென்றெடுத்தே தீரவேண்டும்” என்று சூளுரை மேற்கொண்டு தீவிர அரசியலில் செயலாற்றத் தொடங்கினான்.
காந்தியார் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் போன்ற அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு விடுதலை உணர்வை வெளிப்படுத்திய பகத்சிங் பிறகு “அமைதிவழிப் போராட்டம் மட்டுமே இந்திய விடுதலையைப் பெற்றுத்தராது” என்பதனை தெளிவாக உணர்ந்து காந்தியாரின் அகிம்சை கொள்கைகளில் நம்பிக்கை இழந்தவராய் பஞ்சாபில் நிறுவப்பெற்ற தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்ட “பப்பர் அகாலி” என்ற அமைப்பின் ரகசிய உறுப்பினராகச் சேர்ந்து சிலகாலம் பணியாற்றினார். அதன்பிறகு இளைஞர் பகத்சிங்கும் அவருடைய சில தோழர்களும் சேர்ந்து 1926 மார்ச் மாதத்தில் “நவஜவான் பாரத் சபை” எனும் அமைப்பை உருவாக்கினார்கள். அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் பகத்சிங். அப்போது அவருக்கு வயது 19.
“உலகத்தில் நடக்கின்ற அநீதி கண்டு ஆத்திரத்தில் நீ பொங்கி எழுவாய் என்றால் நீயும் என் தோழனே” என்ற புரட்சியாளர் சேகுவேராவின் வரிகளுக்கேற்ப இந்திய மண்ணில் நடந்த ஆங்கிலேயர்களின் அநீதியைக் கண்டு பொங்கி எழுந்த தோழர்களால் கட்டமைக்கப்பட்டு பல்வேறு குழுக்களாக சிதறி இருந்த இயக்கங்களை ஒன்றிணைத்து 1928 டிசம்பரில் “இந்திய சமதர்மக் குடியரசு ராணுவம்” எனும் விடுதலைப் படையைத் தோற்றுவித்தார் பகத்சிங். அந்தக்கூட்டத்தில் அவர் “வீரம்மிக்க இளைஞர்களே! விடுதலை என்பது தானாகக் கிடைக்காது, உயிரையும் உடலையும் விலையாகக் கொடுத்தால் மட்டுமே அது கிட்டும்; குருதியைச் சிந்தத் தயங்கக்கூடாது; போராட்டங்களைத் தவிர்க்க முயல்வது கோழைத்தனம்; புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் அல்லர்; ஆனால் தேவைப்படும் நேரத்தில் போர்க்கருவிகள் ஏந்தவும் அஞ்சாதவர்கள் அவர்கள்; தன்னலம் தகர்ந்தால் – தகர்க்கப்பட்டால் ஆயிரக்கணக்கான வீரர்கள் புத்துலகம் காணப் பறப்பட்டே தீருவர்; வெள்ளை அரசு வீழ்ந்தே தீரும், வெல்க புரட்சி” என்று எழுச்சியுரையாற்றி இளைஞர்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார்.
“புரட்சி என்பது இரத்தவெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என கட்டாயமில்லை, தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது துப்பாக்கிகள் வெடிகுண்டுகள் மீதான வழிபாடல்ல. வெளிப்படையான அநீதி மாற்றப்பட வேண்டும் என்பதையே நாங்கள் புரட்சி என்கிறோம்” என்ற சரியான தத்துவப் புரிதலோடுதான் ஆயுதப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் பகத்சிங்.
தொடரும்…
உசாத்துணைகள்
பகத்சிங்கும் இந்திய அரசியலும் – சுப. வீரபாண்டியன்
நெம்புகோல் பதிப்பக நூல்கள்
பகத்சிங் – ஒரு கனவுலகத்திற்கான முன்னுரை