தமிழ் சினிமா உலகம் தொன்றுதொட்டு கதாநாயகர்களுக்கான முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களையே படைத்து வந்தாலும் அவ்வப்போது சில நாயகிகள் கதாநாயகர்களைக் காட்டிலும் முக்கியத்துவம் பெரும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் வருகிறது. சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி எனத் தொடர்ந்து அந்தக் கால கருப்பு வெள்ளை சினிமா நாயகிகளின் புகழ் குஷ்பு, சிம்ரன், ஜோதிகா எனத் தொடர்ந்தது. அதிலும் குஷ்பூவிற்குத் திருச்சியில் கோவில் கட்டிய இரசிகர்கள் எல்லாம் உண்டு. அந்த வரிசையில் இப்போது திரை இரசிகர்கள் மட்டுமல்லாது, திரை உலகில் கொடிகட்டிப் பறக்கும் நாயகர்கள் வரை தனக்கு இரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நாயகியாக வளம் வருகிறார் நயன்தாரா.
கேரளத்து வரவான நயனதாரா திருவல்லா என்னும் இடத்தில் நவம்பர் 18, 1984 ஆம் ஆண்டு பிறந்த தென்னிந்திய லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் தற்போது அழைக்கப்படும் நயன்தாரா என்னும் டயானா மரியா குரியன் என்ற பெண்ணைப் பற்றிய கட்டுரை இது. 2003ஆம் ஆண்டு வெளிவந்த தனது தாய்மொழியான மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் மனசினக்கரே படத்தின் மூலம் திரைப்படத்துறையில் தன் பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக அவர் தமிழ் திரைப்படத்துறையில் 2005ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலமே அறிமுகமானார். தன் அழகிய வசீகரிக்கும் முகத்தோற்றதாலும் சிறப்பான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தார். இவரின் நடிப்பு திறமையால் இரண்டாம் படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2015ஆம் ஆண்டு வெளிவந்த இவரது படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என பாராட்டியுள்ளன.
இவருக்கு ‘லேடி சூப்பர்ஸ்டார்‘ என்ற பட்டத்தை பிரபல பட வெளியீட்டு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறது. அதுவும் அவர் பிறந்த நாள் அன்று அறிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடியே நயன்தாராவின் கிராப் சட்டென்று உயர்ந்துள்ளது. இவரது மார்க்கெட் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளிலும் எகிறியுள்ளது. தற்போது இளம் நடிகர்களாக இருக்கும் நடிகர்களும் இவருடன் நடிக்க தவம் கிடக்கின்றனர்.
தற்போது நயன்தாரா தனது போன பிறந்த நாளில் ஒரு புதுக்கொள்கையை வகுத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது அவர் சம்பளம் ஐந்து கோடி வேண்டுவதாகவும் மேலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுடன் மட்டுமே இனி நடிக்க போவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட இளம் நடிகர்கள் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள். இவர்களை பார்க்க வரும் தயாரிப்பாளர்களிடம் நயன் இருந்தால் உடனே சரி என்று சொல்லி விடுகிறார்கள் கதையைக் கூட கேட்காமல்.அதிலும் பல இளம் நாயகர்கள் நயன்தாரா நடித்தால் போதும் தங்களுக்குச் சம்பளம் கூட வேண்டாம் என்கின்ற அளவிற்கு இருக்கிறது அவரது சந்தை நிலவரம்.
இதுவரை நயன்தாரா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். திருமணம் ஆனவுடன் கதாநாயகிகளைத் தள்ளி வைத்து விடும் சினிமா துறையில் பல விமர்சனங்களைத் தாண்டி தனக்கு வந்த எதிர்மறை கருத்துகளையும் நேர்மறையாக மாற்றி காட்டிய ஒரே நடிகை நயன்தாராவே இவருக்கு இணை இவராக மட்டுமே இருக்க முடியும். யார் எப்படிப்பட்ட கருத்துகளைக் கூறினாலும் செவிமடுக்காது சிறு புன்னைகையுடன் ஒதுங்கிக் கொள்கிறார். கதாநாயகிகளின் சகாப்தம் அதிகபட்சம் பத்து ஆண்டுகளே என்ற கோட்பாடு தாண்டி சினிமா உலகில் பதினான்கு ஆண்டுகளாக ஒரு பெண் சினிமாத்துறையில் கதாநாயகர்களுக்கே சவால் விடும் வகையில் வளம் வருகிறார் என்றால் அது நயன்தாரா மட்டுமே. இதற்கு இவரின் உழைப்பும், விடாமுயற்சியும் எதையும் நேர்மறையாகவே பார்க்கும் இவரது கண்ணோட்டமே காரணமாக இருக்க முடியும்.
அறிமுக இயக்குனர்கள், புதிய கதைகளங்கள் என தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்த நடிகை நயன்தாரா மட்டுமே. தற்போது இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறார். அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் ஒரு உணர்வு பூர்வமான படமாகத்தான் இருக்கும் என்ற அளவிற்கு மிகப் பக்குவமான நடிகையாக இருக்கிறார் என்று சமீபத்தில் இயக்குனர் மோகன்ராஜா கூறியுள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த ‘புதிய நியமம்‘ அதற்கு சரியான சான்று.
நயன்தாரா நடித்த கோபி நாயானார் இயக்கத்தில் வெளிவந்த ‘அறம்’ திரைப்படம் இவரை புகழின் உச்சியில் கொண்டு சென்று உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஒவ்வொரு காட்சியும், அவர் பேசும் வசனங்களும், திரைக்கதையும் ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. கதாநாயகிகளை படங்களில் காதல், திருமணம் மற்றும் பாடல்களுக்கு நடனம் என்று காட்டிய காலக்கட்டத்தில் கதாநாயகிகளுக்கும் உணர்ச்சி பூர்வமான உணர்வுப்பூர்வமாக நடிக்கத் தெரியும் என்று தனது நடிப்புத் திறனை வெளிப்படித்தியுள்ளார் நயன்தாரா.
உங்கள் இதயங்களில் எனக்கு சிறியதாக ஓர் இடம் அளித்தமைக்கு அன்பும், நன்றியும் என 2018 புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகை நயன்தாரா தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய என் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அத்தனையும் கைகூடட்டும்” என்று கூறியுள்ளார். மேலும் “உங்கள் அன்பினால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நேர்மையான நிபந்தனையற்ற அன்பு இன்னமும் உள்ளது என்பதை நீங்கள்தான் உணர வைத்திருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை அழகானது என்பதை மீண்டும் மீண்டும் நீங்கள்தான் புரிய வைத்திருக்கிறீர்கள். எது நடந்தாலும் கடினமாக உழைப்பதை மட்டும் சிந்தித்து மேற்கொண்டு அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என்று உங்கள் அனைவரின் அன்பால் புரிந்துகொண்டேன். நீங்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் செய்யக்கூடியது எல்லாம் பொழுதுபோக்கு படங்களோடு ‘அறம்’ போன்ற பொறுப்பான படங்களிலும் நடிப்பதிலே உள்ளது. அச்சு, காட்சி ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், எனக்கு ஆதரவளித்த சினிமா பிரபலங்கள், திரைவிமர்சகர்கள் என அனைவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு அன்பும், நேர்மறையான தாக்கங்களும் நிறைந்த ஆண்டாக இருந்தது. இது நீங்கள் சாத்தியமாக்கினீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
நடிகைகள் என்றாலே காதல் விவகாரங்களும், கிசுகிசுக்களும் சகஜம். அதற்கு நயனதாரா மட்டுமென்ன விதிவிலக்கா? அதிலும் இவரது இடத்தில் வேறு நடிகையாக இருந்திருந்தால் ஒன்று திரைத்துறையை விட்டு ஏதாவது காரணத்தினால் விலகியிருப்பார், இல்லையேல் தவறான முடிவு எடுத்திருப்பார். ஆனால் நயன்தாரா தனக்கான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு முறை எதார்த்த வாழ்வில் தான் சருக்கும்போதும் சரியான வாய்புகள் மூலம் அதைச் சரிசெய்து முன்னேறுகிறார்.
நடிகர் சிம்புவுடன் காதல், பிரிவு என்று கிசுக்கப்பட்டபோது அவ்வளவுதான் இனி இவரது வாய்ப்புகள் போய்விடும் என்றபோது மளமளவென பல படங்கள் நடித்துத் தக்க வைக்கிறார். பிரபுதேவாவுடன் காதல் விவகாரம் கோர்ட், பத்திரிக்கை என அம்பலப்பட்டபோது சரியாக ராஜாராணி என்ற மெகாஹிட் கொடுக்கிறார். உடல் பெருத்துவிட்டது இனிமேல் வாய்ப்புகள் குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும்போது உடல் மெலிந்து வந்து நானும் ரௌடிதான் படத்தில் காதுகேளாதவராக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி விட்டார். கவர்ச்சியாக நடிக்கிறார் என்று கேலி செய்தால் அறம் நடிக்கிறார். ஆக தன்னிடம் தொய்வு காண்பதற்கான வாய்ப்பை என்றுமே, யாருக்குமே அவர் வழங்கத் தயாரில்லை என்பது மட்டும் புரிகிறது.
ஆணாதிக்க சினிமா உலகில் நயன்தாரா சினிமாவில் உள்ளவரை தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார் என்பது தற்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து நடித்திருப்பதிலேயே தெளிவாகப் புரிகிறது. நான்கு பிலிம்பேர் விருதுகள், நான்கு விஜய் தொலைக்காட்சி விருதுகள், இரண்டு கலைமாமணி விருதுகள் , என மொத்தம் 36 விருதுகளை அள்ளியிருக்கிறார். ஆக தேனாண்டாள் பிலிம்ஸ் சூட்டிய லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் நயன்தாராவிற்கு மட்டுமே பொருந்தும் என்பதில் எந்தவித ஐயமில்லை. அவர் மென்மேலும் பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோமாக.
Web Title: Emerging lady superstar Nayanthara
Featured Image Credit: Hindustan times