விடுதலை நாயகன் பகத்சிங் 2

சைமன் குழு இந்தியா வந்தபோது அதனை எதிர்த்து லாலா லஜபதிராய், பண்டிட் மதன்மோகன் மாளவியா ஆகியோர் தலைமையில் லாகூர் நகரத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் முடிவில் லாலா லஜபதிராய் ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸால் தாக்கப்பட்டு இறந்தார். அவரின் இறப்புக்குப் பழிவாங்க வேண்டுமென இந்திய சமதர்மக் குடியரசு ராணுவம் திட்டம் தீட்டியது… லஜபதிராய் இறந்த அதேநாள் மாலை அதிகாரி சாண்டர்ஸ் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்… மறுநாள் லாகூர் நகரத்து சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளின் கடைசி வரிகள் இவ்வாறு இருந்தன.

சைமன் குழு இந்தியா வந்தபோது அதனை எதிர்த்து லாலா லஜபதிராய், பண்டிட் மதன்மோகன் மாளவியா ஆகியோர் தலைமையில் லாகூர் நகரத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது படம் – media.licdn.com

“ஒரு மனிதனின் மரணத்திற்காக வருந்துகிறோம். ஆனால் இந்த மனிதனுக்குள் இருந்து அழிக்கப்பட வேண்டிய கீழ்தரமான கொடூரமான நிறுவனத்தின் பிதிநிதி இறந்துபோயிருக்கிறான். மனிதன் இரத்தம் சிந்தப்படுவதற்காக வருந்துகிறோம். ஆனால் மனிதனை மனிதன் சுரண்ட முடியாத விடுதலையை நோக்கிய புரட்சியின் தொடக்கத்தில்  இத்தகைய தனிமனித உயிர்ப்பலிகள் தவிர்க்கமுடியாதனவே”.

இச்சுவரொட்டியின்மூலம் சாண்டர்ஸ் கொலைக்குப் பின்புறமுள்ள புரட்சியாளர்களின் இலட்சியம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

08.04.1929 அன்று பொதுப்பாதுகாப்பு மற்றும் தொழில் மசோதாவை தில்லி நடுவண் சபையில் தாக்கல் செய்யத் தயாரானது ஆங்கிலேய அரசு. குண்டுவீசத் தயாரானார்கள் புரட்சியாளர்கள். வைஸ்ராயின் பிரகடனத்தை அறிவிக்க எழுந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பகத்சிங்கும் பி.கே.தத்தும் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாதபடி குண்டுகளை வீசினர்.. “இன்குலாப் ஜிந்தாபாத்! பிரித்தானிய வல்லாதிக்கம் ஒழிக. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று முழக்கமிட்டு “செவிடர்களைக் கேட்கச் செய்ய வேண்டுமானால் பலத்த சத்தம் அவசியமாகிறது” என்கிற வாசகம் அடங்கிய சிவப்பு நிற துண்டறிக்கைகளை வீசி எறிந்தனர். அதனுடைய இறுதியில்

“வரலாற்றில் அடிக்கடி உணர்த்தப்பட்டுவரும் பாடத்தை இப்போது நாங்கள் அனாதைகளாக நிற்கும் இந்தியப் பாமர மக்களின் சார்பாக உணர்த்தியிருக்கிறோம். பிரித்தானிய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் உணரட்டும். இன்குலாப் ஜிந்தாபாத்! வல்லாதிக்கம் ஒழிக!”

என்கிற செய்திகள் இடம்பெற்றிருந்தன. கையில் துப்பாக்கி குண்டுகள் இருந்தும் அதை வெடிக்கச் செய்ய வாய்ப்புகள் இருந்தும் தப்பியோட வாய்ப்புகள் இருந்தும் எதனையும் முயற்சிக்காமல் தாமாக முன்வந்து தளைப்பட்டார்கள்.

சிறையில் பகத்சிங்
படம் – parimalnathwani.com

பின்பு பகத்சிங்கை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தியபோது

“மனிதகுலத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை எந்தவொரு தனிமனிதனுக்கும் எதிரான பழிதீர்க்கும் எண்ணங்களையெல்லாம் தாண்டி, மனித உயிர்களை வார்த்தைகளால் வடிவமைக்க முடியாத அளவிற்கு நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம்”

என்றார் அவர். இதன்மூலம் புரட்சியாளர்களின் மனிதநேய உணர்வை அறிந்துகொள்ள முடியும்.

பகத்சிங், பி.கே.தத்தை தொடர்ந்து மொத்தம் 16 தோழர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். 1930 அக்டோபர் 7ஆம் தேதி லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் சாண்டர்ஸை கொலை செய்தமைக்காக தூக்கு, 8 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை, மற்றொருவருக்கு 3 ஆண்டுகள் சிறை, மூவர் விடுதலை. இத்தீர்ப்பின்படி 13.10.1930 அன்று இம்மூன்று போராளிகளையும் தூக்கிலேற்ற வேண்டும். ஆனால் ஆங்கிலேய அரசு அவ்வாறு செய்யவில்லை. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே தண்டனையை நிறைவேற்றுவது என்பதில் முனைப்பாக இருந்தது. பகத்சிங்கைத் தூக்கிலிட்டபிறகு விளைவு எவ்வாறு இருக்குமென்பதை ஆங்கிலேய உளவுப்பிரிவு நுட்பமாக கவனித்து வந்தது.

பகத்சிங்கையும் தோழர்களையும் தூக்கிலிடுவது பற்றி இர்வின் பிரபு காந்தியாரிடம் கருத்து கேட்டார். இர்வின்பிரபுவுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் காந்தியார் பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்காத இர்வின் “வேண்டுமானால் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப்போடலாம்”என்றார். அதை ஏற்காத காந்தியார் “அந்த இளைஞர்களைத் தூக்கிலிடுவது என்று முடிவாகிவிட்டால், காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று கூறியதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாற்று ஆசிரியர் பட்டாபி சீதாரமய்யா குறிப்பிடுகிறார். காங்கிரஸ் மாநாட்டில் தூக்குத் தண்டனைக்கு எதிரான கிளர்ச்சி ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே காந்தியார் இர்வினிடம் இவ்வாறு வலியுறுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் மாநாட்டில் தூக்குத் தண்டனைக்கு எதிரான கிளர்ச்சி ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே காந்தியார் இர்வினிடம் இவ்வாறு வலியுறுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். படம் – dailysikhupdates.com

பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் தண்டனையைக் குறைக்க காந்தியார் பாடுபட்டார் என்பதற்கு எழுத்துவடிவில் எந்த ஆதாரமுமில்லை. காந்தியார் ஆங்கிலேயருக்கு எழுதியுள்ள எந்தவொரு கடிதத்திலும் இப்படியொரு வேண்டுகோள் இல்லவே இல்லை. காந்தியார் தண்டனையைக் குறைக்கச் சொன்னாரா என்பது ஒருபுறமிருக்க, “தண்டனையை எப்போது நிறைவேற்றலாம்” என ஆங்கிலேய அரசுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிற செய்தி தில்லி அரசு ஆவணக்காப்பகத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பகத்சிங்கை விடுவிக்குமாறு போராடும் குழுக்கள் அமைக்கப்பட்டன. பல ஊர்களில் பகத்சிங் நாள் கொண்டாடப்பட்டது.

குருதிப்பாசம் காரணமாக பகத்சிங்கின் தந்தை சாண்டர்ஸ் கொலைக்கும் தன் மகனுக்கும் எவ்வித தொடர்புமில்லை, ஆகவே அவனை விடுதலை செய்யுமாறு ஆங்கிலேய அரசுக்கு மனு கொடுத்தார். இதனைக் கேள்வியுற்ற பகத்சிங் சீற்றமடைந்தார். உடனே தன் தந்தைக்கு ஒரு கண்டன மடல் தீட்டினார். அந்நீண்ட மடலின் ஓரிடத்தில் “நான் என் முதுகில் குத்தப்பட்டுள்ளதாக உணர்கிறேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அது துரோகத்துக்குச் சற்றும் குறைவானதன்று என்றே நான் கருதியிருப்பேன். ஆனால் உங்களைப் பொறுத்த அளவு அதை ஒரு பலவீனமென்று மிக மோசமான வகையைச் சேர்ந்த பலவீனமென்றே நான் சொல்கின்றேன்” இம்மடலிலிருந்து பகத்சிங்கின் நேர்மையான உள்ளக்கிடக்கை தெளிவாகிறது.

பகத்சிங்கிற்கு ஆதரவாக மக்கள் எழுச்சி உருவாகி வளர்ந்து கொண்டிருப்பதைக்கண்டு அச்சமுற்ற வெள்ளை ஏகாதிபத்திய அரசு விரைந்து தூக்கிலிடத் தீர்மானித்தது. சிறையில் தூக்குத் தண்டனை என்பது அதிகாலை விடிவதற்கு முன்பே நிகழ்வது மரபு. அம்மரபுப்படி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று போராளிகளை 24.03.1931 அன்று தூக்கிலிட வேண்டும். ஆனால் திடீரென்று அம்முடிவை மாற்றி 23.03.1931 மாலை 7:30 மணிக்கே தூக்கிலிட்டனர்.

பகத்சிங்கினது வாழ்வில் கடைசிநாளன்று சிறைக்காவலர் பகத்சிங்கைப் பார்த்து “இன்னும் ஒருசில மணித்துளிகள்தான் நீ உயிர்வாழப் போகிறாய். இந்தக் கடைசி நேரத்திலாவது கடவுளை ஒருமுறை நீ வழிபாடு செய்துகொள். சீக்கியர்களின் புனித நூலிலிருந்து ஒரு சிறு பகுதியையாவது படி” என்று கேட்டுக் கொண்டாராம். அதற்கு பகத்சிங் “கடைசி நேரத்தில் அப்படிச் செய்தால் உங்கள் கடவுளேகூட என்னை கோழை என்று நினைத்துக்கொள்ள மாட்டாரா? இத்தனை வருடங்களும் வழிபாடு ஏதுமின்றி கழித்தது போலவே இந்த கடைசி நேரமும் அமைந்து நாங்கள் உலகை விட்டுப் போய்விடுவதுதான் நல்லது. அப்போது நாத்திகனாக இருந்த நான் பயத்தின் காரணமாக மனம் தடுமாறி ஆத்திகத்திற்குச் சென்றுவிட்டேன் என்று யாரும் குறை கூறமுடியாது” என்று மறுமொழி பகர்ந்துள்ளார்.பகத்சிங்கின் நெறிபிறழா வாழ்க்கை முறைக்கு இதுவும் ஒரு சான்று.

பகத்சிங்கின் மரணச் சான்று
படம் – blogspot.com

பகத்சிங்கிற்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதற்கு பொதுவுடைமை இலட்சியத்தின்மீது அவர் கொண்ட ஈடுபாடே காரணம்.

“1926ஆம் ஆண்டு முடிவில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து நடத்திவரும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் ஒன்று உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றது என உணர்ந்து கொண்டுவிட்டேன் என்கிறார் பகத்சிங்.

பகத்சிங்கின் உலகப்பார்வை விசாலமானது  என்பதை அவரது நீதிமன்ற வாக்குமூலத்தின் வாயிலாக உணர முடிகிறது.

“அடக்குமுறைச் சட்டங்களாலும் பாஸ்டில் சிறைகளாலும் பிரெஞ்ச் புரட்சியை நசுக்க முடியவில்லை. தூக்குமேடைகளாலும் சைபீரியச் சிறைகளாலும் ருஷ்யப் புரட்சியை அழித்துவிட முடியவில்லை. இரத்த ஞாயிற்றாலும் அயர்லாந்து துரோகப் படைகளாலும் அயர்லாந்து விடுதலையை அடக்கிவிட முடியவில்லை. அவரசச் சட்டங்களும் பாதுகாப்பு முன்வடிவுகளும் இந்தியாவின் விடுதலைத் தீயை அணைத்துவிட முடியுமா?”

இவ்வாறாக இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பன்னாடுகளின் விடுதலைப்போராட்டத்தைக் கற்று அதன்படி களம் அமைத்துப் போராடியுள்ளார் பகத்சிங்.

பகத்சிங் நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இறுதியாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லவந்த காவலர்கள் ஆயத்தமாக கிளம்பச் சொன்ன போதும்கூட லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்த அவர் “ஒரு புரட்சியாளன் இன்னெரு புரட்சியாளனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பொறுங்கள்” என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.

தூக்கிலிடுவதற்குமுன் பஞ்சாப் மாகாண ஆளுநருக்கு 3 பேரும் எழுதிய மடலில் “நாங்கள் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நாங்கள் அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள், நாங்கள் போர்க்கைதிகள், ஆகவே எங்களைப் போர்க்கைதிகளாகவே நடத்த வேண்டும். எங்களுக்கு உரிய மரியாதையை வழங்கிட வேண்டும். அதாவது முகத்தைக் கருப்புத்துணியால் மூடி கைகளைப் பின்புறம் இணைத்துக்கட்டி தூக்கிலிட்டுக் கொள்வதற்கு பதிலாக பொதுமக்கள் புடைசூழ கருப்புத்துணியால் மூடாமல் உங்களது துப்பாக்கிகளால் எங்களை சுட்டுக்கொல்லுங்கள்! எங்களது செங்குருதி நாங்கள் நேசித்த இம்மண்ணோடு கலக்க வேண்டும். அச்செங்குருதி எங்களுக்குப் பின்னே வரக்கூடிய ஆயிரமாயிரம் போராளிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டும்” என்று எழுதியிருந்தனர்.

ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பகத்சிங்கிடம் உங்களது கடைசி ஆசை என்னவென்று கேட்டபோது “நான் பேபி கையால் ரொட்டி சாப்பிட வேண்டும்” என்றார். அவர் கூறியதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். பேபி என்பவர் பகத்சிங் இருந்த சிறையில் மலமள்ளும் தொழிலைச் செய்யும் பெண். பேபி தன்னால் எப்படி முடியும் எனக்கேட்டபோது “தன்னுடைய குழந்தையின் மலத்தை அள்ளி தாய் சுத்தம் செய்வாள். இங்கே எனக்கு நீங்கள்தான் தாய்” என்று நெகிழ வைத்தார்.இவ்வாறு விடுதலை வேட்கையோடு பொதுவுடைமை, பகுத்தறிவு, சாதி ஒழிப்புக் கருத்தியலிலும் சிந்தனை கொண்டவராக பகத்சிங் இருந்தார்.

ஒவ்வொரு முறையும் போராளிகள் துரோகத்தாலேயே வீழ்த்தப்படுகின்றனர். படம் – insaneeye.in

இறுதியாக முடிவுசெய்யப்பட்டபடியே மார்ச் 23 மாலை மண்ணின் மைந்தர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். நடக்கவிருந்த லாகூர் மாநாட்டுக்கான பிரச்சனையும் முடிந்தது. புரட்சியாளர்களுடைய தியாகங்களுக்குப் பெரிய அளவில் பயனில்லாமல் போனது. ஒவ்வொரு முறையும் போராளிகள் துரோகத்தாலேயே வீழ்த்தப்படுகின்றனர். இங்கு துரோகிகள் யார் என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் யார் வாங்கிக் கொடுத்தது என்ற கேள்விக்குப் பிஞ்சுகளிடம் இருந்து வரும் பதில் “காந்தி” என்பது. நம்முடைய வரலாற்றுக் கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக அவ்வாறாகத்தான் இருந்துவருகிறது. அதற்கு நாமும் துணைபோயிருக்கிறோம்.

காந்தி என்கிற அந்த ஒற்றை வார்த்தையை ஒற்றை மனிதரை மட்டும் நாம் அடையாளப்படுத்துவதால் அசாத்தியத் துணிச்சல் கொண்ட 23 வயது இளைஞன் பகத்சிங் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மறைக்கும் துரோகத்திற்கு நாமும் உடந்தையாக இருந்திருக்கிறோம். அந்த துரோக வரலாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை உண்மையான வரலாற்றை அறிந்தவர்களாக இருப்பர். இல்லையேல் இந்திய விடுதலை வரலாறு கோயபல்ஸ் கதையாகிவிடும்.

Related Articles

Exit mobile version