பிரித்தானிய அரசால் சேர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட இலங்கையர்கள்

சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் . இந்தப் பெயர் யாருக்கும் பரீட்சியமான பெயர்தான். இதை இங்கே சொல்வதற்கு காரணம் மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் வீரரான ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சட்ஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட விவியன் ரிச்சர்ட்ஸுக்கு முன்னாள் இருக்கும் சேர் என்ற அந்த ஒற்றைச் சொல்தான்.

  மேற்கிந்தியதீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேர் ஐசக் விவியன்

நைட்ஹுட் என்பது ஒரு பட்டம். பிரிட்டிஷ் அரசர், அல்லது ராணியால் கொடுக்கப்படும் இந்தப் பட்டம் பிரிட்டன் நாட்டில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பட்டமாகும். இந்தப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் மிஸ்டர் என்று போட்டுக் கொள்வதற்கு பதில் சேர் என்று போட்டுக் கொள்ளலாம்.

பிரித்தானியர்கள் இன்றும் இந்த வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அண்மையில் கூட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் அலஸ்டர் குக்கிற்கு நைட்ஹூட் பட்டம் வழங்கப்பட்டது. முற்காலத்தில் இது படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட கௌரப்பட்டமாகும். பிரித்தானியாவின் உயரிய சிவில் விருதாகவும் இந்த சேர் பட்டம் கருதப்படுகின்றது. 

சேர் என்பதற்கு தமிழில் வயவர் என்கின்றனர். வயவர் என்றால் படைத்தலைவன் என்று பொருள். அப்படிப்பார்க்கும்போது படைத் தலைவனுக்குத்தான் பிரித்தானியர்கள் சேர் பட்டத்தை வழங்கியிருக்கின்றனர்.

சேர் குறித்து இவ்வளவையும் சொல்லக் காரணம், இலங்கையர்கள் பலருக்கும் பிரித்தானிய அரசாங்கம் சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அந்தவகையில்  தங்கள் பெயருக்கு முன்னாள் சேர் என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வோம்.

சேர் முத்து குமாரசுவாமி

சேர் முத்து குமாரசுவாமி

ஆசியாவில் பிறந்து முதன் முதலில் பிரித்தானியரின் உயரிய விருதான சேர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரிய சேர் முத்து குமாரசுவாமி அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. அவர் சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். 

கொழும்பு அக்காடமியில் அதாவது இன்றைய கொழும்பு ரோயல் கல்லூரியில் 1842 முதல் 1851 வரை கல்வி கற்றவர்.

இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த இவர், காவற்துறை குற்றவியல் நடுவராகவும் (magistrate), முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

1861 ஆம் ஆண்டில் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மே 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கு 1863 இல் “லிங்கனின் இன்” (Lincoln’s Inn) என்ற பாரிஸ்டர்களின் மாளிகையில் சேர்க்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பினார். 1867 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1874 ஆம் ஆண்டு முதலாவது ஆசியராகவும், இலங்கையராகவும் சேர் பட்டம் பெற்றார்.

சேர் அம்பலவாணர் கனகசபை

1917 ஆம் ஆண்டில் இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கியது. சேர் பட்டம் பெற்ற மூன்றாவது இலங்கைத் தமிழரான சேர் அம்பலவாணர் கனகசபை, இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார். கனகசபை இலங்கையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை என்ற ஊரில் 1856 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் கற்ற இவர், உயர் கல்வியை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்று 1878 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்று 1882 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். 1882 இல் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்து புதிய வடக்குத் தொடரூந்துப் பாதையை அமைப்பதற்கு பெரும் ஆதரவளித்ததாக சொல்லப்படுகின்றது.

சேர் பொன். அருணாசலம் 

இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் சேர் பொன்.அருணாசலம் அரச சேவையிலிருந்து 1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவரது அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பங்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினார்.

பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

சேர் பொன். அருணாசலம் 

இவரது தாய் மாமனாரான சேர். முத்துக்குமார சுவாமியின் கண்காணிப்பில் கொழும்பிலேயே வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இங்கு கல்வி கற்ற போது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார்.

இங்கிலாந்தில் பரிஸ்டர் ஆகவும் 1875 ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் பொன். அருணாசலம் இலங்கை திரும்பினார். 1913 ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடுவராகத் தொழிற்பட்டார். 

சேர் அல்பர்ட் பீரிஸ்

சேர் பட்டியபதிரென்ன ஹெலாகே அல்பர்ட் பிரெட்ரிக் பீரிஸ், இலங்கையின் 5 ஆவது, மற்றும் 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகர் ஆவார். துணை சபாநாயகராகப் பணியாற்றிய இவர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் இறந்ததை அடுத்து சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா தேர்தல் தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி கற்றவர். நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

சேர் அலெக்சாண்டர் பிரான்ஸிஸ் மொலமுறே

சேர் அலெக்சாண்டர் பிரான்ஸிஸ் மொலமுறே பிரித்தானிய இலங்கையில் அதாவது சிலோனின் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கொழும்பு புனித தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்ற பிரான்ஸிஸ் மொலமூர் பாடசாலைக் கிரிக்கெட் அணியில் இணைந்து கல்லூரிக்காக விளையாடினார்.

சேர் அலெக்சாண்டர் பிரான்ஸிஸ் மொலமுறே

அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல்கள் 1931 நடைப்பெற்றது. இதில் தெடிகம தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்ஸிஸ் மொலமுறே, அவை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆனாலும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக 1934 ஆம் ஆண்டு தமது பதவியைத் துறந்தார். பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை பிரதிநிதிகள் சபையில் மீண்டும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைய முன்னரே அவர் 1951 ஜனவரி 24 ஆம் திகதி காலமானார்.

சேர் இரத்தினசோதி சரவணமுத்து

கொழும்பு மாநகரசபை முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலங்கையரான சேர் இரத்தினசோதி சரவணமுத்து, மருத்துவரும் அரசியல்வாதியாகவும் அறியப்படுகின்றார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்தவர். 

இலங்கை அரசு அதிகாரியான பாக்கியசோதி சரவணமுத்துவின் மகனான இவர், கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னர் சென்னையில் மருத்துவக் கல்வியையும், லண்டனில் மருத்துவதத்துறையில் பட்டப்படிப்பையும் முடித்தவர். இவரது இளைய சகோதரர்கள் மாணிக்கசோதி சரவணமுத்து, பாக்கியசோதி சரவணமுத்து, லெப்.கேணல் எஸ். சரவணமுத்து ஆகியோராவார்.

1931 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து இலங்கை அரசாங்க சபைக்குத் தேர்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதிநிதி ஆனார். ஆனாலும், தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக தேர்தல் நீதிபதி ஒருவரினால் குற்றம் சாட்டப்பட்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் ஏழு ஆண்டுகளுக்கு இவரது குடியியல் உரிமையும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே தொகுதியில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் இவராவார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஆற்றிய சேவைகளுக்காக இவருக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

சேர் அகஸ்டஸ் ஒபயசேகர

சேர் வொரெஸ்டர் அகஸ்டஸ் ஒபயசேகர  இலங்கை அரசாங்க சபையில் சபாநாயகராகவும், இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.

சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் சேர் சொலமன் கிறிஸ்டோபல் ஒபயசேகரவுக்குப் பிறந்த இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவர்.

சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக 1924 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பேரவை கலைக்கப்படும் வரையில் அதன் உறுப்பினராக இருந்தார். 1931 இல் அரசாங்க சபை அமைக்கப்பட்ட போது அதன் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 1934 ஆம் ஆண்டில் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய போது அவரது இடத்துக்கு ஒபயசேகர நியமிக்கப்பட்டார்.

சேர் கந்தையா வைத்தியநாதன் 

அன்றைய டி. எஸ்.சேனநாயக்க அரசில் 1952 ஆம் ஆண்டில் சேர் கந்தையா வைத்தியநாதன் இலங்கை செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1953 ஆம் ஆண்டில் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து இவருக்குத் தொழிற்துறை அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. கந்தையா வைத்தியநாதனுக்கு இங்கிலாந்து மன்னரால் சேர் பட்டம் வழங்கப்பட்டது.

இலங்கை அரசுப்பணியில் நீண்டகாலம் பணியாற்றியவர். 1947 ஆம் ஆண்டில் இவர் சுதந்திர இலங்கையின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சேர் கந்தையா வைத்தியநாதன் 

அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். 

இறுதிக் காலத்தில் திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார். கோவிலைப் புனரமைத்ததுடன் அதன் அருகாமையில் ஒரு சமஸ்கிருத பாடசாலை ஆரம்பித்து அந்தண சிறுவர்கள் இலவசமாக சமஸ்கிருதம், வேதம் மற்றும் ஆகமங்கள் பயில ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்திலிருந்து சுப்பிரமணிய பட்டர் என்ற சமஸ்கிருத பண்டிதரை குருவாக நியமனம் செய்தார்.

சேர் பட்டம் பெற்ற கந்தையா வத்தியநாதன் தனது சேர் பட்டத்தை துறந்தும் பெரும் புகழ்பெற்றவராக விளங்கினார்.

சேர் சிற்றம்பலம் கார்டினர்

சேர் சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர் இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899 இல் பிறந்தவர் சிற்றம்பலம். 

லத்தீன் மொழியில் தேர்ச்சி பெற்ற இவர், ஜோசப் கல்லூரியில் சில காலம் மாணவர்களுக்கு லத்தீன் மொழி கற்பித்தார். அலோசியசஸ் கார்மெல் காசிச்செட்டி என்பவரின் மகள் ஏஞ்சலீன் காசிச் செட்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். 

சேர் சிற்றம்பலம் கார்டினர்

சட்டம் பயின்ற கார்டினர் இலங்கையில் திரைப்படத் துறைக்குள் காலடி எடுத்து வைத்து அங்கேயும் கோலோச்சினார். சிலோன் தியேட்டர் லிமிட்டெட் என்னும் நிறுவனத்தை 1928 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இந்நிறுவனம் தற்போதும் திரைப்படத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். கார்கில்ஸ், மில்லர்ஸ் உட்பட இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் இவர் வைத்திருந்தார். 1947ஆம் ஆண்டு இலங்கையில் இரண்டாவதாகத் திரையிடப்பட்ட அசோகமாலா என்ற சிங்களத் திரைப்படத்தை இவரே தயாரித்தார். இப்படம் இந்தியாவில் தயாரானது.

1947 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இவருக்கு புனித சில்வெஸ்டர் கட்டளை விருதை வழங்கிக் கௌரவித்தது. புனித கிரெகரியின் கட்டளை விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார். 1951 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சேர் பட்டம் வழங்கியது.

குதிரைப் பந்தயங்களிலும் ஈடுபட்ட இவர் குதிரை ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார். 1947 ஆளுநர் கிண்ணத்தை இவர் வளர்த்த குதிரைகளில் ஒன்று வென்றது சிறப்பம்சமாகும். 

சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கொழும்பில் உள்ள ரீகல் சினிமா தியட்டர் வழியாக செல்லும் பார்சன்ஸ் வீதிக்கு இவரது நினைவாக சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது.

சேர் பொன்னம்பலம் இராமநாதன் 

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

கொழும்பில் பிறந்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், சென்னை பிரெசிடெஸ்ஸி கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

 

சேர் பொன்னம்பலம் இராமநாதன் 

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 

1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50ஆவது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ள பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் சேர் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

சேர் மொஹமட் மாக்கான் மாக்கார்

இலங்கையின் தெற்கே காலியில் பிரபலமான தொழிலதிபராக இருந்த உதுமா லெப்பை மரிக்கார் மாக்கான் மாக்கார் என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கொழும்பு நகரில் குடும்பத் தொழிலான தங்கநகை வணிகத் தொழிலில் ஈடுபட்டார்.

சேர் மொஹமட் மாக்கான் மாக்கார்

1924 ஆம் ஆண்டில் இலங்கை சட்டவாக்கப் பேரவையிலும், பின்னர் அரசாங்க சபையிலும் உறுப்பினரானார். தகவல், மற்றும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1948 முதல் 1952 வரை மேலவை உறுப்பினராக இருந்தார். 1938 ஆம் ஆன்டில் இவருக்கு சேர் வழங்கப்பட்டது.

இவரது நினைவாக கொழும்பில் கொம்பனித் தெருவில் உள்ள வீதி ஒன்றிற்கு சேர் முகம்மது மாக்கான் மாக்கார் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி இலங்கையின் பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையை பெற்ற இவர், இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் நடைப்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார்.  அந்தவைபவத்தின் போது துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார். 

அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றி கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவிய பெருமைக்குரியவர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள்.

முகப்பு பட வடிவமைப்பு : ஜேமி அல்போஃன்சஸ் / Roar Media

Related Articles

Exit mobile version