1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி சிவந்தி ஆதித்தன் மற்றும் கனகம் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் சி.பா. ஆதித்தனார். இவரது சொந்த ஊரானது தூத்துக்குடி மாவட்டம், திருச்சந்தூரில் உள்ள காயாமொழி கிராமம். இவரின் இயற்பெயர் ” சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன்” ஆகும். ஆதித்தனார் என்பது இவரது குடும்ப பெயராகும்.
சிறுவயது ஆர்வங்கள்
தந்தை வழக்கறிஞராக இருப்பதால் சிறுவயதில் கஷ்டங்கள் ஏதுமின்றி வளர்ந்தார் சி.பா.ஆதித்தனார், திருவைகுண்டத்தில் பள்ளிப்படிப்பையும், திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்தார். கல்லூரி காலத்திலே தமிழ் மீது காதல் கொண்டமையால் ” தொழில் வெளியீட்டகம் ” எனும் பதிப்பகத்தை தொடங்கினர், அதில் சுயத்தொழில் முன்னேற்றமே சுயமுன்னேற்றம் எனும் கூற்றை முன்வைத்து சுயதொழில் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டார் அதில் ,மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பட்டி செய்வது எப்படி?, ஊதுவத்தி செய்வது எப்படி? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி? என அனைத்தையும் செய்முறை விளக்கங்களுடன் எழுதி வெளிட்டார். இதனை செம்மையாக செய்ய முதன்முறையாக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார்,அதுமட்டுமின்றி தமிழக இளைஞர் மத்தியில் இவர்மீது பெரும் மரியாதை கூடிற்று மேலும் இவர் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் காட்டும் ஆர்வம், இளைஞர்கள் சுயத்தொழில் செய்து வாழ்வில் முன்னேறவேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருந்தார் சி.பா.ஆ.
சட்டம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்ட அவர் சட்டம் படிப்பதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். பின் பாரிஸ்டர் பட்டம் படிக்க இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்கு சென்றார், அங்கு படிக்கும்போதே படிப்பு செலவிற்காக பகுதி நேர நிருபராக பணியாற்றி பணம் சேர்த்தார். சுதேசிமித்திரன் போன்ற தமிழ்நாட்டு இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனில் வெளிவரும் ஸ்பெக்டேட்டர் வார இதழ் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற இடங்களிள் வெளிவந்த பத்திரிகைகளுக்கும் , இதழ்களுக்கும், செய்திகளையும் & செய்திக்கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் என தமிழருக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தார். லண்டனில் இருந்த நாட்களில் அவருள் தமிழ் மீது தீராத தாகம் அதிகரித்தமையால் சுயமாக இதழ்கள் நடத்தவேண்டும் என்ற உயரிய லட்சியத்தை உள்ளத்தில் உருவாக்கினார்.
தமிழ் பசி
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பிய சி.பா.ஆ , வழக்கறிஞராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தன் பணியை தொடங்கினார். பின்நாட்களில் சி.பா.ஆ அவர்களுக்கு திருமணம் முடிவு செய்து, 1933 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டிலே கல்யாணம் விமர்சையாக நடந்தது . அங்கு , சிங்கப்பூர் நாட்டின் பெரும் தொழில் அதிபராக இருந்த ஓ. ராமசாமி நாடாரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை கரம்பிடித்தார். அதன்பின் தாயகம் வந்த சி.பா.ஆ பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார்.பின்னாட்களில் பெரியாரின் குடியரசு பத்திரிக்கையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இருந்தும் தனது லட்சியம் பற்றி சிந்தித்து தீர்க்கமான ஒரு முடிவெடுத்தார். என்னவென்றால் தன் லட்சியம் நோக்கி செல்ல பணம் தேவை இருப்பதை உணர்த்தார், ஆதலால் சிங்கப்பூர் செல்ல தீர்மானித்து அங்கே வழக்கறிஞராக பணிபுரிய முடிவெடுத்தார். நாளடைவில் நல்ல வருமானம் கிடைத்தது. மீண்டும் தமிழ்நாடு திரும்ப ஆயத்தமானார், ஆனால் அவரது மாமனார் இத்தொழிலை விட்டு போகவேண்டாம், அப்படி போனால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார். சி.பா.ஆ தனது கனவான இதழ் ஆரம்பிப்பதை பற்றி எடுத்துக்கூறியும் அவரின் மாமனார் முற்றிலுமாக எதிர்த்தார். இருப்பினும் இவரின் மன உறுதியை பார்த்த அவரது மாமனார் அரைமனதுடன் ஏற்றுக்கொண்டார். சி.பா.ஆ தனது லட்சியத்தில் உறுதியுடன் முன்னெடுத்து வைக்க ஆயுத்தமானார்.
தமிழ் பணி முதல் தமிழர் தந்தை வரை
1942 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு திரும்பினார் சி.பா.ஆ. இவர் முதன் முதலில் ” மதுரை முரசு ” என்னும் வாரம் இருமுறை வெளியாகும் இதழை தொடங்கினார். இதில் மதுரையில் நடந்த சுதந்திர போராட்டத்தில், கலவரம் வெடித்ததில் ஆங்கிலேய காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால் காவலர்களோ ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடவேண்டும் என மிரட்டினர். அவர்களின் பேச்சிற்கு கொஞ்சமும் செவி சாய்க்காத ஆதித்தனார் ” மதுரையில் போலீஸ் துப்பாக்கி சூடு! மூன்று பேர் சாவு!” என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டார். இதை கண்ட ஆங்கிலேயே அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தை பயன்படுத்தி ” மதுரை முரசு ” இதழை தடை செய்தனர். இதன்வழியே சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து சென்றது ஒருபக்கமாகவும், யாருக்காகவும் உண்மையை மக்களிடம் மறைப்பது பத்திரிகை ஜனநாயகத்தின் எதிரானது என உறுதியாக நம்பினார் ஆதித்தனார் . பின்பு “தமிழன்” எனும் வார இதழை தொடங்கினார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ” தினத்தந்தி ” என்னும் தமிழ் நாளிதழை தொடங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி பல்வேறு அம்சங்களை வெளியிட்டு வந்தார் ஆதித்தனார். அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பு மொழிநடையை தவிர்த்து சாதாரண மக்கள் மனதில் நிற்கும்படி எளிய தமிழ் நடையை கையாண்டார். கருத்து படங்களின் வாயிலாக மக்களை செய்திகள் வெகுவிரைவாக சென்றடையும் என்பதை உணர்ந்த ஆதித்தனார் அதை மிகவும் நுணுக்கமாக தயாரித்தார். படித்தவர்கள் மட்டுமே நாளிதழை வாசிக்கும் நிலையை மாற்றி அடித்தட்டு மக்களின் மனங்களின் வழியே ஒவ்வொரு செய்திகளையும் கோர்த்து அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை வெளியிடுவதில் தினத்தந்தி முன்னோடியாய் திகழ்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் வாசிப்பு பழக்கம் பரவ வழிவகுத்தார். தனது இதழியல் முயற்சிகளை விரிவாக்க நினைத்த ஆதித்தனார், ” மாலை மலர் ” எனும் மாலை பத்திரிக்கை, ” ராணி ” எனும் வார இதழையும் தொடங்கினார்.
அரசியல், சமூகம், பொருளாதாரம், வர்த்தகம், விளையாட்டு, திரைத்துரை மற்றும் பல்வேறு முக்கிய தலைப்புகளில் இதழை வெளியிட்டு மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். தொடர்ச்சியாக மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தின் வழியே ” ராணி முத்து ” என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு தமிழ்ப்பத்திரிக்கை உலகில் புதிய மாற்றத்தினை நடைமுறை படுத்தினார்.
இன்று தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள்தோறும் வாசகர் கூட்டம் அதிகரித்ததை நாம் இன்றளவும் காணமுடிகிறது. மேலும் இக்குழுமம் தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களை வெளியிடுகிறது.
ஜனநாயகத்தின் நான்கு தூண் ஆட்சி அதிகாரம், அரசு நிர்வாகம், நீதி, பத்திரிக்கை. இப்படி ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணாக விளங்கும் பத்திரிக்கையை தென்தமிழகம் முழுவதும் பறைசாற்றும் ஒரே பத்திரிக்கை தினத்தந்தி. சமூக நோக்கிலும் இவரது பணிகள் முக்கியம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது முயற்சிகள் பெரும் பங்காற்றின.
தமிழர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டியது யாவை என ” தமிழ்ப்பேரரசு ” என்ற நூல் மூலம் குறிப்பிடுகிறார்.”நாம் தமிழர் ” தமிழ் இயக்கத்தை 1958 தொடங்கி செயல்படுத்தினார். தமிழர்களுக்கென்று தனிநாடு வேண்டும், தமிழர் இழந்த உரிமையை மீட்கவேண்டும் என தீராவேட்கை கொண்டார். சி.பா.ஆதித்தனார். இவரது அரசியல் பிரவேசங்கள் 1942 முதல் 1962 வரை அரசியலில் தனக்கென்ற தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
தமிழ் மீதும், தமிழர் மீதும் மிகுந்த மரியாதையுடன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால் அனைவரும் ” தமிழர் தந்தை ” என அன்போடு அழைக்கின்றனர். 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் தனது 76 வது வயதில் இறுதி மூச்சினை தான் தாய் தமிழ் மடியில் சாய்ந்து உயிர் நீத்தார்.
Web Title: C P adithanar article
Featured Image Credit: justdial/wikivividly