
இந்த கட்டுரையினை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், இது எழுதப்பட்டதிலிருந்து உங்களை வந்து அடைந்த வரை, நிச்சயம் ஏதோ ஓரிடத்தில் கூகுள் உதவியிருக்கும். நான் இக்கட்டுரையினை எழுத பயன்படுத்தியதும், கூகுளின் தயாரிப்பான டாக்ஸ் வலை மென்பொருள்தான்.
தகவல்
வரும் நூற்றாண்டுகளில் அசையும் அசையா சொத்துகள் பெரிதாக மதிக்கப்படுமா என்பது சந்தேகமே! யாரிடம் அதிக தகவல் உள்ளதோ, அவரே செல்வந்தராக மதிக்கப்படும் நிலைக்கு ஒரு சரியான உதாரணம், சிலிகான் வேலியில் இயங்கிவரும் உலகின் தகவல் களஞ்சியமான கூகுளின் இணை-நிறுவனர், லேர்ரி பேஜ்.
ஒவ்வொரு பரிணாமத்திலும் தகவலானது, வரலாற்று பதிவுகள் மூலம் அடுத்த தலைமுறைக்கு முறையாக எடுத்துச்செல்லப்பட்டால், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும், ஒரே மாதிரியான பொருள் மீது, ஒரே மாதிரியான கற்றலையும், ஆய்வையும் அது சார்ந்த புரிதல்களையும், நிகழ்த்திப்பார்த்து கொண்டிருக்க தேவையில்லை.
சரியான நேரத்தில், முறையான தகவல், பொதுவாக அனைவருக்கும் சேர்ந்தால், அதன் மதிப்பும், பயனும் ஏனைய அனைத்தையும் விட அதிகம். இந்த சிந்தனையை முன்னிறுத்தியே, லாரி பேஜ் அவரது நண்பரான செர்கி பெரினுடன் இணைந்து 1998-ல் ‘கூகுள்’ நிறுவனத்தை துவங்கினார்.
கடந்த ஜூன் 2018 தகவல்படி, லேர்ரி உலகப்பணக்காரர்கள் வரிசையில் ஒன்பதாம் இடத்தினைக் கொண்டுள்ளார். அதே கால மதிப்பீட்டின்படி, 53.6 பில்லியன் டாலர் அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பாகும்.

லேர்ரி பேஜ்
இயற்பெயர் – லாரன்ஸ் எட்வர்ட் பேஜ்
பிறப்பு – 26 மார்ச் 1973
ஈஸ்ட் லான்சிங், மிச்சிகனில், க்ளோரியா மற்றும் கார்ல் விக்டர் பேஜ் இருவருக்கும் மகனாகப்பிறந்தார். அவரது தாய் க்ளோரியா பேஜ், யூத இனத்தை சேர்ந்தவர். லேர்ரி, குறிப்பிடும்படியான எந்தவித மதத்தையும் பின்பற்றுவதாக தெரியவில்லை. தந்தை கார்ல், மிச்சிகன் ஸ்டேட் யூனிவெர்சிட்டியில், கணினி அறிவியல் பேராசிரியராக இருந்தார். க்ளோரியா பேஜ், லெய்மன் பிரிக்ஸ் காலேஜ் மற்றும் மிச்சிகன் ஸ்டேட் யூனிவெர்சிட்டியில் கணினி நிரலாக்க மொழி, பயிற்றுநராக இருந்தவர்.
லேர்ரி, தனது ஆறாம் வயதிலேயே கணினி மீதான ஆர்வம் கொண்டிருந்தார். அவரது ஆரம்பப்பள்ளியில் முதன் முதலாக சொல் செயலி(Word Processor) மூலம் தயார்செய்யப்பட்ட வீட்டுப்பாடத்தினை சமர்ப்பித்து அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கினார். அவர் கணினி மட்டுமல்லாது, புல்லாங்குழல் வாசிக்கவும், இசை அமைக்கவும் கூட கற்றிருந்தார்.
மிச்சிகன் யூனிவெர்சிடிக்கு பிறகு, லேர்ரி “ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்” தனது கணினி அறிவியல், பி.எச்.டி பயின்றார். அங்குதான் அவருக்கு செர்கி பிரின் நட்பு கிடைத்தது. ஸ்டான்போர்ட், அமெரிக்காவின் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாகும். உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் இருக்கும் பல்கலைக்கழகம். டைகர் வூட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஜான் எஃப் கென்னடி போன்றோர் பயின்ற இடம்.

கூகுள்
கூகுள் ஒரு திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அதன் அடுத்த படி மூலதனத்திற்காக, தற்போது அமேசான் நிறுவனத்தலைவர் மற்றும் உரிமையாளர், ஜெஃப் பிஜோஸ்-யிடம் நிதி கேட்கப்பட்டது. அப்போதைய நிலையில் புதிய நிறுவனங்கள் மீதான முதலீட்டினை அவர் விரும்பவில்லை. ஆனாலும், தற்போது கூகுள் நிறுவன பங்குகளை, அவர் வைத்திருக்கவே வாய்ப்பில்லை எனவும் கூற இயலாது.
லேர்ரியும் செர்கியும், ஆரம்பத்தில் அவர்களது பெற்றோர் மற்றும் சில பேராசிரியர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு ஆளாகினர். தோற்றுவிடும் அபாயத்திலும், இருவரும் ஒருபோதும் திட்டத்தினை கைவிடும் எண்ணத்தில் இல்லை. இருவரும் ஆய்வுப்படிப்பை அப்படியே நிறுத்தினர்.
சிற்சில நாட்களில் இலட்சக்கணக்கானோர், யாஹூ-விற்கு மாற்றாக கூகுளை பயன்படுத்த தொடங்கியிருந்த வேளையில், கூகுள், ஒட்டுமொத்தமாக 3 வேலையாட்களுடன், தரவு சேமிப்பக கருவியான வன்தட்டுகளின் பெரிய சேமிப்பகங்களை, வாங்கும் அளவிற்கு கூட செலவு செய்திட முடியாமல், குழந்தைகள் விளையாடும் லீகோ பிரிக்ஸ் பொம்மைகளை வைத்து, வன்தட்டு சேமிப்பக தாங்கிகளை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.
செயற்கை நுண்ணறிவின் முதல் கட்டமாக, கூகுள் ஒரு முழுமையான சொல் பிழை திருத்தியினை கண்டுபிடிக்க, கூகுளின் வளர்ச்சி இன்னும் பல மடங்காக ஆரம்பித்தது. இன்று வரையில், நாம் தேடும் வார்த்தையில் தவறு ஏதேனும் இருப்பின், அந்த சொல் பிழை திருத்திதான், நமக்கு சரியான வார்த்தையை காண்பித்து கொடுக்கின்றது. தரமான மற்றும் வேகமான தேடல் முடிவுகளை கொடுக்க, சொல் பிழை திருத்தியின் உதவி அளப்பரியது என்பது லேர்ரியின் கருத்து.
கூகுளை விற்றுவிடலாமா? என்ற சிந்தனையில் அப்போது முன்னிலை வகித்த பல நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் யாஹூ நிறுவனமும் ஒன்று. அனைவரும் நிராகரிக்க, அப்போது 4 நபர்களை மட்டுமே கொண்டு, மறுபடியும் கூகுள் போராடத்துவங்கியது. சில காலங்கள் கழித்து, ‘எக்ஸைட்’ (இன்னும் கூட இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தேடுபொறிதான்) எனும் ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து, திணறிக்கொண்டிருந்த கூகுளுக்கு ஓர் நற்செய்தி மின்னஞ்சல் மூலம் வந்தது. 1.6 மில்லியன் டாலருக்கு கூகுள், அதன் நிறுவனர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக விலை பேசப்பட்டது. லேர்ரியும் செர்கியும் நிலைமையை ஆழ கவனித்தனர் போலும். விலை பேசப்பட்டது, உண்மையில் அந்த நால்வருக்கு என்பது புரியவர, கூகுளை தடுமாறியேனும் தாங்களே நடத்துவது என்று முடிவு செய்தனர். உண்மையில், கூகுளின் இன்றைய மதிப்பு(2018) டிரில்லியன் டாலர் எனக்கூறினாலும், வியப்படைவதற்கில்லை.

திருமணம் மற்றும் சொந்தவாழ்க்கை
2006-ல் லேர்ரியும், லூசிண்டா சவுத்ஒர்த்-ம் சந்தித்ததும், முதல் டேட்டிங். பின்பு ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து, கரீபிய தீவுகளில் ஒன்றான நெக்கர் தீவில்(Necker Island, VG1150, British Virgin Islands) இருவரின் திருமணம், 600 விருந்தினர்கள் கலந்துகொள்ள, வெகு கோலாகலமாக நடைபெற்றது. கலந்துகொண்டவர்களில், ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை நிறுவனமான, விர்ஜின் குழும(Virgin Group) நிறுவனர், ரிச்சர்ட் பிரான்சனும், ஒருவர்.
லேர்ரி, அவரது அந்தரங்க வாழ்க்கை குறித்து மிக்க கவனம் கொண்டவர். அவர் சார்ந்த எந்த எதிர்மறை கருத்துக்களையும் அவர் நினைத்தால் இணையத்திலிருந்து உடனே நீக்கமுடியும், இல்லையா? இருப்பினும், இது வெறும் கருத்துதான். லேர்ரி-க்கு உண்மையில் விளம்பரங்கள் என்றாலே அலர்ஜி. எனினும், அவர் நிக்கோலா டெஸ்லா-வின் வாழ்க்கை புத்தகத்தினை சிறுவயதிலேயே படித்திருந்தமையால், கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களிடமும் கொண்டுசெல்லப்பட, பணம் ஒரு முக்கிய கருவி என்பதை உணர்ந்து, கூகுளில் முதலில் வெறும் வார்த்தை விளம்பரங்களை அனுமதித்தார். பின்னாளில், அது மேம்படுத்தப்பட, அந்த விளம்பரங்களை வெவ்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் வெவ்வேறு நாடுகளிலிருந்து கொடுக்க, அவர் எதிர்பார்க்காத ஒரு சிக்கலை சந்தித்தார். 2017-ல் யூட்யூப் தளத்தில் வந்துகொண்டிருந்த பல விளம்பரங்கள், தீவிரவாத மற்றும் வன்மையை தூண்டும் விதமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து பதிவிடப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் காரணமாக, சட்ட ரீதியான மற்றும் ஊடக இடர்களுக்கு ஆளாகி, பல மில்லியன் டாலர்களை இழந்தார். லேர்ரிக்கு வோகல் கோர்ட் பராலிஸிஸ்(குரல் தசை வாதம்) பிரச்சனை, அவரது சிறுவயதில் வந்த காய்ச்சலால் ஏற்பட்டிருக்கிறது. அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டும் உள்ளது, வருந்தத்தக்கதாகும். அவர் மிக சிரமப்பட்டு பேசுவதை, அவரது வெகுசில பேட்டிகளிலேயே காண முடியும்.
லேர்ரி தனது பொறுப்புகளையெல்லாம், சுந்தர் பிச்சை மற்றும் சில சரியான நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, 2015-லிருந்து வெளியுலக பார்வையிலிருந்து விலகிக்கொண்டார். அவரது பெரும்பாலான நேரங்களை, அந்தரங்கமாக கரீபிய தீவு ஒன்றில் கழித்துவருகிறார். கூகுளின் தாய் நிறுவனம் என்று சொல்லக்கூடிய “ஆல்பாபெட்” நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக தன்னை முன்னிலைப்படுத்தி, ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களிலும் தங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும் என்று விரும்பினார். தற்போது, ஆண்ட்ராய்டு(A-Android) இயங்குதளம் முதல் ஜெகாட்(Z-Zagat) வரை. வேடிக்கை என்னவென்றால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் அதே போல், A முதல் Z வரை 26 பதிப்புகளை முன்னிறுத்தியே வெளியாகிக்கொண்டிருப்பது. கடைசியாக வெளிவந்த ஓரியோ பதிப்பிற்கடுத்து “P” எழுத்தில் அடுத்த பதிப்பு வெளிவரும்.
லேர்ரி-க்கு ஒரு அடைமொழி சூட்டச்சொல்லி எனைக்கேட்டால், “ஒரு சகாப்தத்தின் மனிதன்”(The Man of an Era) என்பது பொருத்தமாயிருக்கும்.

தற்சமயம், கூகுள் கிட்டத்தட்ட 100 மொழிகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. ஏறத்தாழ, 150 தயாரிப்புகளுடன், நம் அன்றாட வாழ்வை எளிமைப்படுத்துவதில், ஆரம்பித்து, தற்சமயம் நம் வாழ்வோடு ஒன்றிப்போன கூகுளை ஒருநாளேனும் பிரிய முடியாது. அதற்கு வித்திட்ட, லேர்ரி நிச்சயம் இதனை ஓரிரண்டு நாட்களில் செய்து முடித்திடவில்லை. உடல் ரீதியான, மன ரீதியான அனைத்து இன்னல்களையும், பல போராட்டங்களை கடந்து கடின உழைப்பினாலும், கட்டுக்கோப்பான தனித்துவம் வாய்ந்த சிந்தனை மற்றும் மேலாண்மையாலும், இந்த நூற்றாண்டில், உலகின் போக்கையே மாற்றும் சக்திகொண்ட “லேர்ரி பேஜ்” நிச்சயம், ‘ஒரு சகாப்தத்தின் மனிதன்’ தான்.
Web Title: Larry Page The Man of an Era Biography, Tamil Article
Featured Image: araucaria-de-chile2/needinfotech/toptrending