Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி

மயிலும்,  அன்னமும்,  காக்கையும்,  குருவியும், குயிலும், புறாவும், கிளியும், கீச்சான் குருவியும் எல்லாம் நம் அன்றாட வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தே நாம் வாழ்ந்து வளர்ந்து வந்திருக்கிறோம். மகாகவி பாரதியாரும்  ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்.. அந்தச் சிடுக்குருவியைப்போல்‘  என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’.. ‘நீர் கடலும்,மலையும் எங்கள் கூட்டம்‘  என்று பாடியுள்ளார். இப்படி நம் தினசரி வாழ்க்கையுடன் நெருங்கிய பறவைகள் எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்கமாட்டீர்கள். ரைட் சகோதரர்களுக்கு விமானம் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக அமைந்தது பறவைகள்தான். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்கூட அவருடைய கல்வி நாட்களில் அவருடைய ஆசிரியர் கரும்பலகையில் வரைந்து காட்டிய ஒரு பறவையின் படம்தான் அவரை பிற்காலத்தில்         ‘இந்தியாவின் ஏவுகணைத் துறையின் தந்தை’ என்று உலகமே கண்டு வியக்கும் உயர்ந்த இடத்துக்கு இட்டுச் சென்றது. சிபி மன்னன் ஒரு பறவைக்காக தன் உடலின் சதையை அறுத்துத் தந்தான் என்ற இலக்கிய செய்தியைப்போல் பறவைகள் இவர்களுடைய வாழ்க்கையையே திசை திருப்பியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி  பற்றிய சொல்வண்ணமே இந்த கட்டுரை பதிப்பு.

(படம்: e-pao.net)

மும்பையில் நவம்பர்  12, 1896 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதில் பெற்றோரை இழந்தவர்  மாமாவிடம் தான் வளர்ந்தார். இளம் வயதில் விளையாட்டுத் துப்பாக்கியால் ஒரு சிட்டுக் குருவியை சுட்டுவிட்டார். இறந்து விழுந்த குருவியை அவரால் மறக்கவே முடிய வில்லை. பிறகு இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சித்தப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை.கல்லூரியில் படிக்கும்போது, தொழிலில் அண்ணனுக்கு உதவ பர்மா சென்றவரின் மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்துக் கொண்டிருந்தது.

சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்;புதுப்புது பறவை மாதிரிகள்,  இறகுகளை சேகரித்தார். மீண்டும் மும்பை திரும்பி விலங்கியல் படித்தார். பின்னர், தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் ‘கைடு’ (வழிகாட்டி) வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.

(படம்:artstation)

தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். 1932-ல் ‘கேரளப் பறவைகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றை நடத்தினார். வெளிநாட்டுப் பறவைகள் குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டாத அவர் நம் நாட்டு பறவைகள் குறித்து அறிந்துக் கொள்ளவே நிறைய இருக்கிறது என்று கருதினார். நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார்.

1942 – ஆம் ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் பண்டித ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்புறவின் தொடர்ச்சியாக தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைக்க இவர் ஆற்றியத் தொண்டு மகத்தானது. “கண்டுப்பிடிப்பு என்பது வெறும் புதுமைகள் நிகழ்த்துவதில் இல்லை. அந்தத் துறை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முனையும் எத்தனிப்பே, முக்கியமானது” என்பது கண்டுப்பிடிப்பைக் குறித்து இவர் கொண்டிருந்த கொள்கை ஆகும். 1948 – ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். தில்லான் ரிப்லீயுடன் இணைந்து சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார். 1955 – ஆம் ஆண்டு இவரது சிங்கப்பூர் நண்பர் லோக் தாவோவின் பொருள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் பயனாக “சிக்கிம் பறவைகள்” (Birds of Sikim)  என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1974 – ஆம் ஆண்டு “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக வெளிவந்தது.

சலீம் அலி உலகின் மிகச் சிறந்த பறவையியலாளர்களுள் ஒருவர். அவரின் வாழ்நாள் முழுவதும் இயற்கையியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார்.மேலும் அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், செல்லமாகவும் கூட “இந்தியாவின் பறவை மனிதர்” என்றும் அழைத்தனர். உலகிலேயும் சரி, இந்தியாவிலும் சரி, பறவைகளைப் பற்றி முறையாக அறிந்து அவற்றை கணக்கெடுப்பு செய்தவர்களில் சலீம் அலியும் ஒருவர். அவரின் ஆராய்ச்சி முக்கியமாக பறவைகளின் கருவியல் தொடர்பாகவே இருந்தது. சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

 

(படம்: indiatoday)

இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். தன்னார்வத்தினால் அரிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய இவருக்கு மேற்கூறிய விருதுகளும், ஜே.பால் கெயிட்டி வனவிலங்கு பாதுகாப்பு விருதும், தேசிய பறவை பேராசிரியர் விருது எனப் பாராட்டுகள் தேடி வந்தன. மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே. மேலும் இவர் பத்ம பூஷண் (1958), பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது (1967), ஜோன் சி. பிலிப்ஸ் விருது (World Conservation Union – 1969), பத்ம விபூஷண் (1976), J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund (1976)

Commander of the Netherlands (Order of the Golden Ark) (1986) போன்ற பல விருதுகளையும் வாங்கி சாதனை படைத்துள்ளார். 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இந்திய மாமேதை இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஆனால் “ஒரு குருவியின் வீழ்வு” (The fall of a sparrow) என்ற அவரின் சுயசரிதை மூலம் இந்திய இளைஞர்களுக்கு பல கிடைக்கப்பெறாத உண்மைகளைக் கூறியிருக்கிறார்.

Web Title: The bird man of India

Featured Image Credit: tourmyindia,  mouthshut,  iseeindia

Related Articles