குங்ஃபூ கலையின் அகில உலக நாயகன் புரூஸ் லீ

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்த விருப்ப நாயகன்தான் புரூஸ் லீ. இன்று தற்காப்புக்  கலை இந்த அளவு பிரபலம் ஆனதற்கு ஒரே முக்கிய காரணம் புரூஸ் லீயாகத்தான் இருக்க முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு உண்மையே. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும், கால்களும் எதிரியைத்  தாக்கும் வேகத்திற்கு அன்றைய திரையுலக தொழில்நுட்பத்தால் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதற்கு ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.

குங்க்பூ கலையின் கனவு நாயகனாக (படம்: denofgeek)

புரூஸ்லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந்தேதி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணம் சைனா நகரப்  பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் லீ ஹோய்-சுவென் மற்றும் கிரேஸ் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒரு நடிகர். புரூஸ்லீக்கு அவரது பெற்றோர்கள் லீ ஜூன்பேன் என பெயர் வைத்தனர். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதங்கள் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பின்னர் புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். 1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்கஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்தார். சீன வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெற சீனாவிற்கு அனுப்பப்பட்டார். தற்காப்புக்  கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ,  சீனத்  தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே,  ஜுடோ, குத்துச்சண்டை போன்ற அனைத்து வடிவங்களும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார். கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களைச்  சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே ‘புரூஸ்லீ குங்பூ’ என அழைக்கப்பட்டது. இதனைத்  தத்தவப் பாடத்துடன் சேர்த்து ‘ஜே கேடி’ எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். தற்காப்பு கலையின் உச்சத்தைத்  தொட்ட புரூஸ்லீ தத்துவம் முதுகலை படித்தவர். மேலும் இவர் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு நிகழ்வே. தற்காப்புக்  கலையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டு சென்ற இவர் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ அளித்த விளக்கம் ஒன்று. களத்தில் எதிரி இருக்கக்கூடாது. ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு விறுவிறுப்பான நாடகம் போல சண்டை அமைய வேண்டும். போட்டிக் களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்து எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத்  தயாராக இருக்க வேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ.

எந்த அச்சமும், பதட்டமும் இல்லாமல் சண்டைக்குத்  தயாராக இருக்க வேண்டும். (படம்: rootsoffight)

புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது  18 வயதிற்குள் 20 படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது பேட்மேன் பட தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் இவர் பட்டது இவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புரூஸ்லீ அமெரிக்காவில் இருந்தபோது ‘தி கிரீன் ஹார்னட்’, ‘அயர்ன் சைடு’, ‘ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவருக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் சௌ ஒரு படத்தில் நடிக்குமாறு ஒப்பந்தம் செய்துக்கொண்டார். ரேமண்ட் தயாரிப்பில் இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு  பிக்பாஸ் என்ற பெயரில்  வெளிவந்தது. வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும், ’Crawn Colony Cha Cha’ சாம்பியனாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர்காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் பெற்றது.

 

என்டர் தி டிராகன் படத்தில் (படம்: asianmoviepulse.com)

அதனைத் தொடர்ந்து கடந்த 1972ல் வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் பியூரி‘ திரைப்படம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று தந்தது. அதே ஆண்டில் புரூஸ்லி கதை எழுதி இயக்கிய ‘வே ஆப் தி  டிராகன்‘ திரைப்படம் புரூஸ்லீயின் புகழ் உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்பு கலையையும் பிரபலமடைய வைத்தது. வே டூ த டிராகன் படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

(படம்: wallup.net)

தன்  இளம்வயதிலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தைத்  தழுவிய அவரால் சில படங்கள் மட்டுமே நடிக்க முடித்தது என்றாலும், அவரது மிகப்பெரிய வெற்றிப்படம் உலகோர் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படம் ‘என்டர் தி  டிராகன்‘. இந்த படத்திற்கு ஏராளமான சிறப்புகளும் உண்டு. ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு, செவியைக்  குளிர வைக்கும் இசை எதுவுமே இல்லையென்றாலும், நரம்புகள் முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனைக்  கட்டிப்போடச்  செய்தது  ‘என்டர் த டிராகன்’. இந்தப்  படம் உலகெங்கும் உள்ள ஆக்சன்  ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்று பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. இதனால் உலகைக்  குலுக்கிய படங்களின் பட்டியலை சேர்ந்தது  ‘என்டர்  த டிராகன்’. இதன் வசூல் சாதனை அமெரிக்காவில் மட்டும் 850,000 டாலர்கள். ஆனால் அந்த வெற்றியை அவரால் பார்க்க முடியாமல் போனது.

தலை வலி என்று படுக்கச்  சென்றவருக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழுந்திரிக்கவில்லை. பிறகு ஹாங்காங் குயீன் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமல் மரணத்தைத்  தழுவினார். இன்றளவும் அவர் மரணம் ஒரு புரியாத மர்மமாகவே உள்ளது.

(படம்: brucelee)

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர், முன் கோபத்துடன் நடந்து கொண்டது, ஏராளமான எதிரிகளை அவருக்குச்  சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்கள் பறி கொடுப்பதும் சாதாரணம். திரையில் இவ்வளவு ஆக்ரோசமாக இவ்வளவு உண்மையாக நிகழ்த்திக்  காட்டியவர் புரூஸ்லீக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என உறுதியாகக் கூறலாம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கலச்  சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை கடந்த நூற்றாண்டின் சமூகத்தைப் பாதித்த சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் புரூஸ்லீயையும் சேர்த்துள்ளது. ஒரு கலையை எப்படி நேசிப்பது, அது எங்கனம்  உச்சத்துக்குக்  கொண்டு செல்வது என்பதைக்  கற்றுக் கொள்ளும் வண்ணம் அனைவருக்கும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார்.

Web Title: Martial arts expert Brucelee

Featured Image Credit: succeedfeed

 

Related Articles

Exit mobile version