“ஞான நல்லறம்வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்”.
என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப இன்று தமிழ் பெண்கள் அனைத்து துறையிலும் தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பதை எண்ணினால் இதுதான் பாரதி கண்ட புதுமை பெண்களா என்ற மகிழ்ச்சியும் வியப்பும் ஆட்கொள்கிறது அடிமனதில். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. ஆனால் இன்றையக்காலத்தில் அந்த எண்ணம் மாறி விண்வெளி துறையில் கால் பதிக்கும் அளவு பெண்கள் வளர்ந்துள்ளனர் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணம்.
ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ. இந்திரா நூயி:
‘இந்திரா நூயி‘…உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்’ நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது என்று தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார்.
பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், ‘தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்’ என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.
சாந்தி துரைசாமி:
சக்தி மசாலாவின் நிர்வாகி. இவரின் அயராத உழைப்பும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் தந்த கருணை மிகு பெண்மணி. சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர் தன் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தன் படிப்பை ஆறாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டு தன் தம்பி படிப்பிற்காகவும் தன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தன்னால் இயன்ற அளவிற்கு குடும்பத்திற்கு உதவி புரிந்துள்ளார். தன்னால் முயன்ற அளவு சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்தும் வீட்டிற்கு வருவாய் ஈட்டியுள்ளார். இவரது உதவும் மனப்பான்மை இன்று பல ஊனமுற்றவர்களுக்கும் தன்னாலும் உழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர் உற்சாகத்தையும், இன்முகத்தையும் ஒருங்கே பெற்ற பண்பாளர், கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை தன் வசப்படுத்தி வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்படுபவர் என்ற பாராட்டுக்குரியவர். இவரது சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டில் உள்ள மாமாரத்துபாளையம் என்ற இடத்திலுள்ளது. இவர் பல விருதுகளையும் பெற்ற போற்றத்தக்க ஒரு பெண்மணியே.
40 ஆண்டு களுக்கு முன்பு சிறு முதலீட்டில் வணிகத்தை தொடங்கிய அவர், தனது கணவர் துரைசாமியின் பங்களிப்புடன் ‘சக்தி மசாலா’ நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார். நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த எட்டு ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகள் வரை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர் கேட்கின்ற போதெல்லாம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கு மேல் வழங்கியுள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, வேலியிட்டு நீர்பாய்ச்சி பராமரித்தும் வருகிறார்கள்.
மல்லிகா ஸ்ரீனிவாசன்:
மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபராவார். தொழில் நுட்ப அறிஞருக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஆவார். இந்திய விவசாயத்துறை வணிகத்திற்கும் கல்வித்துறைக்கும் சிறந்த பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். தற்போது இவர் 1960 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட TAFE – டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பாளரும், இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமான TAFE 150,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வருடாந்திர விற்பனையாக இந்தியா உட்பட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற 82 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
25 வருட இடைவெளியில், டிராக்டர் வணிகத்தின் சுழற்சியின் திறனைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய டிராக்டர்களின் தரம் வாய்ந்த தயாரிப்பாளராக TAFE ஐ, ஒரு வலுவான மற்றும் தரமான அமைப்பாக நிறுவியுள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், இந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து உறுதிசெய்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களில் ஒருவராகவும் அறியப்பட்ட மல்லிகா ஸ்ரீனிவாசன் “டிராக்டர் ராணி” என்று அழைக்கப்படுகிறார்.
“ஒரு வியாபாரத்தை நடத்த நீங்கள் பணத்தை நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு நிறுவனத்தை உருவாக்க, ஒரு சிறந்த குழுவை உருவாக்க நீங்கள் ஒரு கனவைக் கொண்டிருக்க வேண்டும். அந்த கனவு கல்வி மற்றும் ஆரோக்கியமான சமூக சூழலை உடையதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தனது நிறுவனத்தில் கூட பெண் தொழிலாளர்களை அதிகம் ஊக்குவிக்கிறார். தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
Web Title: most successful tamil women entrepreneurs
Featured Image Credit: Sakthi Masala, ViralIndian Diary, TWMagazine