இந்தியாவில் முதன்மை பள்ளிக்கல்வி சேர்க்கை அதிகரித்து கொண்டிருக்க, மறுபுறம் மாணவர்கள் முதன்மை பள்ளிக்கல்வியை இடையிலேயே கைவிட்டு விடுகிறார்கள். 2014 -2015 ஆண்டிற்கான அரசு ஆய்வறிக்கையின் படி முதன்மை பள்ளிப் படிப்பை இடையிலேயே கைவிட்ட குழந்தைகளின் முன்னணி மாநிலங்களின் சதவிகிதம்
விழுக்காடு பட்டியல்
ஆண் குழந்தைகள்
அசாம்யில் (16.07) ,
அருணாசலப் பிரதேசம் (15.51),
மேகாலயா (10.35)
மிசோரம் (10.17)
மணிப்பூர் (9.50)
பெண் குழந்தைகள்
அசாம்யில் (14.65)) ,
அருணாசலப் பிரதேசம் (10.09),
மேகாலயா (10.03)
மிசோரம் (9.83)
மணிப்பூர் (8.56)
மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சதவிகிதம் ஏறத்தாழ இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
குழந்தை தொழிலாளர்களாகும் மாணவர்கள்
நாம் தினந்தோறும் வீதியில் அல்லது நகரங்களை சுற்றி பார்க்கும் போது சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களை பார்க்க முடியும். குறிப்பாக மாநகரங்களில் இருக்கும் உணவு கடைகளில், துணிக்கடைகளில், விடுதிகளில், டீக்கடை என பரவலாக பல இடங்களில் பார்க்க முடியும். அவர்களிடம் எதற்காக இந்த இடத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்று கேட்டால், கூறுப்படும் சில பதில்கள், குடும்பச்சூழ்நிலை, வறுமை, பெற்றோரின் கவனக் குறைவு என இன்னும் பல காரணங்கள். இருப்பினும் அதில் நாம் சற்று கவனமாக கருத்தில் கொள்ள வேண்டியது, சில குழந்தைகள் தங்கள் முதன்மை பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை தொழிலாளியாக மாறி இருப்பார்கள். சிலர் பள்ளிக்குச் சென்று படிக்க பிடிக்காமல் கல்வியிலிருந்து விலகி இருக்க, பள்ளிக்கு சென்று கல்வி பயில முடியவில்லை என்று ஏக்கங்களை மனதில் சுமந்துக் கொண்டு பணியாற்றி வரும் குழந்தைகளிடம் சென்று கேட்டால் நாம் இந்த உண்மையை அறிய முடியும்.
இதனை போன்ற முக்கிய விடயங்களை அரசாங்கம் தேசிய குழந்தைத் தொழில் ஒழிப்புத் திட்டம் மூலம், சிறப்பு பள்ளிகள் அமைத்து பல குழந்தைகளை படிக்க வைத்து வந்தாலும், அவர்களால் எல்லா இண்டு இடுக்கினுள் உள்ள இடங்களிலும் இருக்கும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை கண்டு, படிக்க வைக்க முடியவில்லை. ஆதலால் சமூக அக்கறைக் கொண்டு சிலர் குழந்தைகளின் கல்விக்கென்று முன் வந்து உதவும் குணம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
பாராலி கிராமத்து அரசுப்பள்ளி
உடுப்பி மாவட்டத்தின் பிரம்மவர் தாலுக்கில் உள்ள பாராலி கிராமத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களாக மட்டுமல்லாமல், மாணவர்கள் பள்ளியை விட்டு நின்றுவிடக்கூடாது என்று உறுதிபடுத்திய ராஜாராமைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். பாராலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்கள் பாராலி அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் இருந்து, ஒரு வருடமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை படி படியாக குறைந்துக் கொண்டே வந்துள்ளது. ஏனென்றால் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழி, 3 கி.மீ.க்கு வனப்பகுதி வழியாக மலையேற்றத்தை கொண்டிருந்தது.
பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான விஜய் ஹெக்டே ராஜாராம் இதனை கண்டு ஒரு முடிவு எடுத்தார். பெங்களூரில் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வந்தவர் இவர்.
பள்ளிக்கு பேருந்து
உண்மையில் இந்த குறிப்பிட்ட பள்ளியிலும், தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. பள்ளி மூடப்படும் அச்சுறுத்தல் இருந்தது. ஒரு மாலை, எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கைவிட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி முடித்த ராஜாராம், அந்த எண்ணிக்கையை கண்டு வருத்தப்பட்டார். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு மாணவர்கள் வரை பள்ளியை விட்டு நின்றுக்கொண்டிருந்தார்கள். இதனால் முன்னாள் மாணவர்களில் ஒருவரான விஜய் ஹெக்டேவை அழைத்து உதவி கேட்டார், அந்த முயற்சி வெற்றி அடைந்ததால், பள்ளிக்கு வராத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல போக்குவரத்துக்கு வசதி செய்து தர ஒரு பேருந்தை வாங்குவதற்கான யோசனையை செயல்படுத்த தொடங்கினார் ராஜாராம்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் விஜய் ஹெக்டே, பள்ளியின் மற்றொரு முன்னாள் மாணவர்களில் ஒருவரான கணேஷ் ஷெட்டியுடன் இணைந்து நிதியை பங்கிட்டு பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கினர். அந்த பேருந்துக்கு ஓட்டுனர் நியமித்தால், ஓட்டுநரின் ஊதியம் என்று குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு செலவழிக்க வேண்டும். அதற்கு நிதி திரட்டுவது கடினம் என்பதால் ராஜாராம் அவர்களே பேருந்து ஓட்டுனராக இயங்க முடிவு செய்தார்.
“ராஜாராம், ஒரு அரசாங்க பள்ளி ஆசிரியர், நடுநிலை சம்பளத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இவரால் ஒரு பேருந்து ஓட்டுனருக்கு மாதம் தவறாமல் ஊதியம் கொடுக்க முடியாது. எனவே, பேருந்து ஓட்டிக்கொண்டே, மற்ற பணி செய்வது என்று முடிவு செய்து, பேருந்து இயக்கக் கற்றுக் கொள்ள முற்பட்டார்.
பின் கனரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றார் ராஜாராம். மாணவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து பின், பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து செல்லும் பணியை தொடங்கினார். இந்த சேவை தொடங்கப்பட்ட சிறிது காலத்தில் பள்ளியில், மாண்வர்களின் வருகை 50 முதல் 90 ஆக அதிகரித்தது.
அட்டவணை
தினமும் காலை 8.20 மணியளவில் ராஜாராம் வீட்டிலிருந்து இப்பணியை தொடங்குகிறார்.
பள்ளி 9.30 மணியளவில் தொடங்குகிறது. மேலும் அனைத்து மாணவர்களும் சரியான நேரத்தில் அழைத்து வருவதில் உறுதியாக செயல்படுகிறார். பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமை ஆசிரியரும் உள்ளார். அதில் ஒரு ஆசிரியர் பேருந்தின், முதல் பயணத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்துவிடுகிறார். அனைத்து மாணவர்களும் பள்ளியை அடைந்தவுடன் தான் பணிக்கு திரும்புகிறார். பின் ராஜாராம் பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்திவிட்டு தன் ஆசிரியர் பணிக்கு செல்கிறார்.
வாகனக் காப்பீடு மற்றும் டீசல் செலவை தனது சொந்த
சட்டைபையில் இருக்கும் பணத்தை ராஜாராம் செலவிடுகிறார். தற்போது அவர் பள்ளியில் ஓடு தளம் பாதை அமைக்க விரும்புகிறார், எனவே மாணவர்ளுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஸ்ப்ரிண்ட் ஓட்ட பந்தையத்தை நடத்த முடியும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு வருகிறார்.
ராஜாராம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர் மட்டுமல்லாமல், அவர் அப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியரும் கூட.
“பள்ளிக்கூடத்தைச் சுற்றி ஒரு வேலியை அமைத்து மாணவர்களுக்கான பயிற்சி அளிக்கக் கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதில் இருக்கும் சிக்கல், எனக்கு போதுமான பணம் இல்லை. பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் இதை பற்றி பேசி, அவர்களிடம் உதவி கேட்டிருக்கிறேன். இதுவரை, பணம் தான் எனக்கு சிக்கலாக உள்ளது, ஆனால் நான் இந்த தடையை தாண்ட முடியும் என்று நம்புகிறேன். விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகள் இருந்தால், வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்” என ராஜராம் கூறினார்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் மத்தியில், மாணவர்களின் ஏதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல் பட்டு வரும் ராஜாராம், இச் சமூகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். மேலும் கிராமங்களில் படித்து பெருநகரங்களில் வேலை செய்கின்ற பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரு கூட்டாக சேர்ந்து அவர்கள் கிராமத்தைச் சார்ந்த பள்ளிகளின் இதர வசதிகளுக்கும், கிராமத்து குழந்தைகளின் கல்வி சார்ந்து உதவும் நோக்கம் கொண்டும் செயல்படத் தொடங்கினால் எதிர்காலத்தில் நல்ல மாற்றங்கள் வரும். மாணவர்கள் வருகை குறைவாக உள்ளதால் பள்ளிகளை மூட முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு எங்கே? ராஜாராம் போன்ற ஆசிரியர்கள் எங்கே?
Web Title: The Teacher Rajaram From Udupi
Featured Image Credit: deccanherald