நம் தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் புராணமும், “பழம் நீயப்பா… ஞானப்பழம் நீயப்பா….” என்ற பாடலும் தான். ஔவையார் காலத்தில் அவரே இவ்வளவு ரம்மியமான குரலில் பாடினாரா என்பது நமக்குத் தெரியாது. மேலும் பக்தி இலக்கிய காலகட்டத்தின் சங்கப் புலவர் ஔவையாரின் முகம் இப்படித்தான் இருக்கும் என்ற அழியா பிம்பத்தை தமிழக மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைத்தவர். ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கே.பி.எஸ் பாடியவை மட்டும் 30. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி நடித்த முதல் நடிகை கே.பி. சுந்தராம்பாள்.
இன்றும் நம் காதுகளில் தேனாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த தெளிந்த நீரோடை போன்ற கணீர் கானக்குரலுக்குச் சொந்தக்காரர் கே.பி.சுந்தராம்பாள். நாடகக்கலைஞர், திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகை, ஆன்மீகவாதி, மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத்திறன் கொண்ட ஒரு ஆளுமை அவர் என்றால் அது மிகையாகாது. வறுமையின் கோரப்பிடியில் தன் வாழ்வைத் தொடங்கிப் பின்னாளில் ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் அன்றைய உச்ச நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிகம்.
கொடுமுடி பாலம்பாள் என்பவருக்கு மூத்த மகளாய் அக்டோபர் 10, 1908 ஆம் ஆண்டு பிறந்தார் சுந்தராம்பாள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் தங்கை. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் அவர் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிப் படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை. தன் தாய்மாமாவின் ஆதரவில் வளர்ந்தார். சிறு வயதிலேயே அலாதியான பாடும் திறன் பெற்றிருந்தார். எனவே அப்போதே அவரைக் கோயில் கூட்டங்களிலும், திருவிழாக்களிலும் பாட வைத்துப் பெரியோர்கள் கேட்டு மகிழ்வர். அப்போதே சிறுமியான சுந்தராம்பாளுக்கென்று ஒரு ரசிகர் வட்டமே இருந்தது.
அவரது குரலை பற்றி அறிந்த ஆண்டிப்பட்டி ஜமீன்தார் அவரை வரவழைத்துப் பாடச் சொல்லி அகமகிழ்ந்து தங்கச்சங்கிலியும், பட்டாடையுடன் பரிசுப்பொருள்களும் வழங்கி ஊக்குவித்தார். வாய்ப்புகள் எப்போதும் திறமைசாலிகளின் கதவைத் தேடி வந்து தட்டியே தீரும். அப்போதைய புகழ்பெற்ற வேலுநாயர் – ராஜாமணியம்மாள் நாடகக்குழு நல்லதங்காள் நாடகம் நடத்த கரூர் வந்திருந்தது. நன்றாகப் பாடும் திறமையுடைய சிறுமிகளை அவர்கள் தேடும் பொழுது சுந்தராம்பாளை பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்துக்கொண்டனர். தனது குரலில் பாடி நடித்து மக்களின் கரவொலியையும், பாராட்டுக்களையும் பெற்றார். நாடகம் முடிந்ததும் குழு அடுத்த இடத்திற்குச் சென்றது. நாட்கள் உருண்டோடின. கலை தாகமும் மீண்டும் மேடையேற வேண்டும் என்ற ஆவலும் சுந்தராம்பாளை வாட்டியது.
அப்போது மெட்ராஸ் பட்டினம் வந்தால் சந்திக்கும்படி நாடகக் குழுவின் ஆர்மோனிய கலைஞர் கோவிந்தராஜுலு நாயுடு தமக்களித்த முகவரி நினைவுக்கு வந்தது. அடுத்த நாளே மெட்ராஸ் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார். ஆம்! தன் தாயாரிடம் கூடத் தெரிவிக்காமல் கள்ள ரயில் ஏறினார் சுந்தராம்பாள். நாடகக் கலைஞராக மேடை ஏறினார். கோவிந்தராஜுலு நாயுடுவின் குழுவில் தொடங்கி, பின்னர் புதுச்சேரி தனுவம்மாள் குழு, கருப்பாயி அம்மாள் குழு என்று மாறி, மாறி தன்னுடைய திறமையை மெய்ப்பிக்க தொடங்கினார்.
‘நல்லதங்காள்’, ‘வள்ளி திருமணம்’, ‘பாமா விஜயம்’ என நாடகங்கள் அரங்கேறியது. அப்போது பேசும் சினிமா இல்லை. மக்களின் பொழுதுபோக்கு மேடை நாடகங்கள் மட்டுமே. நாடகங்களில் வசனத்தை விடப் பாட்டுகள் அதிகமாக இருந்ததால் இசைக் கலைஞர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் மேடையில் கே.பி. சுந்தராம்பாளின் பாட்டிற்கு மகுடிக்கு மயங்கும் பாம்பு போல ரசிகர்கள் மயங்கிக் கிடந்தனர். அவர் மேடையில் தோன்றிய உடனேயே இசை வெள்ளம் ரசிகர்களை ஆட்கொண்டு மூழ்கடிக்கும். ஒலிபெருக்கி வசதி இல்லாமல் நாடக அரங்கின் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் மனிதனும் ரசிக்கும்படி பாடலானார் சுந்தராம்பாள். நாடக இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் மெட்டமைக்கும் உச்சஸ்தாயி ராகங்களை அனாயாசமாக பாடி, நடித்து அசத்தினார்.
முழுக் கலைஞராக தமக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது பதினைந்து. “பாலபார்ட்” (குழந்தை நட்சத்திரம்) ஆக இருந்த அவர் விரைவில் “ஸ்திரீ பார்ட்” (கதாநாயகி வேடம்), “ராஜ பார்ட்” (ராஜா வேடம்) என்று வெவ்வேறு வேடங்களில் கண கச்சிதமாக நடித்தார். அவரது புகழ் திக்கெட்டும் பரவியது. தமிழகம் முழுவதும் கே.பி.சுந்தராம்பாள் நாடகம் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடக அரங்கில் இடம் கிடைக்காத ரசிகர்கள் வெளியில் நின்று அந்தக் குரலை கேட்டு மகிழ்ந்தனர்.
வருடம் 1926, சண்முகம் பிள்ளை என்ற நாடக ஏஜென்ட் மூலம் இலங்கை சென்ற அவர் எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் மேடையில் தோன்றினார். கே.பி.சுந்தராம்பாள் குரலுக்கு இணையான ஒரு குரல் கிடைக்காமல் தடுமாறிய நாடக அமைப்பாளர்களின் குறையை எஸ்.ஜி.கிட்டப்பாவின் குரல் தீர்த்தது. இருவருக்குமான உச்சஸ்தாயி குரல் ஒத்துப்போக ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆகச்சிறந்த ஜோடி இது என்று ரசிகர்கள் பேசிக்கொண்டனர். இலங்கை, பர்மா என்று பல இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் திரும்பி வந்ததும் தமிழகத்திலும் ஒன்றாக நடிக்கத் தொடங்கினர். இருவருக்குமான நட்பு அதிகரித்தது. அவர்களுடைய நட்பு காதலாகிப் பின் இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.
எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் காங்கிரஸ் மேடைகளில் பங்கேற்றார் கே.பி.சுந்தராம்பாள். அன்றைய காங்கிரஸ் மேடைகள் தொடங்கும் பொழுதும், முடியும் பொழுதும் அவர் பாட்டுடனே நடந்தது. கே.பி.சுந்தராம்பாள் நாடக நடிப்பு மட்டுமல்லாது, தனி நபர் இசையிலும் அதிகமான கவனம் செலுத்தினார். கிராமாபோன் இசைத் தட்டுகள் வெளியிடும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரின் பாடல்களை வெளியிட்டது.
வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்த அவர் வாழ்வில் பெரும் சோகம் நிகழ்ந்தது. திருமணமான ஆறே ஆண்டுகளில் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்தார். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மேடையிலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த நாளில் இருந்து சந்நியாச வாழ்வைத் தொடங்கினார் கே.பி.சுந்தராம்பாள். வெள்ளை, காவி உடைகளை உடுத்தத் துவங்கிய அவர் அன்றிலிருந்து எவருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என்றும் உறுதி கொண்டார். அவர் நடிப்பதை விட்டு விலகியே இருந்தார்.
அப்பொழுது வருடம் 1931. இந்தியாவில் பேசும் சினிமா உதயமானது. அனைவரும் தங்களுடைய நாடகங்களைத் திரைப்படங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்தனர். கிஷன் சந்த தாஸ் என்பவர் நந்தனார் நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன் வந்தார். கே.பி.சுந்தராம்பாளை மீண்டும் நடிக்க வைக்க காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியின் உதவியை நாடினார். அவரின் சொல்லை மறுக்க முடியாத கே.பி.சுந்தராம்பாள் மிகப்பெரிய சம்பளம் கேட்டால் இதிலிருந்து விடுபட்டு விடலாம் என்று ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் நடித்துக் கொடுக்கிறேன் என்றாராம். அன்றைய நிலையில் ஒரு லட்சம் என்பது இன்றைய கோடிக்குச் சமம். சற்றும் தாமதிக்காமல் தருவதாக ஒப்புக்கொண்டார் தயாரிப்பாளர். ஒரு பெண், பக்தனாக ஆண் வேடமிட்டு நடிப்பதைப் பற்றி சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாகி சக்கை போடு போட்டது. மாபெரும் வெற்றி.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ‘மணிமேகலை’, ‘ஔவையார்’, ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’ என்று அனைத்தும் காலத்தால் அழியாத அவர் பெயர் சொல்லும் காதாபாத்திரங்கள். மீண்டும் புகழின் உச்சிக்குச் சென்றார் கே.பி.சுந்தராம்பாள். எவருடனும் ஜோடி சேராமல், ஆண் வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும், பக்திக் கதைகளிலும் நடித்து இறுதி வரை அந்தக் கொள்கையை கடைப்பிடித்தார். வருடம் 1937, மகாத்மா காந்தி தமிழகம் வந்த பொழுது சத்திய மூர்த்தி அவரை ஈரோட்டில் உள்ள கே.பி.சுந்தராம்பாள் இல்லத்திற்கு அழைத்து வந்தாராம். அங்கு உணவருந்திய காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்க உடனடியாக ஒப்புக்கொண்டார். அனைத்து மேடைகளிலும் தேச பக்தி பாடல்கள் பாடத் துவங்கினார். காந்தி இறந்த பொழுது கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.
பின்னாளில் காமராஜர் ஆட்சியின் பொது தமிழகமெங்கும் சூறாவளியாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் 1958 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய சீன யுத்தம் நடந்த பொழுது தன்னுடைய ஊதியத்தைக் கொடுத்து மீண்டும் தமது தேச பக்தியை வெளிப்படுத்தினார். தலைவர்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் அவரின் பால் ஒரு தனி அன்பு வைத்திருந்தனர்.
அவர் சொந்தமாக கொடுமுடியில் கட்டிய திரையரங்கின் திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா மூவரும் கலந்து கொண்டனர். சம கால கலைஞர்களான தியாகராஜா பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், வைஜெயந்தி மாலா என்று அவர் இல்லத்திற்கு வராத திரைத்துறையினரே இல்லை எனலாம்.
தமிழ் இசைச்சங்கம் 1966 ஆம் ஆண்டு அவருக்கு இசைப்பேரறிஞர் விருது வழங்கியது. இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை 1970 ஆம் ஆண்டு வழங்கியது. சிறந்த தேசியப் பின்னணி பாடகருக்கான விருதும் பெற்றுள்ளார்.
திரைப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என்று ஏறத்தாழ 800 பாடல்கள் பாடியுள்ளார். இதில் பாதியளவு தான் இப்பொழுது நம் கைவசம் உள்ளது. தமிழ்நாட்டில் அதிக இசைத்தட்டுகள் விற்ற சாதனையும் இவருடைய பாடல்களே ஆகும். பாகவதர் காலத்தில் “மேயாத மான்”, “ஆரிய மாலா” போன்ற பாடல்கள் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைப் பாடி கர்நாடக சங்கீத மெட்டுக்கள் வழியாக ரசிகனை அடையப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பாமரன் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் இசையைப் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்றவர் நம் கே.பி.எஸ்.
அக்டோபர் 15 , 1980 இல் அவரது உயிர் பிரிந்தது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்டு வந்த காலத்தில், இன்றைய ‘சூப்பர் சிங்கர்’ போன்ற வாய்ப்புகள் எதுவுமே இல்லாத காலத்தில் அவர் கொண்டிருந்த தனித் திறமை மூலமாகக் கடுமையாக உழைத்து ஒட்டுமொத்த தமிழிசை இரசிகர்களின் மனதையும் கட்டிப் போட்டுக் காலத்தை வென்ற வித்தகர். அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எனது முயற்சி இந்த நான்கு பக்கக் கட்டுரையில் முடிந்துவிட்டதற்கு முதலில் தமிழிசை இரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் அந்த இசை இராட்சஸியின் பெயரை நெஞ்சில் நிறுத்திக் கொண்டே இருப்பதோடு, எக்காலத்திலும் போட்டியிட முடியாத தனித்துவமிக்க அவருடைய குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.