பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளும், சம உரிமைகளும் வழங்கப்படாத காலத்திலும், எத்தனையோ சோதனைகளைக் கடந்து சரித்திரம் பேசும் சாதனைகளை படைத்தது மாத்திரமில்லாமல், இன்றுவரை மருத்துவ உலகம் நன்றிகளை கூறிக்கொண்டுவரும், உன்னத பெண்தான் மரியா. உலகில் இதுவரையில் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற ஒரே அறிஞர் மற்றும் பெண் என்ற புகழை இன்றளவும் அறிவியல் உலகு சொல்லி மெச்சிக்கொண்டிருக்கிறது என்றால் அது இவரை மாத்திரமே.
காலம் : போலந்து, ரஷ்யாவின் ஆதிக்கத்தில் உட்பட்டிருந்த காலம். பெண்கள் உயர்கல்விக்கு செல்லக்கூடாது, அறிவியல் என்றாலே ஆண்கள் என்ற பாகுபாடு இருந்த காலமது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான், போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார் மேரி கியூரி. அவர் இயற்பெயர் மரியா ஸ்கலோடோவ்ஸ்கா (Marie Skłodowska). வீட்டிற்கு ஐந்தாவது பெண்குழந்தை. இயற்பிலேயே அறிவுத்திறன் மிக்கவராயும் தேடல் மிக்கவராயும் இருந்தார். தந்தையோ ஒரு தேசபக்தி மிக்க ஆசிரியர், போலந்தில் ரஷ்ய மொழித் திணிப்பு இருந்த அக்காலத்தில், போலந்து மொழியில் தான் கல்வி கற்பிப்பேன், என வாதிட்டதாலும் ஒரு ரஷ்யா அதிகாரியால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரைத் தங்கியிருந்த குடும்பம் வறுமையை சந்தித்தது. குடும்பம் வறுமையில் இருந்தபோதிலும் மரியா கல்வியில் சிறந்து விளங்கினார். வறுமை தாக்கிய போதிலும் மரியாவின் தந்தை அவரையும், அக்கா புரோனிகாவையும் உயர்கல்வி கற்க வைத்தே ஆகவேண்டும் என தீர்மானத்தார்.
அக்காலத்தில் பெண்கள் மேற்படிப்பிற்கு செல்லக்கூடாது என்ற சட்டத்தை அப்போதைய மன்னன் ஜார் சட்டமியற்றி இருந்தான். ஆரம்பத்தில் மன்னனுக்கு தெரியாமல் போலந்து நாட்டின் தேசபக்தி மிக்க இளைஞர்களால் இரகசியமாக நடத்தப்பட்ட பல்கலையில் மரியாவும் அவர் அக்கா புரோனிகாவும் பயின்றனர். பின்னர் மேற்படிப்பு அவசியமான சந்தர்ப்பத்தில் குடும்பத்தில் வறுமை நிலையினால் ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டிய துயர் ஏற்பட்டது. பின்னர் புரோனிகா பாரிசில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்றார். வீட்டு செலவுகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக்கொள்ள மரியா ஆசிரியையாக மாறினார். பணக்காரர்களின் வீட்டு குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கும் பணியையும் மரியா மேற்கொண்டார். இப்படியான 5 வருடங்கள் கடப்பின் பின்னர் , புரோனிகா தன் கல்வியை முடித்து விட்டு மரியாவை பாரிசிற்கு வர அழைத்தபோது மரியா மறுக்கின்றார். அதற்கு முக்கிய காரணம் அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்த காதல் உறவு.
முதல் வீழ்ச்சி காதல் தோல்வி
ஸோரோவ்ஸ்கியும் மரியாவும் அப்போதைய காதலர்கள். ஒருவகையில் மரியாவின் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனை அல்லது வாழ்வையே மாற்றப் போவது அக்காதல் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருக்க வேண்டிய நியாயமும் இல்லை காரணம் காதல். என்றாலும் மரியாவின் குடும்ப வறுமை காரணம் காட்டிய ஸோரோவ்ஸ்கியும் அவர் குடும்பமும் காதலுக்கு முற்றை வைத்தனர். 24 வயது மரியாவிற்கு அப்போது காதல் தோல்வி ஏராள மனவலிகளுக்கு உட்படுத்தியது, வாழ்வை வெறுக்க வைத்தது. என்றாலும் வாழவேண்டும் என முடிவு செய்து அதிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க அக்காவின் அழைப்பை ஏற்று பாரிஸில் உள்ள சோர்போர்னே பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவியாக சேர்ந்தார். அவரை மேரி கியூரியாக அவதரிக்க வைக்கப்போவது அந்த பல்கலையும், அப்போது மரியாவிற்கு அறிமுகமான பியரி கியூரிம்தான். காலமும் வாழ்வும் விசித்திரமானது, விநோதமானது உறவுகளை அது கொண்டு வந்து சேர்க்கும் பல பிரம்மாண்டங்களை தானாய் வழங்கும்.
காலத்தின் பாதையில் மாற்றம் மரியா, மேரி கியூரியாக மாறினார்
பாரிஸில் மேற்படிப்பை தொடங்கிய மரியா பல இடையூறுகளையும், இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவாறு இயற்பியல் கல்வியை முடித்தார். கல்வியில் சிறந்து விளங்கியதால் அவருக்கு ஊக்கத்தொகை கிடைத்தது அதனைக் கொண்டு கணித மேற்படிப்பை தொடங்கினார். இப்போது அவருக்கு முக்கியமான காலகட்டம், சோர்போனே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மேரியை பாரிஸ் நகரத்தில் இருக்கும் இயற்பியல் அறிவியலாளர் பியரிகியூரியை சந்திக்க அறிவுரை வழங்கினர். அதன்படி அவரும் பியரிகியூரியை சந்திக்கின்றார். மரியா வெவ்வேறு வகையான எக்குகளின் காந்த சக்தியை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். பியரிகியூரி பாரிஸ் நகரத்தில் உள்ள ஒரு இயற்பியல் பள்ளியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
வாழ்விற்கு வெறும் காதல் மாத்திரம் போதாது அதனையும் தாண்டி ஏராளம் உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்களது அப்போதைய சந்திப்பு ஒரு சரித்திரத்தை உண்டாக்கியது. அவர்களது எண்ணங்கள் ஒத்துபோயின. அதேபோன்று அவர்களது அறிவியல் ஈடுபாடும், வாழ்வின் கனவுகளும் ஒத்து போவதாய் அமைந்தது அதுவே அவர்களுக்கு இடையில் உண்மையானதோர் காதல் உறவை உண்டாக்கியது. அதன்படியே அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து பின் ஒருவருக்கு ஒருவர் உதவியாக ஆய்வுகளைத் தொடர்ந்தனர்.
கியூரி அறிவியல் உலகில் தனித்துவமாக ஜொலிக்க ஆரம்பித்தார்
இதே காலகட்டத்தில் கியூரி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டு. அப்போதுதான் இயற்பியல் உலகில் ரோண்ட்ஜென் (Rontgen) உடல் திசுக்கள் மற்றும் பலவகையான பொருட்களை ஊடுருவும் எக்ஸ்ரே (X ray ) கதிர்களைக் கண்டுபிடித்திருந்தார். அதேபோன்று என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel) யூரேனியம் (Uranium) என்னும் தனிமம் ஊடுருவும் வெப்பக்கதிர்களை வெளியிடும் தன்மையை உடையது என்பதனைக் கண்டுபிடித்திருந்தார். இக் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்ட கியூரி கதிரியக்கம் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்தார். ஆய்வுகளில் யூரேனியத்தைப்போல தோரியமும் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது என்று கண்டறிந்தார். யூரேனியும் தாதுப்பொருட்களை (ores) கொண்டு ஆய்வு செய்ததில் யுரேனியத்தை விடவும் 2 மடங்கு மற்றும் 46 மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட இருவேறு உலோகங்களைக் கண்டுபிடித்தார் கியூரி. மேரி கியூரியும், பியரிகியூரி இணைந்து தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆய்வுகளைத் தொடங்கினர். இதன்போது பேரியம் கண்டறியப்பட்டது. யுரேனியத்தை விடவும் 300 மடங்கு கதிரியக்கத் தன்மை வாய்ந்த ஒரு தனிமத்தை கண்டறிந்தனர். அதற்கு கியூரி தம்பதியினர் “பொலேனியம்” என்றும் பெயரிட்டனர். அதேபோல ரேடியம் தனிமத்தையும் கண்டுபிடித்தனர்.
இப்படியான ஆய்வுகளில் அவர்கள் சந்தித்த சிக்கல்களும் ஏராளம் இருக்கத்தான் செய்தன. கடுமையான முயற்சியின் பின்னர், பிட்ச்ப்ளேண்டே தாதுக்களிலிருந்து ரேடியம் என்னும் தனிமத்தை பிரித்தெடுத்தனர். அதனை டென்மார்க்கிற்கு அனுப்பி ரேடியம் அணுவின் எடையை கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்புகளால் கியூரி முனைவர் பட்டத்திற்கும் தேர்ச்சி பெற்றார். மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் இந்த மகத்தான அறிவியல் சாதனைக்காக அவர்களிருவருக்கும் அதே ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட முதல் அறிவியல் தம்பதியினர் என்ற பெருமையும் இந்த தம்பதிகளையே சேரும்.
வெற்றிகளைத் தாண்டிய பெருந்துயர்
உன்னதமான காதல், திருமணம், சாதனை என அனைத்தையும் அடுத்தடுத்து சந்தித்து மகிழ்வாக வாழ்ந்து வந்த கியூரிக்கு பெருந்துயரம் விபத்து வடிவில் வந்து சேர்ந்தது. பியரிகியூரி சாலை விபத்தொன்றில் சிக்கி இறந்தே போனார். இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்த கியூரிக்கு, கணவனின் இழப்பு தாங்கமுடியாத வேதனையளித்தது. அதிலிருந்து மீள மீண்டும் பணிக்கு செல்ல முடிவு செய்து சோர்போர்னே பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியராக ஆனார். மீண்டும் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
கணவனை இழந்து தனித்து வாழ நினைக்கும் ஒரு பெண்ணை அதுவும் தனிப்பெருமையும் சாதனைகளையும் கொண்ட ஒருத்தியை வீழ்த்த இப்போதைய நவீன சமூகம் எடுக்கும் ஆயுதம் அவளின் ஒழுக்கத்தை கேள்வியாக்குவதே. இது அப்போதைய காலகட்டத்திற்கும் விதிவிலக்கல்ல. பியரி மறைவுக்குப்பின் மேரி கணவர் பியரி கியூரி யின் ஆய்வு மாணவர் லேன்குவினுடன் ஆய்வுயை செய்து வந்தார். இதே காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டு அறிவியல் கழகத்தின் தேர்தலில் மேரி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி பிற்போக்கு கொள்கைகளைக்கொண்ட எதிரணியினர் கியூரிக்கு எதிரான வதந்திகளை பரப்பினர். கியூரியை வெல்ல அவர்கள் எடுத்த ஆயுதம் அவரது ஒழுக்கம் குறித்த வதந்தி. லேன்குவினுடன், கியூரிக்கு ஏற்பட்ட தொடர்பே அவளது கணவரின் மரணத்திற்கும் காரணம் என்ற கொச்சையான செய்திகளை பரப்பி, கியூரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். என்றாலும் கியூரி போட்டியில் பின்வாங்கிவிடவில்லை ஆனால் ஓரிரு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கியூரி வீழ்ந்து விடவில்லை ஆய்வுகளைத் தொடர்ந்தார். க்கு 1911 ஆம் ஆண்டு அவரது கண்டுபிடிப்பான சிறிய எக்ஸ் கதிர்கள் இயந்திரத்திற்காக (portable X-ray machine) இரண்டாவது நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் ஏற்கனவே பரப்பப்பட்ட வதந்திகளை பத்திரிகைகள் காரசாரமாக விவாதித்த காரணத்தினால், அறிவியல் கழகம் நோபல் பரிசை பெறுவதற்கு கியூரி ஸ்டோக்ஹோமிற்கு வரவேண்டாம் என்றே கூறியது. என்றபோதிலும் கியூரி பின்வாங்கவில்லை. கட்டுக்கதைகளை அறிவியல் உலகம் நம்புவது ஏன் என்றே கேள்வி எழுப்பி அதனையும் தாண்டி தனிப்பட்ட வாழ்வையும், அறிவியல் கண்டுபிடிப்புக்கும் முடிச்சிட்டு பேசக்காரணம் என்ன? என்றே வாதிட்டு தனது நோபல் பரிசை நேராக சென்று வாங்கினார்.1914 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில், கியூரியின் சிறிய எக்ஸ் கதிர்கள் இயந்திரம் பெரிதும் உதவியது. ஆனால் அவர் நேசித்த அதே கதிரியக்க ஆய்வுகளால் தன் 66 ஆவது வயதில் புற்றுநோய்க்கு ஆளாகி மரித்தும் போனார் கியூரி. அவர் பெயரில் இன்று பல கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, காதலில் தோற்று பின் உண்மைக்காதலை கண்டிறிந்து வாழ்வை ஆரம்பிக்க ஆசைப்பட்ட போது கணவனை இழந்து, ஒழுக்க கேள்விகளுக்கு முகம்கொடுத்து இப்படி அனைத்தையும் தாண்டி நவீன இயற்பியலின் தாய் என்றே இன்றும், மதிக்கப்படும் மேரி கியூரி எப்போதும் கொண்டாடப்பட வேண்டிய ஓர் ஆளுமை. ஆணாதிக்க கட்டுகளை தாண்டி இன்று உலகமே நன்றியோடு பார்க்கும் மேரி கியூரி ஓர் தனித்துவம்.