சிறந்த இலக்கிய நாவலுக்கான விருதுவென்ற தமிழ் அரசியல் கைதி!

வாழ்க்கையென்பது எதிர்பாரா திரும்புமுனைகள் கொண்ட ஒரு நதிக்கு ஒப்பானது, எங்கும் எதற்காகவும் தேங்கிடாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்  என்பதற்கு ஆருரனும் ஒரு சான்று  சான்று. உடன்பிறப்புகள் எழுவர் என்ற பெரிய குடும்பத்தில் பிறந்த ஆருரன் புலமைபரீட்சை சித்தியின் பின்னர் வரமராட்சியின் புகழ் பூத்த பாடசாலையில் தன் கல்வியைத் தொடர்கிறான்.

கல்வியில் சிறந்து விளங்கிய அவன் உயர் தரத்தில் கணிதப்பிரிவில் சித்தியடைந்து மொறட்டுவ பல்கலையில் பொறியியல் துறையில் பட்ட படிப்பை முடித்து, பின்னர் முதுகலை கல்வியைத் தொடர நினைத்து தொடருகையில் கொழும்பில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுவிடுகின்றான்.

சிறுவயது முதல் புத்தகங்கள் மீது பெரிதான ஈடுபாடு அற்ற அவனை சிறைவாசம் மாற்றியது. தந்தையிடம் புத்தங்களை வாங்கித்தருமாறு கேட்டு அதனை படிக்க ஆரம்பிக்கின்றான். அந்த மாணவனுக்கு தெரிந்திருந்தது இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் தனக்கு பிணை கிடைக்கப்போவதில்லை என்று. ஆம் கைதின் காரணமாக அரசியல் கைதியாக அந்த மாணவன் மாறியிருந்தான்.

தந்தையிடம் வாங்கிய புத்தகங்கள் அவனுக்கு எழுத்தின் மேல் தீராக் காதலை ஏற்படுத்தியது. அதன் ஆழம் காண நினைத்து ஒரு நாள் தன் தந்தையிடம் “அப்பா நான் நாவல் எழுதப்போகிறேன்” என்று சொல்கிறான் சிறைக்குள் இருந்தவாரே. தந்தைக்கு தெரிந்த, மகனைப்பற்றி அப்போது அவர் எண்ணியது வேறு. சிறுகதை, கட்டுரை என்றாலும் சரி நாவல் என்பது பெரும்பணி அதனை செய்ய முடியாது என்று நினைக்கிறார் தந்தை. என்றாலும் அந்த மாணவன் பின்வாங்கவில்லை “யாழிசை” என்று தன் இலக்கிய முயற்சியின் முதல் அடியை எடுத்து வைக்கின்றார். இது ஒரு பெண் போராளியின் வாழ்வின் போராட்டங்கள் பற்றியது. சிறைக்குள்ளேயே வாசிப்பு மூலம் தான் பெற்ற இலக்கிய அறிவை பயன்படுத்தி எமுதப்பட்டதுதான் யாழிசை. அந்த நாவலுக்கு விருதும் கிடைக்கப்பெற்றது.

அதுவரையில் மாணவனாக இருந்த அவர் ஓர் இலக்கியவாதியாக, தேர்ந்த எழுத்தாளனாக மாறியிருந்தார். ஆம் இலங்கை எழுத்தாளர்களிடையேயும், இலக்கிய உலகிலும் தவிர்க்கமுடியாத ஒருவராக இருக்கும் சிவலிங்கம் ஆரூரன்தான் அந்த மாணவன். அண்மையில் நடந்த 65வது அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் இலக்கிய நாவலுக்கான விருதினை தமிழ் எழுத்தாளர் சிவலிங்கம் ஆரூரன் பெற்றுக்கொண்டார்.

Sivalingam - Interview
ஆரூரனின் குடும்பம் கல்வி பற்றி அவருடைய தந்தையின் பகிர்வு

கடந்த அக்டோபர் 28ஆம் திகதி, இடம்பெற்ற இவ்விழாவில் பொலீஸ் காவவலுடன் விருது பெற அழைத்து செல்லப்பட்டார். விருது பெற்றது ‘ஆதுரசாலை’ எனும் இவரது நாவல், போர்காலத்தின் போது வைத்தியர்கள் எவ்வித சுய ஆதாயத்தையும் கருத்தில் கொள்ளாது, ஒரு உயிரை எப்படியேனும் காப்பாற்றிவிட வேண்டும் எனும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய விதம் பற்றி விபரிப்பதுடன், இன்று வைத்திய துறைக்கு நிகழந்துள்ள அவல நிலை, எமது வைத்தியர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள்?, எமது வைத்தியசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கும் விடை தேட விளைகின்றது. மேலும் முடங்கி கிடந்த ஒரு வைத்தியசாலை, புத்தாக்கம் பெற்று எழுச்சியடைந்த கதையாகவும் இந்த நாவல் அமைந்திருக்கின்றது எனலாம். உண்மையில் அவரது ஆதுரசாலை காலத்தின் தேவை.

சுமார் 16 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றவர். சிறை என்ற கூண்டு தன்னையும் தன் சுதந்திரத்தையும் ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முயன்றாலும் அறிவுக்கும், திறமைக்கும் அவ்வட்டமும் சிறையும் ஒரு பொருட்டல்ல என்பதை தெளிவாக வெளி உலகிற்கு சொல்லி தன்னை தன்னம்பிக்கையின் புத்திரனாக அடையாளப்படுத்தினார் ஆரூரன்.

பொறியில் பட்டதாரியான ஆரூரன் 2008 ஆம் ஆண்டு கொழும்பு பித்தல சந்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டார். அவரின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்றவாரே இருக்கின்றது. குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் தீர்மானிக்கும் முன்னரே அப்போது முதல் சிறைச்சாலையில் தன்வாழ்வை கழித்து வருகின்றார். அவருடைய தன்னம்பிக்கை, அவரைத் தேடிச் சென்ற விருதுகள், சிறைக்குள் இருந்தவாரே எழுத்துலகில் அவர் சாதித்தது என்ற பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்காக ஆரூரனின் தந்தை சிவலிங்கம் அவர்களிடம் நாம் பேசியறிந்தோம். அவர் ஆரூரன் பற்றி இப்படி கூறுகின்றார்…

Sivalingam - Interview 1
ஆரூரன் எழுத்துலகிற்கு வந்தது பற்றி அவர் தந்தை கூறுகையில்

நாம் ரோர் தமிழ் – அவருடைய அடுத்த நூல் பற்றி கூறுங்கள் ஐயா

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – மகாபாரதத்தில் துரியோதனனின் துயரம் என்ற மறுவாசிப்பு நூலை இப்போது எழுதியுள்ளார். அதனை அச்சுப்பணிக்கு கொண்டு செல்ல நினைத்தும் சற்றே தாமதப்படுத்தியுள்ளேன். அவர் விடுதலையாகி வந்தபின்னர் அந்த புத்தகத்தை வெளியிடலாம் என்று நினைத்திருக்கின்றேன். ஆரூரன் இதுவரை 7 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் 5 இற்கு சிறந்த பரிசுகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. இரண்டு புத்தகங்களுக்கு சாகித்ய விருதும் கிடைத்துள்ளது.

ரோர் தமிழ் – எழுத்துலகிற்கு ஆரூரனை கொண்டு வந்த பெரும்பணி உங்களையே சாரும், அதற்கு உங்களுக்கு நன்றிகளை கூற வேண்டும்.

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – எனக்கு வயது போய்விட்டது. ஆரூரனின் இலக்கிய ஆர்வத்தில் அவர் கேட்ட புத்தகங்களை தேடி அலைவதே எனக்கு பெரும் கஸ்டமாக இருந்துள்ளது. அவர் கேட்ட சில புத்தகங்கள் கிடைக்கவேயில்லை என்பதும் சிறு வருத்தம்தான்.

அவருடைய புத்தகங்கள் மொழிபெயர்க்க சில நிறுவனஙகள் முன்வந்துள்ளன. நடைபெறும் என்று நம்புகின்றோம்.

ரோர் தமிழ் – ஆரூரனின் கைதின் பின்னர் தாங்களும், அவரும் அதனை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்? உங்களுடைய மனநிலைகள் எவ்வாறு இருந்தது?

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள், மூவர் ஆண்கள் அவர்கள் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம் ஆனால் ஆரூரனின் கைது எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கிவிட்டது. ஆனாலும் இன்று அவர் ஓர் எழுத்தாளனாக அடையாளம் காணப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது.

கைதின் பின்னர் ஆரம்பத்தில் ஆரூரன் அதிக வேதனையிலும், குழப்பத்திலும் இருந்தார். பின்னர் வாசிக்க தொடங்கியதும் அவர் சிறிது அமைதியடைந்தார். இந்த கைது அவரை மனநோயாளி ஆக்கி விடக்கூடாது என்பதால் அவருக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். எப்படியோ அவருடைய இளம் வயதையும் வாழ்வின் பல சந்தோசங்களையும் இழந்து விட்டார் என்பது வேதனை. அவர் தொலைத்த அதனை எப்படியும் திரும்ப பெற முடியாது அல்லவா?

ரோர் தமிழ் – சிறை அவருடைய மனநிலையையும், சிறுவயது ஆரூரனையும் தொலைத்து விட்டதா? மாற்றி விட்டதா?

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – இல்லை சிறுவயது முதலாகவே அவர் புத்திசாலிதான். ஆனால் இப்போது நிறையவே அமைதியாகிவிட்டார். காரியங்கள் நடக்கும் போது அமைதி தானாக வந்துவிடவேண்டும் அல்லவா. அது தவிர அவர் இப்போது நிறைய யோசிப்பார் நிறைய எழுத வேண்டும் சமூகத்திற்கு நிறைய சொல்ல வேண்டும், கருத்துகளை சொல்ல வேண்டும் என்று சொல்லுவார். உதாரணத்திற்கு அவருடைய “யாவரும் கேளீர்” நூல் சமூக, இன ஒற்றுமை பற்றிவிளக்குகின்றது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டால் அவருக்கு நிறையவே வளங்கள் கிடைக்கும். அவர் பகடியாக சொல்லுவார் “சிறையில் அடைத்ததற்கு நூலகத்தில் அடைத்திருந்தால் இப்போது அனைத்து புத்தகங்களையும் வாசித்திருப்பேன்” என்று. இப்படி ஓர் தேர்ந்த வாசிப்பாளனாக, எழுத்தாளனாக அவர் மாறிவிட்டார்.

ரோர் தமிழ் – ஆரூரன் சிறைவாழ்வு எப்படி இருக்கின்றது? துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றதா? அங்கு அவர் எவ்வாறு நடத்தப்படுகின்றார்?

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் –சிறைக்குள் அவரை மாஸ்டர் என்றே அழைப்பார்கள்” இந்த கேள்விக்கு ஆரூரனின் தந்தை இவ்விதம் பதில் கூறுகின்றார்…

Sivalingam - Interview 6
சிறைக்குள் ஆரூரன் நடத்தப்படும் விதம் குறித்து அவருடைய தந்தையின் பதில்

ரோர் தமிழ் – அவரின் வழக்கின் தன்மை எப்படி இருக்கின்றது? அவருடைய விடுதலை பற்றி என்ன கூறுகின்றார்கள்?

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – பெரும்பாலும் அவர் விடுதலையாகக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். இப்போது வழக்கு ஒரு முடிவை எட்டியுள்ளது தீர்ப்பிற்காகவே காத்திருக்கின்றோம் எப்படியும் விடுதலை கிடைத்துவிடும்.

ரோர் தமிழ் – அவரின் கைது பற்றி நீங்கள் என்ன கூற நினைக்கின்றீர்கள்?

ஆரூரனின் தந்தை சிவலிங்கம் – அது மிகுந்த வேதனையான விடையம். 14 வருடங்கள் சிறைக்குள் இருக்கின்றார். கைதாகும் அனைவரையும் குற்றவாளியாக பார்க்கின்றார்கள் அது மாற வேண்டும். அத்தோடு அவருடைய வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். கைது செய்யப்பட்டு அவர் குற்றவாளி என்றால் தண்டனை கொடுத்து இருக்கலாம், அன்றேல் விடுதலை செய்து இருக்கலாம். யாரிடம் இதனை சொல்வது? மிகுந்த வேதனை அது. அவர் இப்போது 42 வயதில் இருக்கின்றார் விடுதலை ஆன பின்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும். நிறையவே தொலைத்து விட்டார் வெளியே வந்து அவர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அவர் வெளியே வர வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம் வந்து இலக்கிய உலகில் அவர் கொடி கட்டி பறக்க வேண்டும்.

Saivalingam - Interview 7
ஆரூரன் தொலைத்த வாழ்வு பற்றி அவர் தந்தையின் பகிர்வு

இப்படியாக அமைந்தது சிறைக்குள் இருந்தே தன்னை எழுத்தாளனாக மாற்றிக் கொண்ட ஆரூரன் என்ற அரசியல் கைதியின் வாழ்வுக் கதை. ஆம் அவர் நிச்சயமாக விடுதலை ஆகி விட வேண்டும். எப்படி ஆனாலும் அவர் தொலைத்த வாழ்வையும் பட்ட வேதனையையும் இலக்கிய உலகு ஆற்றிவிடும் என்ற நம்பிக்கை அவரின் குடும்பத்தாருக்கு நிறையவே உண்டு. அதுவும் நடக்க வேண்டும். வாழ்வு ஒருவரை எங்கும் கொண்டு செல்லலாம் ஆனால் அதில் இருந்து நாம் மீண்டும வாழ்வை எப்படி அர்த்தப்படுத்தவதாக மாற்றிக் கொள்கிறோம் என்பதும், துயரில் உழன்று மடியாமல் எப்படி வாழ்வது என்பதையும் அமைதியாகவே இருந்து கற்றுக் கொடுத்து இருக்கின்றார் ஆரூரன். அந்த எழுத்தாளனின் விடுதலைக்கு நாமும் நம்பிக்கை வைக்கின்றோம்.

Related Articles

Exit mobile version