தர்மாஸ்பத்திரி

ஏன்டா ! அவ்ளோ சம்பாரிச்ச மனுசன் அவர ஒரு தனியார் ஆஸ்பத்ரில வச்சு வைத்தியம் பாத்தா கொறஞ்சா போயிருவிங்க? கோவில் வீட்டு கெழவி கேட்டதும் எரிச்சலாய் வந்தது. நேராய் வீட்டுக்கு வந்து டிப்பன் பாக்சை  சுவற்றில் எறிந்துவிட்டு உடையை மாற்றி பெரியாஸ்பத்திரிக்கு சென்றேன்.

புறநோயாளிகள் பிரிவில் மாலையும் நல்ல கூட்டம்!, ஆனால் டாக்டர் இல்லை, டூட்டி நர்ஸ்தான் ஊசி போட்டுகொண்டிருந்தார். எல்லாரும் வித விதமாய் குறைகளை சொல்ல எதோ இயந்திரம் போல் தலையை ஆட்டி அனிச்சையாக இயங்குவது போல் எனக்குள் தோன்றியது. பெண்களும் ஆண்களும் தங்கள் பின்புறத்தை காட்டியபடி நிற்க மருந்து புட்டிகளை உடைத்து அதை சிரஞ்-இல் ஏற்றி செலுத்துவதில் மட்டுமே கவனமாய் இருந்தார். எல்லாருக்கும் ஒரே மருந்தைத்தான் போடுகிறாரோ? என்று பார்க்க ஆரம்பித்தேன் .

ஏன்டா சின்னவயசு காரிகலோடத பாத்தாலாவது பரவால கெழவிமாதி இருக்கா அவலுகளோடத போய் பாத்துட்டு இருக்க. காதருகில் யாரோ சொல்வதை கேட்டு திரும்பினேன்!. பக்கத்து தெரு பெருமாள் அண்ணன்தான். அதுதான் பெரியாஸ்பத்திரிக்கு கம்போண்டர் அந்த ஒரு தைரியத்துலதான் அப்பாவ பெரியாஸ்பத்திரில சேத்துக்க ஒத்துகிட்டேன்.

என்னடா இன்னிக்கி லேட்டு? நக்கலாய் கேட்டுச்சு

உன்ன மாதி கவர்மென்ட் உத்தியோகமா பாக்குறேன்?, மணி அடுச்சதும் வீட்டுக்கு கெளம்புறதுக்கு, காசு கொடுகுற மகாராசன் குண்டிய நகத்த சொல்றவரையும் இருக்குற துணிக்கடை வேலை! என்று சிடுசிடுத்தேன்.

ஏன்டாப்பா உனக்கு இவ்ளோ கோபம் இன்னிக்கி? அக்கறையாய் கேட்டார் பெருமாள் அண்ணன்.

அப்பறம் என்ன அண்ணே, அவர இப்ப யாரு பெரியாஸ்பத்திரில வந்து கெடக்க சொன்னது? நேத்துகூட எவ்ளோ செலவானாலும் பரவால மதுர மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில பாப்போம்னு அம்மாட்ட சொன்னேன். அவரு அவன் சோலி மசித்த பாக்க சொல்லுனு திட்டிருக்காரு!, ரெண்டுபேரும் பேசிக்கிறது இல்லனாலும் அவருக்கு என்ன செய்யமாட்டேன்னு சொன்னேன். மொத்த கோபத்தையும் கொட்டினேன்.

அவர் கொணம் எல்லாரு தெரிஞ்சதுதானே விடுடா, இப்போ உங்க அப்பா பக்கத்து பெட்ல, ஒரு பெருச கொண்டாந்து சேத்துருக்காங்க, அவரு மகன் உன்னவிட உருகுறான் நேத்து முழுசா 500 ரூபா நோட்டை கைல தினுச்சு அப்பாவ பாத்துகோங்க நான் இல்லாதப்போனு சொல்றான், அவரும் உங்க அப்பா மாதி தனியார் வேணாமுன்னு சொல்லிட்டாரம். மருமக பிரச்னைனு நெனைக்கிறேன் பொண்டாட்டி தவறிருச்சு போல.

இந்த அப்பன்களுக்கலாம் என்னதான் கொறையாம், எங்க அம்மாவுக்கு முடியாம வந்தப்ப தொட்டுகூட பாத்துருக்கமாட்டாரு!, இது எனக்கும் சோறு ஆக்கி போட்டு அவரு கூடியே ஒரு வாரமா இந்த கொசுக்கடில கெடக்கு. நைட் அவருக்கு தொணையா நான் இருக்கேன்னு சொன்னாலும், அவரு ராத்திரி ஒன்னுக்கு, ரெண்டுக்கு போக உன்னைய உசுப்ப சங்கட்டப்படுவாருனு சொல்லுது.

உன் அக்காவ வந்து ஒரு ஒருவாரம் தங்க சொல்லவேண்டியது தானே?.

என் மச்சான் அதுக்குமேல, புது கல்யாணம் பண்ண சோடி மாதி அத விட்டு ஒரு ராத்திரி கூட இருக்கமாட்டாரு.

ஹா ஹா அத விடு, புதுசா ரெண்டு ட்ரைனிங் நர்ஸ் வந்துருக்குக முன்னாடியும் பின்னாடியும் தளுக்கி நடக்குறாலுக பாரு!, நீ பாக்குறியா அவளுகள காட்றேன்? பேச்சை மாத்துவதற்காக கேட்டார் .

போய் அம்மாவ வீட்டுக்கு அனுப்பனும் அண்ணே, நான் போறேன்னு சொல்லிவிட்டு வார்டை நோக்கி நடந்தேன், அண்ணன் என்னை பார்த்து சிரித்து, நடந்தார், ஊசிபோடும்போது இவர் எப்படி பெண்களை பார்ப்பார் என்று எண்ணிக்கொண்டேன்.

என்னை பார்த்ததும், அம்மா எழுந்து கூடையில் நேற்று கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்து வைத்தது, மதியம் சாப்பிட்டியா தம்பி? என்றது

நன் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா, அவரு? என்று அப்பாவை பார்த்தேன், அவர் தூங்கிகொண்டு இருந்தார்.

எங்க சாப்டுறாரு, எதையும் முழுங்க கூட முடில பாலு, கர கஞ்சினுதானே குடிக்கிறாரு. நிக்க கூட தெம்புல்லாம போய்டாரு, சைக்கிள்ல என்னைய பின்ன உடகார வச்சு, உங்க ரெண்டு பேத்தையும் முன்ன உட்கார வச்சு சிவகங்கைல இருந்து மேலூர் வர ஒட்டி வருவாரு கொஞ்சம் கூட மூச்சு வாங்க மாட்டாரு மனுஷன், இப்ப பேச்சுக்கு ஒருதடவ மூச்சு வாங்குறாரு, சொல்லிவிட்டு பொலபொலவெனஅழுதது அம்மா!

நீ வீட்டுக்கு போமா அழுவாம, எப்ப பாரு அழுதுகிட்டு, நான்வேனா ஆட்டோ புதுசு விடவா?

வேணாம்பா நம்ம சரசு மவனுக்கு முடில்லனு இங்கதா சேத்துருக்காக போய் பாத்துட்டு அவுங்க அம்மாகூடையே போறேன், ராத்திரியும் அதோடயே வந்திருவேன் என்று சொல்லிவிட்டு கெலம்பியது அம்மா.

அப்பாவுக்கு நுரையீரல் தொற்று முற்றிய நிலை, இன்னும் சில நாட்கள் மருந்துகளுக்கு பின்தான் ஆபரேஷேன் செய்யவேண்டுமா என்று தெரியும். அதுவும், அப்பா உடம்பு அதை தாங்குமா என்பதுதான் இப்போது கவலையாக உள்ளது. அக்கா திருமணத்தின்போது அப்பாவுக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனை நான் சம்பாரிக்க ஆரம்பித்ததும் முற்றியது. பெரும்பாலும் அம்மாவின் மூலமே பேசிக்கொண்டோம்.

எனது சிறுவயசில் அம்மாதான் ஒடம்புக்கு சொகம் இல்லாதப்போ இங்க தூக்கி வரும், எல்லா நோயாளிகளும் இருமுவார்கள் என்ற கற்பனையுடனே வருவேன், காசநோயாளி வார்டு பக்கம் போகும் போது அம்மா என் மொகத்த சேலையால மூடும், ஏன்னு கேக்க ஒனக்கும் ஒட்டிக்கும்னு சொல்லும், நானும் அம்மா மூஞ்சிய என் சட்டையால மூட என்ன அறிவுனு நெட்டு முறிக்கும். அப்போ குண்டா ஒரு நர்ஸ் ஊசி போடும், அத பாத்ததும் எனக்கு மூத்தரமே வந்துரும். இப்போ இருக்க பெரியாஸ்பத்திரி எல்லாமும் மாறிப்போய் இருந்தது, அந்த பழைய மருந்து வாடையை தவற!.

பக்கத்து பெட்டில் அப்பாவின் வயதில் இருந்த நபர் சிறுநீர் கழிக்க, உதவிக்கு நர்ஸ்யை அழைக்குமாறு என்னிடம் சொன்னார், நான் எழவும் அவரின் பையன் வரவும் சரியாக இருந்தது, சற்றும் யோசிக்காமல் அவர் அந்த பெரியவரின் பிறப்புறுப்பை பிடித்து சிறுநீர் கழிக்கும் பாத்திரத்தில் வைத்தார், எனக்கு உடம்பு சிலிர்த்தது, இதை என் அப்பா பார்ப்பதை நான் கவனிக்க அவர் தன் முகத்தை திருப்பிகொண்டார்.

இந்த நிலைமையிலும் அப்படி என்ன இந்த அப்பன்களுக்கு திமிர் நன்றாக படட்டும் என்று நினைக்கும்போது, ஊசி போட இரண்டு நர்ஸ் வந்தார்கள் எனக்கு பெருமாள் அண்ணன் சொன்னவை நினைவுக்கு வர அவர்களின் முன்னையும் பின்னையும் பார்க்காமல் இருக்க மிகவும் சிரமப்பட்டேன், இந்த குட்டைபாவடை உடையை யார் இவர்களுக்கு சீருடையாக்கி இருப்பார்கள் என்றெல்லாம் தோன்றியது.

அருகில் மூன்று நான்கு பெட்டுகளில் பெண்கள் இருந்தார்கள் அவர்கள் அருகில் அவர்களை கவனிக்கவும் பெண்களே இருந்தார்கள் இதென்ன ஆண்களை கவனிக்கவும், பெண்களை கவனிக்கவும் பெண்களேதான் இருக்க வேண்டுமா, ஆண் தனக்கு மூத்திரம் வருவதை பொண்டாட்டியிடம் சொல்லும்போது அதை ஏன் ஒரு கணவனிடம் பொண்டாட்டி சொல்ல முடியவில்லை.

அதில் ஒரு அம்மா தன் மகளிடம் மருமகளை குறை சொல்லிக்கொண்டு இருந்தது, அடுத்தவர் வீடுகளில் பொரணி பேச அம்மாவை  அப்பா ஒருபோதும் அனுமத்திக்கமாட்டார், அவர் மீது கோபமும் பாசமும் ஒரு சேர வந்துபோனது.

சிறுது நேரத்தில் ஒரு பெண் நோயாளிக்கு ட்ரிப்ஸ் முடிந்து அதில் ரத்தம் ஏற ஆரம்பித்து விட்டது, என்னை நர்ஸ்யை அழைக்க சொன்னார்கள் நானும் அனைத்து வார்டுகளிலும் தேடினேன் கடைசியில் பிரசவ வார்டில் ஒரு நர்ஸ் இருந்தார், ஆனால் அவர் வர முடியாது இங்கு ஆள் வேண்டும் என்று கூறிவிட்டார். நான் மீண்டும் அப்பா இருந்த வார்டுக்கு போனேன் அதற்குள் பக்கத்து பெட் பெண் ஒருவர் ட்ரிப்ஸ்யை நிறுத்தி இருந்தார். எனக்கு அப்பாவை நினைத்து முதல்முறை பயம் வந்தது  அம்மாவிடம் நடந்ததை கூறி விட்டு நான் வீட்டுக்கு போனேன், அதே கடுப்புடன்தான் அடுத்த நாளும் ஆஸ்பத்திரி வந்தேன்.

டேய், தம்பி! அந்த பக்கது பெட் பெருசு செத்துருச்சுடா!, அப்பா ஒரு மாதியா இருக்கு, நீ கூடவே இரு. அவசரமாய் சொல்லிவிட்டு, அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடுச்சு பெருமாள் அண்ணன்.

அந்த பெரியவரின் மகன் வாசலில் நின்றார், யாரெனத் தெரியவில்லை என்றாலும், அவர்மேல் இருந்த மரியாதையால் அருகில் சென்று கைகளை பிடித்தேன். சார் யாரோ பெத்த புள்ளைக்கா சொத்த எழுதிவைக்க சொன்னேன், அவர் பெத்த எனக்கு தானே கேட்டேன், கெழட்டுப்பய  கடைசிவரை சாதிச்சுடான், தாயோளி!. இனி அக்கா தங்கச்சின்னு வேற பங்குபிருச்சு மறுபடியும் அழனும்.. இதன் பின் அவர் சொன்ன எதுவும் என் காதுகளில் விளவில்லை, நேராக என் அப்பாவின் பெட் அருகே சென்றேன் அவர் அம்மாவின் கைகளை பற்றியபடி படுத்து இருந்தார்.

நல்லவேளை என் அப்பாவுக்கு சொத்து எதுவும் இல்லை அதைவிட முக்கியமாக அவருக்கு அருகில் என் அம்மா இருந்தார்!.

Featured Image : ssl.c.photoshelter.com

Related Articles

Exit mobile version