மீண்டும் மீட்பர்

மே 18, 3009

ஓடக்கரை வீதி,

பருத்தித்துறை,  

யாப்பாபடுன மாவட்டம்,

ரஜரட்ட பிராந்தியம்

சிரிலங்கா

“அம்மே.. டக் சொல்லி என்ட சாப்பாட்டை தென்ட.. வெலாவ போகுது” சாந்த அவசரப்படுத்தினான். குசினிக்குள் சாந்தவின் அம்மா கீதா குமாரசிங்க,  அவனது lunch box இனை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

“தம்பி, போக முதல் அம்மப்பாட படத்தை Facebookல் போட்டு அகவணக்கம் status போட்டிட்டு  போடா” சாந்தவின் அம்மப்பாவான மேஜர் சாந்தன், இற்றைக்கு நூறாண்டுகளிற்கு முன்னர் தமிழர் படையில் போராடி மரணித்தவர். தன்னுடைய தகப்பனார் சாந்தனின் ஞாபகமாக தான் தன்னுடைய மகனிற்கு சாந்த என்று பெயரிட்டிருந்தாள் கீதா.

சாந்தன் என்று தமிழ் பெயர் வைக்க பயத்தில் “ன்”ஐ வெட்டி எறிந்து விட்டு நல்லிணக்க திருவிழாவில் சங்கமமாகிய தமிழர்களில் கீதாவும் ஒருத்தி. கீதாவின் கணவன் குமாரசிங்கமும், “ம்”க்கு விடை கொடுத்து விட்டு குமாரசிங்க ஆகியதால்தான் அவனிற்கு பருத்தித்துறை நகரசபையில் வேலை கிடைத்தது.

“அம்மே, சரியா ஆறு மணிக்கு பட்டங்கண்ணவாலு” 2009ல் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நாளின் நூற்றாண்டு நினைவுநாளில் பங்குபற்றதான் சாந்த பதறியடித்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். யாப்பாபடுன ரணில் திறந்தவெளி அரங்கில் இடம்பெறும் நினைவு நாளில் தமிழர்களை மீட்க மீண்டும் அவதரித்திருக்கும் மீட்பர் பங்குபற்றப் போவதாக அரசல் புரசலாக செய்தி பரவியிருந்தது.

“இப்பவாவது இவனுக்கு இன உணர்வு வந்ததே, பாட்டனின் ரத்தம் எங்க போறது” கீதா முணுமுணுத்தது சாந்தவிற்கு கேட்டது. சாந்தவின் backpackல் lunchbox ஓடு, தண்ணிப் போத்தலும் Coke canம் வைத்து zip buttonஐ அமத்த, backpack மூடிக்கொண்டது.

“அம்மே, நான் போய்ட்டு என்னங்” கையசைத்து விட்டு, வாசலில் வந்து நின்ற மஞ்சள் நிற பேரூந்தில் ஏறிக்கொண்டான் சாந்த. நினைவுநாளிற்கு யாப்பாபடுன போக பருத்தித்துறையிலிருந்து போவோருக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு பேரூந்து சாந்தவையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. மஞ்சள் நிற பேரூந்தின் பின்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களை பார்த்த கீதா அதிர்ந்து போனாள்

த.போ.க

———————————–

இற்றைக்கு ஐம்பதாண்டுகளிற்கு முன்னர் இருந்த வட மாகாண சபையை, வட மத்திய மாகாணத்துடன் இணைத்து ரஜரட்ட பிராந்தியம் உருவாக்கப்பட்ட பின்னர், நல்லிணக்க முயற்சியாக தமிழ் பெயர்கள் ஒரே தேசிய மொழியான சிங்களத்தில் உள்வாங்கப்பட்டன. தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று அன்றிருந்த வடமாகாண முதலமைச்சர் ஊக்குவித்தது, இந்த முயற்சிக்கு பேருதவியாக இருந்தது.

யாழ்ப்பாணம் யாப்பாபடுனவாக மாற, பருத்தித்துறை மட்டும் தப்பி பிழைத்தது. பாணந்துறை என்பது சிங்கள பெயர் என்றால் பருத்தித்துறையும் சிங்கள பெயர் தான் என்று வாதாடிய சாணக்கிய அரசியல்வாதியால், பருத்தித்துறையின் பெயர் மட்டும் தப்பிப் பிழைத்தது.

பருத்தித்துறை வீதியால் பயணித்த பேரூந்து, யாப்பாபடுன விசாகா வித்தாயாலத்தடியில் நிறுத்தப்பட்டது. சாந்த பேரூந்திலிருந்து இறங்கி யாப்பாபடுன ஆனந்தா கல்லூரியை கடந்து நடந்தான். கடந்த வாரம் இடம்பெற்ற, வேம்படி மகளிர் கல்லூரி விசாகா வித்தாயாலமாகவும், மத்திய கல்லூரி ஆனந்தா கல்லூரியாகவும் பெயர் மாறிய வெள்ளிவிழா கொண்டாட்ட பதாகைகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தன.

யாப்பாபடுனவின் மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மகிந்த, மைத்ரி, சந்திரிக்கா எனும் மூன்று சனாதிபதிகளின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. “அந்த காலத்தில் நாங்க Big Match பார்க்க போகும் போது அந்த இடத்தில சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் என்ற தமிழ் மன்னர்களின் சிலை இருந்ததடா” என்று சாந்தவின் அப்பா குமாரசிங்க சொன்னது அவனிற்கு நினைவிலைகளில் வந்து சென்றது.

சங்கிலிய மன்னனின் உருவச் சிலை (wikimedia.org)

மங்கள ஞாபகார்த்த பொது நூலகத்திற்கு அருகில் ரணில் திறந்தவெளி அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எப்படியாவது இன்று மீட்பரை பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் சாந்த. தன்னுடைய அம்மப்பாவின் காலத்தில் அவதரித்த முந்தைய மீட்பரின் வழிநடத்தலில் அம்மப்பா உட்பட பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்து போராடிய கதையை அம்மே அவனுக்கு ஆயிரம் தடவை சொல்லியிருப்பா.

“அம்மே.. அம்மே என்று கூப்பிடாதே.. அம்மா என்று கூப்பிடுடா” என்று கீதா பல சமயங்களில் அன்பாகவும் சில சமயங்களில் அடித்து சொல்லியும் அவளை அம்மே என்று தான் சாந்த அழைத்தான். பள்ளிக்கூட பாடப்புத்தகம் எல்லாம் அம்மே என்று இருக்க, ஊரில் எல்லா பிள்ளைகளும் அம்மே என்று கூப்பிட, TVயில் காட்டிற “சரத்தும் மீனாவும்” சீரியலிலும் அவங்கள் அம்மே என்று கதைக்க, அம்மேயை அம்மா என்று கூப்பிட நானென்ன “மோடயாவா” என்று ஒரு விறுமத்தில் திரிந்தான் சாந்த.

Backpackல் தொங்கிய தனது earphoneஐ காதில் மாட்டிய சாந்த, சுற்றி ஒருமுறை பார்த்தான். நிகழ்வு முழுவதும் Bluetooth earphone மூலாமாக தான் ஒலிபரப்பப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒலிபெருக்கிகளை மீட்பரின் அமைப்பு தடைசெய்திருந்தது. நிகழ்வு ஆரம்பமாக இன்னும் 20 நிமிடங்களே இருக்க, கூட்டத்திற்குள் புகுந்து நெருக்கியடித்துக் கொண்டு அரங்கத்தின் அண்மையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சாந்தவின் earphoneல் ஒலித்த பாடல், அவனது மண்டைக்குள் ஏதோ செய்தது.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே”

1990களில் வெளியான இளையராஜா என்ற இசையமைப்பாளரின் பாடல் என்று முகவுரை தந்திருந்தார் அறிவிப்பாளர். அந்த பாடல் வரிகளின் அர்த்தம் முழுமையாக சாந்தவிற்கு புரியாவிட்டாலும், அந்த பாடலில் கலந்திருந்த ஒருவித தெய்வீகத்தனம் அவனை ஏதோ செய்தது.

“வீட்ட போனதும், அம்மேயை.. ச்சீ.. அம்மாவை அம்மா என்று கூப்பிடோணும்” உறுதி பூண்டுகோண்டே, அரங்கத்தின் முன்வரிசைக்கு வந்து விட்டான். Backpackஐ திறந்து Cokeஐ எடுத்து ஒரு மிடாய் குடித்துக் கொண்டிருக்க, அறிவிப்பாளர் அடுத்த பாடலை ஒலிக்க விட்டிருந்தார்.

“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே

மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே”

பொக்கற்றுக்குள் வைத்திருந்த சின்ன துவாயை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்து அரங்கத்தின் முகட்டை பார்த்த சாந்தவிற்கு, அரங்கத்தின் முகப்பில் சிரித்து கொண்டிருந்த சிரிக்கும் ரணிலின் படமும் பிரமாண்டமான சிங்கக்கொடியும் ஏனோ அந்நியமாய் தெரிய ஆரம்பித்த வேளையில், earphoneல் அறிவிப்பாளர் முழங்கினார்

“இதோ மீட்பர் வந்து கொண்டிருக்கிறார், அவரோடு அவரின் பன்னிரு தளபதிகளும் வருகிறார்கள்”

 

Related Articles

Exit mobile version