இந்த ஆக்கத்தை வழங்கியோர்
பெண்கள். சமூகத்தில் எப்போதும் எக்காலத்திலும் முக்கிய பேசுபொருளாக மற்றும் அச்சமூகத்தின் இயக்கத்திற்கான அடிப்படையாக இருப்பவர்கள். அவர்களைச் சுற்றியே அச்சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்கம் கொண்டிருக்கும்.
அதனாலேயே புராணங்களும் இதிகாசங்களும் கூட அடிப்படை கதாபாத்திரங்களாய் பெண்களையே கொண்டிருக்கின்றன. ஆகவே, ஒரு சமூகத்தின் இருப்புக்கும் உயிர்ப்புக்கும் பெண்கள் அடிப்படையாகத் திகழ்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெண்களின் வாழ்கை முறை என்பது கடந்த காலங்களில் பாரிய பரிணாம வளர்ச்சியை கண்டு வந்துள்ளது. பெண்களின் அடிப்படை கடமைகள் என்கிற விடயங்கள் வரை அப்பரிணாம வளர்ச்சி பாரிய மாறுதல்களை கண்டு வந்துள்ளது. பெண்களின் அன்றாட வாழ்வு, பொறுப்புக்கள், கடமைகள், உரிமைகள், சுதந்திரம் என அது பல்வேறு தொனிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இருந்தாலும், அவர்களது வாழ்கை முறை அவர்களின் தேக ஆரோக்கியத்தில் எவ்வாறான பங்களிப்பை, தாக்கத்தை செலுத்துகின்றன என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாக இருக்கிறது.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் அதிகம் கல்விகற்றிருக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர். இருந்தாலும் அன்றைய தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், இன்றைய பெண்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு வாழ்கை முறைகளைக் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இன்று இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கே அறுவைச் சிகிச்சைகள் மற்றும் இன்னோரன்ன காப்பு நடவடிக்கைகள் என அங்கலாய்க்கும் பெண்கள், அன்று வெகு சாதாரணமாக பத்து, இருபதென்று குழந்தைகளை தகுந்த வைத்தியசாலை வசதிகளே இன்றிப் பெற்றெடுத்தார்கள் என்பது ஆச்சரியம் அல்லவா? கூந்தல் உதிர்வு, ஊட்டச்சத்து குறைவு, அதிக எடை, இள நரை, இப்படி ஏகப்பட்ட குறைபாடுகளுக்கு மத்தியில் தத்தளிக்கும் பெண்கள் அன்று என்பது தொண்ணூறு வயது வரை சுயமாக இயங்கி இறப்பு வரை ஆரோக்கியமாக இருந்த கதைகளையும் நாமறிவோம்.
எமது தாய் தந்தையர் காலத்தில் எமது அனைத்து வீடுகளிலும் இருந்த பாட்டன் பாட்டிமார், எமது தலைமுறையில் எந்த வீட்டிலும் இல்லாத அளவு பெண்களின் வாழ்கை முறை அதீத மாறுதல்களை கண்டுவந்திருக்கிறது.
இது எவ்வாறான மாற்றம்? கல்வி, தொழில்வாய்ப்பு, இப்படி பெண்கள் முன்னேறத் தொடங்கியதிலிருந்து பெண்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரித்தனவே அன்றி குறையவில்லை. பெண்கள் வரலாற்றில் செய்துவந்த அத்தனை ஊழியங்களுக்கும் மேலதிகமாக அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற போட்டிமிகு சந்தையில் அதீத வேகத்துடன் போராடி முன்னேறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
அன்றைய பெண்கள் அன்றாட வாழ்வில் செய்துவந்த உடலியக்கம் சார்ந்த வேலைகளில் இருந்து இன்றைய தலைமுறைப் பெண்கள் செய்கின்ற வேலைகள் மாறுபட்டதாக இருக்கின்றன.
குடும்ப முகாமைத்துவத்துடன் இணைந்து கல்வி, வேலை என அதிகப்படியாக தலைமேல் இருக்கும் வேலைப்பழுக்கள் நேரமின்மை என்ற முக்கிய பிரச்சினையை தோற்றுவித்திருக்கும் வேளை, தொழில்நுட்பம் என்ற ஒன்று உதவி என்கிற பெயரில் செய்திருக்கும் உபத்திரவமும் இதற்கு இன்னுமொரு காரணம்.
ஆம், சமைக்க, துணி துவைக்க, வீடு பெருக்க, நீரிறைக்க, மாவரைக்க, இப்படி உடலை இயக்கி செய்யப்பட வேலைகள் ஒவ்வொன்றுக்கும் இலகு முறை மின்சாதனங்களை ஒரு ஆளியின் அழுத்தலில் பெற்றுத் தந்திருக்கிறது தொழில் நுட்பம். இவையனைத்தும் இணைந்து பெண்களை இயற்கையாகவே அவர்கள் பெற்ற உடல் ஆரோக்கியம் என்ற இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு கொண்டுசென்றுவிட்டது.
அன்றாட வேலைகளே உடலியக்கத்தை தூண்டி தேக ஆரோக்கியத்தை வலுவூட்டிய வாழ்க்கை முறையில் இருந்து இன்று பிரத்தியேகமாக உடற்பயிற்சிக்கென நேரத்தை ஒதுக்கி இயங்க வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர். மேலே கூறப்பட்ட காரணங்களினால் பெண்களின் ஆரோக்கியம் வெகுவாக குன்றியிருக்கும் இந்தக் காலப்பகுதியில் பல்வேறு புதுப்புது செயற்பாடுகளை பெண்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாக உள்ளது.
உணவு முறை, உடற்பயிற்சி, உளநலம் சார்ந்த செயற்பாடுகள் இப்படி பல்வேறு வழிமுறைகளில் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதை முக்கிய விடயமாக பெண்கள் கடைப்பிடிக்கின்றனர்.
அதிலும் பிரத்தியேகமாக உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது ஆரோக்கியத்தை பேணுகின்ற அளவு பெண்களின் ஆரோக்கிய சிந்தனை வளர்ச்சி கண்டுள்ளது எனலாம்.
இதனை வெறுமனே ஆரோக்கியம் சம்பந்தமான முன்னெடுப்பு என்று சொல்வதை விட, காலப்போக்கில் இது ஒரு அழகியல் சார்ந்த விடயமாக மாறி வருகிறது.
தான் ஆரோக்கியமாக இருக்கும் அதேவேளை, அழகாகவும் இருக்கவேண்டும் என்று இன்றைய பெண்கள் விரும்புகின்றனர். ஆரோக்கியம் என்ற நிலையிலிருந்து இன்று அழகுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் குறிப்பிடத் தக்கது.
சாதாரணமாக உண்ணும் உணவைக்கூட தட்டில் அலங்காரத்தோடு கொண்டுதரும் தலைமுறையில் உள்ள பெண்கள் தமது வாழ்க்கை முறையும் அலங்காரம் பொருந்தியதாக இருக்கவேண்டும் என்று நினைப்பது ஆச்சரியமல்ல.
தமது வீடு, சுற்றம், உடை, உடைமைகள் மட்டுமல்லாது தான் இடம்பெறுகின்ற, பங்கு கொள்கின்ற அனைத்து விடயங்களும் ஏதோவொரு வகையில் அழகியலோடு இருப்பதையே இன்றைய பெண்கள் விரும்புகின்றனர்.
“சாதம் படைக்கவும் செய்திடுவோம் – தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்” என்றான் மகாகவி பாரதி. ஆனால் இன்றைய பெண்கள் இரண்டோடும் சேர்த்து அழகியல் நிறைந்த வாழ்கை முறையையும் செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் விபரங்களுக்கு https://global.amantelingerie.com/collections/sports என்ற இணையியைச் சுட்டவும்.