இந்த ஆக்கத்தை வழங்கியோர்
“ஆள் பாதி ஆடை பாதி” இது என்றைக்கும் சொல்லப்படுகிற ஓர் பழமொழி. எந்தக் காலத்திலும் ஒரு நபரை மற்றவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறவைக்கும், விருப்பத்திற்குரியவராக்கும், அம்சங்களில் அவரது ஆளுமை எவ்வளவு முக்கியத்துவம் பெறுமோ அதேயளவு முக்கியத்துவம் அவரது ஆடை அமைப்பிற்கும் உண்டு.
என்னதான் ஒரே வகையான உணவை உட்கொண்டு வந்தாலும், அதே உணவு அழகிய முறையில் அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்போது, அதில் இன்னும் ஆர்வம் அதிகரிப்பது வழமையே. அதனையே பல்வேறு சமையல் கலை நிபுணர்கள் செய்துகாட்டுவதையும் அடிக்கடி காண்கின்றோம்.
எனவே, ஆடை என்ற அம்சம் ஒவ்வொரு தனிநபருக்கும், அவர்களது ஆளுமை சார்ந்த அம்சமாகவே கருதப்படுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்து ஒருவரின் பண்புசார் விடயங்களை அனுமானிக்கும் முறை இருப்பதனாலேயே, இன்று இடத்திற்கேற்ற வகையில் அணியும் ஆடைகளை வகைபிரித்து அணிகின்ற வழமையைக் காண்கின்றோம். அலுவலகம், நேர்முகத் தேர்வு, களியாட்டங்கள், ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள், சுற்றுலாக்கள் என நிகழ்வுகளின் அடிப்படையில் ஆடையிலிருந்து, அணிகின்ற காலணி முதல் கொண்டுசெல்லும் தோட்பை வரை அனைத்தும் வேறுபடுகின்றன.
அடுத்தவரை கவர்வதற்காக அணியப்பட்ட ஆடைகள், இன்று பாரியளவில் தமது செளகரியத்தை அடிப்படையாக வைத்து அணிகின்ற கலாச்சாரத்தை அண்மித்திருப்பதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்! ஆம், அது ஒரு நல்ல மாற்றமாகவே கருதப்படுதல் அவசியம். எந்த உடையாக இருந்தாலும் அவ்வுடையை நாம் கையாளுகிற விதமும் அவ்வுடை எமக்கு எவ்வளவு பொருத்தமானது என்பதையும் எமது உடல்மொழியே காட்டிக்கொடுத்துவிடும். நாம் செளகரியமாக உணர்கின்ற எந்தவொரு உடையும் எம்மை அழகாகவும், ஆளுமையுடனும் காண்பிக்கும் என்பதில் ஐயமில்லை.
இது சாதாரண உடைகளுக்கு மட்டுமல்ல, உள்ளாடைகளுக்கும் பொருந்தும். “அகத்தின் அழகு புறத்தில் தெரியும்” என்பது பழமொழி. உள்ளம் தெளிவாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் பட்சத்தில் அது தானாகவே எமது புற அழகை மெருகூட்டும் என்பதே அதன் பொருள். அதற்கும் உள்ளாடைகளுக்கும் என்ன தொடர்பு என்றுதானே யோசிக்கிறீர்கள்? இருக்கிறது. தொடர்பு இருக்கிறது. வெளித் தெரியாவிட்டாலும் சிறந்த உள்ளாடைகளின் தேர்வு உங்கள் மனதுக்கு பெருமிதம் அளிக்கக்கூடியது. அதை அடுத்தவர் நேரடியாகப் பார்க்காவிடினும், அவை தருகின்ற தன்னம்பிக்கையை நமது முகத்தினூடு கண்டுகொள்வார்கள்.
பெண்களும் பெண்கள் அணிகின்ற உள்ளாடைகளும் பண்டைய காலம்தொட்டு எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது என்பது நாமனைவரும் அறிந்த உண்மை. பெண்ணை காட்சிப் பொருளாகவும், போகப்பொருளாகவும் சித்தரிக்க முனைகின்ற சமூகத்தில் பெண்ணுக்கான இடத்தை இவ்வாறான படித்தாரங்களிலேயே நமது சமூகம் கண்டுவந்திருக்கிறது.
ஆனால் பெண்களின் இன்றைய நிலை இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் முன்னேற்றப் பாதையில் பயணித்திருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஆளுமை, தொழில்முனைவு, அறிவியல் இப்படி எல்லாவற்றிலும் எந்தவித பால் வேறுபாடுகளும் இல்லை என்கின்ற நிதர்சனத்தை இன்றைய பெண்கள் நிரூபித்தவண்ணமே இருக்கின்றனர். ஆக, உள்ளாடைகள் எனப்படுபவை இனிமேலும் பெண்ணை போகப் பொருளாக சித்தரிப்பதை விடுத்து அவளின் தன்னம்பிக்கைக்கு தோள்கொடுக்கும் சாதனமாகப் பார்க்கப்படும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
உள்ளாடைகள் பற்றிய தகவல்களை பகிர நினைத்த கணத்திலிருந்து என்னை துளைத்துக்கொண்டிருந்த ஓர் கேள்வி, பெண்கள் ஏன் இதனை ஒரு வெட்கமான விடயமாகக் கருதுகிறார்கள் என்பதே. உள்ளாடைகள் விடயத்தில் பெண்களில் ஒரு சாரார் மிகுந்த கவனமும் சிரத்தையும் எடுக்கின்ற வேளை, பெண்களில் பெரும்பாலானோர் அது தொடர்பில் வேண்டிய கவனம் எடுப்பதில்லை. இன்றைக்கும் வேறொரு ஆடையின் மறைவிலே உள்ளாடைகளை உலர்த்துகின்ற பழக்கம் எம்மிடையே இருப்பதை நாமறிவோம். இன்னொருவர் அதனை காண்பதனை வெட்கமாகக் கருதும் நிலை இன்னும் இருக்கிறது. நல்லதுதான். பெண்ணுக்கான அடிப்படை இயல்புகளில் அதுவும் ஒன்றே! வெட்கம் பெண்களில் அணி என்பது நிஜம்! அவ்வுணர்வு பெண்களுக்கு அழகுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை, இருந்தாலும் எம்மை அழகாகவும், தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் மாற்றும் உள்ளாடைகள் பற்றி அறிந்திருப்பது அவசியம் அல்லவா?
பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண் மேலாளர் ஒருவருடன் உரையாடியபோது அவர் கூறிய ஓர் விடயம் புதுமையாக இருந்தது. இணையவழி சந்தைப்படுத்தல் முறைமை வியாபித்திருக்கும் இக்காலகட்டத்தில், அவர்களது சந்தைப்படுத்தல் செயன்முறைக்காக மேற்கொண்ட ஓர் ஆய்வு பற்றி விளக்கியிருந்தார். அதில், உள்ளாடைகள் தொடர்பான சந்தைப்படுத்தல்களில் அதிக வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இரவு அல்லது அதிகாலை வேளைகளிலேயே தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்கிறது அவ்வாய்வு. அதாவது பெரும்பாலான பெண்கள் தங்களது உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் முயற்சியை தனிமையில் இருக்கும்போதே மேற்கொள்கின்றனர். நண்பர்கள், சக தொழிலாளர்கள், குடும்ப அங்கத்தவர்கள் போன்றோர் மத்தியில் வெளிப்படையாக குறித்த இணையத் தளங்களை பார்வையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. இன்றைய பெண்களும் இது தொடர்பில் என்ன மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பெரும் எடுத்துக்காட்டு.
பெண்களே! உள்ளாடைகள் அவற்றின் அளவீடுகளிளிருந்து, அவை ஆக்கப்பட்டுள்ள துணிவகை, அமைப்பு, வடிவம், என பல்வேறு அம்சங்களில் கூர்ந்து நோக்கப்படவேண்டியது. அது உங்கள் ஆரோக்கியம் சார்ந்த விடயம். உங்களது வெட்க உணர்வு உங்களுக்கான சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது.
ஆரோக்கியத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செளகரியமான, அழகிய, உங்களது மனதுக்குப் பிடித்த வடிவத்திலுள்ள, பொருத்தமான உள்ளாடைகள் உங்கள் அன்றாட வாழ்வு மற்றும் அலுவல்களை தெளிவோடும், தன்னம்பிக்கையோடும் தொடர உங்களுக்கு வாய்ப்பளித்து உறுதுணையாக இருக்கும். நான் தேர்ந்தெடுத்த சிறந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன் என்ற எண்ணமே உங்கள் உள்ளத்தை குதூகலிக்க வைக்க வல்லது. அம்மனோநிலை நீங்கள் முன்னெடுக்கின்ற அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு சிறப்பான அதிர்வுகளையே தரும்.
உள்ளாடைகள் என்பவை முகம் சுழிக்கவேண்டிய தலைப்பன்று! பெண்களின் உலகம் பரந்து விரிந்தது. தொழில், அலுவலகம், வீடு, விளையாட்டு, சாகசம், சுற்றுலா, ஆய்வு, அறிவியல் என பல்வேறு தளங்களில் ஒற்றை ஆளாய் பயணிக்கும் பெண்ணுக்கு எப்படி ஒரேவிதமான, பழைய வகை உள்ளாடைகள் பொருந்தும்? இடத்துக்கேற்ற, சூழலின் சுவாத்தியத்திற்கு பொருத்தமான, செய்கின்ற வேலைக்கு ஏதுவான பல்வேறு வகை உள்ளாடைகள் வியாபித்திருக்கும் இக்காலகட்டத்தில், உங்களது தேர்வை நோக்கி தேடல்கொள்ள நீங்கள் தயாரா?
மேலும் விபரங்களுக்கு https://global.amantelingerie.com/collections/bras என்ற இணையியைச் சுட்டவும்.
Cover image: Image Copyright: MAS BRANDS (PVT) LTD (amante)