“ஐயா எங்கட புள்ளை புலி இல்லை! (மரவள்ளி) மையரிக் காலைக்குள் தண்ணி ஊத்தி நின்ற புள்ளை வந்து பாருங்க ஐயா!”
இது தொண்ணூறுகளில் கிழக்கிலங்கையில் கேட்ட ஓர் தாயின் கதறல். யுத்தம் ஏன் நடக்கிறது, எதற்காக இப்போராட்டம், இப்போராட்டம் யாருக்கானது, இப்படி எதுவும் அறியாத ஓர் ஏழைத் தாயின் ஓலம்!
யுத்தகாலங்களில் தங்களது பிள்ளைகளை இழந்து தவித்த தாய்மாரின் துன்பங்களுக்கு இச்சம்பவம் ஓர் சான்று. பாதுகாப்புப் படை மற்றும் விடுதலைப்புலிகள் மட்டுமல்லாது பல்வேறு அமைப்புக்களும் விசாரணை அல்லது ஆட்சேர்ப்பு என்ற முறையில் கொண்டுசென்ற சுமார் 65,000 பேரில் இன்னும் விடுவிக்கப்படாத தங்கள் பிள்ளைகள், இதுவரை என்ன ஆனார்கள் என்ற தகவல் இல்லாமலும் இன்றும் அரசிடம் நீதிகேட்டு அகிம்சைப் போராட்டம் நடத்தும் தாய்மார்கள் இதுவரை கடந்துவந்த துன்பங்கள் ஏராளம்
யுத்தத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்
வயிற்ருப் பிழைப்பிற்காக சென்ற இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட மகன் எங்கே? எந்தச் சிறையில் அடைபட்டிருக்கிறான்?, உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்பது கூடத் தெரியாமலும், இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் கோரமாகக் கொல்லப்பட்டு கடலில் வீசியெறியப்பட்டு கரையொதுங்கிய தனது மற்றைய மகனை அடக்கம் செய்துவிட்டும், தனது ஏனைய உறவுகளுக்கு எந்த நேரம் என்ன ஆபத்து வருமோ என்றும் ஏங்கிக்கொண்டிருந்த ஓர் தாய்க்கு தனது மூன்றாவது மகனும் இப்படி இரும்புச் சப்பாத்துகளுக்குள் அகப்பட்டுக் கொண்டதை எப்படி சீரணிக்க முடியும்?
தங்களுக்கு காவலரண்களாக இருக்கவேண்டிய ஆண்களை; அது கணவரோ, தந்தையோ, மகனோ, சகோதரனோ, காரணமே இல்லாமல் இழந்துவிட்டு, இருக்கின்ற வீடு வாசலையும் இழந்து, முகாம்களில் அவர்களில் பலர் காலம் கடந்தனர்.
தனது இரண்டு மகன்களையும் இவ்வன்செயல்களில் இழந்த *லட்சுமி அம்மாளின் புலம்பலில்…
“1987இல் ஏற்பட்ட வன்செயல். அதாவது எனது மகனான ரெட்ணம் ஜெயசீலன் என்பவர் இருப்பிடத்தை விட்டு (இன்ஸ்பெக்டர் ஏத்தம்) அக்கரைப்பற்று நோக்கி சென்று வரும் வழியில் ஊறனி அறுபதாம் கட்டை காட்டு வழியில் இனம் தெரியாத நபரினால் இடை மறித்துசுட்டுக் கொல்லப்பட்டார்.
2007ம் ஆண்டு எனது மகனான ரெட்ணம் பதமசீலன் என்பவர் வீட்டிலிருந்து மாலை நேரம் அவரது அண்ணா வீட்டிற்கு செல்லும் போது இன்ஸ்பெக்டர் ஏத்தம் பாடசாலைக்குமுன்னால் இனம்தெரியாத நபர்களினால் எனது சுட்டுக் கொல்லப்பட்டார். எனது அப்பாவி மகன் என்ன செய்தார் எதுவும் அறியாத எனது மகன் எங்கே? எனது இரண்டு பிள்ளைகளின் உயிரை பறித்தவர்கள் யார்?”
புத்திரசோகம் என்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் படிப்பறிவில்லாத, வறுமையில் வாடும் தாய்மாரின் நிலைமை அவ்வளவு கொடியது. காணாமல் போன தங்களது பிள்ளைகளைத் தேடி அவர்கள் படும் பாடு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தனது பிள்ளையை பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும், கற்றறிந்த மக்கள் சபையிலும் காணத் தவிக்கும் தாய்க்கு, அவனை சிறைச்சாலைகளிலும், படுகொலைத் தலங்களிலும், காவல் நிலையங்களிலும் காண்பதற்காய் தவம் கிடக்கும் நிலை எவ்வளவு கொடியது?
“உங்கள் மகனை அந்தச் சிறைச்சாலையில் கண்டோம்” என்று யாரோ சொல்லும் தகவலை நம்பி தனது தள்ளாத வயதிலும் ஊர் ஊராக, முகாம்களுக்கும், அலுவலகங்களுக்கும் அலைந்து திரிந்த தாய்மாரின் வேதனை அவர்களுக்கே தெரியும்.
இப்படித் தேடித் தேடி அலைந்தும் இறுதிவரை காணாமல் போனோர் என்ற பட்டியலிலேயே தங்களது பிள்ளைகளின் பெயரும் சேர்வதும் பின்னர் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து அரசாங்கமே அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதும் இன்றுவரை அவர்களுக்கு நடக்கும் கொடுமையே
தங்கள் வீட்டிலுள்ள ஆண்களை இவ்வாறு இழந்துவிட்டு யுத்த சூழலில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த *மாலதி ஒவ்வொரு நாளும் தாங்கள் படும் வேதனைகளை கூறுகையில்
“தினமும் அதிகாலையில் வளவுகளின் ஊடாக வேலிக் கம்பியை வெட்டிவிட்டு ரோந்து வருவார்கள். தினமும் வரும் போது வேறு வேறு இடத்தில் கம்பிகளை வெட்டி வருவார்கள், வௌியில் வருவது குளிப்பது எல்லாம் கஸ்ரமாக இருந்தது. எமது வீட்டில் வௌியில் வாங்கு உள்ளது. இரவு வேளையில் அதில் இருந்து சாப்பிடுதல் வெற்றிலை சப்பி துப்புதல் போன்ற செயற்பாடுகள் விடிந்ததும் தெரிய வரும். இரவுவேளையில் நித்திரையில பயமாக இருக்கும். இவ்வாறு இரவும் பகலும் சுழன்றுகொண்டே இருந்தது.”
தங்களது உயிருக்கும், மானத்திற்கும் எப்பொழுது ஊறு வருமோ என்று நிதம் நிதம் அச்சத்தோடு வாழ்ந்த இப்பெண்ணின் வாக்குமூலம், பாதுகாப்பின்றி, அடிப்படை வசதிகளின்றி, ஆதரவுக்கு ஆளின்றி அல்லல்பட்டு மாய்ந்துபோன லட்சோபலட்ச பெண்களின் அவலங்களுக்கு ஓர் ஆதாரம்!
பாதுகாவலர்கள் இல்லாத பெண்களை இச்சமூகம் எப்படிப் பார்க்கும் என்பது நாமனைவரும் அறிந்ததே. காணாமல்போன தமது உறவுகளை தனியாளாய் தேடி அலையும் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்? அவர்கள் எத்தனை புதிய மனிதர்களையும், அதிகாரிகளையும் சந்திக்க நேரிடும்? அதிகாரம், பணபலம், சமூக அந்தஸ்து என்று எதுவுமே இன்றி பாசத்தின் பெயரால் பாடுபடும் பெண்களை பெரும்பாலான ஆண்களும், ஏன் சில சமயம் பெண்களும் போகப் பொருளாகவே பார்க்கின்றனர். தமது சொந்தங்களின் உயிர்காக்க, மூன்றாம் நபர்களுக்கு அடிபணிந்து, தனது மானம், கெளரவம், பணம் போன்றவற்றை பணயம் வைக்கும் துர்ப்பாக்கிய நிலை கொடியது.
மரவள்ளிக் காலைக்குள் தண்ணீர் பாய்ச்ச சென்ற தனது மகனை சுற்றிவளைத்து அதிகாரிகள் கைதுசெய்ய, தன் மகனை மீட்க சென்ற *கமலம்மாளுக்கு நடந்த கொடுமை இது
“பின்னர் அம்மா முகாமிற்கு சென்று பெரியவனோட கதைத்தோம். ஐயா என்ட புள்ள புலி இல்லை வயல் வேலைக்குபோற இரவைக்கு காவலுக்கு போக வேண்டும். புள்ளைய விடுங்கோ எனக் கேட்ட போது. நான வாறனே காவலுக்கு என்றுசொன்னான். அம்மாவும் ஏனைய பெண்களும் இரவு வரை காத்து நின்றுஏமாற்றத்துடன் திரும்பியது இறைவா உனக்குத் தெரியும்.”
இப்படிப்பட்ட இழிசொற்களும், புறக்கணிப்புக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இடம்பெறும் அன்றாட நிகழ்வு. இவ்வாறான நடைமுறைகள் எந்தப் பெண்ணுக்கும் நடப்பதை ஏற்க முடியாது. பெண்ணானவள் இவ்வாறான உபசாரங்களுக்கு தகுதியானவள் அல்ல! அவளுக்கான பாதுகாப்பு, அரவணைப்பு, மன நிம்மதி அனைத்தும் அவளுக்கு வழங்கப்படல் வேண்டும்!
உயிரை இழப்பது ஒருநிமிட வலி, ஆனால் வறுமையில் வாடி, பாதுகாப்பிழந்து, உறவுகளைத் தேடி, உடமைகளை இழந்து, அல்லல் பட்டு, அலைந்து திரிந்து ஒவ்வரு நாளும் விடியல் வருமென்று ஏங்கித் தவம்கிடந்து, தன்னையும் காத்து தன்னை நம்பியிருக்கும் பிள்ளைகளையும் சீராட்டி, மரணம் வரை வாழ்க்கையை உருட்ட வேண்டிய கட்டாயத்தில் அலைபாயும் பெண்களின் நிலை ஆயுள் தண்டனை அன்றி வேறில்லை.
எமது பங்கு
காணாமல் போனோர் தொடர்பான முன்னெடுப்புக்களில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன என பலர் வாதிடுகின்றனர். சாதாரண குடிமக்கள், ஆர்வலர்கள் மற்றும் வடக்குக் கிழக்கில் வாழும் பெருமளவான பெண்களின் வன்முறையற்ற போராட்டங்கள் இவற்றுக்கு ஆதாரம் எனலாம்
1990 களின் முற்பகுதியில் இருந்து இலங்கை அரசாங்கம் பலமுறை காணாமற்போன ஆட்கொணர்வு ஆணைகளை ஆரம்பித்துள்ளது. இவற்றில் சில இன்றைய தினம் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அரசு இதுதொடர்பில் பல அதிர்ச்சிதரும் தகவல்களைக் கொண்டிருந்த போதிலும், இந்த விசாரணைகள் காணாமல் போனோர் மற்றும் தப்பிப் பிழைத்தோர் குறித்த தகவல்களை மிகச் சொற்ப அளவிலேயே வழங்கியுள்ளது.
கடந்த வருடம் இயற்றப்பட்ட காணமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) இப்பிரச்சினைக்கான சிறந்ததொரு தீர்வை முன்வைக்கும் என பல்வேறுபட்ட தரப்பினரும் எதிர்பார்த்திருந்தாலும், குறித்த சட்டமூலம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தோடு அனைவரது பாதுகாப்பிற்கான சர்வதேச மாநாட்டை உள்ளடக்கிய ஒரு சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியது நிலைமையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளுவதாகவே உள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான முன்னெடுப்புக்களில் அரச தரப்பில் காணப்படும் பின்னடைவுகள் நாமறிந்ததே. இருந்தும், இவ்விடயம் தொடர்பில் சாதாரண குடிமக்களாகிய காணாமல்போனோரின் தாய்மார் மற்றும் மனைவி, பிள்ளைகள் முன்னெடுத்த அமைதிவழிப் போராட்டங்கள் பாராட்டத்தக்கவை. எந்தவொரு சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைக்கும் வேண்டிய அடிப்படைத் தீர்வை அரசிடமிருந்து எதிர்பார்ப்பினும், பெரும்பாலும் மக்களின் முயர்ச்சிகளே வெற்றிகளை கண்டிருப்பது கண்கூடு.
போராட்டங்கள் நல்வாழ்வுக்காக என்றால், பல தசாப்தங்களாக அவ்வாழ்வை இழந்து, மனம் பேதலித்து, ஏக்கத்தில் கழியும் இப்பெண்களின் வாழ்வுக்கு நமது சமூகம் என்ன பதில் சொல்லப்போகிறது?
இந்தச் சேதிகள் அத்தனையும் ஒரு துளிதான். இன்னும் கணக்கில் வராத எத்தனையோ அவதிகளும், அவமானங்களும், மரண ஓலங்களும் வரலாற்றுப் பக்கங்களில் கறைகளாகப் படிந்தே இருக்கும். யுத்தம் முடிவுக்கு வந்து இத்தனை வருடங்களானாலும், அவர்கள் இன்னும் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியவண்ணமே இருக்கின்றனர். இதுகுறித்து எமது சமூகம் தீர சிந்திக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலைகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் போதிய அறிவும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும்! ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், அரச தனியார் அமைப்புக்களும் இதற்காக ஒன்றுபட வேண்டும்! இன்னுமொரு கொடிய யுத்தம் இப்படி விடை அறியப்படாத கேள்வியாய் கோடிக்கணக்கான உயிர்களை காவுகொண்டு முடியும் அவலம் இனியும் ஒருமுறை தொடராது இருக்கட்டும்!
கட்டுரையில் மேற்கோளிடப்பட்டுள்ள நிஜ வாழ்க்கை வாக்குமூலங்கள் memorymap.lk எனப்படும் சமூக நினைவூட்டல் தளத்திலிருந்தும் Herstories நிகழ்ச்சித் திட்டத்திலிருந்தும் பெறப்பட்டவை
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
Featured Image : s.yimg.com