வழங்குவது
கல்வி என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் இலங்கையரைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பநிலை தொடக்கி பல்கலைக்கழகம்வரை ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி போன்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவானதாகவும், அனைவராலும் ஆர்வத்துடனும் போட்டி மனப்பான்மையுடனும் முறையான கல்வித் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பிட்டளவு வாய்ப்புக்களை பாரியளவு மக்களுக்கு வழங்குவதில் இலங்கை போன்றதொரு நாடு எதிர்நோக்கும், சமூக, பொருளாதார சவால்களின் விளைவாக மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது வாய்ப்புக்களைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் நிலையையும் நாமறிவோம். ஏழை விவசாயி ஒருவரது பிள்ளை கூட தனது திறமையை வெளிப்படுத்தி கல்வியில் உயர் மட்டங்களை அடையலாம் என்ற நிலையில் இன்று இருக்கின்ற இலங்கையின் கல்வியானது கடந்த காலங்களில் ஆக்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இலங்கையின் கல்வித்துறையின் வரலாறு
கிமு 6ஆம் நூற்றாண்டில் கல்வி எனப்படுவது பௌத்த விகாரைகளையும், துறவி மடங்களையுமே ஆக்கிரமித்திருந்தது. அக்காலத்திலேயே கல்வி, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் போன்றவை சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் துறவிகளுக்கும் பிக்குகளுக்குமே போதிக்கப்பட்டன. மேலதிகமாக வசதிபடைத்த, செல்வாக்குள்ளவர்களின் பிள்ளைகளுக்கு துறவிகளால் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மதம் சார்ந்த கல்வியோடு, உலோக வேலை, நெசவு, கட்டிடக்கலை, மரவேலை, ஓவியம் சிற்பக்கலை போன்ற விடயங்களே கற்றுக்கொடுக்கப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் வாழ்ந்த ஏனைய மக்களுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு அற்ற சாதாரண மக்களாகவே வாழ்ந்துவந்தனர். காலனிய ஆட்சி இலங்கையை ஆட்கொள்ளும் வரை இலங்கையின் கல்வி முறைமை இவ்வாறே இருந்தது.
16ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயர் வருகையின் பின்னர் இலங்கை மக்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொள்ள ஓர் வித்தியாசமான வாய்ப்புக் கிட்டியது என்பதே உண்மை. போத்துக்கேயர் ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதனை நோக்காகக் கொண்டு ஆரம்பித்த போர்த்துக்கேய மிஷனரிகள் பின்னர் ஒல்லாந்தரின் வருகையின்போது கிறிஸ்தவ ஆரம்ப நிலைப் பாடசாலைகளாக அவை தொற்றம்பெற்றன. ஒரு நூற்றாண்டுகாலம் நிலைத்துநின்ற இப்பாடசாலைகள் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கில மொழிக் கற்கைகளை வழங்கியது.
ஆங்கிலம் என்றதுமே தெறித்து ஓடுகின்ற கலாச்சாரம் அன்றும் இருந்ததனாலோ என்னவோ இப்பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் அளவு மிகச் சொற்பமாகவே இருந்தது. கோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, 1836 இல் ஒரு நிலையான அரச கல்லூரி அமைப்பை பிரித்தானியா ஸ்தாபித்தது. இன்றுவரையில் தொடரும் அரச நிதியில் இயங்கும் பாடசாலை அமைப்புக்கு இது வழிகோலியது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் உள்ளுர் மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. எனவே, பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரும் வீதமும் அதிகரித்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்கள் பிரித்தானியாவினால் ஸ்தாபிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஏனைய மத பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இருந்தபோதும், கல்வியை பெறுவது ஆண்களுக்கு இலகுவாக இருந்தபோதும் அது பெண்களுக்கு சாத்தியப்பட்டமை மிகக் குறைவே! 1942இல் இலங்கையின் கல்வி இலவசமாக்கப்பட்டதை அடுத்து, அரச பாடசாலைகள் அனைத்திலும் தேசிய மொழிமூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னான காலப்பகுதியில் 60% சதவீதமான பாடசாலைகள் அரசினாலேயே இயக்கப்பட்டன. 1980களில் இலங்கையில் முதன்முதலாக சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று பெருமளவில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ள இலங்கையின் கல்வி முறைமையில் 10,012 அரச பாடசாலைகள் இயங்கியபோதும், தனியார் பாடசாலைகளின் வளர்ச்சியும் அவற்றுக்கான கேள்வியும் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளமை கண்கூடு. இவற்றுள் தேசிய பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்ற தனியார் பாடசாலைகளும், பிரித்தானிய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்ற சர்வதேச பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன. இலங்கையிலுள்ள பெரும்பாலான சர்வதேச பாடசாலைகள் தமது இரண்டாம் நிலைக் கல்வி பெறும் மாணவர்களை, எடெக்ஸல் (Edexcel) அல்லது கேம்ப்ரிஜ் (Cambridge), IGCSE சாதாரண, உயர்தர துணை மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தயார்படுத்துகின்றன.
இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலம்
இன்று உலகளாவிய ரீதியில் கல்வி கற்கும் முறைமைகள் எமது கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவு மாற்றத்தை கண்டுள்ளது. திறன்பேசிகள், கணினிகள், மடிக்கணினிகள், இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட எண்முறையான கற்றல் உபகரணங்கள் போன்ற பல்வேறுபட்ட பரிணாமங்களில் வளர்ச்சிகண்டுள்ள சர்வதேச கற்கை முறைமைகளோடு ஒப்பிடுமிடத்து, இலங்கை இன்று இருக்கின்ற நிலை மிகவும் பின்தங்கியே உள்ளது என்பதில் ஐயமில்லை.
அந்தவகையில் நோக்கும்போது காலணித்துவத்தின் பின்னரான இலங்கையின் கல்வித் திட்டம் மற்றும் கல்வி கற்றல் முறைமைகளில் புதிய அணுகுமுறைகளின் வருகை எந்தவிதமான முன்னேற்றமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை. கடந்த ஐம்பதாண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி முறைமைகளில் பாரிய மாற்றம் எதுவும் நடைபெறவில்லை எனவே கூறலாம். உலகத் தரத்தோடுகூடிய கல்வி முறைமைகளை பின்பற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வகையில் பாடசாலைகளில் கணினி கூடங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றபோதும், அவை உரிய விளைவுகளை கொடுப்பதில் பல்வேறு பின்தங்கிய நிலைகள் காணப்படுகின்றன.
இலங்கையின் பொருளாதாரம் இதற்கு ஓர் மிகப்பெரும் காரணியாக இருந்தபோதும், கல்வியியலாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடுகூடிய கல்வி முறைமையின் முன்னேற்றம் மற்றும் அதன் அவசியம் பற்றி அறிந்திராமையும், அவ்வாறான கற்கை நெறிகளை போதிக்கக்கூடிய ஆசிரிய வளம் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
கல்வி முன்னேற்றத்தை டிஜிடல்மயப்படுத்துகின்ற செயல்முறையானது, மூன்று படித்தரங்களைக் கொண்டிருக்கின்றது.
- முதலாவது – VCR, தொலைக்காட்சிகள் போன்ற ஓடியோ – வீடியோ கருவிகள், CD-ROM, குறைந்த வேக இணைய தொடர்புகள், கணினி விகிதத்திற்கு அதிகமான மாணவர் மற்றும் தேவையான தகவல் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட இரண்டு ஆசிரியர்கள் போன்றவற்றையும்,
- இரண்டாவது – மல்டிமீடியா புரொஜக்டர்கள், அதிவேக இணைய தொடர்புகள், கணினி விகிதத்திற்கு குறைந்த மாணவர் போன்ற மிகவும் முன்னேற்றகரமான கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட போதியளவு ஆசிரியர்கள் எனவும்
- இறுதிப் படித்தரம், ஆசிரியர் முன்னெடுப்பு கல்வி அல்லாது மாணவர் வழிநடாத்தும் கல்வியாகவும் இனங்காணப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்க, இலங்கையானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கல்வியின் முதல் படியின் பெரும்பாலான பகுதியையே இன்னும் தாண்டவில்லை என்பதுதான் வேடிக்கை.
அதுமட்டுமல்லாது சர்வதேச ரீதியில் உள்ள மாணவர்கள் அறிவைப் பெறுவதற்காகவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கவும், வாய்ப்புக்களை நாடவும், தகவல் தொழில்நுட்பத்தை, சமூக வலைத்தளங்களை, யூடியூப் போன்ற சாதனைகளையும் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் அவர்களது தேடல் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது. புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும், கல்வியின்மூலம் தமது வாழ்க்கை மற்றும் சமூகத்திற்கு தேவையான உள்ளீடுகளை வழங்கவும் அவர்கள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இதுவே அவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கிறது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் வினாத் தாள்களையும், அவற்றிலுள்ள கேள்விகளுக்கான குறிப்பிட்ட பதில்களையும் மட்டும் உள்வாங்கி அதன்மூலம் தமது கல்வி என்கின்ற இலக்கை அடைகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் தேடல் முடக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர்கள் பரந்து விரிந்த உலகை நோக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் செய்யப்படுகிறது. முறையான, முன்னேற்றமான, ஆரோக்கியமான வழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இலங்கையர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தத் தவருகின்றமைக்கு, அவற்றை முறையாக கையாளும் விதிகளை பாடசாலை மட்டக் கல்வித்திட்டம் கட்டமைக்காமையே எனலாம். உரிய விதத்தில் உரிய தேவைக்காக, சிறந்த நிலைபேறான விளைவுகளை பெரும் வகையில் மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வியோடு சேர்ந்து ஊட்டப்பட எமது கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.
5 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி. 92% சதவீத தேசிய கல்வியறிவு, ஆரம்ப பாடசாலையில் இணையும் மாணவர்கள் 99% சதவீதமாகும்,மிகுந்த போட்டித் தன்மை கொண்ட பொதுப் பரீட்சைகள். அத்தோடு, சிறந்த சித்திகளைப் பெறுவதற்காக, மாணவர்கள் தமது பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் வகுப்புகளை நாடுதல் என எமது கல்வி முறைமை படுவேகமாக சென்றுகொண்டிருக்கும் வேளை, தகவல் தொழில்நுட்பத்தின் நுழைவு இலங்கையின் கல்வி முறைமையில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆரோக்கியமான கல்வி இந்திய இலங்கைக்கு காலத்தின் தேவை.
மேலதிக தகவல்களுக்கு