இலங்கையின் இளைய சமுதாயமும் எதிர்காலமும்!

இலங்கைத் திருநாட்டின் இளைய சமுதாயம் கடந்த தலைமுறைகள் கடந்துவந்த வரலாற்றோடு ஒப்பிடுகையில் மாறுபட்ட கலாசாரத்தை கொண்டதாகவே அறியப்படுகிறது. போன தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி உலகு இதுவரை கண்ட அனைத்துத் தலைமுறை இடைவெளிகளைவிட பெரியது. காரணம், அன்றைய தலைமுறைகள் தமது இளமையின் நீண்ட பாகத்தை யுத்தம் என்ற கசப்பான அனுபவத்தினுள் தொலைத்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இனி வருகின்ற இளைஞர்களுக்கு யுத்தத்தின் நடைமுறை இன்னல்கள் என்னவென்பதும் அதன பாரதூரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய இளைஞர்களுக்கு பக்கபலமாக தொழில்நுட்பம் என்கிற பரந்த உலகொன்றும் இருக்கிறது. அது பலமா, சாபமா என்கின்ற கேள்விக்கும், இளைய தலைமுறையை நோக்கி தொடுக்கப்படவிருக்கும் இன்னுமொரு போருக்கான திட்டங்களை இன்றைய இளைய சமுதாயம் திறம்பட கையாளுமா என்கின்ற சந்தேகத்திற்கும் விடைகாண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பெரும்பாலும் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக பின்னப்பட்ட பிரிவினைவாத நிகழ்ச்சித் திட்டங்கள், சாதாரண மக்களைச் சென்றடையும் போது இனம், மதம், மொழி, நிறம், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு சாயங்களால் அவை மறைக்கப்பட்டே கொண்டுசெல்லப்படுகின்றன. ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இம்மிலேனிய உலகுவரை இந்நியதி மாறவில்லை என்பதுதான் உண்மை, மாறாக பாரியதொரு பரிணாம வளர்ச்சியை கண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம்

Image : abc.net.au

இலங்கையில் நடந்தேறிய முப்பது வருடகால யுத்தமும், இன்றும் இலங்கையில் தலைவிரித்தாடுகின்ற சமூகங்களுக்கிடையிலான வெறுப்புணர்வு மற்றும் இனங்களுக்கிடையில் தூண்டிவிடப்படும் திட்டமிடப்பட்ட பிரச்சினைகள் போன்றவை அப்பரிணாம வளர்ச்சியின் எச்சங்களே! ஒருதலைமுறையே தங்கள் வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களை யுத்தம் நிர்ணயித்த விதியோடு வாழ்ந்து முடித்து, இன்று நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் வேளையில், அடுத்த தலைமுறையின் மூச்சைத் திணறடிக்கும் இன்னுமொரு கொடூரம் துளிர்விட்டுவிடும் அபாயமும் எம்மைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம், இளைஞர்கள், இலங்கையின் சமூக பொருளாதார நிலைமைகள் போன்ற வேறுபட்ட அம்சங்களின் சிறப்பான ஒருங்கிணைவே இந்நாட்டில் எதிர்கால சந்ததியின் சுமுகமானதும் சிறப்பானதுமான இருப்புக்கு கைகொடுக்கும். அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் சம்பவங்களைப் பொறுத்தவரையில், சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் அதன் பயன்பாடு போன்றவை இவ்விலக்குக்கு எந்தவகையில் பலம் சேர்க்கிறது?

போர்ச்சூழலில்  மட்டுமன்றி போருக்குப் பின்னான காலப்பகுதிகளிலும் பெரும்பாலான இலங்கையின் இலக்கியங்கள் போர் மற்றும் சமாதானம் போன்ற பேசுபொருட்களை அடிப்படையாக வைத்தே வெளிவந்தன என்பது கண்கூடு. அதாவது, தாங்கள் எந்தச் சூழலில் வாழ்ந்தோமோ, அதே சூழல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே இலக்கியங்கள் பிறந்தன. அக்கலாசாரத்தில், எமது நாட்டுக்கே உரிய கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான கலை வடிவங்கள் மிகச் சொற்பமான அளவிலேயே வெளிவந்தன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அன்றைய தலைமுறையின் முக்கிய ஊடகமாக இருந்த நூல்கள், தொலைகாட்சி நாடகங்கள் போன்றவற்றில் அவை பிரதிபலித்தன. அதுபோன்றே இன்றைய தலைமுறையின் முக்கிய கருத்துப் பரிமாற்றல் ஊடகமாகத் திகழும் சமூக வலைத்தளங்கள் இக்காலகட்டத்தில் அதிகம் பேசப்படுகின்ற, சமூகத்தில் அதிக தாக்கத்தை செலுத்துகின்ற விடயங்கள் பற்றி கருத்தாடப்படும் களமாக இருக்கின்றது

இருந்தாலும்

இந்நிலைமை யாழில் இருந்துவந்த குடிநீர் மாசு தொடர்பான பிரச்சினையை சிறிய அளவில் சமூக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவந்த இளைஞர்களின் உதாரணம் இதற்குச் சாலப் பொருந்தும். அவர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு, நாட்டின் ஜனாதிபதி வரை சென்று இறுதியில் அங்கு குடிநீரை மாசுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எதிரான வர்த்தமானி ஒன்றே வெளியிடப்பட்டது சமூக ஊடக வலைத்தளங்களூடு இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைபேறான நடவடிக்கைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இவ்வாறான செயற்பாடுகளுக்கான வழிமுறைகள் முறையாக ஆராயப்பட்டு அமுல்படுத்தப்படல் அவசியம். அதற்கான பொறுப்பை அரசிடமிருந்து எப்போதும்போல் எதிர்பார்ப்பதை விடுத்து, சமூகப் பொறுப்புள்ள அனைவரும் இது தொடர்பில் ஆராய்ந்து வழி காணவும், அதனை அமுல்படுத்தவும் தனியாள் ரீதியிலிருந்து சமூகம் வரையிலான பல்வேறு படிநிலைகளில் பங்களிப்புச் செய்தல் வேண்டும்.

குறிப்பாக;

மாணவப் பருவத்திலிருந்தே வாழ்க்கைக்கு உபயோகமான, தங்களை எப்பொழுதும் ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய கல்வி முறைமைகளும், ஒழுக்க விழுமியங்களும் வீட்டிலிருந்தே பிள்ளைகளுக்கு பெற்றோராலும் குடும்ப உறவுகளாலும் ஊட்டப்படுதல் வேண்டும. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மனித விழுமியங்களின் அவசியம், எமது கலாசாரம், பண்பாடு போன்ற அம்சங்களின் அறிமுகமும் அதன் நோக்கமும் விதைக்கப்படல் வேண்டும்.

வெறுமனே பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை மாத்திரம் சேகரிக்கும் பட்டங்கள் மட்டுமல்லாது, தங்களது நாட்டின் தன்மைக்கேற்ற, வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய கைத்தொழில், விவசாயம், உற்பத்தி போன்ற தொழில்முறைக்கல்வியும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

இலங்கைத் திருநாட்டில் உள்ள நிறைவான இயற்கை மற்றும் மனித வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி நாட்டின் வரலாறு கலாசாரம் போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்த முப்பதாண்டுகால யுத்தம் போன்ற இன்னுமொரு கசப்பான அனுபவம் எம்மையும் எமது இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் தவிடுபொடியாக்கிவிடாமல் இனிவரும் காலங்களில் நாம் எதிர்நோக்கவிருக்கின்ற, நுட்பமாகவும் தூரநோக்குடனும் அணுகவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளில் தெளிவோடு இயங்கவேண்டிய இளைஞர்களை வளப்படுத்துவோமாக

புதியதோர் உலகம் செய்வோம்

அனுசரணை : Community Memorialization Project

Featured Image : mintpressnews.com

Related Articles

Exit mobile version