டேவிட் பூன் என்றொரு ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வீரர் இருந்தார். பார்ப்பதற்குச் சிறு யானைக்கன்றைப்போல் தோன்றுவார். ஆனால் அவர் மட்டைசுழற்றும் அழகும் லாவகமும் அத்துணை எழிலோடிருக்கும். தொடர்த் தாக்குதலின் மூலம் எதிரணியைத் துவளச்செய்து ரன்களைக் குவிப்பார். அதற்காகவே அவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.
அவர்மட்டுமல்ல, இன்சமாம்-உல்-ஹக், அர்ஜுனா ரணதுங்கா, ஷேன் வார்னெ என்று இன்னும் பல திறமைமிகுந்த வீரர்கள் கொழுக்மொழுக் தோற்றத்துடன் அருமையான கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். அவர்களுடைய சாதனைகளுக்குத் தொப்பை ஒரு தடையாக இருந்ததில்லை.
ஆனால் இன்றைக்கு இவர்கள் இளைஞர்களாக இருந்தால், இப்போதைய கிரிக்கெட் அணிகளில் இடம்பிடிப்பார்களா என்பது சற்று ஐயத்துக்குரியதுதான். இன்றைய கிரிக்கெட்டின் தேவைகள் மாறிவிட்டன, ஆகவே, திறமைக்கு இணையாக, ஃபிட்னஸ் எனப்படும் உடல்தகுதியும் கட்டாயத் தேவையாகிவிட்டது.
காரணம், முன்புபோல் கிரிக்கெட் அவ்வப்போது விளையாடப்படும் ஆட்டமில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களில் சர்வதேசப்போட்டிகளும், ஐபிஎல்போன்ற தனிப்பட்ட போட்டித்தொடர்களும் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், வீரர்கள் ஆண்டுமுழுக்கத் தொடர்ந்து விளையாடவேண்டியிருக்கிறது.
மாறிவிட்டது கிரிக்கெட்
மாறியது எண்ணிக்கைமட்டுமில்லை; வீரர்களிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களும்தான். இருபது ஓவர்களில் இருநூறு ரன்கள், ஐம்பது ஓவர்களில் முந்நூறு போன்றவை இப்போது சர்வசாதாரணமாகிவிட்டன; ஆகவே, எல்லாரும் ரன் எடுக்கவேண்டும், தாவிப் பந்தைத் தடுக்கவேண்டும், நன்கு ஓடவேண்டும், ஒருவர் சொதப்பினாலும் ஒட்டுமொத்த அணியும் பாதிப்புக்குள்ளாகும், ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள், அது ஆட்டத்துக்கு ஆபத்து.
இதனால், கிரிக்கெட் வாரியங்கள் தங்களுடைய அணியில் விளையாடும் வீரர்களுடைய உடல்தகுதியை முக்கியத்தகுதியாகக் கருதத்தொடங்கியிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் உடல்தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான் அணியில் இடம்பெறமுடியும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறார்கள்.
உடல்தகுதி முக்கியம் என்பதில் ஐயமில்லை; ஆனால், அதைமட்டும் அளவுகோலாகக்கொண்டு திறமையுள்ள வீரர்களை நிராகரிப்பது சரிதானா? சமீபத்தில் கிரிக்கெட் உலகைத் தாக்கியுள்ள புதிய சர்ச்சை இது.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் மொஹம்மது சாமி, அம்பாடி ராய்டு ஆகிய இரு வீரர்கள் ‘யோயோ பரிசோதனை’யில் தோல்வியடைந்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்கள். ‘உடல்தகுதியை மேம்படுத்திகிட்டுத் திரும்ப வாங்க’ என்று அவர்களை அனுப்பிவைத்துவிட்டது இந்திய அணி.
இது அந்த வீரர்களுக்கு இழப்புதான்; அவர்கள் தங்கள் உடல்தகுதியை முன்னேற்றிக்கொள்ள இது ஒரு நல்ல தூண்டுதலாக அமையும்; அதேசமயம், இதனால் அணிக்கு நன்மையா, தீமையா?
‘நாங்கள் எல்லாரையும் ஒரேமாதிரிதான் பார்க்கிறோம்’ என்கிறது அணி நிர்வாகம். ‘அணித்தலைவர் கோலிகூட யோயோ பரிசோதனையில் வென்றுதான் அணியில் நுழைகிறார்.’
‘அது சரி, ஒருவேளை கோலி யோயோ பரிசோதனையில் தோற்றுவிட்டால் அவரை நீக்கிவிடுவீர்களா?’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இவரைப்போல் இன்னும் பல வீரர்கள், நிபுணர்கள் இதுபற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளார்கள்.
யோ யோ பரிசோதனை
குறிப்பாக, அணிக்கு வீரர்களைத் தேர்வுசெய்தபிறகு ‘யோயோ பரிசோதனை’ நிகழ்த்துவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. யோயோ பரிசோதனையில் வெல்கிறவர்களைமட்டும் அணியில் சேர்த்துக்கொண்டிருக்கலாமே, ஏன் கூப்பிட்டுவைத்து அவமானப்படுத்தவேண்டும்?
எந்தவொரு விஷயமும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது ஆரம்பச் சங்கடங்கள் இருக்கும்; எதிர்ப்புகள் கிளம்பும்; அதற்காக அந்த விஷயம் தவறானது என்று பொருளில்லை; இந்தக் கருத்துகளைக் கவனித்து யோயோ பரிசோதனையை மேம்படுத்துவதும், அதன் பலன்களைக் கவனித்து, தேவைப்பட்டால் வேண்டிய மாற்றங்களைச் செய்வதும்தான் புத்திசாலித்தனம்.
அது சரி, யோயோ பரிசோதனை என்பது என்ன?
யோயோ என்பது ஒரு பிரபலமான பொம்மை. அதில் ஒரு நூலும் உருளையும் இருக்கும், நூலைக் கையில் பிடித்துக்கொண்டு உருளையைக் கீழே தள்ளினால் அது மீண்டும் சுருண்டு மேலெழுந்து நம்மிடமே வரும், மீண்டும் கீழே செல்லும், மேலே வரும், இப்படி முன்னும் பின்னும் செல்வதால்தான் அதை ‘யோயோ’ என்றழைக்கிறார்கள்.
இந்த உருளையைப்போலவே ஒருவர் முன்னும் பின்னும் ஓடும் அமைப்பைக்கொண்டிருக்கிற உடல்தகுதிப் பரிசோதனையை ‘யோயோ பரிசோதனை’ என்கிறார்கள். 1990களில் டென்மார்க்கைச்சேர்ந்த அறிவியலாளர், கால்பந்துப் பயிற்சியாளரான டாக்டர் ஜென்ஸ் பாங்ஸ்போ கண்டறிந்த பரிசோதனை இது.
ஒரு மைதானத்தில் 20மீட்டர் இடைவெளியில் இரண்டு கோடுகளை வரைந்திருப்பார்கள். பரிசோதனையில் பங்கேற்கும் வீரர்கள் ஒரு கோட்டருகில் நிற்கவேண்டும், ஊதலொலி கேட்டதும் அடுத்த கோட்டை நோக்கி ஓடவேண்டும், அடுத்த ஊதலொலிக்குள் அந்தக் கோட்டைத் தொட்டுவிட்டுத் திரும்பி ஓடவேண்டும், மூன்றாவது ஊதலொளிக்குள் முதல் கோட்டுக்குத் திரும்பிவிடவேண்டும்.
கேட்பதற்கு எளிமையாகதான் இருக்கிறது; ஆனால், இந்தப்பக்கம் வந்ததும் மறுபடி ஊதல் ஒலிக்கும், மீண்டும் ஓடித் திரும்பவேண்டும், ஊதலொலிகளுக்கிடையிலான நேரம் குறைந்துகொண்டேயிருக்கும், படிப்படியாக வீரர்களுடைய வேகம் அதிகரிக்கவேண்டும், களைத்துப்போகாமல் தொடர்ந்து ஓடவேண்டும். இப்படி எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறார்கள் என்பதைப்பொறுத்து வீரர்களுடைய உடல்தகுதி தீர்மானிக்கப்படும்.
உலகெங்கும் கால்பந்து, ஹாக்கி விளையாடுவோருடைய உடல்தகுதியைக் கண்டறிய இந்தப் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. இப்போது கிரிக்கெட் அணிகளும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கான உடல்தகுதிப் பரிசோதனைகள் இருந்தன; ஆனால், அவற்றில் வெற்றிபெற்றால்தான் அணியில் இடம்பிடிக்க இயலும் என்கிற கட்டாயம் இல்லை; வீரர்கள் பொதுவாக நல்ல உடல்தகுதியைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது; மற்றபடி திறமைதான் அணியில் அவர்களுடைய இடத்தைத் தீர்மானித்தது.
உடல் தகுதி
யோயோ பரிசோதனை கிரிக்கெட்டுக்கு உகந்ததுதானா என்கிற சர்ச்சை ஒருபுறமிருக்க, இதன்மூலம் பொதுமக்களிடையில் உடல்தகுதிபற்றிய விழிப்புணர்வு பரவியிருப்பது ஒரு முக்கியமான மாற்றம். பொதுமக்கள் யோயோ பரிசோதனையில் கலந்துகொண்டு வெற்றியடையவேண்டிய அவசியமில்லைதான். ஆனால், நாம் நம் உடலை நன்கு கவனித்துக்கொள்கிறோமா என்று அவர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளத்தொடங்குவது நல்லது.
அதிகம் வேண்டாம், ஓரிரு மாடிகள் படியேறும்போது மூச்சுவாங்குகிறதா என்பதே ஒரு சிறிய அளவுகோல்தான். சிறிய தூரங்களுக்கும் நடக்கமுடியாமல் வண்டி தேவைப்படுகிறது என்றால் அது ஓர் எச்சரிக்கை. நாளின் தொடக்கத்திலேயே மிகுந்த சோர்வுடன் காணப்படுகிறோமென்றால் இன்னும் பெரிய எச்சரிக்கை.
கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளில் வெல்வதற்கு உடல்தகுதி தேவைப்படுவதுபோல, நாம் நம்முடைய நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்து முன்னேறுவதற்கு உடல்தகுதி அவசியமாகிறது. ‘சுவரிருந்தால்தான் சித்திரம்’ என்று நம் முன்னோர் இதனை மிக எளிமையாகச் சொன்னார்கள். உடலாகிய சுவரை நன்கு கவனித்துக்கொண்டால் சிறந்த சித்திரங்கள் எழுதலாம்.
இன்னொரு விஷயம், உடல்நலமும் மனநலமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்கிறார்கள் நிபுணர்கள். உடலில் இருக்கும் பிரச்னைகள் மனத்தைப் பாதிக்கின்றன, மாறாக, உடல்தகுதியோடிருக்கிறவர்களுடைய மனத்திலும் மகிழ்ச்சி நிறைகிறது.
இதனால், பொதுமக்களான நாமும் அவ்வப்போது நம்மைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. யோயோ பரிசோதனை அளவுக்குச் செல்லவேண்டியதில்லை, வேறு எளிய வழிகள் இருக்கின்றன.
புகழ்பெற்ற ‘மாயோ க்ளினிக்’ அமைப்பு, பொதுமக்களுடைய உடல்தகுதியைப் பரிசோதிக்கும் சில எளிய பரிசோதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக:
* ஓய்வாக இருக்கும் நேரத்தில் மணிக்கட்டில் நாடிபிடித்துப்பார்த்து நம்முடைய இதயத்துடிப்பின் அளவைக் கணக்கிடலாம்; இது 60முதல் 100க்குள் இருந்தால் நல்லது. நாடித்துடிப்பை அளக்கத் தெரியாது என்றால், இப்போது சந்தையில் பல Fitness Bandகள் கிடைக்கின்றன, இந்த உடல்தகுதிப் பட்டைகளைக் கையில் கட்டிக்கொண்டால், நாள்தோறும் நீங்கள் நடக்கிற அளவைக் கணக்கிடும், இதயத்துடிப்பை அவ்வப்போது அளந்து குறித்துக்கொள்ளும்
* இதேபோல், 10 நிமிடம் விறுவிறுவென்று நடந்துவிட்டு இதயத்துடிப்பைக் கணக்கிடலாம், உடற்பயிற்சியின்போது இதயத்துடிப்பைக் கணக்கிடலாம், இதுபோன்ற நேரங்களில் இதயத்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும், அது உங்களுடைய வயதைப்பொறுத்து மாறுபடும், எடுத்துக்காட்டாக, 35 வயதுள்ள ஒருவருடைய இதயத்துடிப்பு இதுபோன்ற நேரங்களில் 185வரை அதிகரிக்கக்கூடும் என்கிறது மாயோ க்ளினிக், அதற்குமேல் சென்றால் ஆபத்து
* 1.5மைல் (2.4கிமீ) ஓடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாகிறது என்பதும் ஒரு நல்ல உடல்தகுதி அளவுகோல். இதுவும் வயதைப்பொறுத்து மாறுபடும்
* தசைவலிமையை அளவிட ‘புஷ்-அப்’ பயன்படும், ஒருவரால் தொடர்ந்து எத்தனைமுறை ‘புஷ்-அப்’களைச் செய்யமுடிகிறது என்பதைப்பொறுத்து அவருடைய உடல்தகுதியை அறியலாம்
இத்துடன், ஒருவருடைய வயதைப்பொறுத்துச் சில ஆண்டுகளுக்கொருமுறை முழு உடற்பரிசோதனை செய்துகொள்வதும் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உடல்தகுதியைமட்டுமின்றி, எளிதில் கண்டறிய இயலாத உள்பிரச்னைகளையும் அறியலாம், தேவைப்பட்டால் சிகிச்சையெடுத்துக்கொள்ளலாம்.
உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்வது எப்படி?
இதற்குப் பல வழிகள் உள்ளன: ஆரோக்கியமான, சரிவிகித உணவு உட்கொள்ளலாம்; இயன்ற அளவு நடப்பது, படியேறி இறங்குவது போன்ற சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை மாற்றங்கள்; வீட்டைச் சுத்தப்படுத்துவது, பாத்திரம் தேய்ப்பதுபோன்ற உடலுழைப்பைக் கோரும் வேலைகளைச் செய்யலாம்; இயன்றால், நாள்தோறும் உடற்பயிற்சி அல்லது நீச்சல் அல்லது யோகாசனத்தில் ஈடுபடலாம்; குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடுவதுகூட ஓர் உடற்பயிற்சிதான்.
முக்கியமாக, மனத்தை அழுத்தமின்றி வைத்துக்கொள்ளலாம்; அது உடலையும் நலமாக்கும்!
Web Title: The Fitness Test Yo Yo
Featured Image Credit: youtube