சுரும்புச் சட்டதிட்டங்கள் – இலங்கை

சுரும்பு என்றால் என்ன ?

இலங்கையில் உள்ள பலருக்கும் பரிச்சயமான ஆங்கில பெயரான “Drone” என்பதன் தமிழ் பதமே “சுரும்பு” என்பதாகும். உண்மையில் சொந்தமாக இயங்காது தொலைவிலிருந்து இயக்கபடுவதாலும், வேலைக்கார தேனீக்களை போல இயங்கும் நடைமுறையை கொண்டுள்ளதாலும் ஆங்கிலத்தில் இதனை Drone என அழைக்கிறார்கள். இங்கே தமிழில் வண்டு/தேனீக்களுக்கு மறுபெயராக “சுரும்பு” என்கிற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதுவே Drone என்கிற உபகரணத்துக்கான தமிழ்ப் பெயராக அமைந்துள்ளது.

சொந்தமாக இயங்காது தொலைவிலிருந்து இயக்கபடுவதாலும், வேலைக்கார தேனீக்களை போல இயங்கும் நடைமுறையை கொண்டுள்ளதாலும் ஆங்கிலத்தில் இதனை Drone என அழைக்கிறார்கள். (pixabay.com)

சுரும்புகளின் பயன்பாடு பல்வேறு வகையில், பல்வேறு நாடுகளில் உள்ளபோதிலும், இன்றைய நிலையில் இலங்கையின் புகைப்படத்துறையில் இவை மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது எனச் சொல்லலாம். ஆனால், இவ்வகைச் சுரும்பு உபகரணங்களை பயன்படுத்தும் பலருக்கும், இது தொடர்பில் இலங்கையில் கட்டுபாடுகளும், சட்டதிட்டங்களும் உள்ளமை தொடர்பில் தெரிந்திருப்பதில்லை. கடந்த வருடத்தின் மாசி மாதமே இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் இந்த சுரும்புகளின் பாவனை தொடர்பில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தது. அப்போது, இது பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. அப்பொழுதே, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை வேறுபட்ட நிறைகளை கொண்ட சுரும்புகளை பயன்படுத்தவும், பதிவு செய்யவும் என கட்டுபாடுகளை விதித்திருந்தது. ஆனாலும், அது மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் கடந்த நிலையில், சுரும்புகளின் பாவனை மூலமாக விபத்துக்களும், பாதுகாப்பு பிரச்சனைகளும் எழுவதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவேதான், அவை தொடர்பான சட்டவிதிகளை மேலும் கடுமையாக்கி இருக்கிறது சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை. இன்றைய நிலையில், அதிகமானோர் சுரும்புகளை வணிக ரீதியில் பயன்படுத்துவதனால் இது தொடர்பில் அறிந்துகொள்வதும், தெளிவை பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். இது தொடர்பில் முழு விபரங்களை இங்கே பெற முடியும். இவற்றிலிருந்து அவசியமாக தெரிந்திருக்க வேண்டியவற்றை தொகுத்து இந்த ஆக்கத்தில் பார்க்கலாம்.

சுரும்புகளின் வகைகள் மற்றும் பயன்பாடு

பழைய சட்டவிதிகளுக்கு அமைவாக, 25KG நிறைக்கு மேலான எந்தவொரு சுரும்பும் அல்லது பறக்கும் தன்மை கொண்ட உபகரணங்களையும் இலங்கை வான்பரப்புக்குள் பயன்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரின் அனுமதியை பெறுவது அவசியமாக இருந்தது. அதுபோல, 1 KG – 25KG இற்கு இடைப்பட்ட நிறை கொண்ட சுரும்பு அல்லது பறக்கும் உபகரணங்கள், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியின்கீழ் பயன்படுத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், புது விதிகளுக்கு அமைவாக இவை நான்கு வகைகளாக பிரிக்கபட்டுள்ளன.

புதிய வகைகளின் பிரகாரம், வகை-A உக்குரிய  சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்கள் அனுமதி பெறப்படவேண்டிய வகையாக உள்ளது. வகை-B ஐச்சேர்ந்த சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்கள் அதிகாரசபையின் அனுமதியுடன் பயன்படுத்த கூடியனவாக உள்ளது. C வகைபடுத்தபட்டுள்ள சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏதேனும் பதிவுகளை செய்யும் உபகரணங்களை கொண்டிருக்காதுவிட்டால் அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காததாக அமைந்திருப்பின் அவை அதிகாரசபையின் இயக்குனரிடம் அதன் உரிமையாளர் பெயரில் சான்றிதழ் பெற்று பயன்படுத்தப்பட முடியும். ஏதேனும் பதிவுகளுக்காக பயன்படுத்தப்படுமாயின் அதற்கு விசேடமாக அதிகாரசபையின் அனுமதி கோரப்பட வேண்டும். D வகைபடுத்தப்பட்டுள்ள சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்கள் எந்தவொரு பயன்பாட்டுக்கும், எவ்வித முன்னறிவித்தலுமின்றி அதிகூடியது 150 அடி உயரம் வரை பயன்படுத்தக் கூடியன ஆகும்.

பறப்பதற்கான அனுமதி

சுரும்பு உபகரணங்களை பயன்படுத்தும் பலருக்கும், இது தொடர்பில் இலங்கையில் கட்டுபாடுகளும், சட்டதிட்டங்களும் உள்ளமை தொடர்பில் தெரிந்திருப்பதில்லை (cdn.psfk.com)

முன்னைய சட்டதிட்டங்களுக்கு அமைவாக, 1 KG மேலான நிறைய கொண்ட சுரும்பு உபகரணங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் பறப்பதற்கு பொலிசாரின் அனுமதியை பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. (விமான நிலையம் தவிர்த்து) ஆனால், புதிய விதிகளுக்கு அமைவாக, மனித தொடர்புகள் இல்லாமல், தன்னிச்சையான உபகரணங்களால் இயக்கப்படும் எந்தவொரு பறக்கும் உபகரணமும் அல்லது தனியுரிமையை பாதிக்கக் கூடியவகையிலோ, இலங்கை அரச பாதுகாப்புக்கு இடையூறாக உள்ளவகையில் பயன்படுத்தபடும் உபகரணங்களும் பொலிஸ் அனுமதியை பெறவேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

சுரும்பு தயாரிப்புக்கள்

சுரும்புகளையோ அதன் பாகங்களையோ உள்நாட்டில் தயாரிக்கும் எவருமே சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையில் தம்மை பதிவு செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும். அத்துடன் இத்தகைய உபகரணங்களை  (Drone & UAV Products) தயாரிப்போர் அது தொடர்பிலான பதிவுகளை முறையாக பேணுவதுடன், விற்பனை செய்பவர்கள் அதனை கொள்வனவு செய்பவர்கள் தொடர்பிலும் ஆவணங்களை கொண்டிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுரும்புகளை பதிவுசெய்யும் முறை

புதிய சட்டவிதிகளுக்கு அமைவாக, உணரிகள் (sensor equipment) பொருத்தப்பட்ட சுரும்புகள் மற்றும் பறக்கும் உபகரணங்கள் கட்டாயமாக சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபையிடம் பதிவு செய்தல் வேண்டும். மேலே கூறியது போல, A, B வகைகளும் பதிவு செய்யப்படல் வேண்டும். C வகைப்படுத்தப்பட்ட சுரும்புகள் மற்றும் பறக்கும் உபகரணங்கள் ஏதேனும் பதிவு செய்யும் கருவிகளையோ, உணரிகளையோ கொண்டிருக்காதபட்சத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கொள்வனவு செய்யபட்டிருத்தல் போதுமானதாகும். D வகை சார்ந்த உபகரணங்கள் எந்தவொரு உணரி மற்றும் பதிவு செய்யும் உபகரணங்களை கொண்டிருக்காதுவிடின், பதிவு செய்வதிலிருந்து விலக்களிக்கபட்டும் உள்ளது.

பழைய சட்டவிதிகளுக்கு அமைவாக, 25KG நிறைக்கு மேலான எந்தவொரு சுரும்பும் அல்லது பறக்கும் தன்மை கொண்ட உபகரணங்களையும் இலங்கை வான்பரப்புக்குள் பயன்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரின் அனுமதியை பெறுவது அவசியமாக இருந்தது. (slate.com)

சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்களின் பதிவானது இரண்டு வருடகாலத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதுடன் அவை மீள புதுப்பிக்கபட வேண்டியதும் அவசியமாகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உபகரணத்தின் உரிமை மாற்றம் இடம்பெறும்போது உடனடியாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கு தெரியபடுத்த வேண்டியதும் அவசியமாகிறது. பதிவு செய்யப்பட்ட உபகரணங்கள் அல்லது, புதியவகை உபகரணங்களின் பயன்பாடு இலங்கைக்கு உகந்தது அல்ல என அரசு முடிவு செய்யுமாயின், அது தொடர்பில் அதிகாரசபையானது பொறுப்பானவர்களுக்கு தெரிவிக்கும் கடமையையும் கொண்டுள்ளது.

உபகரண பயன்பாட்டாளர் பதிவுமுறை

A,B,C வகை சுரும்பு மற்றும் பறக்கும் விமான உபகரணங்களை பயன்படுத்தும் எந்தவொரு நபரும் தன்னை அதிகாரசபையில் பதிவு செய்யவேண்டியது கட்டாயமாக்கபட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் தேர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற்றதன் பின்னதாக, அதனை பயன்படுத்துவதற்கு அதிகாரசபையின் இயக்குனர் அனுமதியுடன், “தொலையியக்கி விமானி அங்கீகார சான்றிதழ்” வழங்கபடும். இச் சான்றிதழும், இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதுடன் இதனை பெற குறைந்தது 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமாக்கப்படுள்ளது. பிறநாட்டவர்கள் எவரேனும் இலங்கையில் இந்த உபகரணங்களை பயன்படுத்த அனுமதி கோரும்பட்சத்தில், அவர்களது அனுமதி பரிசோதிக்கபட்டு தற்காலிக பதிவு வழங்கபடும்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்களின் பதிவானது இரண்டு வருடகாலத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதுடன் அவை மீள புதுப்பிக்கபட வேண்டியதும் அவசியமாகிறது. (nua.io)

புதிய சட்டத்தின் பிரகாரம், சுரும்பு மற்றும் பறக்கும் உபகரணங்களின் பயன்பாட்டில் அதிகளவிலான கட்டுபாடுகள் விதிக்கபட்டு இருக்கிறது. முக்கியமாக, பயன்படுத்துனர் உபகரணங்களில் இணைக்கபட்டுள்ள உந்துவிசை அமைப்புக்கள் சீராக இயங்குவதற்கு பொறுப்பாவதுடன், வான்பரப்பில் கட்டுபடுத்தக்கூடிய எல்லைக்குள் இருப்பதற்கும் பொறுப்பாவார். இதில் ஏதேனும், தவறு ஏற்பட்டு விபத்தோ அல்லது அசம்பாவிதங்களோ இடம்பெறுமாயின் பயன்படுத்துனர் தண்டிக்கபடக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

பயன்படுத்துனர் எவ்வகை சுரும்புகளையும் மணிக்கு 100 மைல் என்கிற வேகத்தில்தான் அதிகபட்சமாக பயன்படுத்த முடியும் என்பதுடன், மோசமான வானிலை உள்ள எந்த சந்தர்ப்பத்திலும் பறக்கும் உபகரணங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதுபோல, பயன்படுத்துனர் குறித்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு பறக்கும் உபகரணத்தை கட்டுபடுத்துபவராக மாத்திரமே இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதோ அல்லது நகரும் வாகன உதவியுடன் பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டதாக உள்ளது.

பயன்படுத்துனர்கள் சுரும்பின் உதவியுடன், எதனையும் எடுத்து செல்லவோ, வீழ்த்தவோ அல்லது அனுமதி பெறாத பதாதைகளை காட்சிபடுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகள்

குறித்த சுட்டியில் உள்ள இனம் காணப்பட்ட பகுதிகளிலும், தனிநபருக்கு சொந்தமான மற்றும் அரச நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களுக்கு மேலாகவும் பறக்கும் உபகரணங்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.

விபத்து மற்றும் காப்புறுதி

பயன்படுத்துனர் எவ்வகை சுரும்புகளையும் மணிக்கு 100 மைல் என்கிற வேகத்தில்தான் அதிகபட்சமாக பயன்படுத்த முடியும் என்பதுடன், மோசமான வானிலை உள்ள எந்த சந்தர்ப்பத்திலும் பறக்கும் உபகரணங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. (newsweek.com)

சுரும்பு மற்றும் பறக்கும் உபகரண பயன்பாட்டின் விளைவாக ஏதேனும் விபத்துக்கள் ஏற்படின், அது தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதுடன், அது தொடர்பான பூரண தகவலுடன் 48 மணிநேரத்துக்குள் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.

A,B,C வகைப்படுத்தபட்ட உபகரணங்கள் பொருத்தமான காப்புறுதிகளை மேற்கொள்வது அத்தியவசியமாக்கபட்டுள்ளது. குறைந்தது, மூன்றாம் தரப்பின் சேதங்களுக்கு பொறுப்பாகும் காப்புறுதியை கொண்டிருத்தல் அவசியமாகும்.

விதிவிலக்குகள்

ஏதேனும் மனுதாபிமான நடவடிக்கைகளுக்கு சுரும்பு முதலிய பறக்கும் உபகரணங்கள் பயன்படுத்தபட வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படின், அதற்காக அதிகாரசபையின் இயக்குனரினால் விசேடமாக உருவாக்கபட்ட சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட முடியும்.

இவைதான், புதுப்பிக்கப்பட்ட சுரும்பு முதலிய பறக்கும் உபகரணங்களுக்கான நடைமுறைகளாக உள்ளது. இன்றைய நிலையில், வணிக ரீதியில் சுரும்பு முதலான உபகரணங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இச்சட்டம் தொடர்பில் ஒருவித தெளிவற்றதன்மை இருக்கக்கூடும். ஆனால், தொடர்ச்சியாக அதிகரித்துவரும் இந்த உபகரண பாவனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகமாக அமைந்துவிட கூடாது என்கிற அடிப்படையில், இந்த புதிய அடிப்படையான நடைமுறைகள் உருவாக்கபட்டுள்ளன.. ஆனால், இந்த சட்ட நடைமுறையானது பொழுதுபோக்கு எண்ணத்துடன் இத்தகைய உபகரணங்களை பயன்படுத்துவதையும் யார் வேண்டுமானாலும் வேண்டிய முறையில் பயன்படுத்தலாம் என்கிற எண்ணத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவே அமைந்துள்ளது.

Related Articles

Exit mobile version