“இணையத்தின் தந்தை”க்குக் கவலையளிக்கும் 3 விடயங்கள்

இவ்வாண்டு மார்ச் மாதம் 12ம் திகதியுடன் இணையத்துக்கு (World Wide Web- WWW) 28 வயதாகிவிட்டது. இப் பிறந்தநாளையொட்டி, இணையத்தைக் கண்டுபிடித்தவரும் “இணையத்தின் தந்தை” எனப் போற்றப்படுபவருமான சேர் டிம் பேர்னஸ் லீ (Sir Tim Berners-Lee) ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

சேர் டிம் பேர்னஸ் லீ (Sir Tim Berners-Lee) (giornalettismo.com)

அச்செய்தியில், “கடந்த 12 மாதங்களாக, இணையத்தில் ஏற்பட்டுவரும் செல்நெறிகள் (Trends) என்னை மிகவும் கவலைப்படுத்துகிறது” என வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இணையத்தின் தந்தையையே கவலைப்படுத்தும்படியாக இந்த இணையக் குழந்தைக்கு என்ன தீங்கு நேர்ந்துவிட்டது?

தற்போது இணையத்திற் பரவலாகக் காணப்படும் மூன்று செல்நெறிகளை அவர் 28 ஆண்டுகளில் இணையத்துக்கு நேர்ந்துள்ள பெருந்தீங்கு எனக் காண்கிறார். அம்மூன்றையும் நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எமது தனிப்பட்ட தகவல்கள்மீதான கட்டுப்பாட்டினை நாம் இழந்துவிட்டோம்.

இலவசமான உள்ளடக்கங்களை எமக்குத் தந்து அதற்குப்பதிலாக எம்மிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதே தற்போது பல வலைத்தளங்களின் வணிக வடிவமாக இருக்கிறது. குழப்பமான நீண்ட ஒப்பந்தங்களை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வதனூடாக பலரும் இதற்கு உடன்படுகிறோம். எம்மிற் பலருக்கு இப்படி எமது தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவது தொடர்பில் பெரிய கவலைகள் ஒன்றும் இருப்பதில்லை. எமது பார்வைக்கு எட்டாத, தனியாருக்கு உரிமையான மிகப்பெரிய தகவற் களஞ்சியங்களில் எமது தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகிறன. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள்மீதான கட்டுப்பாடு எம்மிடம் இருக்குமானால் எம்மால் அதைக்கொண்டு என்ன பயன்களையெல்லாம் பெற முடியும் என்று எமக்குத் தெரியாது. அதனாற்தான்  நாம் அதுபற்றிக் கவலைப்படாமலிருக்கிறோம்.

எமது பார்வைக்கு எட்டாத, தனியாருக்கு உரிமையான மிகப்பெரிய தகவற் களஞ்சியங்களில் எமது தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகிறன. (wordstream.com)

இதற்கும் மேலாக, சில மூன்றாந்தரப்புக்களுக்கு எமது தனிப்பட்ட தகவல்களைத் தீனியாகக் கொடுப்பதைத் தவிர்க்க எமக்கு வேறு வழிகளும் இல்லை. அப்படி ஒரு நிலைக்கு இணையம் இன்று எம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

இவ்வாறு பரவலாகச் சேகரிக்கப்படும் தகவல்கள் வேறு விதமான பாதிப்புக்களையும் உருவாக்குகின்றன. இத்தகவல்களைச் சேகரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்துகொண்டோ, அந்நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தோ அரசாங்கங்கள் இணையத்தில் எமது அசைவுகளை நெருக்கமாகக் கண்காணிக்கின்றன. ஒடுக்கும் அரசாட்சிகளில் இதன் விளைவுகளை நாம் எளிதாகவே காணலாம். அங்கே வலைப்பதிவாளர்கள் கைதுசெய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம்; அரசியல் எதிரிகள் கண்காணிக்கப்படலாம். நல்ல அரசுகள் என நாம் நம்பும் அரசுகளிலே கூட நாம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவது வெளிப்படையாக நாம் கருத்துக்களை வெளிப்படுத்த அச்சப்படும் நிலையையே தோற்றுவிக்கும்.

பொய்யான தகவல்கள் இணையத்தில் மிக எளிதாகப் பரவுதல்

இன்று பெரும்பாலான மக்கள் வெறுமனே ஒருசில சமூக வலைத்தளங்களிலிருந்தும் தேடுபொறிகளிலிருந்துமே (Search Engines) செய்திகளையும் தகவல்களையும் பெறுகிறார்கள். இத்தகைய தளங்கள் எமக்குக் காண்பிக்கும் தொடுப்புக்களை நாம் சொடுக்கும்போது (Click) அதிலிருந்து நிறையப் பணத்தைச் சம்பாதிக்கின்றன. எமக்கு எதனைக் காட்ட வேண்டும் எவற்றைக் காட்டக்கூடாது என்பதை இத்தளங்களே முடிவு செய்கின்றன. எம்மிடமிருந்து அறுவடை செய்த தகவல்களிலிருந்து அத்தளங்கள் இதனைத் தீமானிக்கின்றன.

தரவுப் பகுப்பாய்வு அறிவியலின் துணைகொண்டும் பல்லாயிரக்கணக்கான தானியங்கிகளின் (Bots) துணைகொண்டும் ஏராளமான போலிச்செய்திகள் பரப்பப்படுகின்றன (tw.infowars.com)

இதன் விளைவாக, நாம் ஆர்வமாய்ச் சொடுக்குவோம் என அவை எதிர்பார்க்கும் தொடுப்புக்களையே இத்தளங்கள் எமக்குக் காண்பிக்கின்றன. எமது சொடுக்குகளுக்குத் தூண்டில் போடக்கூடிய அதிர்ச்சிதரும், வியப்பூட்டும், வேகமாகப் பரவுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட “போலிச் செய்திகளே (Fake News)” அடிக்கடி எமக்குக் காண்பிக்கப்படுகின்றன. இந்த முறைமையினைப் பயன்படுத்தி,  தரவுப் பகுப்பாய்வு அறிவியலின் துணைகொண்டும் பல்லாயிரக்கணக்கான தானியங்கிகளின் (Bots) துணைகொண்டும் ஏராளமான போலிச்செய்திகள் வணிகத் தேவைகளுக்காகவும் அரசியற் தேவைகளுக்காகவும் பரப்பப்படுகின்றன.

வெளிப்படைத்தன்மை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையின்றிய அரசியல் விளம்பரங்கள்

இணையத்தில் அரசியல் விளம்பரம் என்பது நன்கு விரிவடைந்த பெரும் தொழிற்துறையாக மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தமக்குத் தேவையான தகவல்களை ஒரு சில வலைத்தளங்களிலிருந்தே பெறுகிறார்கள். அவையும் பெரும்பாலும் ஓரிரு சமூக வலைத்தளங்களாகவே இருக்கின்றன. மக்களின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய பெரும் சேகரங்களை ஆராய்ந்து தேவையான தகவல்களைப் பெறும்படியாக மென்பொருட் படிமுறைத்தீர்வுகள் (Algorithms) சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றின் காரணமாக அரசியற் பரப்புரை என்பது கூட்டங்கள் நடத்துவது, உரையாற்றுவது எனும் பழைய வடிவங்களிலிருந்து பெரிதும் மாறிவிட்டது. தற்போது அரசியற் பரப்புரை என்பது தனி மனிதர்களைக் குறிவைத்து விளம்பரங்களை அனுப்புவது என்றாகிவிட்டது.

தனியாட்களைக் குறிவைத்து அரசியல் விளம்பரங்களை வழங்கும் இந்த முறைமையானது, அரசியற் பரப்புரையினை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகச் செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. (business-ryazan.ru)

2016 அமெரிக்கத் தேர்தலின் போது மட்டும், நாளொன்றுக்கு வெவ்வேறு விதமான 50,000 விளம்பரங்கள் Facebook பயனர்களது பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு பேருருக்கொண்ட விளம்பரப் பகிர்வினைக் கண்காணிப்பதென்பது சாத்தியமற்றது. இவ்வாறு உலகெங்கும் பகிரப்பட்ட விளம்பரங்களிற் பல, பொய்ச்செய்தித் தளங்களுக்கான தொடுப்புக்களைப் பகிர்ந்தமை உட்படப் பல அநீதியான முறைகளில் பரப்புரை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தனியாட்களைக் குறிவைத்து அரசியல் விளம்பரங்களை வழங்கும் இந்த முறைமையானது, அரசியற் பரப்புரையினை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகச் செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. தனியாட்களுடன் மட்டுமே தொடர்பு கொள்வதனால், ஒரே அரசியற்குழு, வெவ்வேறு ஆட்களுக்கு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைப் பரப்புரை செய்ய வாய்ப்பளிக்கிறது. இது சனநாயகத்துக்கு முரண்பாடானதில்லையா?

தீர்வுகள்

தன்னைக் கவலைப்படுத்தும் சிக்கல்களைப் பட்டியலிடும் சேர் டிம் பேர்னஸ் லீ, இச்சிக்கல்களிலிருந்து இணையத்தை விடுவித்து, அனைவருக்குமான இணையத்தினை உருவாக்குவதற்கான தனது ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.

இத்தகவல்களைச் சேகரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்துகொண்டோ, அந்நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தோ அரசாங்கங்கள் இணையத்தில் எமது அசைவுகளை நெருக்கமாகக் கண்காணிக்கின்றன. (amazonaws.com)

மக்களுடைய தனிப்பட்ட தகவல்களை மீளவும் மக்களது கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை, இணைய நிறுவனங்களோடு இணைந்து செயற்படுத்தவேண்டும். இலவச சேவைகளை வழங்குவதற்கான கட்டணமாக மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளாமல், சந்தா/நுண் கட்டணங்கள் போன்ற மாற்று வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். மக்களைக் கண்காணிப்பதற்கான சட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கும்போது அவ்வரசாங்கங்களுக்கு எதிராகப் போராட வேண்டும்.

போலிச்செய்திகள் பரவாமற் தடுப்பதற்கான தொழிநுட்பங்களை உருவாக்க முனைவோரை உற்சாகப்படுத்த வேண்டும். கூடவே, எது உண்மை எது பொய் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மையப்படுத்தப்பட்ட தனி நிறுவங்களுக்கு வழங்கிடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

இவற்றைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களைத் தமது “Web Foundation” மேற்கொள்ளும் என்ற உறுதியையும் அவர் வழங்குகிறார்.

இணையத்தைக் கண்டுபிடித்தவரையே கவலைக்குள்ளாக்கும் இச்செல்நெறிகள் பற்றி இணையப் பயனர்களாகிய நாம் ஒவ்வொருவருமே கவலைப்படவேண்டியுள்ளது. எமது அன்றாட இணைய வாழ்விலும் அரசியலிலிலும் இவ்விடயங்கள் அதிகமாகத் தாக்கம் செலுத்துவதை நாம் இப்போது உணரத் தொடங்கியிருக்கிறோம்.

இணையத்தை மக்களுக்கான தொழிநுட்பமாகக் காப்பாற்றுவது மிக முக்கியமானது. இணையம் அதிகாரங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பெருநிறுவங்களுக்குமன்றி, மக்களுக்குச் சேவை செய்யும் தொழிநுட்பமாகத் தொடர வேண்டும். அதற்கான செயற்பாடுகள் வெறும் தொழிநுட்ப ரீதியானவை மட்டுமே அல்ல. அவை அரசியல் ரீதியான செயற்பாடுகளாகவே பெரும்பாலும் அமையவேண்டியுள்ளன என்பதே சேர் டிம் பேர்னஸ் லீ யின் செய்தியின் பொழிப்பாயுள்ளது.

Related Articles

Exit mobile version