“காணி நிலம் வேண்டும்”

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய பாதுகாக்கப்பட்ட சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம். 1988ஆம் ஆண்டில் களக்காடு மற்றும் முண்டந்துறை வன விலங்குகள் சரணாலயங்களை ஒன்றிணைத்தே இது உருவானது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் தோற்றுவிக்கும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையிலான அகஸ்தியமலை உயிர்க்கோளம், இந்தியாவின் உயிர்ப்பல்வகைமைச் சிறப்பியல்புக்கான ஐந்து இடங்களில் ஒன்றாக IUCN இனால் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. இனி கட்டுரைக்குள் போகலாம்

களக்காடு முண்டந்துறை  “காணி” பழங்குடி மக்களுடன் தங்கி, அவர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்  திருநெல்வேலி அரசு மருத்துவர் ஒருவர் மூலம் கிடைக்க, உடனே பயணத்தை ஆரம்பித்தோம். இனி “கரிசல் மண்ணில் இருந்து கானகம் நோக்கிய பயணம்” உங்கள் முன்.

பெரும்பாலும் பயணத்தில், ஓட்டுநர் நிறுத்தும் சாலையோர உணவகங்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் சாப்பாட்டுக்கான பணத்தை நமது கணக்கில் ஏற்ற, அதிக விலை வைப்பது தெரிந்த கதை என்றாலும் இரண்டு பணியார அளவு பரோட்டாவிற்கு 70 ரூபாய் வாங்கிய உங்களுக்கு “கும்பி பாகம் ” தாண்டா என்று வயிறு எரிந்தவாறே (ருசி அப்படி) முண்டந்துறை அடைந்தோம்.

வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உள்ளன (bp.blogspot.com)

சிறிதளவு மலைப் பாதை பயணத்தை கடந்த பின் வனக் காவலர்களின் சோதனை நிலையத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் இருகிறதா என்று சோதனை செய்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறோம்.

அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த மது போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரணம் வினவிய போது, மது அருந்திவிட்டு போத்தல்களை காட்டினுள் உடைத்துப் போடுவதனால், விலங்குகளின் கால்களில் காயம் பட்டு இறந்தே விடுகின்றன என்ற பதில், சுற்றுலா பயணிகள் மீது சிறிது வெறுப்பை உண்டாக்கியது.

நூற்று ஐம்பதிற்கும் அதிகமான உள்நாட்டுக்குரிய தாவர வகைகள் கொண்டது இக்காடு (farm8.static.flickr.com)

அரசு மருத்துவர் ஒருவர் அந்த பழங்குடி மக்களை தேடிச் சென்று மருந்து கொடுப்பதால் (நம்புங்க இவர் நல்லவர் நம்ம ஊர் மருத்துவர் போன்று அல்ல) எங்களுக்கு உடனடியாக அனுமதி கிடைத்தது, அவரும் எங்களுடன் மருந்துகளுடன் வந்தார்..

குறிப்பிட்ட தூரம் மட்டுமே வாகனத்தில் செல்ல முடியும், பின்னர் பத்து கிலோ மீட்டர்கள் நடந்துதான் மலை ஏற வேண்டும். போகும் போது மருத்துவர் சொன்ன தகவல் ஆச்சர்யம் தந்தது.. நாம் மலையேறவே இவ்வளவு சிரமப் படுகிறோமே!, ஆனால் இங்குள்ள பெண்கள் குழந்தை பிறந்த பத்தாவது நாள் இந்த மலைப் பாதை கடந்து தண்ணீர் தூக்கி வரவேண்டும் என்பதை சடங்காகவே வைத்துள்ளனர் என்றார் . (நம்ம வீட்டு பெண்கள் கிட்ட இத சொல்லித்தான் பாருங்களேன்)

யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய தளத்துக்காக யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய கண்காணிப்புக் குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது (theevolvingbackpacker.com)

ஒரு வழியாக அவர்களின் இருப்பிடம் அடைந்தோம் , மருத்துவருடன் சென்றதால் சிறந்த கவனிப்பு எலுமிச்சை தேநீர் தந்தார்கள், மரத்திலேயே பழுத்த பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு என ஆரோக்கியமான ருசியான உணவுடன் உரையாடல் ஆரம்பமானது.

குழந்தை திருமணம் ஆதி காலம் முதலே அவர்களிடம் இல்லை, விதவை மறு திருமணமும் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது காதல் திருமணமும் நடக்கிறது. அந்த குடிசை வீடுகளுக்குள் புதுமை கண்டு வியந்தேன். சர்க்கரை நோய் இப்பொழுது தான் எட்டி பார்க்க ஆரம்பித்துள்ளது, காரணம் அரசு தரும் இலவச அரிசி வாங்கி உண்ண ஆரம்பித்ததன் விளைவு.

இது புலிகளுக்கான சரணாலயம் என்றாலும் இம்மலைப் பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பலவகைப் பாம்புகளும் அதிகம் வாழ்கின்றன. (bp.blogspot.com)

இப்போது அவர்களுக்கு சூரிய மின்கலங்கள் கொடுக்கப்படு வருகிறது. சில வீடுகளில் தெலைக்காட்சியும் உள்ளது. அரசு ஒதுக்கிக் கொடுத்த இடத்தில் விவசாயம் செய்கிறார்கள், மிளகு போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். விலங்குகளை தெய்வமாக வழிபடுகின்றனர். “நேத்து கூட ஒரு புலி வாசல் பக்கம் போச்சு நம்மள ஒன்னும் பண்ணாது.” (நாய பக்கத்துல பாத்தாலே நான்லா தூங்க மாட்டேன்) அவுங்க சொன்ன போது இயற்கையோட ஒன்றிய அவர்களின் வாழ்க்கை வியப்பா இருந்தது.

இறுதியாக அரசாங்கம் அவர்களை காட்டை விட்டு வெளியேற்றப் பார்க்கிறது, (மரங்களை வெட்ட அனுமதி தர மறுப்பதால்) ஆனா வனத்தை தவிர எதுவும் தெரியாத அம்மக்கள் நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி அங்கு வாழ்கின்றனர். “விலங்குகளின் நலன் கருதி அவர்கள் வேட்டையாடுவதை கைவிட்டனர், இன்று சுயநலத்தால் வேட்டையாடப் படுகின்றனர் ” ….

தக்க துணை கொண்டு இரவு உலாவில் மான், மிலா, புலி இவற்றை பார்த்த மகிழ்ச்சியின் உச்சம், காட்டில் தன் இயல்புடன் இருக்கும் விலங்கை பார்க்கும் அந்த நொடி “நானும் காணி ஆகி போனேன் “

 

Related Articles

Exit mobile version