ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று யுனெஸ்கோ மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. பழங்கால கட்டடங்கள், கோவில்கள் சிற்பங்கள், இயற்கை எழில்கொஞ்சும் இடங்கள் போன்றவையும், மாநில மற்றும் தேசிய பறவைகள், விலங்குகள் என அழகியல் மதிப்பு கொண்ட விலங்குகளும் பாரம்பரியத்தை குறிக்கின்றன. இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதில் 25 இடங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தை விளக்குவதாகவும், 7 இடங்கள் இயற்கைச் சிறப்பு மிக்க இடங்களாகவும் உள்ளன. 1983-ல் ஆக்ராக் கோட்டையும், அஜந்தா குகைகளும் முதலில் பராம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டன.
தாஜ்மஹால்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ்மஹாலுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு, ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அவற்றை பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது. அந்தவகையில் உலகின் பாரம்பர்யமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மஹாலுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், மொகலாய மன்னன் ஷாஜகான் ஆக்ராவில் பளிங்கு கல்லால் அழகிய கலைநயத்துடன் தன் மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மஹால். இதை ஆண்டுக்கு 80 லட்சம் பேர் ரசித்துப் பார்த்துச் செல்கின்றனர். எனவே, உலகின் பாரம்பர்யமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மஹால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றனர். பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹால் காதலர்களின் சின்னமாக, காதல் கொண்ட இதயங்களில் இடம்பெற்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
டெல்லி செங்கோட்டை
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக டெல்லி செங்கோட்டையை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா. சபையின் கல்வி, கலை, பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ உலகில் பழமை வாய்ந்த, அதிசயிக்கத்தக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுமானங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து அவைகளை காப்பாற்றி, பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் செயல்படுகிறது. இந்நினைவுச்சின்னம் டெல்லியில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோட்டை முகலாயப் பேரரசர் ஷாஜகானால் 1638ல் ஆரம்பிக்கப்பட்டு 1648ல் முடிக்கப்பட்டது. இது அரசகுடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் கட்டிட நேர்த்தி, அழகு மற்றும் செயல்திறன் முகலாயர்களின் திறனை வெளிப்படுத்துகிறது. இக்கோட்டை யமுனை நதிக்கரையில் பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. தற்போது இக்கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளான ஆகஸ்ட் 15 முதல் இந்திய பிரதமர் இங்கு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு இங்கு உரை நிகழ்த்துகிறார். 2007-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
அஜந்தா குகைகள்
அஜந்தா குகைகள் ஒரு பௌத்த குகைகள் ஆகும். இந்நினைவுச் சின்னக் குகைகள் மகாராஷ்டிர மாநிலம் அஜந்தா என்னும் ஊருக்கு அருகில் காணப்படுகின்றன. இக்குகைகள் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக் குளம்பு வடிவத்தில் 76 மீ உயரம் வரை காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக புத்த மதத்தை பறைசாற்றும் வகையில் 31 குடைவரை குகைகள் இங்கு காணப்படுகின்றன. இக்குகைகளில் புத்தமத சிற்பங்களும், ஓவியங்களும் குடைவரைக் கோயில்களும் காணப்படுகின்றன. புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தருடைய வாழ்கை வரலாற்றைப் பற்றியும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இக்குகையின் தரைப்பகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் இயற்கை வண்ணங்கள் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. கி.மு 200 முதல் கி.பி.650 வரை இவை உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவ்வோவியங்கள் மூலமே இந்திய ஓவியக்கலை வெளி உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது. கலைநயம் மிக்க தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் ஆகியவை இவற்றை சிறப்புறச் செய்கின்றன. 1983-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
குதும்பினார்
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும். இந்த வரலாற்று காலம் நெடுகவும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக இருக்கிறது. இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப்மினார் பற்றி இன்றைய கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா பகுதியில் தெரிந்துகொள்வோம் வாருங்கள். 74மீ உயரம் கொண்ட குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான தூபி ஆகும்.
கி.பி 1200ஆம் ஆண்டு தில்லி சுல்த்தான் வம்சத்தை தோற்றுவித்தவரான குதுப் உதின் ஐபக் என்பவரால் குதுப்மினார் கட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் வந்த இல்துமிஷ் என்பவர் கி.பி 1220ஆம் ஆண்டுகுதுப்மினாரில் மேலும் இரண்டு அடுக்குகளை கட்டியிருக்கிறார். 1369ஆம் ஆண்டு இடி தாக்கியதன் காரணமாக சிதலமடைந்த குதுப்மினாரை பிரோஸ் ஷாஹ் துக்ளக் என்ற மன்னன் புனரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் செங்கற்கள் மற்றும் பளிங்கு கற்களை கொண்டு மேலும் இரண்டு அடுக்குகளை புதிதாக கட்டியிருக்கிறான்.
குதுப்மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்துகுதுப்மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. குதுப்மினார் கட்டபப்ட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள் தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப்மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகியதொரு கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
தஞ்சை பெரிய கோவில்
கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன். ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சியளிக்கிறது தஞ்சை பெரிய கோவில். இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். கி.பி.985 ல் அரியனை ஏறிய ராஜராஜன், அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய இக்கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆண்டில் 275 ஆம் நாளில் நிறைவு பெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல்வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இக்கோவில் கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.
பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலை 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாராம்பரிய சின்னமாக அறிவித்தது. அதன் பின்னர் அக்கோவிலுக்கு உள்ளே அழகிய நடைப்பாதை வெளியே அகழி போன்றவை யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டு பாரமரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய கட்டட ஞானத்தை பறைசாற்றும் வகையில் பேணிப் பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பது மிக அவசியமான ஒன்றே.
Web Title: India’s Top 5 UNESCO heritage places
feature image credit: commons.wikimedia, commons.wikimedia, history.