பொள்ளாச்சி மாட்டுச் சந்தையின் வரலாறு

இந்த வருடம், சென்னையைப் போலவே கோவையில் வெயிலின் தாக்கம், மிகவும் அதிகமாக இருக்க எங்காவது கிளம்பிச் செல்வோம் என்ற யோசனையில் இருந்தோம். கோடைத்திருவிழா இருப்பதால் ஊட்டியும், கோத்தகிரியும் கற்பனையே செய்ய இயலாத அளவிற்கு கூட்டத்துடன் இருக்கும் என்பதாலும் பொள்ளாச்சி செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் அங்கு ஏற்கனவே மாசாணியம்மன் கோவில், ஆழியாறு என்று அனைத்தும் சுற்றிய இடங்கள் என்பதால் புதிதாக ஒரு இடத்தைப் பற்றி யோசித்தோம். பொள்ளாச்சி மாட்டுச் சந்தை அல்லது கால்நடை சந்தை என்று அழைக்கப்படும் இந்த சந்தை தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக ஒரு காலத்தில் இருந்தது என்று இணையத்தில் படித்ததை தொடர்ந்து அங்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். குறிப்பாக கையில் துண்டினைப் போட்டு பேரம் பேசும் வழக்கத்தினைப் பற்றி அறிந்துகொள்ளவும் நேரில் சென்று பார்க்கவும் ஆசையோடு கிளம்பினோம்.

உதவிக்கு யாரை அழைப்பது என்பதிலும் சிறு குழப்பம். வரலாற்று ரீதியாக ஒரு இடத்தை அணுகுவதற்கு உள்ளூர்வாசிகளின் உதவி என்பது என்றும் இன்றியமையாதது. எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக இருந்த முன்னாள் ஒளிப்பதிவாளர் திரு. பொள்ளாச்சி அபி அவர்களை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு சென்றிருந்தோம். அங்கு அவர் கூறிய விஷயங்கள் பெரும் வியப்பினைத் தந்தது. காரணம், அச்சந்தையோடு இணைந்திருக்கும் வரலாற்றுப் பின்புலம்.

மாட்டுச் சந்தை

 நாங்கள் சென்றிருந்த போது, சந்தையின் ஒரு பகுதியில் பெரிய பெரிய கனரக வாகனங்களில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவையாவும் அடிமாடுகளாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்ற வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, கேரளாவிற்கு அடிமாடுகளாக செல்லும் நம்மூர் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருக்கின்றது என்று கூறினாலும், அதிகாலையில் இருந்து தோராயமாக ஒரு பதினைந்து கனரக வாகனங்களில் இருந்து மாடுகள் சென்றிருக்கும்.  ஜல்லிக்கட்டிற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக தடைகளும், அதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்ததால் காளை மாடுகள் அனைத்தையும் தொழுவத்தில் வைத்து பராமரித்து வந்திருந்த  நிலையிலும் விவசாயிகள் பெரும்பாலாக தங்களின் மாடுகளை அடிமாடுகளாக அனுப்ப விரும்பமாட்டார்கள். ஆனால், அதிக வயசான மாடுகள், மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாமல் இருக்கும் மாடுகளை அடிமாடுகளாக விற்பனை செய்வதுண்டு. இன்று விவசாயம் வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு வகை காரணம் என்றால், மற்றொரு பக்கம், மழை இல்லாத காலங்களில் கால்நடைகளின்  பராமரிப்பிற்கு அதிக செலவு செய்வது என்பது விவசாயிகளால் செய்ய இயலாத காரியம். ஊத்துக்குளியில் இருக்கும் புல்லைத் தின்று கறக்கப்படும் பாலில் இருந்து செய்யப்படும் நெய் என்னதான் உலக அளவில் பெருமை பெற்றிருந்தாலும் அங்கு பண்ணையில் அதிக அளவில் மாடுகள் வளர்க்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு மாடுகளை விற்பனை செய்ய வருபவர்கள் பெரும்வாரியாக தன்னுடைய இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் இருக்கும் மாடுகளையே விற்பனை செய்கின்றார்கள்.

சந்தையின் மற்றொரு எல்லையில் மாடுகளை வெட்டும் இடம் இருக்கின்றது. நல்ல விலை கிடைக்காத மாடுகளை இங்கே கொடுத்து இறைச்சியாக்கி, அருகில் இருக்கும் உணவகங்களுக்கு விற்பனை செய்துவிடுகின்றார்கள். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு சந்தை கூடுவது வழக்கம். அதிகாலையில் இருந்து நல்ல கூட்டம் இருக்கும் என்று கூறினார்கள். மேலும் இங்கு வரும் விவசாயிகள் மற்றும் அவர்களுடன் வரும் கால்நடைகள் என எதற்கும் குறை வராத அளவிற்கு பொள்ளாச்சி நகராட்சி அதன் வருமானத்திற்கு தகுந்த வகையில் பல்வேறு வசதிகளை செய்து வைத்திருக்கின்றது. பொள்ளாச்சியிலும் சரி, கேரளத்திலும் சரி மாடுகள் யாவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அவைகளை உணவிற்காக கொலை செய்கின்றார்கள்.. மாடுகளுக்கு நோய் தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தபின்னரே வெட்டப்படுகின்றன. இதனை மேற்கொள்ள ஒரு கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டிருப்பார். 

Cattles
Cattles (Pic: thepapyrus)

சந்தையில் வரலாறு

ஆனால் இதில் என்ன விவேசம் என்கின்றீர்களா? தென்னிந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய மாட்டுச் சந்தைக்கு தென்னகத்தில் இருக்கும் நாட்டு மாடுகள் அனைத்தையும் விற்று வாங்க சிறந்த இடமாக இருந்தாலும், ஆங்கிலேயர் காலத்திற்கும் முன்னர் யானைகளையும் குதிரைகளையும் விற்பனை செய்து கொண்டிருந்த மிகப் பெரிய வர்த்தக இடமாக இது விளங்கியது. ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் ஊர்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் இந்த சந்தையின் வர்த்தகத்தோடும் அதன் மூலமுமான யானைகளோடும் அதிக தொடர்பு கொண்டவை.

ஆனைமலை என்பது வெறுமனே யானையின் உருவத்தில் இருக்கும் மிகப் பிரமாண்டமான மலைத்தொடர் மட்டுமல்ல. மாறாக யானைகளையும், மான்களையும், புலிகளையும்,  வரையாடுகளையும், இன்னபிற விலங்குகளையும் கொண்டிருக்கும் மலைக்காடுகளும் தொடர்களும் ஆகும். ஆனைமலைப் பகுதியில் இருக்கும் யானைகளை வேட்டைக்கு சென்று பிடித்துவந்து பழக்கப்படுத்துவர்கள் அதிகம் இருந்திருக்கின்றார்கள். வேட்டைக்காரன் புதூர் என்ற ஊரில் அதிக அளவில் வேட்டைக்காரர்கள் அதிகம் இருந்திருக்கின்றார்கள். மற்ற விலங்குகளை வேட்டையாடினாலும், யானைகளை பழக்கப்படுத்துவதை மட்டும் இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

அங்கும் மிக அருகிலேயே மலையாண்டி பட்டிணம் என்ற ஊர் இருக்கின்றது. இந்த மலைக்காடுகளில் இருக்கும் மலைநாட்டு மக்கள், காடுகளில் இருக்கும் பொருட்களை கொண்டு வந்து இந்த ஊரில் விற்பனை செய்து, நாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்களாம். ஆனால் இந்த இரண்டு பகுதிகளிலும் விலங்கு சார்ந்த பொருட்களை அவர்கள் விற்பதில்லை.

யானைகளின் தந்தங்களை விற்பனை செய்வதற்கென இருந்த பகுதியினை கோட்டூர் என்று அழைத்தார்கள். தமிழில் கோடு என்பதற்கு யானைகளின் தந்தம் என்று பெயர். இராஜாக்களின் அரண்மனைகளில் இருந்தும், ஜமீன்தார்  வீடுகளிலும் இருந்து இதனை வாங்க இப்பகுதியில் அதிகம் ஆட்கள் வருவார்கள்.

யானைகளின் தந்தத்தினைப் போல் யானைகளையும் வாங்க அரச குடும்பத்தில் இருந்தும், கோவில்களில் இருந்தும் வரும் ஏஜெண்ட்களின் முதல் தேர்வாக என்றுமே இருந்திருக்கின்றது இன்றைய பொள்ளாச்சி மாட்டுச் சந்தை. தமிழகம் மற்றும் கேரளப் பகுதியில் இருக்கும் கோவில்களுக்கு இங்கிருந்து தான் யானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.  திருச்சூர் சாலையில் அமைந்திருக்கின்ற இந்த மாட்டுச் சந்தையில் ஒரு காலத்தில் யானைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்திருக்கின்றார்கள். திருச்சூர் வழியாக கேரளாவிற்கு இங்கிருந்து அதிக அளவில் யானைகளை விலைக்கு வாங்க அரசாங்க ஏஜெண்ட்கள் வந்து கொண்டிருந்தார்கள். மேலும் வால்பாறை பகுதிக்கு செல்ல அன்று சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் யானைகளிலும் குதிரைகளிலும் தான் அதிக அளவு மக்கள் பயணங்கள் மேற்கொண்டார்கள்.

Cattle Examining
Cattle Examining (Pic: thepapyrus)

சந்தையின் இன்றைய நிலை

இப்படியான வரலாற்று சிறப்பு மிகுந்த தளமாக இருந்த பொள்ளாச்சி சந்தை பொலிவிழந்து வெறுமனே அடிமாடுகள் விற்கும் தளமாக மாறியிருக்கின்றது. உள்ளூர் நகராட்சி என்னதான் சிறப்பான முறையில் இதனை மேம்படுத்தினாலும், கால்நடை  சந்தையால் கிடைக்கும் வருவாய் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இந்த வரலாற்றினைப் பதிவு செய்யும் ஒரு செய்தியினையும் அப்பகுதியில் காண இயலாதது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்துகின்றது. இந்த வரலாற்றினை இவர்கள் முறையாக ஆவணம் செய்து, அதை பொது மக்கள் அறியும் வகையில் வைத்தால் இதனை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையாவது அதிகரிக்கும்.

General Public
Public (Pic: thepapyrus)

வருடத்திற்கு ஒருமுறை இப்பகுதியில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா என்ற கண்காட்சி நடைபெறும். அச்சமயத்தில் உசிலை, மதுரை, தேனி, பொள்ளாச்சி, காங்கேயம், ஈரோடு, தஞ்சை, திருச்சி, பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து அதிக அளவில் நாட்டு மாடுகளை விலைக்கு வைப்பார்கள். தமிழகத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே மாட்டுத்தாவணிகள் என்று அழைக்கப்படும் கால்நடைச்சந்தைகள் இருக்கின்றன. ஒட்டன்சத்திரம், பழநி, கோபிச் செட்டிபாளையம் என்று கொங்கு தேசத்தினைச் சுற்றி அங்காங்கே சந்தைகள் இருந்தாலும் பொள்ளாச்சி சந்தை அதி சிறப்பு வாய்ந்த ஒன்று.  

Web Title: Pollachi Cattle Market

Featured Image Credit: thepapyrus

Related Articles

Exit mobile version