சுற்றுலா சாகசம் ஆன்மிகம் மூன்றும் ஒன்றாய் வெள்ளியங்கிரி

கோடை சுற்றுலா என்றாலே ஊட்டி ,கொடைக்கானல் ,மூணார் , குறைந்த பட்ஜட்னா குற்றலாம் ! இதுதான் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குள்ள அதிகமாக சுற்றுலா போற இடங்களாக இருக்கும் , கண்டிப்பா நாமலும் அந்த ரெகுலர் சுற்றுலா போக கூடாதுன்னு எங்க 11 பேர் கொண்ட குழு தீவிரமா யோசிச்சபோதுதான் நண்பன் அருண் வெள்ளியங்கிரி போலாம்டானு சொன்னான் . எங்கயோ கேள்விப்பட்டமாதிரி இருக்கேன்னு யோசிக்க , தம்பி ரெண்டு வருஷம் கோயம்புத்தூர்ல எம்.பி.ஏ படுச்சிங்களே அங்கதான் இருக்கு என்று மானத்தை வாங்கினான் நண்பன் . நாமதான் பக்கத்துல இருக்கிற எதையும் எவ்வளோ நல்ல விஷயமா இருந்தாலும் மதிக்க மாட்டமே .

இடம் விவரம்

கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் 2௦ கி.மீ தொலைவில் ,பூண்டி என்ற இடத்துக்கு தனிப்பாதை விலகிச்செல்லும். அந்தப்பாதையில் இடதுபுறம் சென்றால் வெள்ளியங்கிரி மலை .அது யானைகள் நடமாடும் பகுதி ,மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் நம்மை வரவேற்கும்.அதே பாதையில்தான் ஈஷா யோக மையம் இருக்கிறது ,இப்போது மிகப்பெரிய ஆதியோகி சிலையும் உள்ளது. இயற்கையின் இத்தனை பெரிய பிரமாண்டத்தின்முன் எங்கள் யாரையும் ஈஷா கவர வில்லை. நாமதான் வெள்ளியங்கிரி போனது இல்லை போன ஜீவன்களையாவது கேட்போம் என்றால் , இரவில் மலை ஏறுவதுதான் நல்லது காலையில் ஏறினால் மிகவும் மலைப்பாக இருக்கும் , கண்டிப்பா மலையேறும்முன் மலையில் ஊன்றி நடக்க குச்சி கொண்டுபோங்க என்றெல்லாம் செம பில்டப் கொடுத்தார்கள் , சபரிமலைக்கு 12 வருஷம் போனவன்கடா என்று நாங்களும் பில்டப்போட மலையேற ஆரம்பித்தோம்.

அதிகாலை சூரிய உதயம் மலை உச்சியில் பார்த்தால் அருமையாக இருக்கும் முக்கியமா நிறைய போட்டோ எடுக்கலாம் என்பதால் நாங்களும் இரவு மலையேற்றததிற்கே தயாராக சென்றோம் . கோவில் அடிவாரத்தில் மூங்கில் குச்சிகள் விற்பனை செய்கிறார்கள் ஆனால் சரியான கூட்டம் எனக்கெல்லாம் குச்சி வேணாம் என்று ஒரு ஜீவன் சொன்னது , மீதம் இருந்த அனைவரும் வரிசையில் நின்று மூங்கில் குச்சி வாங்கினோம் 3௦ரூபாய் ஒரு குச்சி. மலை இறங்கி வரும்போது யாரும் குச்சியை தூக்கிபோடுவது இல்லை அதை வீட்டிற்கு கொண்டுசெல்கிறார்கள். மலையேறும்முன் வனத்துறை நம்மை முழுவதும் பரிசோதித்து நெகிழி பைகளை பறிமுதல் செய்தபின்தான் அனுமதிக்கிறது , பிஸ்கட் உட்பட எதுவும் நெகிழி பையில் அனுமதி இல்லை  ஆனால் மலையின் மேல் இருக்கும் கடைகளில் நெகிழி இருக்கத்தான் செய்கிறது என்ன கட்டுப்பாடோ !  பயங்கரமான கூட்டம் இன்றைக்கு என்ன விஷேசம் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்க ,இன்று சித்ராபெளர்ணமி லட்சக்கணக்கான மக்கள் இன்று மலையேறுவார்கள் என்றார்கள்.

Velliangiri Trekking (Pic: isha)

மலையேற்றப் பயணம்

1௦௦ படிகூட ஏறி இருக்க மாட்டோம் அந்த குச்சிலாம் எனக்கு வேணாம் என்று சொன்ன ஜீவன் டேய் என்னால முடில நான் கீழபோய் உங்களுக்காக வெயிட் பண்றேன் என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கீழே போய்விட்டார் . மலை அத்தனை செங்குத்தாகத்தான் இருக்கிறது. ஏறுவதற்கு நிச்சயம் மனதிடம் தேவை . நாங்க மொத்தம் பத்துபேர், கூட்டத்தில் ஒன்றாக செல்ல முடியாமல் இரண்டாக பிரிந்து செல்லும்படியாக ஆகிவிட்டது . எனவே நண்பர்களுடன் கூட்டாக செல்ல விரும்பும் நபர்கள் விஷேச நாட்களை தவிர்க்கவும். முதல் மலை ஏறியதும் வெள்ளை பிள்ளையார் கோவில் இருந்தது அங்கு தண்ணீர் பிடிக்க குழாய் இருந்தது , சிறிய கடைகளும் இருந்தது . தம்பி இதுக்குமேல படிக்கட்டு கிடையாது வழுக்கு பாறைதான் ,மேல போக போக சுனையில தான் தண்ணி புடிக்கணும் அதுனால தண்ணி கொண்டுபோயிருங்கன்னு ஒரு பெரியவர் சொன்னார் . முதல் மலை கொஞ்சம் பயம் காட்டியதால் நாங்களும் தண்ணி சாப்பாடு என தூக்க கூடிய அளவு பொருட்களை வாங்கிகொண்டு கிளம்பினோம் .

முதல் மலை எறிய களைப்பு அனைவர் முகத்திலும் தெரிய, அமர்ந்து  ஓய்வெடுக்க எண்ணியபோது 50-6௦ வயது மூதாட்டி எங்களை கடந்து வேகமாக மலை ஏறினார் ! பங்கு பாட்டி வேகத்தை பாறேன் என்று நண்பன் சொல்ல அது கேட்டுவிட்டது போல பாட்டி நின்றார்கள் , 2௦ வருஷமா வறேன் தம்பி , நின்னு நின்னு மலை ஏறுனா விடியிறதுக்குள்ள மலை ஏற முடியாது இளந்தாரி பயலுக நல்லா நடந்து வாங்கையா என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டார்  எங்களுக்கு புது தெம்பு பிறந்தது . அதுவும் ரெண்டாவது மலை வரைதான்  இரண்டாவதுமலை கொஞ்சம் சமதளம் பின் செங்குத்து திடீர் பாதைஇல்லா பகுதியென நம்மை திக்குமுக்காட வைத்தது. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடிந்தது. இம்மலையில் பிப்பிலி, திப்பிலி, மூங்கில், வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.

Bamboo (Pic: medium)

சவாலான பாதைகள்

மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். ஒருவிதமான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% கற்படிகளால் ஆனவை. இம்மலையில் வசு வாசி என்ற மதுரை களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்றொரு, என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.

ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி, மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம். இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஒன்று எங்களை நோக்கி ஊர்ந்து வந்ததை கண்டோம். பாதை ஓரத்தில் ஒதுங்கி அதற்கு வழிவிட்டு, அது எங்களைக் கடந்து சென்றபின் நாங்கள் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.

Steps (Pic: travelwithpleazure)

சந்தன மலை

அடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். அங்கு மலையை குடைந்து மண்ணை எடுத்து செல்கிறார்கள் அது வாசமுள்ள திருநீர் போல இருக்குமாம். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் இருக்கும். குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் ஆனால் நீங்கள் சுனையில் அருந்தும் நீர்தான் உங்கள் வாழ்கையில் அருந்திய மிக ருசியான நீராக இருக்கும் என்பது மட்டும் உறுதி. அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.

ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இம்மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சூரிய வெளுச்சம் கிழக்கில் இருந்து வருவதை பார்க்க ஆயிரம்கண்கள் வேண்டும் .மேகம் உங்கள் தலையை உரசி போகும் இரம்மியமான இடம் அது.

Rugged Pathway (Pic: travelwithpleazure)

மலைக்கோயில்

இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை அன்று மட்டும் கூட்டமாக பக்தர்…சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். கதவுகளே இல்லை. எப்போதும் திறந்தே இருக்கும். கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வேண்டி வரும். கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை வழிபடலாம்.

Velliangiri Tophill View (Pic: wikipedia)

அந்த இயற்கை காற்று உங்கள் சுவாசப்பையை நிறைக்கும்போது நீங்கள் சொர்கத்தில் இருப்பதுபோல் உணர்வீர்கள். வெயில் வரும்முன் மலை இறங்கிவிடுவது நல்லது இல்லையேல் பாறை சுடும் என்றார்கள் . சரி இறங்குவோம் என்று பார்த்தால் , அடப்பாவிங்களா இவ்ளோ ஓயரமாடா என்னை ஏத்துணீங்க என்று புதுமாப்பிள்ளை மணி கதறினான் .ஆமாம் அதான் உண்மையும் கூட நீங்களா இவ்ளோ உயர மலை ஏறுனீர்கள் என்று நீங்களே நம்ப மாட்டீர்கள் அத்தனை கடினம். ஒருவழியாய் கீழே இறங்கியதும் அந்த மூங்கில் குச்சிக்குதான் முதல் முத்தம் குடுத்தேன். அது இல்லையேல் இந்த பயணம் இல்லை . கீழ அன்னதானம் எப்பவும் நடந்துட்டே இருக்கும் நடந்த களைப்பு தீர சாப்பிட்டு அடுத்து போக  வேண்டிய இடம் பத்தி பிளான் பண்ண ஆரம்பிச்சோம். பிப்ரவரி முதல் ஜூன் வரைதான் மலைகோயிலுக்கு அனுமதி எனவே சாகச விரும்பிகள் பயன்படுத்திக்கொள்ளவும். சாகச பயணங்களுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை ரோர் தமிழ் இணையத்தில் முன்பே வந்த ”சாகச மலையேற்றத்திற்கான நெறிகளும் முறைகேடுகளும்” என்கிற கட்டுரையில் வரும் சில பகுதிகள் விளக்கும். அதனை படித்து தெரிந்துகொள்ளலாம்.

Web Title: Velliangiri Hills Trekking

Featured Image Credit: flickr

Related Articles

Exit mobile version