வேலைப்பளுக்களைக் களைந்துவிட்டு, அமைதியான இடத்தில் பிடித்தமான காலநிலையில் தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ ஓய்வு நேரங்களை அனுபவிப்பது ஒருவித ரகம்.
பயணிக்கும் இடம் எவ்வாறானது? பயண வழியில் எத்தகைய சாகசங்கள் (Adventure) இருக்கும்? இந்த சுற்றுலா பயணம் எத்தகைய புதிய அனுபவத்தை தரும்? என்கிற கேள்விகளுக்கு பின்னால், புதுமைகளை அனுபவிப்பவர்கள் ஒருவித ரகம்.
இதில், சாகசங்களை அனுபவிக்க எங்கே பயணிக்கலாம்? என்கிற தேடலுடன் இருப்பவர்களுக்கு, புதியதோர் இடத்தை அடையாளபடுத்துவதாகவும், புதிய முயற்சிகளை வாழ்வில் ஒருமுறையேனும் செய்திடவேண்டும் என நினைப்பவர்களுக்கும் கித்துள்கல பயணம் சாலப்பொருத்தமாகவிருக்கும் என நம்புகிறேன்.
கித்துள்கல (Kithulgala)
கொழும்பிலிருந்து சுமார் 90KM தொலைவில், கேகாலை மாவட்டத்தின் அவிசாவளை நகரிலிருந்து 40KM தொலைவிலும் மழைக்காடுகளைத் தன்னகத்தே கொண்டு, களனிகங்கையின் இயற்கை வனப்பை முழுவதுமாக உள்வாங்கிநிற்கும் ஓர் பிரதேசமே கித்துள்கல. பனை வகையை சார்ந்த கித்துள் மரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் கித்துள் கருப்பட்டிகளின் பிரசித்தமே இந்த ஊரின் காரணப்பெயராக உள்ளபோதிலும், தற்காலத்தில் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முதற்கொண்டு, உள்நாட்டவரையும் ஈர்க்ககூடிய இயற்கையாக அமைந்த சுற்றுலாத்தலமாக இது அமைந்துள்ளது.
பயண முறைகள்
சுற்றுலாக்களைத் திட்டமிடல் ஒரு கலை. அதிலும் இவ்வாறான சாகசச் சுற்றுலாக்களை கூட்டாக சென்று களிப்பதைத் திட்டமிடல் சற்றுச் சவாலான விடயமே. பொதுவாக சிலர் சாகசச் சுற்றுலாக்கள் செல்லத் தயங்கி சிலசமயம் பின்வாங்குவதுண்டு, சிலர் கடைசி நிமிடத்தில் வருவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களை எதிர்வுகூறி ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வேறுபட்ட சுற்றுலா ஒழுங்குகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வது உசிதம்.
குறைந்தது 2-4 பேர் வரையில் பயணிப்பதாயின், மிகசிக்கனமாக பேரூந்திலேயே பயணிக்கலாம். கொழும்பு – ஹட்டன் குளிரூட்டபட்ட பேரூந்தில் ஒருவருக்கு தலா 300/- வரை செலவாகும். இதுவே, 8-10 பேர் பயணிப்பதாயின் வான் ஒன்றினை முன்பதிவு செய்து பயணிக்கலாம். கித்துள்கல சென்று மீண்டும் கொழும்புக்கு வர முழுமையாக 10,000/- (தனிநபருக்கு 1,000/-) வாகனத்திற்கு செலவாகும்.
முக்கியமாக, பயண ஒழுங்கை திட்டமிடும்போது, எத்தகைய சாகச அனுபவங்களை சுற்றுலா பயண ஒழுங்காக மாற்றிக்கொள்ளுவது என்பது முக்கியமாகும்.
கித்துள்கலவில் தவறவிடக் கூடாதவை
கித்துள்கல முழுவதும் மழைக் காடுகளும், களனி கங்கையும் பரந்து,விரிந்து காணப்படுகின்றன. வெளிநாட்டு உல்லாசப்பயணிகளாக வருபவர்கள் பெரும்பாலும் இரண்டு நாட்களை இங்கே செலவிடுவார்கள். பெரும்பாலும், இங்குவருகின்ற உள்நாட்டவர்கள் ஒரு நாளை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
கித்துள்கலவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா செல்பவர்கள், பெரும்பாலும் முதல் நாள் இரவினை மழைக்கால அடர்ந்த காடுகளில் முகாமிட்டு தங்கவே செலவிடுவார்கள். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி, அமைதியாக இயற்கையுடன் ஒரு நாளை செலவிடகூடியதற்கு கித்துள்கல காடுகள் உகந்தவையும், பாதுகாப்பானதும் கூட. இவற்றை ஒழுங்கு செய்து தரவும், முறையான வழிகாட்டலுடன் இரவு பொழுதுக்கான கூடாரங்கள் , BBQ உணவுகளை உள்ளடக்கியதான விதவிதமான வெவ்வேறு விலைகளை உள்ளடக்கிய பட்டியலை (Packages) கொண்ட பல்வேறு சாகச நிறுவனங்கள் (Adventure Organizer Companies) கித்துள்கலவிலும், இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கிறன. அவர்களை முறையாக தொடர்புகொண்டு ஒழுங்கு செய்துவிட்டு சுற்றுலா செல்வதன் மூலம், அசொளகரியங்களை தவிர்த்து கொள்ளலாம்.
என்னுடைய சுற்றுலாக்கள் பெரும்பாலும் குறுகிய கால இடைவெளியில் திட்டமிடப்படுவதால், பெரும்பாலும் குறித்த சுற்றுலா பிரதேசங்கள் தொடர்பில், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் விடயங்களை முதலில் சரிபார்த்துக்கொள்வேன். அவ்வாறு கித்துள்கல தொடர்பில் இணையத்தை மேய்ந்தபோது, கண்ணில் பட்ட ஒரு நிறுவனம் தான் Team 39 (http://www.raftingteam39.com/). குறிப்பாக, பல்வேறு வெளிநாட்டவர்களின் சாதக பரிந்துரைகளை (Positive Reviews) பெற்ற நிறுவனமாக இது இருக்கின்றது. நிறுவனத்தினரை தொடர்புகொண்ட போது, கித்துள்கலவில் எத்தகைய சாகச நிகழ்வுகள் உள்ளன, அவர்களின் விலைப்பட்டியல் (Price Package / List) எவ்வாறு வடிவமைக்கபட்டுள்ளது என்பது தொடர்பிலான முழுவிபரத்தையும் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். வரவேற்பு பானத்துடன் நாளை ஆரம்பித்து, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளடங்கலாக ஒருநாளை முழுவதுமாக உள்ளடக்கியதாக அவர்களது விலைப்பட்டியல் அமைந்திருந்தது. குறைந்தது 10 பேர் கொண்ட குழுவாக செல்லும்போது, குறித்த நபருக்கு 1,700 – 2,000/- வரையில் கட்டணமாக அறவிடப்படும். மேலதிகமாக, உங்கள் முழு சுற்றுலாவையும் வீடியோ முறையில் பதிவு செய்தும் வழங்குகிறார்கள் (இதற்கு மேலதிகமாக 2,000/- அறவிடுகிறார்கள்). எனவே, சாகச பயணங்களை வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாக சேர்த்துவைத்துப் பாதுகாக்க முடியும்.
விடுமுறை நாள் ஒன்றினை தேர்வுசெய்து, Team 39னுடன் திட்டமிடலை உறுதிசெய்துகொண்டு, கொழும்பிலிருந்து காலை 7 மணியளவில் புறப்பட்டோம். தற்சமயம் மழைக்காலம் என்பதனால், போகின்ற வழியில் கித்துள்கல சாகச சுற்றுலா சாத்தியப்படுமா? என்கிற கேள்வியுடன், மாற்று ஏற்பாடு ஒன்றுடனும் புறப்பட்டோம். ஆனால், மழைக்காலங்கள்தான் கித்துள்கல படகு சவாரி (White Water Rafting) , மலையேற்றம் (Mountain Hiking) , சிறுகுன்றிலிருந்து அருவியில் குதித்தல் (Confidence Jump), அருவியின் போக்கில் நீந்துதல் (Stream Sliding) என்பன மிரட்டலான அனுபவத்தை தரும் என்பதை சுற்றுலா முடிவில் உணர்ந்து கொண்டோம்.
சரியாக, 10.30க்கு தொலைபேசி வழிகாட்டலுடன் கித்துள்கலவின் பொருத்தமான இடத்தினைனை சென்றடைந்தோம். முதலில் படகு சவாரிக்கு செல்வது என தீர்மானித்து கொண்டோம். அதற்கு அமைவாக, உடைகளை மாற்றிக்கொண்டு, குறித்த நிறுவனத்திலிருந்து அவர்களுடைய வாகனத்திலேயே படகுசவாரிக்கு பொருத்தமான இடத்திற்கு பயணப்பட்டோம். 5 நிமிட வாகன பயணம், கூடவே இன்னுமொரு 5 நிமிட நடைப்பயணத்திற்கு பின்பு களனிகங்கையின் படகுச்சவாரிக்கு பொருத்தமான இடத்தை சென்றடைந்தோம். Team 39னின் தேர்ந்த படகோட்டிகளின் வழிகாட்டலுடன், பொருத்தமான தற்காப்பு அங்கிகளுடன் (Safety Jack) மழையில் சவாரியை ஆரம்பித்தோம். இது முழுவதுமாக சுமார் 1 மணிநேர சாகச பயணமாகவிருந்தது.
இடைநடுவே, சுமாரான மற்றும் பயங்கரமான பாறைகள் நிறைந்த பாதையில் ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, அதன் வெள்ளை அலைகளுக்கு நடுவில் பயணிப்பது சாகச அனுபவம்தான். சிலசமயங்களில் படகோட்டியின் அறிவுரைக்கு அமைவாக துடுப்புபோடாத சமயத்தில், படகுகள் கவிழ்வதும் உண்டாம். ஆனால், தற்காப்பு அங்கிகள் அணிந்து இருப்பதால், எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என எங்களுடன் வந்த படகோட்டி சொல்லிக்கொண்டார். கூடவே, படகுச்சவாரியின் இறுதி சில நிமிடங்களுக்கு ஆற்றில் இறங்கி, படகு கவிழ்ந்தாலும் மூழ்கவோ, ஆற்றில் அடித்து செல்லவோமாட்டோம் என்பதை விளக்க எங்களையும் ஆற்றில் இறக்கிவிட்டார். அப்போதுதான், பொருத்தமான தற்காப்பு வசதிகள் உள்ளபோது, வாழ்நாளில் நீந்ததெரியாத ஒருவராலும், அத்தகைய நிலையை சிறப்பாக கையாளமுடியும் என்பதைப் புரிந்துகொண்டோம். காரணம், எனக்கும் நீச்சல் தெரியாது என்பதுதான்.
படகுச்சவாரியின் பின்பு, விரும்பினால் மதிய உணவுக்கு பின்னதாக ஏனைய நடவடிக்கைகளைத்தொடரலாம் எனகூறினர். கூடவே, உணவருந்திவிட்டு மலையேற்றம் மற்றும் ஆற்றில் குதித்தல் என்பன எல்லோர் உடல்நிலைக்கும் ஒத்துவருமா? என்பதையும் ஆலோசனை செய்து கொண்டார்கள். எனவே, எல்லாவற்றையும் முடித்துவிட்டு, உணவருந்துவதாக முடிவு செய்துகொண்டோம். அதற்க்கு அமைவாக, மீண்டும் ஒரு 10 நிமிட வாகன மற்றும், நடைபயணத்தின் பின்னதாக, களனி கங்கை உருவாகும் அருவியின் உச்சியை அடைந்தோம். பாதை வழியே பயணிக்கின்ற போது அட்டைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என்பதை நம்முடன் வந்திருந்த வழிகாட்டி பயணம் முழுவதுமே நினைவுபடுத்திக்கொண்டு வந்தார். அங்கு சென்றபின்புதான் ஒன்றை புரிந்துகொள்ள முடிந்தது. கித்துள்கல சாகச பயணத்தில் உண்மையான சாகசங்களே இனித்தான் ஆரம்பிக்க போகிறது என்பது!
முதலில், சிறுகுன்றிலிருந்து அருவியில் குதித்தல் (Confidence Jumb), அருவியின் போக்கில் நீந்துதல் (Stream Sliding) என்பவற்றுக்கு எல்லோரும் புதியவர்கள் என்பதால், எங்களுடன் வந்த வழிகாட்டி தாங்களே முதலில் அதனை செய்து காட்டினார்கள். எந்தவித ஆபத்தும் இல்லாத மிகச்சிறிய குன்றிலிருந்து குதிக்கவும், அருவியின் போக்கில் நீந்தவும் அனுமதித்தார்கள். இதன்மூலம், பெருமளவான பயத்தை போக்கிக்கொள்ள முடிந்தாலும். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு எல்லோராலும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, சிலர் பின்வாங்கிகொள்ள, ஆபத்து இல்லையென்பதால் பயத்தை விலக்கிகொள்ள நான் உட்பட சில நண்பர்களும் ஏனைய செயற்பாடுகளுக்கு முன்வந்தோம். அடுத்து, சுமார் 6-8 அடி உயரமான பாறையிலிருந்து அருவியில் குதிக்கவேண்டும் என வழிகாட்டி சொன்னார். உண்மையிலேயே, உயரமான இடத்திலிருந்து குதிக்கின்ற அந்தநொடியும், குதித்து நீருக்குள் அமிழ்ந்து (எல்லா செயல்பாடுகளின்போதும் தற்காப்பு அங்கி அணிவது அவசியம்) வெளியேவருகின்ற அந்த நொடியும் திகிலானதும், சுவாரசியமானதும் கூட! எங்கள் சுயதைரியத்தை பரிசோதித்துகொள்ள இவ்வாறான செயற்பாடுகளை ஒருமுறையாவது பரீட்சித்து பார்க்கவே வேண்டும். ஆனால், பொருத்தமான தற்காப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிகளுடன்தான்! இத்தகைய அனுபவங்களை வார்த்தைகளாக விபரிக்க முடியாது. அவற்றை, சாகச பிரியர்களாக அனுபவத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
சுமார் 3 மணிநேர செயற்பாடுகளுக்குப்பின்னதாக, Team 39 குழுவின் அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். அங்கேயே, பாதுகாப்பான முறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சகலரும் தங்களை தயார்படுத்திக்கொள்ளகூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கபட்டிருந்தன. தயார்படுத்தலின் பின்னதாக, அனுபவங்களை வீடியோ காட்சிகளாக (உங்களுடைய சொந்த Pen Driveயை கொண்டு செல்வது நல்லது. அல்லது அதற்கும் வேறாக பணம் செலுத்த வேண்டி ஏற்படலாம்) பெற்றுக்கொண்டு, அங்கிருந்து விடைபெற்றோம்.
உண்மையில், கித்துள்கல சாகசபிரியர்களான எமக்கு ஒரு சொர்க்கபுரிதான்! இப்படியான, சாகச இடங்களை தேடித்தேடி பயணப்படுபவர்களுக்கும், வாழ்க்கையில் இவற்றையெல்லாம் ஒருதடவையேனும் முயற்சிசெய்து பார்த்திட வேண்டும் என சிந்திப்பவர்களுக்கும் கித்துள்கல ஓர் புதிய அனுபவமே!
கித்துள்கல நோக்கி பயணிப்பவர்களுக்கு,
- பயணத்திற்கு முன்னதாகவே, பயணித்தவர்களின் அனுபவத்துடன் பொருத்தமான வழிகாட்டிகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள், இது சிக்கனமானதும், பாதுகாப்பானதும் கூட!
- மாற்று ஆடைகளை எடுத்து செல்லுங்கள். பெரும்பாலும், நீரிலேயே பயணிப்பதால் பெறுமதியான பொருட்களை வழிகாட்டும் நிறுவனங்களின் Lockerரில் வைத்துவிட்டே செல்லவும். உடைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
- சகல செயற்பாடுகளையும் எல்லோராலும் முன்வந்து செய்வது கடினம். எனவே, யாரையும் வற்புறுத்தாதீர்கள்.
- குடிநீர் கொண்டு செல்வது பொருத்தமானது. கூடவே, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தியும் விடுங்கள்.