கடவுளின் நகரம் – காசி

எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக்  கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே)

படம் – asthivisarjan.com

மதியம் 3.30க்குத்தானே இரயில், என்று பொறுமையாக கிளம்பியவனை மழை வச்சு செய்தது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் வண்டியை துரத்திப்  பிடித்து அன்ரிசர்வில் ஏறும் போது, பாரம் தாங்காமல் தோல்பையின் ஒரு பக்கம் அருந்தது. ஒருவேளை இதெல்லாம் சிவனின் திருவிளையாடலோ என்று நண்பனைப்  பார்க்க, அதிகத்  துணிகளை தூக்கி வந்ததும், தாமதமாக கிளம்பிய உன் சோம்பேறித்தனமும்தான் காரணம் என்று கழுவி ஊற்றினான். (குறிப்பு: அவனுக்கு ஹிந்தி தோடா  தோடா மாலும். எனக்கு, அதுவா அது பண்டிகை காலத்துல கோவிலுக்கு வெளிய வச்சு விப்பாங்கனு வடிவேல் சொல்லுவாரே அவ்ளோதான் வரும்…)

சென்னையில் இருந்து 36 மணிநேர பயணம். வாரணாசிக்கு. எங்களைத்  தவிர எங்களுடன் பயணித்த அனைவரும் ஹிந்திவாலாக்களே, இந்தியன் ரயில்வே உணவு சாப்பிட கூடியதா என்று தெரியவில்லை. ஆனால் விழுங்குவதற்கு மிகவும் கடினமானவை. என் கல்லூரி விடுதி சமையல் தெய்வமாகத்  தெரிந்தது. கூடப் பயணிப்பவர்கள் இரண்டு நாளைக்குமே சப்பாத்தி சுட்டுக்  கொண்டு வந்துள்ளனர். ஒரு வார்த்தைக்கு சாப்டுறீங்களானு கேக்கலையே பாவிங்க. பெரும்பாலும் உண்ண, உறங்க என்று பொழுது போனாலும் இயற்கை காட்சிகள் நம் கண்களைக்  கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

படம் – staticflickr.com

அது மூன்றாம்நாள் காலைப்பொழுது, டேய் கங்கை ஆறுடா! நண்பனின் குரல் என்னை எழுப்பியது. எங்களின் இரயில் மிக மெதுவாக கங்கையின்மேல் கட்டப்பட்ட பாலத்தின்வழியே சில நிமடங்களே சென்றது எனலாம்!. அவ்ளோ பெரிய ஒரு நதியை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை!. இயற்கை எப்போதுமே நம் கற்பனைகளைவிட பிரம்மாண்டமானவை என்பதை உணர்ந்த  தருணம் அதுதான். அடுத்த சிறிது நேரத்தில் காசி வந்தது, ஆனால் ஒரு அறிவு ஜீவி வாரணாசியில்தான் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது என்று சொன்னதைக்  கேட்டு வாரணாசி சென்றோம்.. (ஆனால் மறுபடியும் அங்கிருந்து காசி வந்ததும் அந்த ஜீவனை, தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் அபிசேகம் செய்தோம்)

நீங்கள் புதுவரவு என்பதைத்  தெரிந்ததும் உங்களைக்  கோழி அமுக்குவது போல் அமுக்க ஒரு ஊரே அங்கு இருக்கிறது. தெரிந்த தோட தோட ஹிந்தியை வைத்தே நண்பன் ஷேர்ஆட்டோ பிடித்துக்  காசிக்குப்  போக வழிசெய்தான். காசி போனதும் ஒரு பெரியவரிடம், “குளிக்க இங்கு பாத்ரூம் இருக்கா” என்று கேட்க அவர் என் பின்புறம் கைகளைக்  காட்டி நக்கலாய் ஏதோ சொன்னார். அது என்னவென்று நண்பனைக்  கேட்க,  உலகமே இதுல தலை முழுகுனா பாவம் போகும்னு நெனைக்கிற கங்கையைப்  பின்னாடி வச்சுகிட்டு பாத்ரூம் கேக்கறீங்களேன்னு சொன்னாராம். ஆம்  சில அடி தூரத்தில்தான்  அந்த மாபெரும் கங்கை நதி ஓடிக்கொண்ருடிந்தது.

படம் – news.bbcimg.co.uk

‘ஏன்டா! அப்ப ஒனக்கு எவ்ளோ திமிர். அப்டின்னு தானே கேக்கறீங்க?’ சத்தியமா அந்தத்  தண்ணி அவ்ளோ குப்பைகள் நிறைந்திருந்தது. மொத்த ஊரின் கழிவுகளையும் சுமக்கும் இடமாக கங்கை அங்கு இருந்தது. அடிமனதில்  “அடப் பாவிங்களா! இதுவும் எங்க ஊர் கூவம் மாதிரி  ஆகிவிடக் கூடாது” என்று நினைத்துக்கொண்டே முதல் முழுக்கு போட்டேன். அருகில் பிரபா இதுவரை அடித்த பியரை கூட இனி தொடுவதில்லை என்று முங்கிக்கொண்டிருந்தான். அங்கிருந்து நதியின் வழியே கோவிலை அடைவதுதான் எளிது ஆனால் வழக்கம் போல் நம்மை கவுக்க கூட்டம் தயாராக இருக்கும்! இங்கேயும்  நண்பன் தயவால் 50 ரூபாய்க்கே படகில் போனோம். அவர்கள் எங்களிடம் ஆரம்பத்தில் கேட்டது 600 ரூபாய் மக்களே! மொத்தம் 82 படித்துறைகள் அங்கு உள்ளனவாம், அதில் ‘’அஷ்வமேத’’ என்ற படித்துறையின் அருகில்தான் கோவில் உள்ளதாக படகோட்டி கூறினார்.

அது தவிர்த்து மணிகர்னிக்கா மற்றும் ஹரிச்சந்திரா படித்துறைதான் மிக முக்கிய படித்துறைகள் என்றார். காரணம் அங்குதான் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. போகும் வழியில் அதையும் பார்த்தோம். ஒரு வழியாக கோவில் போன ஒருவரைப்  பின்தொடர்ந்து கோவிலை நெருங்கிய போது கைபேசி, துணிப்பை என்று எதுவும் கோவிலில் அனுமதி இல்லை, இங்கு கடையில் வைத்து விட்டுச் செல்லுங்கள்  என்றனர். “ஏதும் பணம் அதற்குக்  கொடுக்க வேண்டுமா?” என்றோம், அதெல்லாம் தேவை இல்லை பூசை சாமான் மட்டும் வாங்கிச்  செல்லுங்கள் என்றனர். இவ்ளோ நல்ல மக்களை சந்தித்து எவ்ளோ நாள் ஆச்சு என்று நினைக்கும் போதே, நம்ம ஊர் பூசைத்  தட்டை விடக்  கொஞ்சம் பெரிய தட்டை கையில் வைத்து 501 குடுங்கள் என்றார்கள்!. (பாவிங்களா காசிக்கு ரயில் டிக்கெட்டே 700 ரூபாய்தாண்டா!)

படம் – pilgrimaide.com

அதுக்குப்  படித்துறையிலேயே பையை வைக்கலாம்போல என்று கோவிலுக்குச்  செல்லாமல் படித்துறையை நோக்கி நடந்தோம். சிறிது நேரம்ப டித்துறையிலேயே  இருவரும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டுகாரர் ஒரு படகோட்டியைத்  திட்டிவிட்டுப்  போனார். அவரைப்  பார்த்துச்  சிரிக்க, எங்கள் அருகில் வந்து அமர்ந்து படகு சவாரி வருகிறீர்களா? என்றார். நாங்கள் வேண்டாம் என்று மறுத்து, ஏன் அந்த வெளிநாட்டுக்காரர் கோபப்பட்டார்? என்று கேட்டோம். வந்ததில் இருந்து தொல்லை செய்கிறோம் என்றும் அதிக அளவு பணம் வாங்கி ஏமாற்றுகிறோம் என்றும் எல்லா படகோட்டிகளையும் திட்டுவதாக ஆங்கிலத்தில் சொன்னார். எப்படி இவ்ளோ நல்லா  ஆங்கிலம் பேசுகிறீர்கள் என்றதற்கு , பேசினால்தானே சோறு சாப்பிட முடியும். நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை 10 வயதில் இங்கு வந்தேன் எப்படி என் ஆங்கிலம் என்று சிரித்தார். தல இந்த ஆங்கிலம் கத்துக்க நான் MBA வரை படிக்கவேண்டியதாப்போச்சு. என்ன விட நல்லா பேசுறீங்க என்றேன். பலமாகச்  சிரித்துவிட்டு அவரின் அப்பா, தாத்தாவும் இங்குதான் படகு ஓட்டுகிறார்கள் என்று அவர்களைக் காட்டினார். நமக்கு வரலாறு சொல்ல ஆள் கிடைத்தாகி விட்டது என்று நானும் பிரபாவும் குஷி ஆனோம்.

வாரண், ஆசி என்ற இரண்டு ஆறுகளும் இந்த இடத்தில் கங்கையில் கலப்பதால் இந்த ஊரை வாரணாசி என்று சொல்றாங்க. ஆனால் (வாரணாசி, காசி என்று இரண்டு நிறுத்தங்கள் உள்ளன இப்போது) இத பனாரஸ், காசினும் சொல்வாங்க என்றார். 3000 வருசத்துக்கு மேல இந்த ஊர் இருக்குனு சொல்வாங்க. (கி.மு 900 முன்பே காசி இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன) இங்க இருக்கற  சிவன் கோவில் ரொம்பவெல்லாம்  பழசு கிடையாது. பழைய கோவில் முகலாயர்களின்   படையெடுப்புல தரை மட்டம் ஆகியிருச்சு. இப்ப இருக்கற  கோவில் எப்ப கட்டினதுனு சரியாய்த்  தெரியல . (இப்போ இருக்கும் கோவில் கி.பி 1800க்குப்  பிற்பாடு கட்டப்பட்டதே)

படம் – blogspot.com

அப்போ அங்க இருந்த சிவலிங்கத்தைக்  காப்பாற்ற  அங்கு இருந்த ஒரு பெரியவர் அந்த லிங்கத்தோட பக்கத்துல இருந்த கிணற்றில் விழுந்துட்டாராம். பிறகு அந்த லிங்கத்தை யாரும் எடுக்கவே இல்லை. இப்போவும் அந்த கிணறுக்கு பூசைலாம் நடக்குதுன்னு சொன்னதும் கிணற்றை பார்க்க ஆசை வந்தது . (காரணம் முகலாயர்கள் மட்டும் அல்ல சமண சைவ சண்டைல்  பெரிய கோவில்களெல்லாம் அழிக்கப்பட்டபோது  அங்கிருந்த  மூலவர் சிலைகள் சிறிய கோவில்களிலோ பாதாள அறையிலையோ பாதுகாக்கபட்டதாகவும், அதில் பாதி சிலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் படித்த ஞாபகம்)

‘சரி அப்படி  என்ன இங்க இருக்கற  கங்கைல சிறப்புனு இவளோ பேர் இங்க வந்து தெவசம் பண்றாங்க?’  என்று நான் கேக்க நெனச்சேன் நண்பன் பிரபா கேட்டுவிட்டான். பெரியவர் தொடர்ந்தார், பகரீதன் என்னும் அரசன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க தேவலோகத்தில் ஓடுன கங்கையை நோக்கிப்  பலநூறு வருசம் தவம் பண்ண, வந்த கங்கை நான் நேரடியா பூமிக்கு வந்தா பூமி தாங்காது, என்னைத் தடுத்து அனுப்ப சிவனை நோக்கி தவம் பண்ணுனு சொல்ல, மறுபடியும் சிவனை நோக்கி தவம் பண்ணி சிவனை அழைத்தார் பகரீதன்.

படம் – pinimg.com

சிவனும் தன் சடைமுடியால் கங்கையின் வேகத்தைக்  குறைத்து பூமிக்கு அனுப்ப, தன் முன்னோர்களின் சாம்பல் இருந்த பகுதிகளின் வழியே கங்கையை அனுப்பி அவர்களுக்கு முக்தியை கொடுக்கிறான் பகரீதன். இதனால்தான் இங்கு தங்களின் கும்பத்தாரின் அஸ்தியைக்  கரைத்து அவர்களுக்கு முக்தி அளிக்கிறார்கள் அதுமட்டும் இல்லை நிறைய வயதானவர்கள் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து இங்கு தங்கி இங்கேயே தங்கள் உயிர் பிரிவதை புண்ணியமாகக்  கருதுகிறார்கள். அதற்கு இங்கு நிறைய மடங்கள் உள்ளன என்றார். சாவை எதிர்நோக்கி ஒரு காத்திருப்பு அதுவும் இறைவன் அருளோடு என்ற அந்த சிந்தனையே புதிதாகப்பட்டது. இங்கு இருக்கும் ப்ரோகிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், பூசை முடிந்ததும் பணம், நகை என்று பிடு ங்கிய கதை இங்கு நிறைய உள்ளது. வீடு, நிலம் எல்லாம் எழுதிக்கொடுத்தவன் எல்லாம் உண்டு எல்லாம் புண்ணியத்துக்கு என்று அவர் சொன்னதும் தலையே சுத்துச்சு. ஆமா இந்த அஹோரிங்க பத்தி….

காசி இரவுக்கான நகரம் என்று கூறுவார்கள் அது எந்த அளவு உண்மை என்று தொடர்ச்சியில் பார்க்கலாம்..

Related Articles

Exit mobile version