தனிமை விரும்பிகளுக்கு தலவாக்கலை!!

குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோரின் பொதுவான தெரிவுகள் ஒன்றில் நுவர எலியவாகவோ, கண்டியாகவோ, அல்லது பதுளை, பண்டாரவெல, தியத்தலாவ பகுதிகளாகவோ இருப்பது தான் வழமை.

எனினும் சித்திரைப் புத்தாண்டு காலம் நுவர எலியவின் வசந்தகாலம்/பருவ காலம் என்று கிட்டத்தட்ட மொத்த இலங்கையுமே நுவர எலிய நகரில் குவிந்துவிடுவது வழமை. குவிகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் நுவர எலியவின் வீதிகளை முழுவதையும் நிரப்பி, நடப்பதற்கு கூட சிரமம் தருகிற அளவுக்கு நுவரெலியாவை நிரப்பிவிடும்.

என்னைப் போன்ற பலரும் இனிமேலும் வசந்த காலம், சீசன் என்றால் நுவரெலியாவின் பக்கமே போகக்கூடாது என்னும் முடிவை எடுத்திருப்பர். எனினும் கொதிக்கும் அந்தக் கோடையில் குளுமையை அனுபவிக்க இன்னொரு அழகான, பரபரப்புக் குறைவான ஆனால் இயற்கை அழகில் எந்தவொரு குறைவும் இல்லாத ஒரு இடம் இருக்கிறது.

Image : staticflickr.com

நுவரெலியாவுக்கு மிக சமீபமாகவே இருப்பதால் பலரும் இதை ஒரு தங்குமிடமாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்லும் ஒரு தரிப்பிடமாகவே கருதிச் செல்வது வழமை.

எனினும் அன்பான மக்கள், குறிப்பாக அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் ஒரு அழகான சிறு நகரம் இந்தத் தலவாக்கலை.

ஹட்டனில்  இருந்து 18.5 கிலோ மீட்டர் தூரத்தில், நுவரெலியா செல்லும் வழியில், கொட்டக்கலைக்கு  அடுத்து அமைந்துள்ள அழகியசிறு நகரம் இது.

கொழும்பிலிருந்து பேருந்தின் மூலமாக என்றால் 6 மணி நேர பயணம்.

சொந்த வாகனமாக இருந்தால் ஒரு ஐந்து மணி நேரம்.

உயர்ந்து செல்லும் மேட்டுநிலப்பகுதியில் ஒரு சமதளமாக இருப்பதால் இந்தப்பெயர் வந்ததா? இல்லாவிட்டால் கொல்லை  என்பது வீட்டின் பின்பகுதியைக் குறிப்பது போல ஏதாவது அர்த்தமா என்று ஆர்வத்துடன் தேடிப் பார்த்தவேளையில்…

அந்தக் காலத்தில் அழகான தமிழ்ப் பெயராக இருந்த தலைவாய் கொல்லை – நகரின் தலைவாயில் தோப்புடன் – கொல்லை அழகாக விளங்கிய நகரம் என்றும்   (மலைகளின் ராணி நுவரெலியா நகருக்கு தலைவாயிலாக அமைந்திருந்த இடம் என்பதால்) மருவி, தலைவாக்கொல்லை என்றும் பின்னர் சிங்கள மருவுதலும்  சேர்ந்து தலவாக்கலை – சிங்களத்தில் தலவாக்கெலே என்றும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இன்னொரு கருத்து தலவா என்று சொல்லப்படும் ஒரு வகைப் புற்கள் அதிகமாக நிறைந்திருந்த காடு (சிங்களத்தில் கெலே) இந்தப் பிரதேசத்தில் இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று இருக்கிறது.

எனினும் அண்மைக்காலம் வரை தமிழில் தலவாக்கொல்லை என்றழைக்கப்பட்டு வந்ததனால் தமிழ்ப்பெயரில் இருந்தே இப்போது பொதுவில் பயன்பாட்டில் இருக்கும் தலவாக்கலை மருவியிருக்கும் என்று ஊகிக்க முடியும்.

அதற்கேற்றது போல தமிழரே அதிகமாக இங்கே வாழ்கின்றனர்.

ஆலயங்கள் பொலிந்த சூழலும், இயற்கையோடு கூடிய தோட்டங்களில் வாழும் மக்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்த தம் பரம்பரை கடைக்கொண்ட இயற்க்கை, சிறுதெய்வ வழிபாடுகளை இன்றும் கடைப்பிடிப்பதும் இயல்பான தமிழ்ப் பிரதேச உணர்வை ரம்மியத்துடன் தரும்.

சென்.களேயார் நீர்வீழ்ச்சி
Image : ytimg.com

நாலா புறமும் பச்சைப்பசேல் என்று மலைகள் சூழ, குளுமை எப்போதுமே வருடித்தர, பரபரப்புக்கள் குறைந்த தலவாக்கலை அழகான மகாவலி நதியின் அரவணைப்பில் பல அழகின் ரகசியங்களை தன்னுள்ளே மறைத்துக்கொண்டு கிடக்கிறது.

நகரப்பகுதியில் நிதானித்து ஒரு ஏரி போல ஓடி அழகு சேர்க்கும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் கிளை, அமைதியான சிறு நகரத்துக்கேயுரிய களையாக  பிரம்மாண்ட கட்டடங்கள் எவையுமின்றி அழகான சிறிய கடைத் தொகுதிகளும் சந்தையும் நகரத்தை பிரதான வீதியில் பிடித்து வைத்திருக்கின்றன.

முதல் தடவை நீங்கள் தலவாக்கலைக்கு விஜயம் செய்பவராக இருந்தால் தொடரூந்து நிலையத்திலிருந்து கொத்மலை நீர்த்தேக்க ஏரி  தொடங்குமிடம் வரை ஒரு அரை மணி நேரம் நடக்கும் தூரத்துக்குள்ளே தலவாக்கலை நகரை அளந்துவிடலாமா, என்ன இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்று நினைக்கலாம்.

டேவோன் நீர்வீழ்ச்சி
Image : ceylontouradvisor.com

ஆனால் அழகான தலவாக்கலை உள்ளே இன்னும் சற்று நீண்டு மலைகள், தோட்டங்களோடு பொலிந்து நிற்கிறது.

ஒரு சுற்றுலா விரும்பியாக இருந்தால் தங்குமிடம் என்று ஒன்றை சரியாக அடையாளப்படுத்த கொஞ்சம் சிரமம்தான். பெரிய விருந்தகங்கள் இல்லை. எனினும் ஜப்பானின் நிதியுதவியோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத் திட்டப்  பொறியியலாளர்கள் தங்குவதற்காகப் பயன்படுத்திய விடுதி இப்போது சகல வசதிகளும் கொண்ட சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

பருவ காலங்களின் போது கொஞ்சம் கட்டணம் அதிகமாக இருந்தாலும் சகல வித உணவோடும், ஏரி ஓட்டத்தின் அயலில், இயற்கையின் அரணோடு ரம்மியமான சூழலில் ஓய்வாகத் தங்க அற்புதமான இடம்.

இது தவிர இன்னும் இரண்டொரு எஸ்டேட் பங்களாக்கள் இருக்கின்றன. ஆனால் அவை நகர்ப்புறத்தில் இருந்து சற்றுத் தொலைவாக..

கொத்மலை ஓயாவிலிருந்து உருவாகும் டெவோன் நீர்வீழ்ச்சி, சென்.கிளேயார் நீர்வீழ்ச்சி ஆகிய இலங்கையின் இரண்டு அழகான நீர்வீழ்ச்சிகள் தலவாக்கலையின் முக்கியமான இரு சுற்றுலாத் தலங்கள். எனினும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத் திட்ட வேலைகளின் பின் சென்.கிளேயார் நீர்வீழ்ச்சியின் செறிவும், அகலமும் அழகும் குன்றிவிட்டு சோபையிழந்து நிற்பது பரிதாபம்.

இது தவிர பூண்டுலோயா வீதி வழியாக இன்னொரு 12 கிலோ மீட்டர்கள் பயணித்தால் – அழகான, செப்பனிடப்பட்ட, பல இயற்கைக் காட்சிகள் நிறைந்த, கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும் பாதை – பூண்டுலோயா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் டன்சினன் நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசிக்கலாம்.

கொத்மலை அணை
Image : wikimedia.org

சற்றே ஒதுக்குப்புறமாக இருப்பதால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வராத ஒரு நீர்வீழ்ச்சி.

எனினும் அருகேயே இப்போது ஒரு இந்து ஆலயம் அமைக்கப்பட்டு வருவதால் வருங்காலத்தில் ‘புண்ணியத் தலமாக’ மாறி ரம்மியம் இல்லாமல் போய் அமைதியிழக்கக்கூடிய சாத்தியங்கள் நிறையவே தெரிகின்றன.

ஆனால் மழை காலங்களில் கொழித்துப் பாயும் டெவோன் நீர்வீழ்ச்சியை பிரதான வீதியிலிருந்து மட்டுமன்றி மிக அருகேயும் சென்று பார்க்க முடியும்.

இலங்கையின் மிகச் சுவையான தேயிலையைத் தரும் பசேலென்ற தேயிலைத் தோட்டங்களையும் கொஞ்சம் உலாவரலாம்.

பல முக்கியமான கூட்டு நிறுவனங்களின் தேயிலைத் தோட்டங்கள் பலவும் தலவாக்கலையில்  தான் நிறைந்துகிடக்கின்றன.

அத்துடன் இருக்கும் பல தேயிலைத் தொழிற்சாலைகளையும் பார்த்து பல விடயங்கள் தெரிந்திடலாம்.

இதில் எனது தெரிவாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியிலே அமைந்துள்ள தலவாக்கலை தேயிலைத் தொழிற்சாலையை நான் தருவேன்.

அழகான அமைவிடம் மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் அந்தக் காலத்தில் பயன்படுத்திய கருவிகளையும் காட்டுகிறார்கள்.

சென்.கூம்ப்ஸ்  தோட்டப்பகுதியில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையமும் நாம் விஜயம் செய்யவேண்டிய இன்னொரு இடம். தொழிநுட்ப விஷயங்கள் மட்டுமில்லாமல், உலகில் தரமான தேயிலை இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் பரவுவதற்கான ரகசியங்களின் சில பகுதிகளையும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த சீரியஸான விஷயம் எல்லாம் வேண்டாம்.. ஊர் சுற்றியாச்சு, சுடச்ச்சுட தேநீர் அருந்தி, இயற்கையை ரசிச்சாச்சு என்று இருக்கப்  போகிறீர்களா?

Image : ceylontouradvisor.com

 

வாருங்கள்..

Tea Castle, Tea Train என்றெல்லாம் நிறைய தேநீரை விதவிதமாக அருந்தி அனுபவிக்கும் இடங்கள் இருக்கின்றன.

காலாற நடந்தே திரிந்து மாசடையாத மலைக்காற்றை தேசாந்திரியாக உள்ளிழுத்து ஆரோக்கியம் பெற பரபரப்பு எதுவுமற்ற சூழல் இங்கே தான்.

தலவாக்கலையை  மையமாக வைத்துக்கொண்டே சுற்றிவர இருக்கும் இன்னும் அழகான பல இடங்களையும் சுற்றிப்பார்த்து வரலாம்.

வட்டகொடை போகும் தவலந்தன வீதி வழியில் ஒரு பார்வையாளர் சந்தி போன்ற இடமுள்ளது. மேல் கொத்மலை திட்டத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்புத் தொகுதிக்கு செல்லும் வழியிலிருந்து பார்த்தால் ஒரு அழகான, பிரம்மாண்டமான காட்சி தெரியும்.

முழுமையான மேல் கொத்மலைத் திட்டமும், கொத்மலை ஓயா மற்றும் ஏரியும் அந்த உயரமான பார்வைக்கோணத்தில் அப்படியொரு அழகு.

அந்த தலவாக்கலை – தவலந்தன்ன வீதி வழியாக பயணிக்கும்போது கொத்மலை நீர்த்தேக்கத்தையும் பார்வையிடலாம்.

செல்லும் வழியில் உள்ள அழகான ஊர்களை நின்று நிதானித்துப் பார்த்துச் செல்வது ஒரு ரசனையான பொழுதுபோக்கு.

ஒவ்வொரு திருப்பங்களிலும் நின்று பள்ளத்தாக்குகள் வழியாக பசுமையைப் பார்த்து ரசிப்பது தனி சுகம்…

நீங்கள் இயற்கையின் காதலராக இருந்தால்.

நான்கைந்து நாள் நின்றால்  சாவதானமாக சுற்றுப்புற இடங்களில் முக்கியமான இடங்கள் அத்தனையையும் தாராளமாக ரசித்துத் திரும்பலாம். இயற்கையை ஜன்னல் வழியாகவோ அல்லது பலகாணி வழியாகவோ பார்க்கக்கூடிய இடமாக இருந்தால் தனிமையை அனுபவிக்கவும் மிகப்பொருத்தமான இடம் இது தான்.

Related Articles

Exit mobile version