பயணிகள் கவனத்திற்கு

             இந்த உலகம் ஒரு புத்தகம் என்றால் இதில் பயணிக்காத மனிதர்கள் குறைவான பக்கங்களை மட்டுமே படிக்கின்றனர் என்றொரு பழமொழி உண்டு. பயணம் என்றாலே இனிமையான சுதந்திர உணர்வும், புதுமையான அனுபவங்களும் நம்மை தொற்றிக்கொள்ளும். இயந்திரத்தனமான தினசரி வாழ்வில் நாம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கும் பொழுது மனம் தொய்வடைந்து புத்துணர்ச்சி, படைப்பாற்றல், செயல்திறன் போன்றவை சுருங்கும் வாய்ப்புள்ளது. சில தினங்களுக்கு நமது வழக்கமான பிரச்சனைகள், சிக்கல்களை மறந்து, அவைகளை துண்டித்து ஒரு பறவை போல சிறகடித்து பறந்து விட்டு மீண்டும் வழக்கமான வேலைகளைத் துவங்கும் பொழுது ஒரு விசாலமான பார்வை, நம்மைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு, நமது உடல், மன ஆரோக்கியத்திற்கான ஒரு மருந்தாகச் சுற்றுலாக்கள் அமைகிறது. பொதுவாகப் பொழுதுபோக்கு சுற்றுலா அல்லது பக்தி சுற்றுலா நம் மக்களிடம் பிரபலம். இவற்றைத் தாண்டி கலாச்சாரம், வரலாறு, வன விலங்குகள், சாகசம், மருத்துவம் என்று நோக்கம் சார்ந்த பயணங்களும் குறிப்பிட்ட சாரர்களிடம் உண்டு. தொழில், கல்வி, அல்லது தேவைகளுக்கான பயணம் என்றால் அதற்கான நாட்கள் மற்றும் திட்டங்கள் நம்மிடம் எப்பொழுதும் இயற்கையாகவே இருக்கும். பிற வகை சுற்றுலாக்களை நீங்கள் திட்டமிடும் பொழுது அவசியம் கருத்தில் கொள்ள வேண்டியவை.

பயணத்தைத் திட்டமிடுதல்

விடுமுறை தின சுற்றுலா என்பது ஓய்வானது, கேளிக்கை மிகுந்தது என்றாலும் அதற்கான சரியான திட்டமிடல் இல்லையென்றால் அசௌகரியமும், வீண் அலைச்சல் மிகுந்தாக ஆகிவிடும். நீங்கள் புதிதாக பயணம் செல்ல விரும்பும் இடங்களைப் பட்டியலிடுங்கள். உங்களுடன் பயணிக்க போகும் குடும்பத்தார் அல்லது நண்பர்களையும் இதே போல் ஒரு பட்டியல் தயார்படுத்தச் செய்யுங்கள். போதுமான நேரம் எடுத்து அனைவரும் இந்த வரிசையில் ஒவ்வொரு இடமாக அங்குள்ள சிறப்புகளை பற்றி விவாதிப்பது அவசியம். குடும்பத்தினர் என்றால் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர்க்கும் விருப்பமானதா ? அனைவராலும் பயணிக்க கூடிய இலக்கு தானா ? பயணத்தின் நோக்கம் ஆகியவற்றையும் கலந்துரையாடுங்கள். இவைகளுக்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவீனங்களை பற்றியும் ஆராய்தல் வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இடமாக இருந்தால் சிறந்த பயண இலக்கு அதுவே.

போக்குவரத்தைத் தேர்வு செய்தல்

உங்கள் சொந்த நான்கு சக்கர வாகனத்தில் செல்ல நீங்கள் முடிவு செய்திருந்தால் அடிப்படை வாகன பராமரிப்பை நீங்கள் சரி பார்த்தல் மிக முக்கியமான ஒன்று. உங்கள் கார் சக்கரங்களின் காற்றழுத்தம், கடைசியாக ஆயில் மாற்றிய தேதி அல்லது கிலோமீட்டர், மழை துடைப்பு கம்பிகள், முன்விளக்கு மற்றும் பிற விளக்குகள், பிரேக்குகள், இருக்கை பெல்ட்கள் போன்றவைகள் சரியாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

விமானம், இரயில் அல்லது பஸ் போன்ற பிற பயண வழிகளைத் தேர்ந்தெடுத்தால் 15 தினங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இறுதி நேர அவசரக் கால புக்கிங் உறுதியானது அல்ல. உங்களை நிலையத்தில் இருந்து இருப்பிடம், மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களை முன்பதிவு செய்யுங்கள். நீங்கள் செல்லுமிடம் கிராமப்பகுதி என்றால் அதற்கேற்ற பயண வழிகளை அறிந்து வைத்திருந்தால் நேரம் மிச்சம்.

தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்தல்

இணைய தளங்களில் விடுதிகளின் வசதிகள், வாடகை ஒப்பீடு மற்றும் அவற்றின் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் அளித்த நட்சத்திர குறியீடு மூலம் நாம் சிறந்த விடுதியைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கட்டணமில்லா காலை சிற்றுண்டி, இலவச இணையச் சேவை, மற்றும் குளிர் சாதனம், தொலைக்காட்சி பெட்டி என்று நமது விருப்பத்தேர்வு வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். விடுதி என்பது இரவு நேரச் சொகுசான தங்குமிடம் மட்டுமே. பகலில் நீங்கள் சுற்றுலா ஸ்தலங்களில் பெரும்பகுதி நேரத்தை செலவளிக்க போவதால் உங்கள் விடுதி கட்டணத்தை குறைவான தேவைகளுடன் தேர்வு செய்தால் அதை நீங்கள் பிற செலவீனங்களுக்கு பயன்படுத்தலாம்.

நிகழ்ச்சிகளைத் திட்டமிடல்

நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களுக்கான அச்சுப்பிரதியை தரவிறக்கம் செய்து வைத்தல் நலம். நீங்கள் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும் அதைச் சுற்றியுள்ள இடத்திற்கான வழிகாட்டிக் குறிப்புகள் இருக்கும். பழங்கால வழியான ஸ்தல வரலாறு மற்றும் நீங்கள் காண வேண்டிய இடங்களைப் பற்றிய பயண வழிகாட்டி புத்தகங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் நிச்சயம் இருக்கும். மொழி தெரியாத இடங்கள், பொதுவான மொழி இல்லாமை மற்றும் அவசியமான தேவை ஏற்படும் பட்சத்தில் சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்துக் கொள்ளலாம். நியாயமான கட்டணமாக இருந்தால் தவறில்லை.

பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் என்று குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலான ஒரு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் அவர்களுக்கும் திருப்தி அளிக்கும். ஒவ்வொருவரும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வுகளை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளவேண்டும். அணைத்து நிகழ்வுகளையும் திட்டமிட்டால் உங்கள் பயணத்தில் உடன் வரும் உறவுகளுக்கும் அல்லது நண்பர்களுக்கும் ஆச்சரியம் குறைவாக இருக்கும். சில மணி நேரத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிடாமல் எதிர்பாராத உணவு ஏற்பாடு அல்லது மலை ஏற்றம், காட்டு வழிப் பயணம் என்று அவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை அளிக்கத் தவறாதீர்கள்.

உங்களிடம் நீண்ட பட்டியல் கொண்ட காண வேண்டிய இடங்களும், பங்கேற்க வேண்டிய நிகழ்வுகளும் இருந்தால் நீங்கள் அவசரப்படத் தேவையில்லை. உங்கள் பட்டியலுக்கு ரேங்க் கொடுத்து வரிசைப் படுத்துங்கள். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். நேரம் ஒத்துழைத்தால் மறுமுறை அதே இடத்திற்கு வந்து பட்டியலை நிறைவு செய்யுங்கள்.

பயணத்திற்கான பேக்கிங்

நீங்கள் பிரயாணத்திற்காக தேர்வு செய்த வாகனம், நீங்கள் செல்லுமிடத்தின் தட்பவெப்ப நிலை இதை அறிந்து கொண்டு தான் அதற்கேற்றால் போல் நீங்கள் பேக் செய்யத் துவங்க வேண்டும். இதற்காக ஒரு பிரத்யேக பட்டியல் தயார் செய்திருந்தால் கடைசி நிமிட பதட்டம் இருக்காது. மறந்து விட்ட பொருட்களை யோசித்து தலை மேல் குருவி வட்டமிடாது. நீங்கள் செல்லுமிடத்தின் செல்சியஸ் என்ன என்று தெரிந்து கொள்ள http://www.weatherchannel.comபோன்ற இணையதளங்களை நீங்கள் பயன்படுத்தலாம். எப்பொழுதும் குறைவான லக்கேஜ் அதிக சௌரியமான பயணத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீடியம் அளவில் டிரேவேல் பேக்குகள், மேக்அப் கிட், கையடக்க டாய்லெட் பேக் போன்றவற்றை பயன்படுத்துவது அதிக இடத்தைக் கொடுக்கும். மற்றும் பொருட்கள் சேதாரம் ஆகாது. தொன்று தொட்டு பயணத்தின் பொது நாம் மறக்கும் பொருட்களான டூத் பிரஷ், டூத் பெஸ்ட், மற்றும் பிற தேவைகளான சாக்ஸ், சூரிய கண்ணாடிகள், தொப்பிகள், இரவு உடைகள், வாசனைத் திரவியங்கள், மற்றும் ஷேவிங் கிட் ஆகியற்றை சரி பார்த்து கொள்ளவேண்டும்.

ஜீன்ஸ், டீ சர்ட் போன்று மறு முறை பயன்படுத்த கூடிய ஆடைகளை எடுத்துச் செல்லுதல் நலம். நீங்கள் செல்லும் விடுதியில் உங்களுக்கு அயர்னிங் வசதி இருந்தால் துணிகளை சுருட்டி கூட உங்கள் டிரேவேல் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். பாலிதீன் உரையில் ஜிப்லாக் கவர்கள் சந்தையில் அணைத்து சைஸ்களிலும் கிடைக்கிறது. உங்கள் ஸ்வட்டர், ஜெர்கின், மற்றும் அழுக்கு துணிகள் போன்றவற்றிற்கு அவைகளை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் டிரேவேல் பேக் இடவசதியுடன் இருக்கும். மேலும் இவ்வகை காற்றடிக்கப்பட்ட கவர்களால் வாடை வராது.

உங்களுக்குத் தேவையான ஐ-பேட் போன்ற பொருள்கள், மொபைல், ஸ்நாக்ஸ், மற்றும் இதர பொருட்களை உங்கள் ஹேன்ட் பேக்கில் வைத்துக் கொள்வது நலம்.

இறுதியாக, பிற கலாச்சாரம் பிற மக்களை நாம் சென்று பார்த்தால் மட்டுமே நம்முடைய கலாச்சாரத்தின் மதிப்பை நாம் முழுமையாக உணர முடியும். வார இறுதியில் மட்டும் நண்பர்களுக்கு அழைத்துப் பேசி விழாக்களில் மட்டும் சந்திப்பதை விட மனதிற்கு நெருக்கமான மக்களோடு ஒரு புது இடத்தில் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவது ஆனந்தத்திலும் ஆனந்தம். உங்களது பயணம் இனிதே தொடங்கட்டும்.

“பயணம் முதலில் உங்களைப் பேச முடியாத ஊமையாக்கி விடும். பின்பு உங்களைக் கதை சொல்லியாக மாற்றிவிடும்”

“உங்கள் பயணத்தின் உங்கள் நண்பர்களைக் கொண்டே அளவிட முடியும், தூரத்தைக் கொண்டு அல்ல”

“மற்றவர்கள் மோசம் என்று சொல்லும் எந்த இடமும் அவ்வளவு மோசமானது அல்ல”

Related Articles

Exit mobile version