இராட்சத புத்தர் சிலை

மைத்ரேயா உலகத்திற்கு வரும்போது, ​​உலகம் அமைதியாக மாறும்.”

– டாங் வம்ச சூத்திரம்

8 ஆம் நூற்றாண்டில் சீனாவை, கலாசாரத்தின் உச்சத்தில் இருந்த டாங் வம்சம் ஆட்சி செய்த காலத்தில் லெஷன் கயண்ட் புத்தர் என்ற மைத்திரேய சிலை ஒன்று முழு தோற்றம் பெற்றது. சீனாவின் தெற்குப் பகுதியான லெஷன் நகரத்தின் மலையை குடைந்து தான் இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த மைத்திரேயர்?

போதிசத்துவர் என அழைக்கப்படும் மைத்திரேயரின் கற்பனை சிலைகள்

உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர அவதரிக்க இருக்கும் கடவுளாக சீனர்கள் நம்பும் ஒரு அவதாரம்தான் மைத்திரேயர். இன்னும் பூரண புத்தநிலையை அடையாத காரணத்தினால் மைத்திரேயர் போதிசத்துவர் என அழைக்கப்படுகிறார். மைத்ரேயர் தங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார் என்று சீனர்கள் தொன்றுதொட்டு நம்பி வருகின்றனர்.

இனி லெஷன் கயண்ட் புத்தர் சிலையின் தோற்றம் பற்றி பார்ப்போம்… 

காரண காரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை என்று கூறுவது வழக்கம். இந்த புத்தர் சிலை கூட ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்ற காரணத்திற்காக அமைக்கப்பட்டதே ஆகும். அதுதான் ஆக்ரோஷமான ஆற்றை அமைதிப்படுத்தும் நோக்கம். 

வெறித்தனமான ஆறு அமைதி கொண்டது!

புத்தர் சிலை அமைந்திருக்கும் லெஷன் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதீத இரைச்சலுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது. அதையும் மீறி படகுகளில் சென்றவர்களின் உயிரையும் காவு வாங்கியுள்ளது. 

லெஷன் மலைப் பகுதியைச் சுற்றி ஓடும் ‘மின்சியாங்’  ஆறு

செய்வதறியாது தவித்த லெஷன் பகுதியில் வசித்த மக்கள் ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். நதிகளை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திச் செல்லும் மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார். 

புத்த சிலை கட்டுவதற்கும் ஆற்றின் அமைதிக்கும் என்ன சம்பந்தம் என மக்கள் குழப்பம் அடைந்தனர். ‘ஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர். ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்து சிலையை அமைக்கும் பணியை ஆரம்பிக்கிறார் ஹை டாங்.

மலையை குடைந்து செய்த லெஷன் புத்தர் சிலை

சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. புத்தரின் சிலை பாதி வடிவமைக்கப்பட்ட  நிலையில், இதனை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போகிறார். மீண்டும் சோகக் கடலில் மூழ்குகின்றனர் மக்கள். தங்களை இந்த இன்னலில் இருந்து மீட்டுக்கொள்ள வழியே இல்லையா என அழுது புலம்புகின்றனர். 

இந்த சமயத்தில்தான் இருள் சூழ்ந்த அவர்களின் வாழிவில் வெளிச்சமாய் வருகிறார் அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர். லெஷன் நகரை பார்வையிடுவதற்காக வந்த ஆளுநர் சிலையைப் பற்றியும், அது பாதியில் நிற்பது பற்றியும் அறிந்துகொள்கிறார்.

லெஷன் புத்தர் சிலையை பார்வையிட திரளும் மக்கள்

மக்களின் வேதனையை போக்க முடிவு செய்த ஆளுநர் நின்று போன பணியை மீண்டும் தொடங்குகிறார். அவரின் முழு முயற்சியின் பயனாக புத்தர் சிலை முழு வடிவம் பெறுகிறது. சிலை முழுமைப் பெற்றதுமே ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டது என்கின்றது சீன புராண நூல்கள்.

இது புத்தர் சிலையா அல்லது புத்தர் மலையா !?”  என வியக்கும் உலகம்.

லெஷன் புத்த சிலையின் உறுப்புக்கள்
  • ஜிஜியாவோ மலை குன்றின் மீது அமர்ந்து முழங்கால்களில் கைகளை வைத்து அவரது கால்களுக்கு கீழே பாயும் மின்சியாங் ஆற்றை பார்த்த வண்ணம் உள்ளார் புத்தர்.
  • 233 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்ட இச்சிலைக்கு முழுத்தோற்றம் கொடுக்க டாங் வம்சத்தினருக்கு 90 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
  • இந்த புத்தர் சிலையின் தலையில் சுருள் முடிகள் 1021 சுருள்களுடன் செம்மையான முறையில் பதிக்கப்பட்டுள்ளன. 
  • 7 மீட்டர் நீளமுள்ள இவரின் காதுகள் இரண்டு நபர்கள் உள்ளே இருக்கும் அளவு பெரியது. 
  • 5.6 மீட்டர் நீளமான மூக்கு, 5.6 மீட்டர் நீள புருவம், ​​ 3.3 மீட்டர் அகலமான வாய் மற்றும் கண், 3 மீட்டர் உயரமான அவரது கழுத்து, 24 மீட்டர் அகலமான தோள்பட்டை மற்றும் 8.3 மீட்டர் நீளமுள்ள விரல்கள்.
  • அவரின் முழங்காலில் இருந்து பாதத்தின் மேல் பகுதி வரை 28 மீட்டர் கொண்டது. 8.5 மீட்டர் அகலத்தில் உள்ள பாதத்தின் மேல் பகுதி சுமார் 100 பேர் அமரும் அளவு விசாலமானது. கால் நகங்கள் கூட இருவர் அமரும் அளவு பெரியது.
  • முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது.
  • இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

லெஷன் கயண்ட் புத்தர் சிலை 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. இச்சிலை இன்று உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற வண்ணம் உள்ளது.

Related Articles

Exit mobile version