கலைமதுரையின் கண்கவர் பொக்கிஷம் – திருமலை நாயக்கர் அரண்மனை

வளர்ச்சி, அபிவிருத்தி, முன்னேற்றம்,… எந்தத் துறையை எடுத்தாலும் நாளுக்கு நாள் ஏராளமான மாற்றங்கள் மற்றும் புதுமைகள்! என்னதான் சொல்லுங்கள், எனக்கென்னவோ நம்மை விட நமது முன்னோர்கள் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், அறிவியல் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவுமே தெரிகிறது. எனது கருத்து உங்களுக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகம் நினைத்தாலும் படைத்திட முடியாத, ஆயிரம் அல்ல, கோடி கட்டிடக்கலை வல்லுனர்கள் சேர்ந்தாலும் சாதிக்கமுடியாத அற்புதப் படைப்புக்களை வெறுமனே மூளை, மனிதவளம் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வரலாறு செய்த நம் முன்னோர்கள் நம்மை விடத் தேர்ந்தவர்கள் என்றால் மிகையில்லை.

ஆம், திராவிட, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலை மூன்றையும் கலந்து இதுதான் தென்னிந்தியாவின் மாபெரும் பொக்கிஷம் எனக் கருதுமளவு கலை நயம் சொட்டச் சொட்ட மன்னன் திருமலை கட்டிய திருமலை நாயக்கர் அரண்மனைக்குள் காலடி எடுத்துவைத்தபோது எனக்குள் தோன்றிய எண்ணங்களே அவை…

திருமலை நாயக்கர் மஹால்

தமிழ்நாட்டு யாத்திரையின் இரண்டாம் நாள் திருமலை நாயக்கர் மஹால் எங்களை அன்புடன் வரவேற்றது. சினிமா திரைப்படக் காட்சிகளில் ஆங்காங்கே பார்க்கக் கிடைத்த காட்சிகளை வைத்து எதோ ஓரளவு கற்பனையில் சென்ற எனக்கு, மஹால் என்று செல்லமாக அழைக்கப்படும் திருமலை நாயக்கர் மஹால் கொடுத்த அனுபவம் வேறு விதமாக இருந்தது.

எனக்கு மட்டுமல்ல, முழு உலகுக்குமே தென்னிந்தியாவின் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்றாக காலத்திற்கும் நின்று நிலைக்கவேண்டும் என்ற நோக்கோடு இத்தாலியைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர் ஒருவரின் வடிவமைப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

Entrance (Pic: Writer Herself)

அரண்மனையின் தோற்றம்

17ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய மன்னன் திருமலை நாயக்கர் வாழ்ந்த அரண்மனைதான் இந்த நாயக்கர் மஹால். நுழைவாயில் தாண்டி உள்ளே செல்லும்போதே அண்ணளவாக நான்காயிரம் சதுர மீட்டர் பரந்திருந்த அகன்ற மண்டபமும், அதைச் சுற்றிவர நெடிதுயர்ந்து அணிவகுத்திருந்த பாரிய தூண்களும் “என்னமா வாழ்ந்திருக்காய்யா!” என்று எங்களை வாய்பிளக்க வைத்தன. அண்ணார்ந்த தலை எங்களை அறியாமலே அத்தூண்களின் பிரம்மாண்டம் கண்டு லயித்திருக்க, கழுத்து வலி வந்து எங்களை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.

தூண்கள் என்றால் உங்க வீட்டுத்தூண் எங்க வீட்டுத் தூண் அல்ல! ஒவ்வொரு தூணும் அத்துனை பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. பீடத்திலிருந்து உயர்ந்து செல்லும் தூண்கள், அதன் உச்சியில் இஸ்லாமியக் கட்டிடக்கலையைத் தழுவிய வில்வளைவுகள் அதில் அமைக்கப்பட்டுள்ள நளின வேலைப்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அம்முற்றத்தைச் சுற்றிவர அமைந்திருக்கும் அழகைச் சொல்லிமாளாது. எந்தமாதிரியான உபகரணங்களைக்கொண்டு அவை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் என்பதுகூட புத்திக்கு புலப்படாத நிதர்சனம். இந்த தூண்கள்தான் இன்றும் திரைப்பட இயக்குனர்களை திரும்பத் திரும்ப நாயக்கர் மகாலை நோக்கி ஈர்க்கிறது என்றாலும் அது மிகையல்ல.

Pillars of Palace (Pic: Writer Herself)

அரண்மனையின் பிரம்மாண்டம்

திரும்புகிற பக்கமெல்லாம் மண்டபங்களும் அதனைத் தாங்கியவண்ணம் தூண்களும் கண்ணுக்குப் புலப்படுகிரவரையும் பரந்திருந்தன. எண்ணிக் கணக்கெடுக்க முயன்றால் தோற்றுப்போகுமளவு கண்களையே எமாற்றுமாறு செறிந்திருந்த தூண்களின் மொத்த எண்ணிக்கை 248 என்கிறது குறிப்பு! ஒரு ஊரே வந்து வாழக்கூடிய இடப்பரப்பில் ஒரு மன்னர் வாழ்ந்திருக்கிறார் என்றால், நாயக்கர்களின் பலத்தை நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!

என்னதான் மன்னராக இருந்தாலும் கலைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும், அவர்களது கலாரசனையும் அவர்கள்பால் பெரிய மரியாதையை உண்டுபண்ணாமலில்லை. நாம ஒரு டிசைன குடுத்தா, அத நம்ம டிசைன்தானான்னு நமக்கே புரியாத அளவு கட்டிக் கடாசுற கொத்தனாருங்கள பாத்த நமக்கு, இவ்வளவு நுணுக்கமான கட்டிடக்கலைய அட்சரம் பிசகாம எப்பிடி கட்டி முடிச்சாங்கங்கற உண்மைய நெனச்சாலே, புல்லரிக்குது!

Roof of Mahal (Pic: Writer Herself)

திட்டமிடல்

அனால் ஒன்று, நாயக்கர் மஹால் பார்க்கச் செல்வதாக திட்டம் இருந்தால் நேர காலத்தோடு போய்விடுங்கள்! ஏனென்றால் அங்கே ஒவ்வொரு குவிமாடத்திலும் அமைக்கபட்டிருக்கும் விதவிதமான நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளை முழுமையாக, ஆற அமர வியந்து ரசிப்பதற்கே பாதி நாள் ஆகிவிடும்!  

“அரபு நாட்டுச் சுண்ணாம்பில் – கரும்பு

அரைத்துப் பிழிந்த சாறூற்றி

மரபுக் கவிதை படைத்தல்போல் – ஓர்

மண்டபம் திருமலை கட்டியதால்

கண்கள் மயங்கும் கலை மதுரை”

என்று கவிப்பேரரசு வைரமுத்து மதுரையைப் பாடியதன் அடிப்படை அன்றுதான் புலனானது எனக்கு!. மரபுக் கவிதை யாத்தல் கடினம், அதன் யாப்பு சிக்கலானது, அதற்காக எடுக்கும் பிரயத்தனம் அவ்வளவு எளிதல்ல. ஆனால் மரபுக்கவிதை ஆழமான அழகியல் கொண்டது, அதன் சொல்லாட்சியும் ஓசை நயமும், நுணுக்கமான இலக்கிய மரபும் மீண்டும் மீண்டும் எம்மை அக்கவியின்பால் ஆவல் கொள்ளச் செய்வது. படிக்கப் படிக்க புதுமை செய்வது. அப்படிப்பட்ட உவமைக்கு முற்றிலும் தகுதியான வேலைப்பாடுகள் மகாலின் மாடங்களிலும், தூண்களின் ஒருங்கமைப்பிலும் நிறைந்திருக்கின்றன.

Gallery (Pic: Writer Herself)

சிம்மாசனம்

ஆம், மிக மிக நுணுக்கமான செதுக்கல்கள், உருவ அமைப்புக்கள், கலையம்சங்கள், கற்பனை வடிவங்கள் ஏராளமாக அணிவகுத்து நெருக்கமாகவும், நெழிவு சுழிவோடும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கும் விதம் பார்க்கப் பார்க்க ஆவல் குறைக்காதவை, வியப்புக்குரியவை.

மண்டபத்தின் முனையில் சிம்மாசனம் அமைந்த மேடையும் அதனை மையப்படுத்தி உயர்ந்திருந்த குவிமாடமும் இது ஷங்கர் படத்துக்காகப் போட்டுவைத்திருக்கும் ‘செட்’ ஆக இருக்குமோ என்று எண்ணவைத்தது. ஆம், அதுதான் நாயக்கர் அரண்மனையின் சொர்க்கவிலாசம்! அப்பப்பா என்ன விசாலம்!! பிரம்மாண்டமான வேலைப்பாடுகளோடுகூடிய சிம்மாசனம் ஒன்று அங்கே ஜம்மென்று வீற்றிருந்தது. “ஆக, மன்னர் இங்கே இருந்தபடிதான் தனது அரசவையை நடத்துவார்! இருந்தாலும் ஒரு அரச சபைக்கு இவ்ளோ பிரம்மாண்டம் ஓவரா இல்ல?!” என்ற ஹாஸ்யப் பேச்சுக்களோடு மேலும் மேலும் ஆவல் பொங்க அக்கட்டடத்தின் அமைப்பை, அழைகை வியந்துகொண்டிருந்தோம்.

ஆனால் நம்மவர்கள் அங்கிருக்கின்ற தூண்களையும் விட்டுவைக்கவில்லை. கல்லில், மலையில், மரத்தில், ஏன் வகுப்பறை மேசைகளையும் தாண்டி இங்கேயும் தங்கள் காதல் சாசனங்களை எழுதித் தீர்த்திருக்கிறார்கள்! நல்லவேளை, காலம் தாழ்த்தியாவது தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆய்வு மையம் இப்பேர்ப்பட்ட வரலாற்றுச் சின்னத்தை தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

Prince Chair (Pic: karthicksdays)

அருங்காட்சியகம்

தொல்பொருள் ஆய்வு மையம் இவ்வரண்மனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு, நாயக்கர் மஹால் ஆயுதக் களஞ்சியமாகவும், தொழிற்சாலையாகவும் இன்னும் பல்வேறு அரச அதிகாரிகளின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட கலைப் பொக்கிஷம் நாளடைவில் அழிந்துபோகும் அபாயத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இம்மொத்த அரண்மனையையும் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இப்போது சீரிய முறையில் பாதுகாத்து வருகிறது.

அதன் பேராய், சொர்க்கவிலாசத்தை அடுத்ததாக நாயக்கர் காலத்தில் ஆடல் கலை மண்டபமாக விளங்கிய அரங்கு தற்போது அருங்காட்சியகமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. தொல்பொருள் துறையினால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், வரலாற்றுச் சுவடுகள், இப்படிப் பல்வேறு பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அனாலும் அத்தனைக்கும் மகுடமாக இன்றும் இந்த ஆடல் மண்டபம் அழகியல் ஊறிய அரங்கமாக விளங்குகிறது. மதுரைக்கு வந்ததன் பின்னர் நாயக்கர்களுக்கும் கலைத்தாகம் தொற்றிக்கொண்டதில் ஒன்றும் வியப்பில்லையே!

Museum (Pic: Writer Herself)

கல்லெழுத்துக் கலைக்கூடம்

தமிழ் வளர்த்த தலைமதுரையில் நாயக்கர் அரண்மனைகுள் மட்டும் தமிழ் காற்று வீசாமலா போகும்? தமிழ் மொழியின் வரலாறு, பரிணாம வழர்ச்சி, எழுத்துருக்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுக்கள் என தமிழின் தொன்மையையும், வரலாற்றையும் பிரதிபலிக்கும் இன்னோரன்ன அம்சங்களின் அணிவகுப்பாக இருக்கிறது நாயக்கர் அரண்மனையின் கல்லெழுத்துக் கலைக்கூடம்.

தமிழின் ஆரம்ப எழுத்துருக்கள் தாங்கிய கல்வெட்டுகள் எங்கள் ஆர்வத்தை ஈர்த்தன. மட்பாண்டங்கள் மற்றும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆரம்பகால ஆவணங்களையும் அங்கே காணலாம். அதிலும் தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய குறிப்புக்கள் கண்டால் அடேங்கப்பா….

“பாத்தீங்களா அக்கா இந்த எச், கே, டீ இதெல்லாம் நம்மக்கிட்ட இருந்துதான் சுட்டிருக்காய்ங்க பயபுள்ளைங்க” என்று எழுத்துருக்கள் சிலவற்றைப்பார்த்து வயிறெரிந்த ராஜாராம், “அது சரி நம்மக்கிட்டயே சுட்டு, அவனுக நம்மளுக்கே மறுபடி மார்க்கெட் பண்றானுக, நம்ம பயலுகளும் நம்மளோட பூர்வீகம், அதோட பாரம்பரியம் எல்லாம் புரியாம அவிங்கள அண்ணாந்து பாக்குறானுக” என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.

Dance Hall (Pic: hotelnambi)

மேலும் பல சிறப்புகள்

இப்போதிருக்கின்ற முற்றம், சொர்க்கவிலாசம், ஆடல் மண்டபம், அவற்றோடுகூடிய சில கட்டுமானங்கள் போன்றவை ஆரம்பத்தில் இருந்த திருமலை நாயக்கர் அரண்மனையின் நான்கில் ஒரு பங்குதான் என்பது கசப்பான உண்மை. திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் இவ்வரண்மனையின் பெரும்பாலான பகுதியை அழித்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்களை இடமாற்றிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

“சொந்த பேரனுக்கே, இதோட அருமை தெரியல, இத்தன வருஷம் கழிச்சி யார் யாரெல்லாமோ இந்த பிரம்மாண்ட வேலைப்பாடுகள வந்து பாத்து அதிசயிக்கிறாங்க, ஆனா அதுக்கு உரித்துடையவனுக்கே அதோட பெருமை தெரியல பாத்தியா? இத நாயக்கரோட வம்சாவழி செஞ்ச தவறுன்னு வச்சாலும் சரி, இப்போ நம்ம தமிழ் சமூகமே செஞ்சிக்கிட்டிருக்கிற மூடத்தனத்தின் சாம்பிள் என்று வைத்தாலும் சரி” என்று நோந்துகொண்டோம்.

பார்க்கப் பார்க்க முடியாத, அலுக்காத அழகியலை கண்களால் முடிந்தமட்டும் பார்த்து அனுபவித்துத் திரும்பியவேளை…., “இந்த மன்னர்களுக்கு தங்கள் சுய புகழில் என்ன ஓர் மோகம்! இவங்க பேர் என்றைக்கும் நிலைக்கணும், இனி நூறு வருஷமானாலும் வருகிற சமுதாயம் நம்மள பெருமையா நெனக்கணும்னு எத்தன போர்கள், எத்தன ஆக்கிரமிப்புகள்!, போதாக்குறைக்கு எத்தனையோ குடிமக்கள அடிமைப்படுத்தி வேல வாங்கி இப்பிடி நாலு மண்டபம், பத்து கோவில் குளம்னு கட்டி வாழ்ந்துட்டு போயிருக்கானுங்க!” என்னதான் கலை ஆர்வம் இருந்தாலும், இந்த படைப்புகளுக்குப் பின்னால் இருக்கின்ற மண்ணாசையும், புகழாசையும், அதிகாரத்துவமும் பிடிக்காத தம்பி ராஜாராம் புலம்பிய வார்த்தைகள் அவை.

Pillars (Pic: streetsmadurai360)

“விடுப்பா நமக்கு பார்த்துப் பார்த்து ரசிக்க இப்பிடி ஒரு அபூர்வமான அதிசய கலைக்கூடத்த கட்டிட்டு செத்துப்போனதால அவிங்கள மன்னிச்சி விட்ருவோம்” என்று சொல்லி சமாளிக்க வேண்டியதாய் போயிற்று எனக்கு….

Web Title: Thirumalai Nayakar Mahal Madurai

Featured Image Credit: thousandwonders

Related Articles

Exit mobile version