வணக்கம் சென்னை

“கெட்டும் பட்டணம் போ” என்பது கிராமத்துச் சொல்லாடல்.  ஆனால் பட்டணம் போய் கெட்டவர்கள்தான் இங்கு அதிகம்!, மாநகரங்களின் வளர்ச்சிப் பெருமூச்சில் கிராமங்கள் திணறுகின்றன என்பதே உண்மை. முதன் முதலாக அந்தப் பட்டணத்தின் படிக்கட்டுகளில் ஏறிய பயணம் இதோ!.

சென்னை புறநகர் பேரூந்து நிலையம் (s-media-cache-ak0.pinimg.com)

ஞாயிற்றுக் கிழமை இரவு, சென்னைக்கு முன்பதிவில்லாமல் பேருந்து ஏறுபவனும் , கல்யாண வீட்டில் பிரியாணிக்கு இடம் பிடிப்பவனும் ஒன்றே! இருவருக்குமே இருக்கை கிடைப்பதை விதிதான் முடிவு செய்யும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில்,எப்பவும் வரும் இரண்டு அரசு பேருந்தும் அன்றைக்கு கண்டிப்பாக வராது என்பது இயற்பியலின் ஏதோ ஒரு விதி என்பதால் தனியார் பேருந்தை நோக்கி நகர்ந்தேன். வேற ஊர் போரவனையே சென்னை பேருந்தில் ஏற்றும் ஊழியர்கள் என்னை விடுவார்களா, பயண சீட்டின் விலை அவர் 1000 என்று சொல்ல நான் 600 என்று கேட்க 800இல் முடிந்தது .

இன்னும் 10 நிமிடத்தில் எடுத்து விடுவோம் என்ற வார்த்தையை நம்பி உள்ளே சென்றால்! அனாதையாக இருக்கும் பேருந்து. ஏதாவது படமாவது போடுங்கள் என்றால் “டிவி ஓடாது” என்ற பதில் வந்தது. எல்லாம் என் நேரம் என்று என்னை நானே திட்டும் போது, “10 நிமிடத்தில் எடுத்திருவீங்களா” என்று அடுத்த அடிமை உள்ளே ஏறினார். அழுது (பொழுது) விடிஞ்சா மாநகரின் மடியில் நான்.

இரயிலில் போயிருக்கலாமே என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். (அதானே உலக வழக்கம்) இரயிலில் முன் பதிவில்லாமல் பயணிப்பது, மரண கூண்டில் வண்டி ஓட்டுவதற்கு சமம் என்பதால் அந்தப் பக்கம் போக வில்லை.

காலை நண்பன் அறைக்கு செல்ல மறுபடியும் பேருந்து ஏறினால் ,10கி.மீ தூரத்திற்கு 45 நிமிடம் தாண்டியும் பயணம் நீண்டது, எப்பவுமே இப்படித்தானா போக்குவரத்து நெரிசல்? என்று அருகில் இருந்தவரிடம் கேட்டேன், காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் இப்படி என்றார். சரி மாலை எப்படி இருக்கும்? என்றேன், பணி முடிந்து வரும் நேரம் இன்னும் சற்று அதிகமாகும் என்றார். அப்போ இரவு? என்று எரிச்சலுடன் கேட்டேன், இங்கு இரவு பணியாளர்களும் அதிகம் என்றார். “நாசமா போச்சு “, சத்தமாகவே சொல்லி விட்டேன் போல அனைத்து கண்களும் என்னை பார்த்தன.

சென்னை கடற்கரையின் ஒரு தோற்றம் (remotetraveler.com)

நண்பனின் அறை சிறியது, ஏற்கனவே 6 பேருடன் இணைந்து தங்கி உள்ளான், நான் வருவதை வீட்டு உரிமையாளரிடம் சொல்லவில்லை போலும், அடுத்த அரைமணி நேரத்தில் மிகுந்த மரியாதையுடன் வெளியே துரத்தப்பட்டோம். விருந்தோம்பலின் உச்சம் கண்டவன் தமிழன், வழிப்போக்கர் தங்கிச் செல்லவே திண்ணை வைத்து வீடு கட்டினான் என்பதெல்லாம் நகர மக்களுக்கு தெரியுமா, தெரியாதா என்றவாறே நடையை கட்டினோம்.
பாவம் இனி என் நண்பனும் சேர்ந்து புது வீடு தேட வேண்டும் .

கவலைகளை மறக்க கடல் காற்றுதான் சரி என்றான் நண்பன், உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை அல்லவா நானும் சரி என்றேன் .மெரினாவின் விதிப்படி முதலில் தலைவர்கள் சமாதிக்கு அழைத்துச் சென்றான். எம்.ஜி. ஆர், அண்ணா, அம்மா சமாதி என மெரினா குட்டி சுடுகாடு ஆனது போன்ற உணர்வு எனக்கு. புது சமாதி என்பதால் அம்மாவின் சமாதிக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. “எம்.ஜி. ஆர் சமாதியில் அவரின் கைக் கடிகாரத்தின் சப்தம் கேட்கிறதா என்று காது வைத்து கேட்டது தனி கதை”.

மெரீனா கடற்கரை (bechare.com)

கடற்கரையில் ஏன் கழிப்பிட வசதி இல்லை என்ற கேள்விக்கு யாரிடம் பதில் கேட்பது என்று தெரியாமல், அமர்வதற்கு நிழல் தேடி நடந்தோம். திரும்பும் பக்கம் எல்லாம் காதல் ஜோடிகள், இந்த கொளுத்தும் வெயிலில் காதலிக்க எப்படி முடிகிறது இவர்களால்? காதல் ஹார்மோன் சொரனை இல்லாமல் செய்துவிடுமோ என்ற எங்கள் பகடி அவர்களை துளியும் பாதிக்கவில்லை. இதற்குமேல் அங்கு இருந்தால் கண்கள் கெட்டு விடும் என்பதால் தூரத்தில் சென்று அமர்ந்தோம். குழந்தைகள் கடலில் விளையாடுவதைப் பார்த்து எங்களது பால்ய காலத்திற்கு சென்றோம்.

அங்கே இருக்கும் சிறு வியாபாரிகள் அதற்கும் தடை போட்டனர், கைகளை இழுத்து வியாபாரம் (வழிப்பறி) செய்கிறார்கள். கடைசியாக ஒரு பாட்டி சமோசாவை ஊட்டாத குறையாக விற்க, விட்டால் போதுமென கால்களை நனைக்காமலே வெளியேறினோம். அடுத்து மாமல்லபுரம் அதாங்க மகாபலிபுரம் போலாம் என்று மனதை தேத்தினான் நண்பன்.

ஏன் நண்பா மகாபலிபுரம் சென்னையில் இல்லையா? இதான் நான் கேட்ட முதல் கேள்வியே, அவ்வளவு நீண்ட பயணத்திற்கு பின் ஊரை அடைந்தோம். கடற்கரை கோவில் செல்லும் முன் அருகில் இருக்கும் சிற்பங்களை பார்க்க நண்பன் அழைத்துப் போனான், ஒவ்வொரு சின்ன சிற்பத்திலும் அவ்வளவு நுணுக்கம். “குறிப்பாய், ஒரு முனிவர் தவம் செய்வதை பார்க்கும் பூனை  இரண்டு கால்களை தூக்கி தவம் செய்வது போல் பாசாங்கு செய்யும், பூனை தவம் செய்வதாக நினைத்து எலி ஒன்று அதன் அருகே ஆசி வாங்க வரும் ” இந்த சிற்பம் போலி சாமியார்களை பகிடி செய்கிறது.

மாமல்லபுரம் (oxfordpoetryelection.com)

பின் அங்கு பெரிய பாறை ஒன்று எந்த ஆதாரமும் இன்றி நிற்கிறது. இது கீழே விழும் என்று நினைத்த அரசர் ஒருவர் பல யானைகளை கட்டி இழுத்தும் அப்பாறையில் எந்த அசைவும் இல்லையென அந்தப் பகுதி மக்கள் கூறினார்கள். பின் கடற்கரை கோயில் சென்றோம் இந்த கோயிலை நிலவொளியில் பார்க ஆசை என்று கூற,பகலிலயே இங்கு காதலர்களின் நெருக்கம் அதிகம் இரவு அவசியமா வரவேண்டுமா என நண்பன் கேட்க ஆசை கடல் காற்றோடு கலந்தது. ஒவ்வொருவரும் பார்க வேண்டிய இடம் மாமல்லபுரம் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பினோம்.

வரும்போது சென்னையின் பிரம்மாண்ட வளர்ச்சி கண்களுக்கு மிரட்சியை தந்தது. முன்னால் கூவ ஆற்றை காட்டினான் நண்பன் ஆம் இப்பொழுது அது சாக்கடை மட்டுமே, நம் தலைமுறையில் உயிர் நீத்த மற்றொரு நீர் ஆதாரத்தின் எச்சம் இந்த கூவம்.

இங்கே இருக்கும் அத்தனை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மட்டும் இல்லாமல் இந்த பெருநகரத்தை நோக்கி ஓடி வரும் அடித்தட்டு மக்கள் முதல் அம்பானி வரை அவர் அவர் தேவைகளை நிறைவேற்றித்தர தன்னை பரிணமித்துள்ளது இந்த மாநகரம்.

சென்னை மாநகரம் (seamentor.com)

இந்த நகரத்தின் இயல்பு என்ன என்பதை அறிய முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், “இந்த நகரத்தின் அசுர வளர்ச்சிக்கு தன்னை காவு கொடுத்துக் கொண்ட பூர்வ குடிகளே”.ஒரு நகரம் அதன் பாரம்பரியம், கலை, வழிபாடு இவை அனைத்தையும் இறுகப் பிடித்து வைப்பது அவ்வூரின் பூர்வ குடிகளே, ஆனால் இங்கு அவர்கள் சேரிகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான மாற்று வாழ்விடம் அவர்கள் கட்டமைத்த இந்த நகரத்தின் வெளியே தரப்படுகிறது.

இந்த மாநகரத்தின் வேர் பூர்வ குடிகளின் இரத்தத்தால் வலுப் பெற்றது என்பதை மறுக்க இயலாது. இன்னும் எத்தனை பேருந்துகளில் வாய்ப்பு தேடி வந்தாலும், சென்னை தன்னை முழுவதுமாக வைத்துள்ளது. மூச்சு பிடித்து கடலில் மூழ்குபவனே முத்தெடுப்பான் என்பது இங்கு நிதர்சனம்.

நீண்ட தூரம் நடந்த பின் இளைப்பாற நின்றோம். தூரத்தில் ஒரு அறிவிப்புப்பலகை என்னைப் பார்த்து சிரிப்பதாய் தோன்றியது! அதுதான்…

“சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது “.

Related Articles

Exit mobile version