இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கு மேல் மக்கள் வாழும் ஒரு அழகிய தீவான இலங்கை ஆரம்ப காலம் தொட்டே தனக்கென நீண்டதொரு வரலாறு கொண்டுள்ள நாடு என்பது நாம் அறிந்ததே. சிலோன் என்று அறியப்பட்டிருந்த நாள் முதல் இன்றைய ஸ்ரீலங்கா வரையிலும் ஏதோ ஒரு சம்பவங்களால் உலகில் உள்ளவர்கள் இலங்கை பற்றி பேசிய வண்ணமே உள்ளனர். இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாக இருந்து வருகின்றது.
ஆங்கிலேயர், ஒல்லாந்தர் , பிரித்தானியர் என பலர் ஆட்சி செய்த அப்போதைய “சிலோன்” எனும் இப்போதைய ஸ்ரீலங்காவில் அவர்காலத்து கட்டிடங்களும் நினைவு சின்னங்களும் ஏராளம். அது மட்டுமன்றி இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்தம் கூட அதிக நினைவு சின்னங்களை விட்டுச்சென்றுள்ளது. அப்போதைய காலங்களில் சிலோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இலங்கை 1972-ம் ஆண்டு மே 22 ல் திகதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய சிலோன் இப்போதைய ஸ்ரீலங்காவாக கடந்துவந்துள்ள சில புகைப்படங்களின் தொகுப்பு :
கொழும்பு 13 இல் கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள புனித லூசியா தேவாலயமானது இலங்கையின் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். 18,240 சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இது, ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே கத்தோலிக்கரின் வணக்கஸ்த்தலமாக தோற்றம் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
கொழும்பு 01 இல் இந்த சதாம் பகுதியானது, இலங்கையின் வணிக கட்டிடங்கள், இலங்கை மத்திய வங்கி, உலக வர்த்தக மையம், நட்சத்திர ஹோட்டல்கள் என பல நவீன கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியாகும். ஆரம்ப காலங்களில் இருந்தே இப்பகுதியானது இலங்கையின் வர்த்தக கட்டிடங்களுக்கு பெயர் போன இடமாகவே இருந்து வருகின்றது. அதற்கு சான்றாக ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்து கலைமரபு கொண்ட கட்டிடங்கள் இன்றளவும் இப்பகுதியில் காணக்கூடியதாகவே உள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மாளிகையும் இப்பகுதியில் உள்ளதால் எந்நேரமும் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது.
இலங்கையின் முன்னணிபத்திரிகையான வீரகேசரி நாளிதழானது பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து தான் தன் முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் போன்ற பத்திரிகைகள் மட்டுமே இலங்கைக்கு வெளிவந்து கொண்டிருந்தன. பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளிலேயே வீரகேசரி நிறுவனமானது கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸ் பகுதிக்கு தன் அச்சகத்தினை மாற்றி இன்றளவும் இலங்கையின் தமிழ் முதன்மை பத்திரிகையாக செயல்பட்டு வருகின்றது.
காலி முகத்திடலின் கால் ஃபேஸ் ஹோட்டல், இது மறுமலர்ச்சி இயக்கக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.127 ஆண்டுகளுக்கும் மேலான பணக்கார மற்றும் வண்ணமயமான வரலாற்றை இணைத்துள்ளது. 1864 ஆம் ஆண்டில் ஹோட்டல் கட்டப்பட்டபோது, இது ஒரு பொதுவான பிரிட்டிஷ் சத்திரத்தின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது, அழகிய மற்றும் எளிமையான கூரை வட்ட நெடுவரிசைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1894 ஆம் ஆண்டில், ஹோட்டல் முற்றிலும் மிகப் பெரிய அளவில் மீண்டும் கட்டப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு முதல் வகுப்பு ஹோட்டல் வழங்கக்கூடிய ஒவ்வொரு ஆடம்பரத்தையும் வழங்குவதற்காக சரிசெய்யப்பட்டது. இன்றுவரை ஹோட்டல் விருந்தோம்பலின் அடிப்படையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது, மேலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் “சிறந்த பாரம்பரிய ஹோட்டல்” என்ற பட்டத்தை வென்றுள்ளது.
1947 ஆம் ஆண்டில் ஏர் சிலோன் என்ற பெயரில் தனது விமான சேவையினை ஆரம்பித்து சில காலங்களுக்கு உள்நாட்டு விமான சேவையாக செயற்பட்டு வந்துள்ளது. பின்னர் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டு இந்தியா, ஆஸ்திரேலியா, லண்டன், மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துவந்துள்ளது. அதன்பின் 1978 ஆம் ஆண்டில் ஏர் லங்கா என்ற விமான சேவை நிறுவனம் தொடக்கப்பட்டு ஆசிய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு தனது சேவையினை ஆரம்பித்தது. தற்போது சிறீலங்கன் எயர்லைன்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டு சர்வதேச தரத்தில் தனது சிறந்த சேவையினை வழங்கி வருவதோடு, Oneworld global airline எனும் விமான கூட்டிணைப்பின் அங்கத்துவராக இணைந்து, உலகின் அணைந்து நாடுகளுக்கும் பயணித்து வருகின்றது.
இலங்கையில் எந்நேரமும் பரபரப்பு நிறைந்த புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்தப் புகையிரநிலையமனது, தனக்கென ஓர் நீண்ட வரலாற்றினை கொண்டுள்ளது. இலங்கையின் எந்த பகுதிக்கும் புகையிரதப் பயணம் செல்வதற்காண மத்திய நிலையமாக காணப்படும் இது மிக பழமையான புகையிரநிலையங்களில் ஒன்றாகும்.
இந்த கிராண்ட் ஹோட்டல் ஆனது இலங்கையின் நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சொகுசு ஹோட்டல் ஆகும். 154 அறைகள் கொண்ட இந்த சொகுசு ஹோட்டலின் தோற்றம், ஆங்கிலேயர் காலத்து கட்டிடக்கலை முறையை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் போன்றோருக்கு தனி சிறப்பு பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளதும் அக்காலத்து கட்டுமானமும், உள்கட்டமைப்பும் பாதுகாக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.
கே. எம். செல்லப்பா என்பவரின் எண்ணத்தினால் உருவான யாழ்ப்பாண நூலகமானது தனக்கென ஓர் வரலாற்றினைக் கொண்டுள்ளதென்பது நாம் அறிந்ததே. ஆரம்பகாலங்களில் சிறிய அறை ஒன்றில் பொது நூலகமாக செயல்பட்டு வந்துள்ளது. பின்னர் யாழ்ப்பாண நகரசபையிடம் இந்நூலகம் கையளிக்கப்பட்டு 1936 க்குப் பின்னர் யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகில் இடமாற்றியுள்ளனர்.
அனைவருக்கும் பயன்பட்டு வந்த இந்நூலகத்திற்கென தனி கட்டிடம் ஒன்று அமைப்பதற்காக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்திய நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு இக்குழுவானது இதற்கான தனி கட்டிடத்தை வடிமைக்கும் பணியை ஆரம்பித்து, திராவிடக் கட்டிடக்கலை தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை வடிவமைத்துள்ளார்கள் என்கிறது வரலாறு.
பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் 1981 ஜூன் 1 ஆம் திகதி வன்முறை குழுக்களால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இந்நிகழ்வு
இலங்கை வரலாற்றில் முக்கியதொரு நிகழ்வாக இன்றுவரை கருதப்படுகின்றது. பின்நாட்களில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புனரமைப்புகள் செய்யப்பட்டு தற்போது பாவனை நிலையில் உள்ளது.
இலங்கையில் சுற்றுலா செல்லும் ஊர்களில் பிரதான ஒன்று தான் காலி. இங்கு இயற்கை கொடைகள் பழமையான கட்டிடங்கள் என வெளிநாட்டவர்களையும் உள்நாட்டவர்களையும் தன்வசம் ஈர்த்துக்கொண்டுள்ள அழகானதொரு ஊர். இங்கு போர்த்துகேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு 1649 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தர்கள் காலத்தில் அரண் ஒன்றாக செயல்பட்டு வந்த இடம் தான் காலிக் கோட்டை. இதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி கட்டடவியல் மரபுரிமை நினைவுச்சின்னங்களில் பிரதான ஒன்றாக இலங்கை அரசு இதனை அறிவித்தது.
கல்வி, அன்றும் இன்றும் இலங்கையரைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான மற்றும் கட்டாயமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வளங்கள் குறைவாக காணப்பட்டாலும் அக்காலத்திலிருந்தே இலங்கையர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவே காணப்பட்டுள்ளனர்.
நம் முதன்மை சந்ததியினர் கூட ஆரம்பநிலை தொடங்கி பல்கலைக்கழகம்வரை கல்வியினை கட்டயமாகக் கருதி கற்றுவந்துள்ளனர் என்றால் மிகையாகாது. பின்நாட்களில் தகவல் தொழில்நுட்பத்தின் நுழைவு இலங்கையின் கல்வி முறைமையில் அதிசயிக்கத்தக்க சிறப்பான பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. நவீன தொழிநுட்ப கல்வியினால் தற்போதுள்ள சந்ததிதினரின் அறிவாற்றலும் திறமையும் மேம்பட்டு செல்வதென்பது நாம் காணக்கூடியதொன்று. இந்த நவீன தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆரோக்கியமான கல்வி என்பது, ஒவ்வொரு இலங்கையர்க்கும் இனிவரும் காலங்களில் கட்டாயத்தேவை என்றே சொல்லலாம்.