தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும்.

கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம்.

சிங்காரச் சென்னை – ருசி எப்படி?

இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம்.

காளி மார்க் குடிபான வகைகள்

உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலைத்தளங்களின் புதிய நடைமுறையாக (trend) உள்ளது. அதுபோல, காலாகாலமாக உண்மைத் தமிழனாக இருந்தால் பெப்சி, கோலா உற்பத்திகளை தவிர்த்து தமிழ்நாட்டு உற்பத்தியான காளிமார்க் குடிபான வகைகளுக்கு ஆதரவு தாருங்கள் என்பது ஒரு நடைமுறையாகவே தமிழ்நாட்டில் இருக்கிறது.

1916ம் ஆண்டு முதல் குளிர்பான உற்பத்தியில் உள்ள மிகப்பழமையான தமிழ்நாட்டு நிறுவனமே இது. சர்வதேச அளவில் பெப்சி, கோலா உற்பத்திகள் ஒட்டுமொத்த சந்தையையும் குத்தகைக்கு எடுத்துவிட்ட போதிலும், இந்தியாவில் இன்னமும் இதற்கான வரவேற்பும், சந்தையும் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த வருட ஆய்வின்போது, இந்தியாவின் தரங்களுக்கான (Brand) மதிப்பீட்டில் சுமார் நூறுகோடிக்கு மேலாக இந்த நிறுவனத்தின் தரம் மதிப்பிடபட்டுள்ளது.

என்னதான் கோலா நிறுவனங்கள் தாமிரபணி ஆற்றையே உறுஞ்சுகிறது என சொல்லுபவர்கள், கூடவே, காளிமார்க் உற்பத்திகளும் அங்கிருந்துதான் உற்பத்திக்கு தேவையான நீரை பெறுகிறது என்பதனை சொல்ல மறந்துவிடுகிறார்கள் என்பதே சோகமான உண்மை.

இந்திய குளிர்பானங்களை ருசிபார்க்க விரும்புவர்கள் இதனை முயற்சித்துப் பார்க்கலாம். வெவ்வேறு விதமான சுவகைளில் உள்ள இந்த குளிர்பானத்தின் அதிகுறைவான விலையாக 500ml போவின்டோ குளிர்பானம் இந்திய ரூபாவில் 8/- ஆக இருக்கும்.

பழச்சாறு வகைகள்

இந்தியா விவசாயத்திற்கு பெயர்போன நாடு என்பது சொல்லி தெரிவதிற்கில்லை. அதிலும் தமிழ்நாடு வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. எனவே, இங்கே பழங்களுக்கும், பழம் சார்ந்த உற்பத்திகளுக்கும் குறைவே இல்லை என்று சொல்லலாம். சென்னையின் வீதிதோறும் பழச்சாறு விற்பனை நிலையங்களை காணக்கூடியதாக இருக்கும். இவற்றில், இலங்கையில் விலை அதிகமாக உள்ள அல்லது இலங்கை பழச்சாறு விற்பனை நிலையங்களில் இல்லாத சிலவகை பழச்சாறுகளை ருசிபார்க்க முடியும்.

குறிப்பாக, இலங்கையில் அரிதாக கிடைக்கப்பெறும் கரும்புச் சாறினை, சென்னையில் இந்திய மதிப்பில் 20/- ரூபாய்க்கு நிறைவாக ருசிபார்க்க முடியும். சென்னையில் வீதிக்கு வீதி பிரத்தியேக கரும்புச் சாறுக்கான கடைகளை காணக்கூடியதாக இருப்பதால், நினைத்தமாத்திரத்திலேயே ருசிபார்க்க முடியும்.

கரும்புச் சாறு (stylecraze.com)

அதுபோல, இலங்கையில் விலைகூடியதாக உள்ள மாதுளை பழச்சாறு, ஸ்ரோபரி பழச்சாறு, திராட்சை பழச்சாறு என்பவற்றையும் இந்திய மதிப்பில் அதிகமாக 40/- ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றுக்கு சற்றே வித்தியாசமாக செயற்கையாக நிறமூட்டப்பட்ட பானங்களையும், எலுமிச்சம்பழச்சாற்றையும் இணைத்து உருவாக்கப்படுகின்ற LIME SODAக்களும் சென்னையில் பிரபலம். இவற்றை இந்திய மதிப்பில் 10/- தொடக்கம் 20/- ரூபாய்க்கு பெறக்கூடியதாக இருப்பதால், இதனையும் ஒருமுறை ருசிபார்க்கலாம்.

தேநீர்/கோப்பி வகைகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளின் கலாசாரங்களையும் பிரதிபலிப்பதன் விளைவாக, இந்தியாவின் வேறுபட்ட மாநிலங்களின் தேநீர் வகைகளையும் சென்னையிலேயே ருசிபார்க்க முடியும்.

பில்டர் காபி (Filter Coffee)

பில்டர் காபி (sagarratna.files.wordpress.com)

இந்தியாவின் அடையாளங்களை வரிசைப்படுத்திகொண்டே வந்தால், இந்த Filter Coffeeக்கு தனியான இடமுண்டு என்பதனை மறுப்பதற்கில்லை. கோப்பியினை தயாரிப்பதற்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உபகரணத்தின் மூலமாக, கோப்பி சாற்றினையும், பசும்பாலையும், ஏனைய சுவைதரும் திரவியங்களையும் உள்ளடக்கியதாக இது தயாரிக்கபடுகிறது. இலங்கையின் சைவ உணவங்களில் இதனை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளபோதிலும், இந்தியா சென்று இதனை அருந்தியபின், இங்கு கிடைப்பது எல்லாம் Filter Coffee தானா என்கிற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடக்கூடும். இந்திய மதிப்பில் குறைந்தது 15/-க்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

 

மசாலா சாய் (Masaala Chai)

மசாலா சாய் (bp.blogspot.com)

நாங்கள் வீடுகளில் அருந்தும் சாதாரண பால் தேநீர் வகைதான் இது. ஆனால், இதனுடன் சரியான அளவில் வேறுபட்ட நறுமணப்பொருட்களை சேர்த்து தயாரிப்பதனால் இது சற்றே தனித்துவமான சுவையைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதிலும், இதற்கெனவே பிரத்தியேகமாக உள்ள கண்ணாடிக் குவளையில் இதனை அருந்துவது ஒரு தனியான அனுபவம்தான்.

இந்திய மதிப்பில் குறைந்தது 15/-க்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், ஒருமுறை சுவை பார்த்து, நம் வீட்டு பால் தேநீருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என அறிந்துகொள்ளுங்கள்.

சுலைமானி தேநீர்

சுலைமானி தேநீர் (bp.blogspot.com)

 

இதுவும் நாம் வீடுகளில் தயாரிக்கும் சாதாரண தேநீர் போல தயாரிக்கப்படுகின்ற ஒன்றாக உள்ளபோதிலும், அதில் சேர்க்கப்படுகின்ற பொருட்கள் மூலமாக வேறுபட்டு நிற்கிறது. இதில், சாதாரண தேநீருக்கு மேலதிகமாக ஏலக்காய், இலவங்கபட்டை, இஞ்சி, கருப்பட்டி மற்றும் பக்குவநிலையில் எலுமிச்சை சாறும் சேர்க்கப்படுகிறது.

கேரளா பகுதியில் மிகப்பிரபலமான தேநீராக இது உள்ளபோதிலும், சென்னையிலும் இதனை பெறக்கூடியதாக உள்ளது. இந்திய மதிப்பில் சராசரியாக 8/- ரூபாய்க்கு இதனை பெறலாம்.

பால்வகை குடிபானங்கள்

இந்தியாவில் காலையில் பாலை அருந்தாதமல் நாளை தொடங்குகின்ற வீடுகளே இல்லையென சொல்லலாம். அப்படிபட்டவர்களிடம், பால்சார்ந்த வித்தியாசமான குடிபான வகைகள் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ரோஸ் மில்க் (Rose Milk)

ரோஸ் மில்க் (edia3.sailusfood.com)

இலங்கையின் பலூடா வகைகளைப்போல, இந்தியாவில் ரோஸ் சிரப்பினை (Rose Syrup) பயன்படுத்தி தயார் செய்யப்படுகின்ற ஒரு குடிபானமே இதுவாகும். அதிலும், ரோஸ் மில்க் தொடர்பில் சென்னைக்கு சுவாரசியமான கதையும் உண்டு.

சென்னையின் மைலாப்பூரில் இயங்கிவருகின்ற காளாத்தி பத்திரிகை கடையின் ரோஸ் மில்க்தான் சென்னையின் ஏனைய பாகங்களை விடவும் சுவைவாய்ந்ததும், தனித்துவத்தன்மை கொண்டதுமான குடிபானமாக உள்ளதாம். இந்திய மதிப்பில் சுமார் 20/- ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள கூடிய இந்த குடிபானத்தை, குறித்த கடையிலேயே அருந்துவதற்காக பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்த கடைக்கு வருகைதருகின்ற வரலாறும் உள்ளதாம். 

A brand built around the humble rose milk

மசாலா மோர்

மசாலா மோர் (bp.blogspot.com)

இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி சாதாரணமாக கிடைக்கப்பெறுகின்ற குடிபானங்களில் இதுவும் ஒன்று. இலங்கையில் விற்பனை என்கிற நிலையில், மோர்வகை அரிதாக உள்ளபோதிலும், வீடுகளில் அதிகளவில் இன்றும் தயாரிக்கபடுகிறது.

மசாலா மோர் என்பது, சாதாரண மோருடன் புதினா இலை கொத்தமல்லி இலை, பூடு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றறை உள்ளடக்கியதாக தயாரிக்கபடும் விசேட மோர் ஆகும். இதனை, இந்திய மதிப்பில் குறைந்தது 15/- விற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

லஸ்ஸி (Lassi)

லஸ்ஸி (bp.blogspot.com)

கடைந்து எடுத்த தயிர் அல்லது யோகர்ட் வகையை பயன்படுத்தி செய்யப்படுகின்ற இவ்வகை குடிபானமும் சென்னையில் பிரபலமான ஒன்று. இலங்கையிலும் நிறைவாக இதனை பல்வேறு உணவகங்களில் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. இந்திய மதிப்பில் குறைந்தது 20/- தொடக்கம் 30/- ரூபாவிற்கு இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை விடவும், சித்தர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகளில் குறிப்பிடுகின்ற பல்வேறு மூலிகைகளை கொண்ட குடிநீர் வகைகளையும் சென்னையின் புறநகர்பகுதிகளில் சுவைக்க முடியும். இலங்கையில் இல்லாத பல்வேறு வகையான மூலிகைகள் இந்தியாவில் உள்ளதால், இத்தகைய மூலிகை குடிநீர்கள் இங்கு சிறப்பம்சமாக உள்ளது.

அதுபோல, சென்னையின் கடற்கரைசாலையை அண்மித்ததாக பர்மாக்காரர்களினால் நடாத்தபடுகின்ற கடைகளில் வாழைத்தண்டு சூப் என்கிற வித்தியாசமான குடிபானத்தையும் அருந்த முடியும்.

இவ்வாறு வேறுபட்ட சுவைகளில், வேறுபட்ட வகைகளில் சென்னை முழுவதும் குடிபானவகைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆக்கத்தில் உள்வாங்கபடாத ஏதேனும் குடிபான வகைகள் விடுபட்டு போயிருப்பின், சென்னைவாசிகளும் சரி, சென்னை போய்வந்த ஏனையவர்களும் சரி கருத்துரை பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள், இனி சென்னை போக இருப்பவர்களுக்கு ஒரே பயணத்தில் அனைத்தையும் சுவைபார்க்க அது வாய்ப்பாக இருக்கட்டும்.  

Related Articles

Exit mobile version