புல்லரிக்கும் நிமிடங்கள் வாஹா பார்டர் பாகிஸ்தானுக்கு பக்கத்தில்

நண்பா , செம கடுப்பா இருக்கு . 8 மணி நேர வேலை ,சாப்பாடு ,தூக்கம் வார விடுமுறைக்காக காத்திருந்து கூடுதலாகக் கொஞ்சம் தூக்கம் , மீண்டும் திங்கள் முதல் அதே 8 மணி  நேர வேலை முடியலடா ! எங்கயாவது போகலாம்  ‘ இன்னைக்கு  தக்கல்’ல எந்த ஊர்க்கு ரயில்ல  டிக்கெட் இருக்கோ அங்க ரெண்டு டிக்கெட் புக் பண்றேன் நீ ரெடியா இரு . வேற எதுவும் பேசவிடாமல் போனை வைத்தான் நண்பன் பிரபா . நீங்கள் ஒரு வி.ஐ.பி என்றால் இது போன்ற ஆஃபர்கள் நிறைய வரும் நாங்கலாம் மொரட்டு வி.ஐ.பி அல்லவா உடனே கிளம்பினேன் .  எப்போதுமே நாம் பக்கா பிளான் பண்ணி போற பயணத்தை விட திடீரென்று அமையும் ஒரு பயணம் நமக்கு வேற லெவல் அனுபவத்தை கொடுக்கும் என்பதை மீண்டும் எனக்கு உறுதிபடுத்தியது இந்த பயணம். பங்கு நேரா இங்க இருந்து காசி போறோம், அங்க இருந்து பஞ்சாப் போறோம் டிக்கெட்டை காண்பித்துச் சொன்னான் நண்பன் . காசு போடுற மகராசன் நீ சொன்னா பஞ்சாப் என்ன? பாகிஸ்தானே வருவேன் என்று சொல்ல, “பஞ்சாப் பக்கத்துலதான்டா பாகிஸ்தானே இருக்கு!” என்று கிரேஷி மோகன் காலத்துக் காமெடி பண்ணான் பிரபா , வேற வழியில்லாமல் “செம காமெடி பங்காளி” என்று சிரித்துக்கொண்டே ரயில் ஏறினேன் ( முக்கிய குறிப்பு ஸ்பான்செர், காமெடி என்று எது சொன்னாலும் சிரித்துவிடுவது நல்லது ) .

இரயில் பயணம்

வட இந்தியாவுக்கு இரயிலில் செல்லும்போது உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று எருமை மாட்டைவிட அதிகமான பொறுமை. டிக்கெட்டே எடுக்காத ஜீவன்கள் எல்லாம் ரிசர்வ் கோச்சில் ஏறி , “இப்படி ஏறி, அப்படி இறங்கிருவேன்” என்று உட்காருவார்கள். ஆனால் அந்த ரயில் எந்த ஊரில் கடைசியாக  நிற்குமோ அதான் அவர்களது ஊராக இருக்கும். இரக்கப்பட்டு இடம் தரும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. அப்ப “டி.டிஆர் வருவார்ல!, டி.டி.ஆர் வருவார்ல!” என்று வடிவேல் மாடுலேசனில் கேட்பது புரிகிறது . அதற்கு வடிவேல் பாணியிலேயே பதில் சொல்வதென்றால் ‘வாம்மா மின்னல்!’ போல் அந்த குறிப்பிட்ட நேரம் அந்த ஜீவன்கள் காணாமல் போகும் இல்லையேல் ஹிந்தியில் பேசி டி.டி.ஆரையே கரெக்ட் பண்ணிவிடுவார்கள் நாம் மரியான் தனுஷ் மாதிரி சார் “மேரா ரிசர்வேசன் சார் ,தும் அன் ரிசர்வேசன் சார்” என்று புலம்ப வேண்டியதுதான்.

மேலே சொன்ன அத்தனை பஞ்சாயத்துகளையும் தாண்டி ,பஞ்சாப்பில் இறங்கியதும் நம்ம மூஞ்சியைக் கண்டதும் டூரிஸ்ட் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் சிக்கினால் நமது பட்ஜெட் கட்டாது என்பதால் நண்பன் அங்கேயும் ஒரு ஷேர் ஆட்டோ பிடித்தான். பொற்கோவில் அருகில் குறைந்த செலவில் ஒரு அறை எடுத்தோம். ஏசி இல்லாத அறை கேட்டதும் “பஞ்சாப் ஹீட் அதிகம் , ஏசி இல்லாமல் எப்படி சாப்? எந்த ஊர் நீங்க?”னு அவர்கள் கேட்டார்கள். “மதுரை பாத்துருக்கியா மண்ட பத்ரம்“ என்று சொல்லிவிட்டு உள்ளே போனோம் ஹீட் நிஜமாகவே அதிகம்தான் மக்களே !

Railway (Pic: edhanley.atavis)

ஜாலியன்வாலாபாக்

பொற்கோவிலுக்கு அருகில் தான் ‘ ஜாலியன்வாலாபாக் ‘ இருக்கு அத பார்த்ததும்  ஸ்கூல்ல சோசியல் சயின்ஸ் டீச்சர்ட இந்த சம்வம் சம்பந்தமா வந்த 5 மார்க் கொஸ்டினுக்கு தப்பா பதில் எழுதி அடி வாங்குனது எல்லாம் ஞாபகம் வர அப்படியே ‘பா’ என்று நின்னேன், “என்ன பிளாஷ்பாக்கா? வா சனியனே போலாம் என்று பிரபா ‘ஜாலியன்வாலாபாக்’குக்குள் அழைத்துப் போனான். கட்டிடத்தின் வெளியே அங்கு நடந்த கோர சம்பவத்தின் நினைவாக சிலைகள் வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மக்களைக் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இடம். அங்கு  வெடித்த தோட்டாக்கள் துளைத்துச் சென்ற இடங்கள் குறியீடுகளாய் அப்படியே உள்ளன.  அந்த இடத்தில் இருந்த கிணற்றில் பல பேர் விழுந்து இறந்துவிட்டார்கள். அதில் காசைப் போட்டு எதோ வேண்டிக் கொண்டார்கள் அனைவரும். நமக்கு ஏதும் புரியாமல் சுற்றிப்  பார்க்க , கண்டிப்பாய் அந்த உயர்ந்த மதில் சுவரைத் தாண்டி யாரும் தப்பித்திருக்க முடியாது என்பது மட்டும் புரிந்தது.

இந்த சம்பவத்திற்கு பின் நடந்த விசாரணையில் அதிகாரி ஜெனரல் டயர் இப்படி சொன்னான் , “ஆம் நான் இந்திய மண்ணிலே வைத்து இந்தியர்களைச் சுட்டேன்! அன்று என்னிடம் இருந்த குண்டுகள் தீர்ந்து போனது, இல்லையேல் இன்னும் நிறைய பேரை கொன்றுருப்பேன்!” இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உத்தம்சிங் என்ற சிறுவன் 21 ஆண்டுகள் தீவிர முயற்சியில் பல இன்னல்கள் தாண்டி ஜெனரல்  டயரை பழிவாங்கச் சென்றார். ஆனால் அதற்கு முன்பே ஜெனெரல் டயர் இயற்கையாகவே மரணம் எய்திவிட அந்தக் கோர சம்பவத்திற்கு முக்கிய காரணமாய் இருந்த அப்போதைய பஞ்சாப் மாநில ஆளுநரான மைகேல் ஒ டயரை  அவன் சொந்த ஊரில் சுட்டுக் கொன்றான். அப்போது டைம்ஸ் பத்திரிக்கை இப்படி எழுதியது இந்தியர்கள் எளிதில் எதிரிகளை விடுப்பார்கள் அல்ல என்று.முழுக்க சுதந்திர காலகட்டத்திற்கே நம்மளை ஜாலியன்வாலாபாக் அழைத்துச் சென்றாலும் அங்கே செல்பி எடுக்கும் மக்களைப் பார்க்கும்போது சற்று எரிச்சல் வரத்தான் செய்கிறது. வரலாற்றில் மூழ்குவது பிடிக்கும் என்றால் கண்டிப்பாக ஜாலியன்வாலாபாக் பாருங்கள் இன்று நாம் பெற்ற சுதந்திரத்திற்குப்பின் இருக்கும் இரத்தம் தோய்ந்த வரலாற்றை தெரிந்துகொள்வது  நமது கடமையும் கூட.

Jalianwala Bagh (Pic: expedia)

வாகா

ஜாலியன்வாலாபாக் வாசலிலேயே ஒரு பத்துபேர் நம்மளை ரவுண்டு கட்டி பாஹா பொதேர் பாஹா பொதேர் என்று சொல்லுவார்கள் , தனி வாகன விரும்பிகள் சில நூறுகளை இழக்க நேரிடும் நமக்கு எப்பவும் ஷேரிங்தான் என்பதால் தலைக்கு 5௦ என்று பேசி வண்டியில் ஏறினோம், நம்ம ஊர் அதே ஷேர் ஆட்டோ பார்முலாதான் எவ்ளோ பேர் முடியுமோ அவ்ளோ பேரை ஏற்றிக்கொண்டுதான் நகர்கிறது வண்டி. கிட்டத்தட்ட  3௦ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வாகா. மிக பொறுமையான பயணத்திற்கு பின் 5 மணிக்கு அங்கு சென்றோம் , போகும் போதே “சூரியன் மறைவதை பொறுத்துதான் கொடியை இறக்குவார்கள் நீங்கள் எப்படியும் அந்த இடத்தை விட்டு வெளியே வர இரவு 7 மணியாவது ஆகும்” என்றார்கள் .வண்டி வாகா எல்லைக்கு ஒரு கிலோமீட்டர்க்கு முன்பாகவே நின்றது. சில சிறுவர்கள் பெயிண்டும் கையுமாக வந்தார்கள். எனக்கு கன்னத்திலும் பிரபாவுக்கு கைகளிலும் இந்திய கொடியை வரைந்து தலைக்கு 5௦ மொய் வாங்கிச் சென்றார்கள் ( பிரபா தெரிந்த ஹிந்தியை வைத்து வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னான் அவர்கள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை) . அங்கிருந்து நடந்தும் செல்லலாம் அல்லது கை ரிக்க்ஷா மூலமும் செல்லலாம். வேறு வாகனம் எதுவும் அனுமதி இல்லை , நமக்கு பிடித்தது நடராஜா சர்வீஸ் தான். பல மாநிலங்களில் இருந்தும் ஏன் பல நாடுகளில் இருந்தும் கூட கொடி இறக்கும் நிகழ்வை பார்க்கக் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் எல்லாரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றோம் பயங்கர கூட்டம் வழக்கம் போல கூட்டத்திற்கு நடுவில் மக்கள் முண்டிக்கொண்டு நுழையும் காட்சியையும் காண முடிந்தது. முடிந்தவரை நமது ராணுவ வீரர்கள் எல்லோரையும் வரிசையாக அனுப்பினார்கள். உண்மையில் நமது ராணுவத்தின் மிடுக்கே தனிதான் . எல்லா இடங்களிலும் சோதனை செய்கிறார்கள் , எனக்கு இன்று கொடி இறக்கும் நிகழ்வை பார்ப்போம் என்று துளி கூட நம்பிக்கை இல்லை அவ்வளவு கூட்டம்.

கொடி இறக்கம் துவங்கிவிட்டால் யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை , வெளியே பெரிய திரையில் உள்ளே நடப்பதை காட்டுவார்கள் அதைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். திரையில் பார்க்கவா இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து வந்தோம் நெவெர் ! இறுதியாய் எல்லா சோதனைகளும் முடிந்து இந்திய எல்லையில் வாகாவிற்கு சென்றோம் மிக அருகில் பாகிஸ்தான் என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதப்பட்ட மற்றொரு கதவு அவ்வளவே . பிரபா தனது டிஜிட்டல் கேமராவில் படம் புடிக்க ஆரம்பித்துவிட்டான் ,இனி எந்த அந்நிய சக்தியும் அவனை கட்டுபடுத்த முடியாது என்பது எனக்கு தெரியும். நான் கண்களை மேய விட்டேன் .

இந்தியாவின் பக்கம் அதிகப் பார்வையாளர்கள் அமரும் வகையில் பெரிய அளவிலான அமர்வு இருக்கைகள் இருந்தன (பாகிஸ்தான் பக்கம் இதில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள்கூட இல்லை ) அவையும் தீர்ந்து நாங்கள் தரையில்தான் உட்காந்து இருந்தோம். ஆனால் கேட்டுக்கு மிக அருகில் என்பதால் ஒன்றும் வெறுப்பாக இல்லை.  ஹிந்தி தெரிந்தால் எந்த ராணுவ வீரரிடம் வேண்டுமானாலும் பேசலாம். யாரும் உங்களை உதாசீனப்படுத்த மாட்டார்கள், நாம்தான் மரத்தமிழர்கள் ஆயிற்றே! அங்கேயும் ஒரு தமிழ் ராணுவ வீரரை பிடித்துப் பேசினோம். அங்கேயும் தண்ணீர் ,சிப்ஸ் ,ஐஸ்க்ரீம் என்று எல்லாம் விற்கிறார்கள் ( அதான் இந்தியா ) ,நேரம் செல்லச் செல்ல ,கூட்டம் கூடிக் கொண்டேதான் சென்றது , இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் தயாராகிக்கொண்டு இருந்தார்கள்.

Wagah Parade (Pic: travelsofabookpacker)

மனதில் நிற்கும் நிகழ்வு

இந்திய ராணுவ வீரர் ஒருவர் மக்கள் சோர்வாக இருப்பதை உணர்ந்தார் ,அங்கே இருந்த சிறுமிகள் , இளைஞிகள் ,முதிய பெண்கள் உட்பட எல்லா வயதிலும் சில பெண்களை அழைத்து அவர்களின் கைகளில் தேசியக்கொடியை கொடுத்து எல்லை பிரியும் இடம்வரை நடக்க வைத்தனர். உண்மையில் அந்த உணர்வை சொல்லிப் புரிய வைப்பது சற்று கடினம்தான் , சில பாட்டிமார்கள் ஓட்டமும், நடையுமாய் தேசியக்கொடியை கையில் பிடித்துச் சென்றதெல்லாம் வேற லெவல். பாகிஸ்தான் பக்கம் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்த பெண்களின் எண்ணிக்கையை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அதை தொடர்ந்து நமது பகுதியில் ‘சக்தே இந்தியா!’ போன்ற உணர்வு பொங்கும் பாடல்களுக்கு அதே பெண்கள் குழு நடனமாட ,வெளிநாட்டு பெண்களும் உடன் சேர்ந்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது , முதலில் ஒருத்தர் பின் இருவர் , பின் ஒரு சிறிய அணி அதைத் தொடர்ந்து ஒரு அணி கூடவே இசை இசைக்கும் அணி என்று நமது ராணுவ அணிவகுப்பும் அவர்களின் உடல் மொழியும் ப்ப்ப்ப்பா ! கால்களை தலை உயரத்துக்கு தூக்குவது எல்லாம் அசாத்தியம்! வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். இரண்டு நாட்டு வீரர்களும் நான் உனக்கு சளைத்தவன் இல்லை தம்பி என்பது போல போட்டி போட்டுச் செய்ய நமக்கு பீப்பீ ஏறும் , இரண்டு நாட்டு கதவுகளும் திறக்கப்பட்டு இரண்டு நாட்டு வீரர்களும் கை குலுக்கிக் கொண்டார்கள்  ,அதெல்லாம் ஓகேதான் ஆனால் கைகொடுக்கும் போதுகூட சிரிக்க மாட்டேன் என்கிறார்கள். கொடி இறக்கப்பட்டு அதற்கான மரியாதையுடன் மடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது . இரண்டு நாட்டு வீர்களும் மிக அருகில் அதுவும் முகத்துக்கு முகம் நின்று அந்த சாகசம் செய்யும்போது நமக்கு ரோமங்கள் குத்திட்டு நிற்கும். எல்லாம் முடிந்து மீண்டும் கைகுலுக்கிக் கதவு மூடப்பட்டது . நல்ல கேமரா கொண்டு சென்றால் நிறைய புகைப்படங்கள் எடுக்கலாம்

Both Flags (Pic: psmag)

சரி!, சரி! ஆட்டம் முடிந்ததும் அனிவரும் அங்கிருந்து கலைய , நாங்கள் வந்த வாகனத்தைத் தேடினோம். ஆனால் அதைக் காணும் !  “டேய் லூசு! உன் செருப்பு எங்கடா?ன்னு பிரபா கேட்க, அப்பத்தான் நான் செருப்ப தொலைச்சுட்டேன்னு தெருஞ்சு “அங்க நாட்டையே காப்பாத்துறாங்க, நம்மளால நம்ம செருப்பக் கூட காப்பாத்திக்க முடியலே பங்கு!” என்று வசனம் பேச “எதாவது நல்லா திட்டிருவேன், சரி இன்னைக்கு வேணாமேன்னு பாக்குறேன்” என்றான். “அப்படி என்னடா இன்னைக்கு” என கேட்க “சனியனே! இன்னைக்கு உனக்கு பொறந்தநாள் ஆகஸ்ட் 15” என்றான் நண்பன் .

Web Title: Wagah Border Goosebumps Moment

Featured Image Credit: japjitravel

Related Articles

Exit mobile version